மண்ணுக்குள்ளிருந்து எழும் குரல்கள்...

 “மாயமாய் உயிரை மாய்க்கும் கனி(ம) வேலை என்னண்ணா…

மார்பில் ரத்தம் வடிய நித்தம் உழைப்போம் என்னண்ணா…

பாறைக்குள் படர்ந்து  நிற்கும் பசுமரத்தங்கம்…

அதைப்  பக்குவமாய் பிளந்தெடுக்கும் பாட்டாளி சிங்கம்!

குறையில்லா  கோபுரமாய் ஆன   அரங்கம்…

கொடிய அணுகுண்டு போல வெடிக்கும் சுரங்கம்...

மாயமாய் உயிரை மாய்க்கும் கனி(ம) வேலை என்னண்ணா…

மார்பில் ரத்தம் வடிய நித்தம் உழைப்போம் என்னண்ணா…”


பழைய சி.ஸ்.ஜெயராமனின் குரல் போலவே, மெதுவாக, நடுக்கத்துடன், பின்னணியில் ஒலிக்கும் குரல் நம்மை இருளான சுரங்கத்துக்குள் தொழிலாளர்களுடன் அழைத்துச்செல்லும் போது, அதன் துயரமும், பயங்கரமும், அதை தினமும் போராடி வெல்லும் தொழிலாளர்களின் குரலாகவே அது கேட்கிறது. ஜெலட்டின் விபத்து, பாறை வெடிப்பு போன்றவற்றைப்பற்றியும், அதன் மரணங்களைப்பற்றியும் எதார்த்தமாக அவர்கள் கூறும்போது அவர்களின் குரலில்  இல்லாத பயங்கரம், அதன் அர்த்தம் புரியும் போது  முகத்தில் அறைகிறது… 



1800 களில் , ஆங்கிலேய  கிழக்கிந்திய நிறுவனத்தால் தங்கச் சுரங்கங்கள் வெட்டும் பணி துவங்கியது போது இதற்காகப் பெருமளவில் மக்கள் , தமிழ்நாட்டின் சேலம், கிருஷ்ணகிரி, வடாற்காடு மாவட்டங்களில் இருந்தும் , ஆந்திர சித்தூர் மாவட்டத்தில் இருந்தும் வரவழைக்கபட்டனர். இவர்கள் சுரங்கத்திற்கு அருகிலேயே வீடுகட்டித் தங்கியதால் கோலார் தங்க வயல் நகரியம் ( KGF  Township ) உருவாகியது. அப்போது சுரங்க தொழிலாளர்கள் காண்டிராக்டு முறையில் அழைத்துவரப்பட்டு, கடுமையான சூழலில், மோசமான வாழ்விடங்கள் அமைத்து வாழப் பணிக்கப்பட்டனர். அவர்கள் அனைவரும் அவர்கள் வந்த இடத்தில்  விவசாயக் கூலிகளாய்  இருந்து பல்வேறு சாதீய அடக்குமுறைக்கு ஆளாகி  அங்கிருந்து தப்ப இங்கு வந்த தாழ்த்தப்பட்ட மற்றும் மதம் மாறியவர்கள்.

இவர்களை மேற்ப்பார்வை பார்க்க, ஆங்கிலேயர்கள், ஆங்கிலோ இந்தியர்களை நியமித்து  அவர்களுக்கு பங்களாக்களையும், சிறப்பான வாழ்விட வசதிகளையும் அமைத்துக்கொடுத்தனர்.

அப்போதே சாதிய பிரிவினையை விட வர்க்கப்பிரிவினை இங்கே மேலோங்கியிருந்திருக்கிறது.

ஆனாலும், தங்கள் முந்தைய வாழ்விடங்களை விட இந்த வாழ்வு, சாதிப்பாகுபாடுகளால் நசுக்கப்பட்ட மக்களுக்கு கௌரவத்தையும், கல்விக்கான வாய்ப்பையும் தந்ததால் அவர்கள் அமைதியாகவே நூற்றாண்டுகாலம் தலைமுறை தலைமுறையாய் வாழ்ந்துவந்திருக்கின்றனர். அவ்வப்போது தற்காலிகமாய் வேலை இழந்தகாலத்தில், தங்களின் பழைய ஊர்களுக்கு செல்லும்பொது அங்கே  அவர்களை அந்த  சாதீய பாகுபாடின் கூறிய பற்கள்  குதறுவதை அவர்கள் இங்கே பதிவு செய்யத் தவறுவதில்லை.

.

சமூகத்தின் கடைக்கோடியில் இருந்து, வறுமையையும், சாதீய அடக்குமுறையையும், கடந்து இங்கே வந்து, ஆரம்பத்தில் மிக மோசமான நிலையில் இருந்திருந்தாலும், மெதுவாக அந்த நிலையில் இருந்து எழுந்து வந்து, புதிய பொருளாதார சுதந்திரமும், அந்த பொருளாதார மூலமாக  ஏற்பட்ட சமத்துவமும் கொண்டு , கோலாரின் தங்க வயல் தொழிலாளிகள் தங்கள்  வாழ்வை மாற்றிக்கொண்டு, கல்வியையும், உழைப்பையும் அளித்துக்கொண்டனர். அப்படி, அந்த கடின உழைப்பில் மூலம், வருவாய் பெரிதாக இல்லாமல் இருந்தாலும், சாதீய இழிவையும், சாதீய  அடையாளங்களையும் நிராகரித்த சமூகமாய் அது இருந்து வந்தது. கேம்ப் என்றும் கோலார் என்றும் சாதி மறைவாக இருந்தாலும், அநேகமாக தமிழர்களே, அதிலும் தமிழகத்தின் வட மாவட்டங்களில் இருந்து வந்த தாழ்த்தப்படுத்தப்பட்ட சமூகத்தவர்கள்  அதிகமாய் இருந்த அந்த ஊரில், சாதீய அடையாளத்தை, அதன் இழிவை உறுதியுடன் நிராகரித்தனர். அப்படி சாதீய அடையாளத்தை காட்டியதற்காக, அக்காலத்தில் பிரபலமாக இருந்த நந்தனார் திரைப்படத்தை திரையிடத்  தடை பெற்ற ஊர் அது. அயோத்தி தாசரையும், பெரியாரையும், அம்பேத்காரையும், கர்நாடகமும், தமிழகமும் காணும் முன்பே உரக்க சொன்ன ஊர் அது.


அப்படியும்  சாதீய மற்றும் வர்க்க மாறுபாடுகளும் முழுதும் மறையவில்லை என்பது, அதன் சமூக தளங்கள், ஒரே விஷயத்தைப்பற்றி வேறுபட்ட பார்வைகளை வெளிப்படுத்தும் நிலையை  இந்தப்  படம் காட்சிப்படுத்துகிறது. தனியாரின் கையில் இருந்து அரசின் கையில் சென்றவுடன் சுரங்கங்கள் உள்ளே எப்படி தொழிலாளர்களின் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேம்பட்டது  என்று தொழிலாளர்கள் கூறும் போது, அந்த நிகழ்வையே தொழில் தரத்தையும், வாழ்க்கை தரத்தையும் மோசமாக்கியதாக, ஆங்கிலேயர்காலத்தில் மேற்ப்பார்வையாளர்களாக பங்களாவில் சொகுசாக  வாழ்ந்த  ஆங்கிலோ இந்திய வம்சாவழிகள் கூறுவதும், ஊருக்குள் மறைபொருளாய் சாதியை வைத்திருந்த  மேல்தட்டு சாதிகள்  என்றும், வெளியே தெரியாத முரண்களாக இருந்தாலும், பொதுவாக முன்னேற்றமும் நம்பிக்கையும் அவர்கள் அனைவரையும் ஒரு புள்ளியில் இணைத்து முன்னே அழைத்து சென்றதை விளங்கிக்கொள்ள முடிகிறது.

மெதுவாக உலகமயமாக்கலினாலும், தங்க படிமங்கள் தீர்ந்து போனதாலும், பொதுவான அரசாங்க அலட்சியத்தாலும் சுரங்கங்கள் நிறுத்தி வைக்கப்பட்ட பின் அவர்கள் வாழ்வு எப்படி மோசமாக மாறியது என்பதை முகத்தில் அறைய காட்டியிருக்கின்றனர்.

அதன் பின் எப்படி ஒரு சமூகத்தை  இந்த நாட்டின் அரசும், அரசியலும், சமூகமும் கைவிட்டன என்பதைத்  துயரம் உறைந்த முகங்கள் நமக்கு உணர்த்துகின்றன. மொழி அடையாளமோ, சமூக அடையாளமோ அவர்களை எப்படி கைவிட்டது என்பதை ஆத்திரத்துடனும், வலியுடனும் ஒலிக்கும் அவர்களின் குரலின் வழியே கேட்க முடிகிறது.

சுரங்கம் மூடப்பட்டவுடன், இலைமறைக்காயாய் இருந்த சாதீய, சமூக வேறுபாடுகள் எப்படி அவர்களைத் திரும்பவும் வேட்டையாடத்துவங்கின்றன  என்பதையும், அதை எதிர்த்து எப்படி நம்பிக்கையோடும் கல்வியின் துணையோடும் தாங்கள் போராடுகிறோம் என்பதையும் அவர்களின் இளைய சமூகத்தின் வழியே ஆவணப்படுத்தப்பட்டிருக்கிறது. அதன் விளிம்பில் இருக்கும் சமூகம் எப்படி இன்று விஷமாய் போன மண்ணைக் கிளறி நூறுக்கும் இருநூறுக்கும் தினமும் போராடுகிறது என்ற நிஜம் வேறு  முகத்தில் அறைகிறது.


அதன் விளைவாய், 80களின் இறுதியில் இருந்து மெதுவாக தலைநீட்டி 90களில் தலைவிரித்தாடிய ரௌடித்தனமும், சட்ட ஒழுங்குப்  பிரச்சினையும் மையப்படுத்தி முழுதும் கற்பனைகயாக  KGF என்று எடுக்கப்பட்ட படம் நாடு முழுவதும், மொழி கடந்து சக்கை போடும் இவ்வேளையில், அங்கிருப்பவர்கள் சரித்திரமும், குரலும் அமுங்கிப்போவதை கவலையுடன் பார்ப்பதைத்தவிர ஏதும் செய்யமுடியவில்லை என்பது மனதை  உறுத்துகிறது...

இன்று பெங்களூருக்கு விருந்தாளியாக  வருபவர்களுக்கு காட்ட அங்கே கோடி லிங்கேஸ்வரர் ஆலயம் உள்ளது. ஆனால், அந்த நகரத்தை வளமாகிய உழைப்பாளிகளின் சரித்திரம் அவர்கள் தோண்டிய தங்கம் போல் மண்ணுக்கு கீழே...

“தரணியில் உள்ளோரே கேளீர்,

தங்கம் சும்மா வருவதில்லை... “

என்று அந்த கிழவன் நடுங்கும் குரலில் பாடுவது மட்டும் யார் காதுக்கும் கேட்பதில்லை...

Comments

Popular posts from this blog

பாலை மனம்

தமிழின் புதிய வெளிகள்

Deccan in Dazzling light