அந்தரங்க நதி
என் தாத்தா, நான் பிறந்து இரண்டு வயதாகும் முன்பே தவறிவிட்டார். அவருடைய் நினைவு என்பது ஒரு கரும் போர்வை போர்த்தி குனிந்து முகம் பார்த்த ஒரு நெடிய உருவமாக எனக்கு ஒரு புகை மூட்டம் போல் எப்போதும் நினைவில் நிற்கிறது. அதே போல், என் அம்மாவின் பாட்டி, (என் கொள்ளுப்பாட்டி) சிவகாமிப்பாட்டி, எனக்கு “தாரங்கம், தாரங்கம்” என பாடும் சிவந்த உருவமாகவே நினைவு. அவர்கள் வாழ்வையும், பாசத்தின் நெகிழ்வையும் நேரில் அனுபவிக்கக் கொடுத்துவைக்கவில்லை. எனினும் தொடர்ந்து ஓடும் நினைவின் இழைகளுக்குள் அவர்கள் எப்போதும் ஏதோ ஒரு கரையில் அமர்ந்தே தான் இருக்கின்றனர். இப்படி நம் ஒவ்வொருவருக்குள்ளும் நினைவுகளின் நீரோட்டத்தால் ஒரு நதி எப்போதும் ஓடிக்கொண்டே. இருக்கிறது. வாழ்வின் ஓட்டத்தோடு அந்த நதி இணைந்தே வருகிறது; வளர்கிறது. நம் வாழ்வு முடிந்த பின்பும் அதில் வழிந்தோடிய நீர், நம் சந்ததியினரின் நினைவுகளில் இடம்மாறி தொடர்ந்து ஒடிக்கொண்டுதான் இருக்கிறது. மொழி இல்லாத ஆதிகாலம் முதலாகவே அப்படிக் கடத்தப்படும் நினைவுகள் ஏதோ ஒரு வகையில் கதை வடிவாகவே கடத்தப்பட்டது இயல்பானது. ஒரே நதிக்கரையின் வேறு வேறு இடத்தில் நிற்பவர்களைப் போல...