புயலுக்குப் பின்
மலரும் மலரும் என்று அதற்காக உடல் வருத்தி , நிலத்தை செம்மைப் படுத்தி, விதைத்து, நீரூற்றி, காத்து, காத்திருந்த வலி முழுதும், பூவாகி, கனியாகி சிறக்கும் கணத்தில் மனம் பூத்து மகிழ்வது விதைத்தவர் இயல்பு. அந்த கணத்தில் அவன் தொழிலாளி என்ற நிலையில் இருந்து படைப்பாளியாக மிளிர்கிறான். அந்த உணர்வு தான் அவனை மேலும் மேலும் உழைக்கத் தூண்டுகிறது. உழவுக்கு மட்டும் அல்ல வாழ்வுக்கும் அப்படித்தான். நாம் தேடிப் படைக்கும் ஒவ்வொரு விஷயத்தையும் நாம் மிக விரும்பி, அதற்காக பாடுபட்டு பின் அந்தப் படைப்பு முழுமைபெற்று மிளிரும்பொழுதில் அடையும் மன நிறைவு ஈடில்லாதது. மாறாக நாம் வெகு காலமாக எதிர்பார்த்து காத்திருந்த ஒன்று, கனிந்து வரும் போது, நம் எதிர்பார்ப்புக்கு நேரெதிராக, ஒரு கணத்தில் விரும்பத்தகாத நிலைக்கு மாறிப்போனால், அதனால் ஏற்படும் ஏமாற்றமும் வலியும் மிக அதீதமாகவே இருக்கும். சாதாரணமாக இருக்கும் கானகம் தீக்கொன்றை மலரும்போது, திடுமென தீப்பற்றியது போல் அழகாக மாறிவிடுகிறது. அது போலத்தான் காதலும், சாதாரண மனித வாழ்வை அழகாக மாற்றுகிறது. பருவம் தவறாமல் மலரும் காதலும் தீக்கொன்றையும் இயல்பாக நிகழ்...