இலக்கியம் - சமர்
ஒரு நிகழ்வை , அதன் உணர்வுகளையும், சூழலையும் படிப்பவர்களுக்கு நேரில் அதில் பங்கு வகித்தது போல உணரவைக்கும் எழுத்து வெகு சிலதே. தமிழில் இவ்வளவு சிறப்பாக அதை விவரிக்கும் ஒரு படைப்பை நான் இதுவரை படித்ததில்லை. இவ்வளவு நாளாக அதை எப்படி படிக்காமல் விட்டேன் என்று என்னை நானே கடிந்துகொள்ளச் செய்துவிட்டது இந்தப் படைப்பு.
"வெயில்
பட்டுப்பட்டுக் காச்சுப்போன, மூடி இராத அந்த அத்தனை கறுப்பு முதுகுகளையும் இன்னும் தகிப்பு
தணியாத பிற்பகல் சூரியனின் கிரணங்கள் துளைத்துக் கொண்டிருந்தன. துளிர்த்து
வெடிக்கும் வேர்வைத் துளிகள் பளீரிட்டு நடு முதுகுக்கு ஓடிக் கலந்து வாய்க்கால்
வகுத்து வழிந்தோடிக் கொண்டிருந்தன. மனிதனுக்குள்ளே அடங்கிக் கிடக்கும் சுபாவமான
மிருகவெறி அந்தப் பொழுதுக்கு மேலோங்கி, பொங்கி நின்ற நிலையில், மிருக சக்திக்கும் மனித சக்திக்கும் இடையே நடக்கப் போகும்
போராட்டத்தைக் காணத் தவிக்கும் பதை பதைப்பில், முதுகைச் சுடும் வெப்பம் அவர்களுக்குப்
பெரிதாகப்படவில்லை."
புத்தகம் முழுதும் ஒரு ஜல்லிக்கட்டில் நடக்கும் பலதரப்பட்ட
உணர்வுகளையும், அதற்கு உள்ளாகும் மனிதர்களையும், அவர்கள் பார்வையில் இருந்தே
உயிரோட்டத்துடன் படைத்திருக்கிறார், சி.சு.செல்லப்பா. ஆரம்பம் முதல் இறுதி வரை அந்த உணர்வு மங்காமல்
எழுதியிருக்கிறார். அதன் குறைந்த பக்கங்களில் படிப்பவருக்கு ஒரு முழுமையான
ஜல்லிக்கட்டு அனுபவத்தை விறுவிறுப்பாக படைத்திருக்கிறார்.
"மிருகத்தை
ரோசப்படுத்தி அதன் எல்லையைக் கண்டுவிட்டு, பிறகு அதை மனிதன் அடக்கி வசப்படுத்தி வெற்றி காட்டத் துணிவதை
ஒரு கலையாக சாதகம் செய்திருக்கிறார்கள் அவர்கள் அத்தனை பேர்களும்."
"அப்பன் குடல் வெளியே வந்தபோது ஊற்றாக
பெருகி வழிந்த ரத்த வாசனை இப்போது அவன் மூக்கில் நெடியேறிற்று. காளையின்
கொம்புக்குக் கண்களைத் திருப்பினான். கொம்பில் அப்பன் ரத்தம் இன்னும்
வழிந்துகொண்டிருப்பதுபோல் அவனுக்குப் பிரமை ஏற்பட்டது. அந்தக் கொம்பிலிருந்து ஒரு
வீச்சம் அவன் மூக்கில் அடித்த மாதிரி, மூக்கை ஒரு தடவை சிணுங்கி மூச்சை வெளியே
தள்ளினான்."
மணிக்கொடி எழுத்தாளர்களுக்கென்று தமிழில் ஒரு நிரந்தர அரியாசனம்
உண்டு. அதிலும் இவர் எழுத்து தனியாக மிளிர்கிறது. இவ்வளவு காலம் கடந்த பின்பும், இதைப்படிக்கும்
ஒருவருக்கு அதன் சூழல், அந்த மண்ணின் ஜாதீய சமூக அடையாளங்கள், பங்குபெறும்
மனிதர்களின் உணர்வு, இவையெல்லாம் தெள்ளத்தெளிவாக உணரமுடிவது குறிப்பிடத்தக்கது.
"மனுஷனும் சரி
மாடும் சரி, வாடிவாசல்லே கண்ணீரு சிந்தப்படாது. மறச்சாதிக்கு அது சரியில்லே
- அதுவும் அம்புலியை அப்பனா படைச்சவனுக்கு!"
"வரும் மாடுகள் எல்லாவற்றின் போக்கு, சுபாவத்தை முழுக்க அறிந்து வைத்து ஒருவன் வாடிவாசலில்
நிற்கமுடியாது. பாதை காட்டும்போது அது கொம்பலைத்து போகிற போக்கு, வாடிக்குள்ளே அது செய்கிற தந்திரம், அது பார்க்கிற பார்வை, கொம்பலைப்பு, திரும்புகிற விரைவு, இதுகளைக் கொண்டு மாட்டை நிதானிச்சு, அததுக்குத் தக்கபடி தன் உத்தியை அப்போதைக்கு அப்போது மாற்றி
உபயோகித்துப் பார்க்க வேண்டியதுதான்."
ஜல்லிக்கட்டு என்றாலே பசு வதை, மாட்டுக்கு செய்யும் கொடுமை என்று
புரிந்தும், புரியாமலும், கத்தும் கூட்டத்தாருக்கு, இன்று போல் கட்டுப்பாடுகளும், சட்டதிட்டங்களும் அறிவிக்கப்படாத
காலத்தில் கூட காளைகளின் மீது அத்துமீறல் நிகழாமல் சமூகக் கட்டுப்பாடுகள்
கடைபிடிக்கப்பட்தை தெளிவாக காட்சிப்படுத்தியிருக்கிறார்.
"ஒரு மாட்டுக்கு
ஒருத்தன்' என்கிற பரம்பரை விதியை அனுசரிக்கும் பரம்பரையில் வந்த
மருதனுக்கு, மாட்டை அடக்குவதற்கான உதவிக்காரன் என்ற தோரணையில் இல்லாமல், உயிரைக் காப்பாற்றுவதற்கு மட்டும் வாடிவாசலுக்குள் இன்னொருவன்
கை போட்ட காளையை விரட்ட எப்போது இறங்க வேண்டும் என்பது தெரியும்."
இதற்கும் மேலே, ஒரு ஜல்லிக்கட்டுக் காளை என்றால் என்ன, அதன் மனவோட்டம், அதன் ஆளுமை
எப்படிப்பட்டது என்பதை மிகத்துல்லியமாக படம்பிடித்து, படிப்பவரை அதனோடு
ஒன்றவைத்து, அதன் துடிப்பையும், வியர்வையையும், மூச்சுக்காற்றையும், இதையெல்லாம் விட அதன் ஆளுமையையும் முகத்தில் அறையச்
சொல்லியிருக்கிறார்.
தமிழில் வாசிப்பவர்களுக்கு கண்டிப்பாக ஒருமுறையேனும் படித்துவிட
வேண்டிய படைப்பு இது!.
வாடிவாசல்
ஆசிரியர்: சி.சு.செல்லப்பா
Comments
Post a Comment