சொர்க்கத்தின் பறவைகள் - வாழ்வின் ஓட்டம்
நம் தலைமுறை போல் கால மாற்றத்தை மிகப்பெரிய அளவில் நேரடியாக உணர்ந்த தலைமுறை இருந்திருக்கப் போவதில்லை என்று தோன்றுகிறது. குறிப்பிட்ட நேரத்தில் வீட்டிற்கு நடுவில் பாந்தமாக வைத்திருக்கும் ஒரு பெரிய பெட்டியை பதவிசாக அதன் மெல்லிய உறை விலக்கி, அதன் உருளைகளை மிக கவனமாக திருப்பி, சிலோனிலோ, சென்னையிலோ இருந்து ஒலிக்கும் பாடல்களை நிம்மதிப் பெருமூச்சு எழ கேட்பதையும், கனமான கருப்பு வஸ்த்துவை கையில் எடுத்து மெதுவாக எண்களை தேடிச் சுழற்றி, குரல் வந்ததும் பய பக்தியோடு வெளியூரில் இருக்கும் மாமாவின் ஊரையும் எண்ணையும் சொல்லி, காத்திருந்து ஓடிவந்து பேசுவதையும், நாமே மறந்திருக்கும் போது, அடுத்த தலைமுறை அதை நாம் சொல்லும்போது எப்படிப் புரிந்து கொள்ளும்? இதில், நமக்குப் பரிச்சயமே இல்லாத ஒரு நிலப்பரப்பில், ஒரு நூற்றாண்டுக்கு முந்தைய அதன் சமூக அமைப்பு, அந்த சமூகங்களின் தொன்மங்கள், வாழ்வியல் ஆகியவற்றை அந்த சமூகத்தில் இருந்து வந்த ஒருவரே சொல்லுவதை நமக்கு தமிழில் கடத்துவது என்பது எவ்வளவு பெரிய முயற்சி? அப்படி ஒரு முயற்சியைத்தான், லதா அருணாச்சலம் அப்துல்ரஸாக் குர்னாவின் “சொர்க்கத்தின் பறவைகளில்” செய்திருக்கிறார்...