மூடுபனி விலகும்போது
ஆங்கிலப் புதின வாசிப்பு என்பது எனக்கு சற்றே தாமதமாக தொற்றிய பழக்கம் தான். எழுத்துக்கூட்டிப் படிக்க ஆரம்பித்த காலத்தில் இருந்தே தமிழில் கையில் கிடைத்ததை எல்லாம் வாசிக்க ஆரம்பித்துவிட்டேன். ஆரம்பத்தில் இரும்புக்கை மாயாவி, வேதாள மாயாத்மா என்று காமிக்சில் ஆரம்பித்து, மெது மெதுவாக வாண்டு மாமா, பி.டி.சாமி, என்று வேகமெடுத்து, இரண்டாவது மூன்றாவது வகுப்பில், ராஜேந்திரக்குமார், புஷ்பா தங்கதுரை என்று எட்டிப்பிடித்துவிட்டேன். வயசுக்கு மீறிய பிஞ்சிலே பழுத்தது என்று பெருசுகள் முணுமுணுத்தது காதில் விழுந்தாலும் என் வாசிப்பு என்னவோ நிற்கவேயில்லை. காமிக்சுகளில் மாத்திரம் ஆங்கிலம் தமிழ் என்ற பாகுபாடு எப்போதும் இருந்ததில்லை. ஆங்கில நெடும் புதினங்கள் அவ்வப்போது வாசித்தாலும் தமிழ் அளவுக்கு அதில் வேகமில்லை. அதற்கு காரணம் வீட்டில் அப்பா கண்டிப்பாக ஹிந்து பேப்பர் தவிர ஏதும் வாங்குவதில்லை என்பதோடு என் வாசிப்பு அனைத்தும் விடுமுறையில் தாத்தா வீட்டுக்கு ஊருக்கு வரும்போதுதான். கோவைக்கு அருகாமையில் அமைந்த சிறிய ஊரான அங்கே தமிழ் காமிசுக்களுக்கே கோவை சென்று தான் வாங்கி வரவேண்டும். மற்றபடி தினப்பத்திரிக்கை என்றால்...