ஸ்ரீபிரியா கேட்ட பாடல்
எஸ் ராவின் எழுத்துக்கள் பல வருடங்களுக்கு முன்பே எனக்கு பரிச்சயமாயின. இந்தியா முழுவதும் பரவிப்படர்ந்த என் ரயில்பயணங்களில், தனிமை, கி.ரா., ரஸ்கின் பாண்ட் இவர்களோடு, மிக நெருக்கமான எழுத்தாக எனக்குப் பிடித்துப் போனதற்கு காரணம் அவர் பெரும்பாலும் எழுதிய விஷயங்களான பயணம் மற்றும் புத்தக வாசிப்பு. இது தவிர அவருடைய சிறுகதைகள் என்னை அவர் வார்த்தைகளோடு கட்டிப்போட்டு வைத்திருந்தன. அவர் எழுதிய உபபாண்டவம் தான், நான் முதன்முதலாக வாசித்த அவருடைய குறிப்பிடத்தக்க நெடும் புதினம் என்று நினைக்கிறேன். அதில் அவர் காட்டிய புனைவுலகம் என்னை பிரமிக்க வைத்தது. அதன் பிறகு அவருடைய வேறெந்த நெடும் புனைவும் அந்த பிரமிப்பை எனக்குத் தரவில்லை. அவருடைய நாவலான சஞ்சாரம் பற்றி அறிந்தவுடன், அதை படிக்க வேண்டும் என்ற தவிப்பு வெகு நாட்களாக எனக்கு இருந்து வந்தது. அதற்கு காரணம் எஸ் ராவின் புதினம் என்பது மட்டுமல்ல. நாதஸ்வர கலைஞர்களை பற்றியது என்பதும் தான். இருந்த போதும், இலையில் உள்ள பிடித்தமான பதார்த்தத்தை கடைசி வரை வைத்திருந்து, இறுதியில் இருக்கையில் சாய்ந்து, கண்ணைமூடி ரசித்து உண்போமே, அதுபோலவே இந்தப் புதினத்தை இவ்வளவு வர...