பனிமூட்டத்திற்கு அப்பால்
சிலவருடங்களுக்கு முன் ஒவ்வொரு வார இறுதியிலும் நண்பர்களோடு ஒரு குறிப்பிட்ட மலையேற்றக் குழுவினருடன் இணைந்து மேற்குத் தொடர்ச்சி மலையின் அழகை நேரடியாக காண வெவ்வேறு பகுதிகளுக்கு மலையேற்றம் செல்வதுண்டு. அப்படி ஒரு முறை சென்ற பயணக் குழுவில் அனைத்து வயதிலும் உறுப்பினர்கள் இடம் பெற்றிருந்தனர். குறிப்பாக இளைஞர்கள் வழக்கம் போல் உற்சாகத்தோடு பெரும் அளவில் இணைந்திருந்தனர். பொதுவாக ஏறப்போகும் மலைப்பகுதியைப்பற்றி பெரும் உற்சாகம் குழு முழுவதுமே பரவலாக இருந்தது. பேசிப்பார்த்ததில் பெரும்பாலோனோர், இமயமலை பகுதிகளிலும், வ.கி. மாநிலங்களிலும் உள்ள மலைப் பகுதிகளில் மலையேற்றம் செய்வதையே தங்கள் லட்சியமாகக் கூறிக்கொள்வதை கேட்கமுடிந்தது. வெற்றிகரமாக மலையேற்றத்தை முடித்துக்கொண்டு, மறு நாள் காலையில் உணவு நேரத்தில், இயல்பாகவே சிறு சிறு குழுவாக பிரிந்து நிதானமாக உரையாடிக்கொண்டிருந்தோம். அப்போது, ஒரு இளம் பெண், கையில் காபிக்கோப்பையுடன், எங்கள் உரையாடலில் வந்து இணைந்து கொண்டார். மெதுவாக இயற்கை, மலையோர தாவரங்கள் மற்றும் பிராணிகள், என்று சென்ற உரையாடல், வீட்டுப் பிராணிகளில் வந்து நின்றது. அப்போது வீட்டில் வளர்க்கும...