வரலாற்றின் வரையறைகள்
சிறுவயதில், பள்ளிக்காலத்தில், பாடம் நடத்திய வரலாற்று ஆசிரியர்கள் தொடர்ந்து குச்சியால் அடித்து உருவேற்றிய விஷயங்களில் ஒன்று அரசர்களின் ஆட்சிப் பரப்பை வரைபடங்களில் குறிப்பது. குறிப்பாக மௌரிய மற்றும் குப்த அரச வம்சம் ஆண்ட நிலப்பரப்பை இந்திய வரைபடத்தில் வரைவது ஒரு தேற்றமாகவே நிலைபெற்றது. ஒவ்வொரு தேர்விலும், தென் இந்தியா விடுத்து சற்றேறக்குறைய மொத்த இந்தியப் பரப்பையும் சேர்த்துக் குறித்தால் மொத்த மதிப்பெண் உறுதி. அதேபோல் தான் அசோகர், கணிஷ்கர் போன்றோரின் அரசாட்சியின் தனிச்சிறப்பு. சாலை எங்கும் மரம் நடப்பட்டதையும், சட்டம் ஒழுங்கு பராமரிக்கப்பட்டதையும் சேர்த்து இன்னும் சில வரிகளை இணைத்தால் போதும் அதற்கான மதிப்பெண்ணும் ஓரளவு தேற்றிவிடலாம். வெகு காலம் கழித்து அந்த வம்சங்களின் எந்த ஒரு அரசின் காலத்திலும் மொத்த மானாவாரியாக ஆட்சி செய்த நிலப்பரப்பு அப்படி இருந்ததே இல்லை என்பதும், பள்ளிகளில் சொல்லி கொடுத்தது அந்த வம்சங்களின் அனைத்து அரசர்கள் ஆட்சியில் மாறி மாறி இருந்த நிலப்பரப்பின் தோராயமான குறிப்பு மட்டுமே என்று அறிந்தபோது அந்தக் காதைத்திருகிய அந்த வரலாற்று பாட ஆசிரியர் மீது பரிதாபம் தான் வந்...