சொர்க்கத்தின் பறவைகள் - வாழ்வின் ஓட்டம்

 நம் தலைமுறை போல் கால மாற்றத்தை மிகப்பெரிய அளவில் நேரடியாக உணர்ந்த தலைமுறை இருந்திருக்கப் போவதில்லை என்று தோன்றுகிறது. குறிப்பிட்ட நேரத்தில் வீட்டிற்கு நடுவில் பாந்தமாக வைத்திருக்கும் ஒரு பெரிய பெட்டியை பதவிசாக அதன் மெல்லிய உறை விலக்கி, அதன் உருளைகளை மிக கவனமாக திருப்பி, சிலோனிலோ, சென்னையிலோ இருந்து ஒலிக்கும் பாடல்களை நிம்மதிப் பெருமூச்சு எழ கேட்பதையும், கனமான கருப்பு வஸ்த்துவை கையில் எடுத்து மெதுவாக எண்களை தேடிச் சுழற்றி, குரல் வந்ததும் பய பக்தியோடு வெளியூரில் இருக்கும் மாமாவின் ஊரையும் எண்ணையும் சொல்லி, காத்திருந்து ஓடிவந்து பேசுவதையும், நாமே மறந்திருக்கும் போது, அடுத்த தலைமுறை அதை நாம் சொல்லும்போது எப்படிப் புரிந்து கொள்ளும்?


இதில், நமக்குப் பரிச்சயமே இல்லாத ஒரு நிலப்பரப்பில், ஒரு நூற்றாண்டுக்கு முந்தைய அதன் சமூக அமைப்பு, அந்த சமூகங்களின் தொன்மங்கள், வாழ்வியல் ஆகியவற்றை அந்த சமூகத்தில் இருந்து வந்த ஒருவரே சொல்லுவதை நமக்கு தமிழில் கடத்துவது என்பது எவ்வளவு பெரிய முயற்சி? அப்படி ஒரு முயற்சியைத்தான், லதா அருணாச்சலம் அப்துல்ரஸாக் குர்னாவின் “சொர்க்கத்தின் பறவைகளில்” செய்திருக்கிறார். அவருடைய ‘தீக்கொன்றை மலரும் பருவம்’ ஏற்கனவே வாசித்திருந்தாலும், இந்த முறை இந்தப் புதினத்தின் மொழிபெயர்ப்பு அவருக்கே முற்றிலும் சவாலான ஒன்றாக இருந்திருக்குமென தோன்றுகிறது.




ஆப்பிரிக்க கண்டம் ஓரிரு நூற்றாண்டாக பலவாறு உருமாறியிருக்கிறது. அதன் நிலப்பரப்பு, சமூகம் அனைத்தும் வேறு பெயர்களுடன், தேசிய அடையாளங்களுடன் மாறி மாறி இருந்திருக்கிறது. நமக்கெல்லாம் ஆப்பிரிக்கர் என்றாலே, வறண்ட நிலப்பரப்பில் பஞ்சம் பட்டினியுடன் பின்தங்கிய மக்கள் என்றே பொது புத்தியில் பதியவைக்கப்பட்டுள்ளது. அது காலனி ஆதிக்கம் நிலைபெறத்துவங்கிய பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் இருந்து ஆதிக்க சக்திகளின் குரலில், அவர்களின் எழுத்துக்களின் வழியே பரப்பப்பட்ட ஒன்று. உண்மையில் கி.பி. 700ன் துவக்கத்தில் இருந்து சுமார் 800 வருடங்கள் ஸ்பெயினை ஆண்ட மூர்கள் ஆப்பிரிக்காவில் இருந்தே வந்தவர்கள் என்பது நம்மில் பலருக்கு கேள்விப்படாத ஒன்று. அவர்கள் வழியே தான் மேற்குலகம் இன்று முன்னோடி பெற்று இருக்கும் விஞ்ஞானத்தின், அடிப்படைக் கணிதம் அங்கே சென்று சேர்ந்தது என்பதும் வரலாறு நமக்கு உணர்த்தும் உண்மை. உண்மையில் ஆப்பிரிக்க என்பது வெறும் பாலை நிலமல்ல.

இந்தக் கதைக்களமான கிழக்கு ஆப்பிரிக்கா, சிறப்பான மீன் பிடி கடற்கரைகளில் இருந்து, ஆறுகள் பாயும் மிக வளமான வேளாண் நிலங்களும், பசுமையான மலைகளும் ஏன், கடலை ஒற்றிய பெரும் உள்நாட்டு ஏரிகளும் நிறைந்தது. அப்படி இருக்கும் நிலப்பரப்பை சுற்றி அதன் அடிப்படையாக அமைந்த இனக்குழுக்களாகவே சமூக அமைப்பு இருந்திருக்கிறது. ஏதோ ஒரு வகையில் அவர்கள் பெரும்பாலும் ஸ்வாஹிலி மொழியோ அல்லது அதன் திரிபான ஒரு மொழி வழக்கையோ கொண்டிருந்தாலும், அவர்கள் அனைவரும் வேறு வேறு இனக்குழுக்களாக, வேறு வேறு மத நம்பிக்கைகளையும், தொன்மங்களையும் கொண்டவர்கள் என்று இந்த புத்தகத்தின் வழியே புரிந்துகொள்ள முடிகிறது.

அமைதியான குடும்பத்தில் பிறந்த அப்பாவி சிறுவனின் பார்வையில் ஆரம்பிக்கும் கதை, வாழ்க்கையின் கரடு முரடான பாதையில் தள்ளப்பட்டு அதன் யதார்த்தம் கண்முன்னே நிற்க வளர்த்து இளைஞனாக உருவாக்கி வரும் கதை இது. அவன் வாழ்வின் நிகழ்வுகளின் வழியே அப்போதைய கிழக்கு ஆப்பிரிக்க சமூகத்தையும், அதன் நம்பிக்கைகள், வாழ்வு முறை ஆகியவற்றையும் படம்பிடித்துக்காட்டுகிறது. கதை நடக்கும் காலகட்டம் முதலாம் உலகப்போருக்கு சற்று முந்தைய காலம். ஜெர்மானிய பேரரசின் கீழ் ஆப்பிரிக்க கண்டத்தில், காலனிய ஆதிக்கம் நான்கு பகுதிகளாக இருந்தது. அதில் கிழக்கு ஆப்பிரிக்க காலனி, இன்றைய கென்யா, தான்சானியா ஆகியவற்றை உள்ளடக்கியது. அதன் கடற்கரையோரத்தில் ஆரம்பிக்கும் யூசுப்பின் வாழ்க்கைப் பயணம் மெதுவாக உள்நோக்கி விக்டோரியா எரிப் பகுதி வரை சென்று வருகிறது.

ஜெர்மானியர்களின் ஆதிக்கம் பரவலாக இன்னும் சென்றடைந்திடாத காலகட்டத்தில் ஆரம்பித்து, உச்ச கட்டமாக அவர்களின் வருகையில் வந்து முடிகிறது.

கதை நடக்கும் சம்பவங்களின் வழியே அந்த சமூகத்தில் நிலவிய முரண்களை நேரடியாகவும் இலை மறைக் காயாகவும் சுட்டும் விதம் மிகச்சிறப்பு. ஐரோப்பியரின் நேரடி தொடர்பு இல்லாமலே அவர்களின் நடுவே ஏற்கனவே இருந்த அடிமைத்தனம், ஓரினச்சேர்க்கை, காட்டு விலங்குகளின் வேட்டை மற்றும் வேட்டை பொருட்களின் சட்ட விரோத கடத்தல், இந்திய பனியாக்களின் பரவலாக இருந்த அதீதமான சுரண்டல், அதன் காரணமாக இந்தியர் மீதான பொதுவான வெறுப்பு எனப் பலவிஷயங்களை காட்சிப்படுத்துகிறார். குறிப்பாக ஓரினச்சேர்க்கையை இவர் நுட்பமாக உணர்த்தும் விதம் நேரடியாகவும் வெளிப்படையாகவும் குறிப்பிடுவதைவிட மிக அதிகமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

கதை முழுவதும் இஸ்லாமிய, விவிலிய குறியீடுகளாக தூவி நிறைத்திருக்கிறார் குர்னா. அதன் வழியே அன்றைய மத சமூகத்தின் மீதும், மத நம்பிக்கை மீதும் அவர் வைக்கும் விமர்சனங்கள் மிக நுட்பமானதுடன், மிகக் கூர்மையானதும் கூட. உதாரணமாக யூசுப்பின் பயத்திற்கு, நாய்களை உருவகப்படுத்தும் விதம். நாய்களின் மீதான இஸ்லாமிய மத குறிப்புகளில் உள்ள தடை மற்றும் வெறுப்பை அது நேரடியாக சுட்டுகிறது. யூசுப்புக்கு தடை செய்யப்பட்ட அஜீஸ் மாமாவின் அழகிய தோட்டம், அதன் அழகு என இஸ்லாமிய ஜன்னாஹ் எனப்படும் சொர்க்கத்தின் குறியீடாக தோன்றுகிறது. மேலும் அதன் மூலம் தோற்றுவிக்கும் சுதந்திரம் மற்றும் அடிமைத்தனம் ஆகியவற்றின் மீதான கேள்விகள் மிக ஆழமானவை.
அவர் நேரடியாக மதத்தின் மீது வைக்கும் விமர்சனங்களை இவர் பாத்திரங்களின் உரையாடல் வழியே நிகழ்த்துகிறார். அதற்காக காலாசிங்கா என்னும் சீக்கிய கதாபாத்திரத்தை பயன்படுத்தும் உத்தி மிக சுவாரசியம்.

அஜீஸ் மாமா என்று யூசுப் கூறிவந்தாலும், தொடர்ந்து அவனுக்கு அவர் மனதளவில் நெருக்கமான மாமா அல்ல, மரியாதைக்குரிய, எஜமானர் நிலையில் இருப்பவர். அவருக்கு கீழ்படிவது மட்டும்தான் யூசப்புக்கு உரியது என்று தொடர்ந்து அவனுக்கு உணர்த்தப்படுகிறது.

“செய்யிது... இந்தப் பயணம் எப்படியிருந்தாலும் செய்யிது ஒரு வெற்றி வீரர். தொடர்ந்தான் முஹமது அப்தல்லா. கடந்த முறை நாங்கள் மன்யேமாவில் இருந்தபோது நீ அவரைப் பார்த்திருக்க வேண்டும். துணிச்சலான காரியங்கள் செய்ய அவர் ஒரு போதும் பின்வாங்கியதில்லை. எதற்கும் அஞ்சாதவர். எதற்குமே! அவரிடம் முட்டாள்தனமே கிடையாது. ஏனென்றால் இந்த உலகத்தை அதன் போக்கிலேயே பார்க்கிறார். இது ஒரு கொடூரமான மோசமான இடம். அது உனக்குத் தெரியும். அவரிடமிருந்து கற்றுக்கொள்! கூர்மையாகப் பார்! கூர்மையாக இரு! நீ கொஞ்ச நாள் வாழ்ந்த இடத்திலிருந்த அந்தக் குண்டான முட்டாள் போல உன்னையும் ஒரு கடைக்காரனாக உருவாக்கிவிடாதே.”

அனைவரை விடவும் மேம்பட்டவராகவும், யூசுப் உட்பட அனைவரும் அவர் பரிவையும், ஆதரவையும் தேடுபவர்களாகவும் காட்டப்பட்டு, இறுதியில் பெரும் நெருக்கடி நேரும்போது அவர் ஆதரவு அவர்களுக்குக் கிட்டாமல் அவரால் யூசுப் கைவிடப்படுவது, மத மற்றும் கடவுள் நம்பிக்கை மீதான அவர் விமர்சனத்தின் உச்சகட்ட குறியீடு என்றே தோன்றுகிறது.

மிக அருமையாக குறியீடுகளையும் காட்சிப் படுத்துதலையும் கொண்ட இந்த மொழிபெயர்ப்பு, இதன் காலகட்டங்களைப் பற்றிய வரலாற்று மேல் வாசிப்புடன் கூடிய மறு வாசிப்பில் இன்னும் மிக அழகாக துலங்குவதைக் கண்டுகொண்டேன். முதலில் சற்று தயக்கத்துடன் தொடர்ந்த வாசிப்பு, பிறகு மெதுவாக வரும் புரிதல்களின் பின் மிக வேகமாகவும் ஆழமான உணர்வுகளோடும் செல்கிறது. மிக அருமையான அனுபவம் இது.

Comments

Popular posts from this blog

பாலை மனம்

அன்பே மருந்து

Deccan in Dazzling light