தொலைந்து போன வார்த்தைகள்

 ஒரு கடல் இரு நிலம், ஆங்கிலத்தில் By the sea என்று அப்துல்ரஸாக் குர்னா எழுதிய அழகிய நாவல். குர்னாவை பற்றி புதிதாக சொல்ல ஏதும் இல்லை.ஏற்கனவே அவருடைய இரு நூல்களை வாசித்த அனுபவம் மிக அருமை. அவர் நோபல் பரிசு பெற்றதற்கு முன்பு வெளிவந்த நாவல் இது. அகதியாக குடியேறிய அவர் மனதுக்கு மிக நெருக்கமானதாக இந்த நூல் இருந்திருக்கவேண்டும். நோபல் பரிசின் இணைய காணொளியில் அவர் தேர்ந்தெடுத்து வாசித்தது இந்த புத்தகத்தின் பக்கங்களைத்தான்.







இதை தமிழில் மொழிபெயர்த்தவர் சசிகலா பாபு. இவருடைய பத்தாவது மொழி பெயர்ப்பு இது. அந்த அனுபவம் இதில் தெரிகிறது. இவர் மொழிபெயர்த்த ஒரிய எழுத்தாளர் கோபிநாத் மோகந்தியின் மொழிபெயர்ப்பான சோற்றுப்பாடு என் வாசிப்பு பட்டியலில் உள்ளது. 








“மேஜையைச் சுற்றி அமர்ந்து நாங்கள் தேநீர் பருகினோம். ஹாம் துண்டுகளைக் கைகாட்டி வேண்டாமென நான் சிலியாவிடம் தலையாட்டினேன். “பன்றி” காதுவரை இளித்துக்கொண்டுச் சொன்னான் இப்ராகிம், அந்த கேலியை ஜார்ஜியிடமும் சொல்லத் திரும்பினான். “முஸ்லிம் இல்லையா, பன்றியிறைச்சி சாப்பிட மாட்டார், மூத்திரத்தில் சாராயவாடை இருக்காது. சுத்தம் சுத்தம் சுத்தம், கழுவு கழுவு கழுவு. கருப்பன்.”


கருப்பன் என்றதைக் கேட்டு ஜார்ஜி வெடித்துச் சிரித்தான். அவன் அப்படிச் சிரித்தது ஒரு கருப்பன் முஸ்லிமாக இருப்பதாலா அல்லது கருப்புத்தோலுடைய ஒருவன் சுத்தம் சுத்தம் சுத்தம், கழுவு கழுவு கழுவு என்று தீவிரமாக இருப்பதன் நகைச்சுவையா அல்லது அவர்களுக்குள் ஆபாசமாக கேலிபேசிக்கொண்டார்களா என்று எனக்குத் தெரியவில்லை. இப்ராகிம் என்ன சொன்னாலும் ஜார்ஜி சிரித்தான் என்று பிறகுதான் எனக்குத் தெரியவந்தது. அவர்கள் இருவரும் கிண்டலும் இளிப்புமாக என்னைப் பார்த்தார்கள்; அதிலிருந்த குரோதத்தை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை.”



ஒரு கடினமான அகதி வாழ்க்கையில் நுழையும் சாலேஹ் ஓமரின் பார்வையில்  விரியும் நாவல், குர்னாவின் வரிகளால் மனிதர்களின் முகங்களை மிகத்துல்லியமாகவும், மிக அழுத்தமாகவும் நம் பிரக்ஞையில் உயிரோடு உலவவிடுகிறது; அவர்கள் பிழைகள், குறைகள், அழுக்குகள், நிதர்சனங்கள் என அனைத்தோடும். குர்னாவின் வரிகள்  மனிதர்களை வடிக்கும் விதம் அலாதியானது. என்ன ஒரு படைப்பாளி அவர் என்று ஒவ்வொரு வரியிலும் நம்மை பிரமிக்க வைப்பது. 


கிழக்கு ஆப்பிரிக்காவின் ஸ்வாஹிலி பகுதி கடலோரத்தில் ஆரம்பிக்கும் கதை, அடிவானத்தின் கருமேகமாக துயரத்தை கட்டியம் கூறும் வரிகளுடன் ஆரம்பித்தாலும், அதை மெல்லிய நகையுணர்வை தூவி, லேசாக்க முயல்கிறது. கதை முழுவதும், சோகங்கள் அழுத்திவிடாமல் அந்த மிதமான நகையுணர்வு ஒரு கோப்பையில் சுவைக்கும் மிதமான சுவையுள்ள காபியைப்போல், வாசிப்பை தளும்பாமல் காப்பாற்றுகிறது.


தலைமுறை, வெறுப்பான நினைவுகள் என இரு கோடுகளின் எல்லைகளுக்கப்பால் சாலேஹ் ஓமர், லத்தீப் முகமது இருவரும் பயணிக்கின்றனர். அவர்களின் நினைவின் வழியே விரியும் உலகம் நம்மை பிரமிக்க வைக்கிறது.


குர்னாவின் மற்ற நாவல்களைப்போலவே காலனியாதிக்கத்தின் கரிய நிழலினடியில் இருந்தே இந்தக்கதை விரிகிறது. பொதுவாக உலக யுத்தங்களின் பின்னணியில் ஜெர்மானியரின் கடுமையாக சித்தரிப்பு  தான் பெரும்பான்மையான புதினங்கள் காட்டும் வடிவம். ஆனால், குர்னா அத்தோடு மட்டும் நிற்காமல், அவர்களின் மெல்லிய மனிதாபிமானமிக்க பக்கங்களையும் அவ்வப்போது காட்டத்தவறுவதில்லை. 


நாம் எதிர்பார்க்காத நேரத்தில், ஆப்பிரிக்கக் கரை தாண்டி , ஐரோப்பாவின் தாழ்வாரங்களில், கம்யூனிச கிழக்கு ஜெர்மனியில்  விரியும் கதை, வரலாற்றின் பக்கங்களில் தொலைந்துபோன கருங்கடல் ஜெர்மானியர்களின்  ( Black Sea Germans ) துயரம் மிகுந்த தடங்களை தொட்டுச்செல்கிறது. அதன் மூலம் - அதன் எச்சமான எல்லெக மற்றும் அவள் மகன் யான் வழியே -  குர்னா, தன் கதையின் பாத்திரங்களுக்கும், அதை வாசிக்கும் நமக்கும் தான் கற்றுக்கொடுக்க முயலும் மொழியை  முதன் முதலாக அறிமுகம் செய்கிறார்.


உண்மையில் கதை நெடுக அந்த மொழி புரியாமல் தான், ஒருவரை ஒருவர் அறியாமல் வெறுப்பையும் அதன் விளைவான செயல்களையும்  அள்ளித் தெளித்துக்கொள்கின்றனர். 


இறுதியில் ஓமரும் லத்தீஃபும், தங்களைப் பிரிக்கும் கோடுகளைக் கடந்து தங்கள் அமைதியையும் அண்மையையும் கண்டைவது குர்னா காட்டிய அந்த மொழியை கண்டடையும் போதுதான்.




“கௌரவம், மரியாதை, மன்னித்து விடுவது போன்ற வார்த்தைகளை நீங்கள் நிறைய முறை சொல்லிவிட்டீர்கள். இவற்றிற்கெல்லாம் ஒரு அர்த்தமுமில்லை; அவை வெறும் வார்த்தைகள்தான். நாம் எதிர்பார்ப்பது கொஞ்சம் பரிவு;  நமக்கு அதிருஷ்டமிருந்தால்.”


Comments

Popular posts from this blog

பாலை மனம்

தமிழின் புதிய வெளிகள்

Deccan in Dazzling light