பிறப்பும் மறுபிறப்பும்

 தொண்ணூறுகளின் மத்தியில் நான் பொறியியல் இளங்கலை முடித்து, நடுவில் ஒரு வேலையில் சேர்ந்திருந்து, பின் ஒரு இரு சக்கர விபத்தினால் வீட்டில் முடங்கி இருந்த நேரம். செய்த எதுவும் சரிவராமல், அவநம்பிக்கையின் கருத்த மேகங்கள் மெதுவாக சூழ்ந்திருந்த காலம்.

படுக்கையில் இருந்தாலும், விடாமல் கற்ற கல்வி சார்ந்த செயல் ஏதாவது செய்ய வேண்டும் என்ற உறுதி மட்டும் இருந்தது. 




அப்போது கூகுள் மொழிபெயர்ப்பு வசதிகள் இல்லாத காலகட்டம். ஜப்பானிய கண்டுபிடிப்புகளின் பேடன்ட் விண்ணப்பங்கள் சம்பந்தமாக, அந்தக் கண்டுபிடிப்புகளின் சுருக்கமான விளக்கங்களை ஆங்கிலத்தில் சேர்க்க வேண்டிய தேவை இருந்தது. அதை முதல் நிலையில் தானியங்கி மொழிபெயர்ப்பு இயந்திரம் மாற்றியபின், அதைத் திரும்பப் ஒரு முறை மேனுவல் முறையில் சரியாக திருத்தி அமைக்கும் தேவை இருந்தது. அதற்கு துறை சார்ந்த அறிவு தேவை என்பதால், இந்த வேலையை அப்போது அதை செய்யத்துவங்கினேன். 

அப்போதுதான் மொழிபெயர்ப்பு என்பது வெறும் மொழி மாற்றம் மட்டும் அல்ல, அதன் உயிரோட்டமும், அர்த்தமும் மாறாமல் மொழி கடத்தும் வேலை என்பது புரிந்தது.

பின்னர் வாசகனாய், பல மொழிபெயர்ப்பு புதினங்களைப் படித்தபோதும் அவற்றில் வெகு சில புத்தகங்களே அதை வெற்றிகரமாக அதன் மூலத்திலிருந்து உயிரோட்டம் கலையாமல் கொடுத்திருந்தன.

அந்த வகையில் சாகித்ய அகாதெமி விருது பெற்ற, கன்னடத்தின்  மாபெரும் எழுத்தாளரான யு.ஆர்.அனந்தமூர்த்தியின் பவ (bhava) என்ற புதினத்தை, தமிழில் படித்தபின் தோன்றிய உணர்வு, இது ஒரு ஆழ்த்த உயிரோட்டம் உள்ள படைப்பு என்பதே. அந்த உணர்வே, அதைப் படைத்த அனந்தமூர்த்திக்கு மட்டுமல்ல, அதை மொழிபெயர்த்த நஞ்சுண்டனுக்கும் ஒரு எளிய வாசகனின்  சிறந்த அங்கீகரிப்பாகும். இதை மொழி பெயர்த்த, சேலத்தைச் சேர்ந்த நஞ்சுண்டன், பெங்களூரில், ஒரு புள்ளியியல் பேராசிரியராக  இருந்தவர். பன்னிரண்டு கன்னட புத்தகங்கள் / தொகுப்புகளுக்கு மேல் தமிழில் மொழி பெயர்த்தவர்; சிறுகதை எழுத்தாளர். 2012ம் வருடம் அவருக்கு   மொழிபெயர்ப்புக்கான சாகித்திய அகாதெமி விருது வழங்கப்பட்டது.  அவருடைய இன்னும் பல அருமையான படைப்புகள்  வந்திருக்க வேண்டிய நிலையில் அவர் இந்த உலகை விட்டு  நீங்கினார்.

இதற்கு அவர் பிறப்பு என்று வைத்த பெயரே  ஆழ்ந்த, அர்த்தம் பொதிந்த தலைப்பாகும்.பொதுவாக, பிறப்பு என்பது, மனிதன் புதிதாக இந்த உலகில் அடியெடுத்து வைப்பது என்ற செயல்பாட்டை மட்டும் குறிப்பதல்ல. அது, அவனுடைய மனம் மற்றும் அதன் உள்ளுணர்வு புத்தம் புதிதாக உருவாகும் ஒரு நிலையைப் பற்றியது.

அப்படி உலகில் அடியெடுத்தது வைத்தபின் ஆரம்ப காலத்தில்,மனிதர்கள், தங்கள் சூழ்நிலை, சமூகம், காலகட்டம் ஆகியவற்றின் ஊடாக பெறும் அனுபவங்களின் வழியே அவர்களின் மனோநிலை உருவாகிறது. வாழும் காலம் முழுவதும் அவர்களின் சிந்தனை மற்றும் செயல்பாடுகள் அதன் அடிப்படையிலேயே தொடர்ந்து நிழலும். அந்த ஆரம்பகால மனோநிலையைப்  பொறுத்து, அவர்களின் வாழ்வின் தவிப்புகளும், போராட்டங்களும், முரண்பாடுகளும் நிர்ணயம் செய்யப்படுகிறது. அதை, விதி என்றோ, ஊழ்வினை என்றோ, குலத்தால் வந்த குணம் என்றோ பல வகையில் இந்த சமூகம் ஏதோ ஒரு சட்டத்துக்கள் அவர்களை அடைக்கப்பார்க்கிறது. 

சிலநேரங்கள், அந்த உள்ளார்ந்த மனப்போராட்டத்தின் விளைவாகவோ, உள்ளுணர்வால் ஏற்பட்ட உந்துதல்களாலோ, தனிப்பட்ட தேடல்களை மனிதர்கள் முன்னெடுக்கிறார்கள். அப்படி ஆரம்பிக்கும் தேடல்களின் வழியே, அதன் அனுபவங்களின் வழியே, சிலநேரங்களில், அவர்களின் அடிப்படை மதிப்புகள் பெரும் மாறுதல்களுக்கு உள்ளாகும். அதன் வழியே அவர்களின் மனோநிலை ஒரு கணத்தில்  முழுமையான  மாற்றத்திற்கு உள்ளாகும். அப்படி நிகழும் நிகழ்வு ஒரு புதிய பிறப்புக்கு இணையானது.  

இந்தக் கதையில் வரும், சாஸ்திரிகள், தினகர், மற்றும் பிரசாத் மூவரும், வேறு வேறு காலகட்டம் மற்றும் சமூக பின்னணியில் இருந்து வந்தாலும், அவர்கள் மூவருக்கும், இந்த நிலையே பொதுவான ஒரு நிகழ்வு… அவர்களின், உள்ளார்ந்த முரண்பாடுகளின் விளைவாக அவர்கள் தேர்ந்தெடுக்கும் பாதை, அவர்கள் மூவரையும் ஒரு புள்ளியில் இணைத்து, அவர்களின் கடந்த கால தொடர்புகளின் சிக்கல்களையும், தீராத முடிச்சுகளையும் அவிழ்த்து, அதன் வழியே அவர்களின் மனச்சிக்கல்களையும், களைந்து, அவர்களுக்கு ஒரு புதிய பிறப்பை அளிக்கும் ஒரு பயணத்தில் நம்மை அழைத்துச்செல்கிறது.

ஆரம்பத்தில், மெதுவாக ஆரம்பித்து, உணர்ச்சிப் பிரவாகமாக பொங்கி  நம்மை உள்ளிழுக்கும் நதி இது.மெதுவாக பெண்களின் உறுதியின் வழியே, அவர்களின் ஆதரவின் வழியே, இந்த நதியின் கொந்தளிப்பு, அணையிடப்பட்டு, மாற்றங்கள் நிகழ்கின்றன. பெண்ணின் வயிற்றில் இருந்து பிறந்தவர்களுக்கு, பெண்களின் வழியே மறுபிறப்பும்  நிகழ்கிறது.

இந்த மொழிபெயர்ப்பின் வெற்றியாக கருதுவது, அதன் தென்கனரா பின்னணி, எந்த சிதைவும் இல்லாமல், அதே சமயம் வாசிப்பவருக்கும், எளிதாக இணைந்து செல்லும்  ஒரு நடையாக அமைந்திருப்பதாகும். ஒரு சிக்கலான கதையை, வாசகனுக்கு எளிதாக படைத்தது, அவனை கதைக்குள் வேகமாக உள்ளிழுத்துக் கொள்ளும் லாவகம் நஞ்சுண்டனுக்கு கை கொண்டிருக்கிறது.  மொழிபெயர்ப்பு என்ற உணர்வில்லாமல், தமிழிலேயே படைக்கப்பட்டது போல் இருப்பது ஒரு பேரானந்தம்.

Comments

Popular posts from this blog

பாலை மனம்

அன்பே மருந்து

Deccan in Dazzling light