மாற்றங்களின் கார்காலம்
90களின் மத்தி அது.கோவையில், கணினி கட்டுப்பாடு கொண்ட, CNC மெஷின்கள் என்ற பெயர் மெதுவாக புழங்க ஆரம்பித்த காலம். அங்கொன்றும் இங்கொன்றுமாய் மலிவான விலையில் தாய்வான் மற்றும் ஆசிய நாடுகளில் இருந்து இறக்குமதியான CNC லேத்துகள் வைத்து, பெரும் கம்பெனிகளுக்கு, காண்ட்ராக்டில் சிறிய அளவில் உற்பத்தி சாலைகளை பரவலாக தொழிலதிபர்கள் துவக்கிய நேரம். அந்த நேரத்தில், பெரும் ஆலைகளுக்கு மட்டும் தேவைப் படும், மெஷினிங் சென்டர் என்ற அதி நவீன, பல் திறன் கொண்ட, விலையுயர்ந்த பெரும் CNC மெஷின்களை ஐரோப்பாவில் இருந்து இறக்குமதி செய்து, விற்பனை மற்றும் சேவை தரும் நிறுவனம் அது. தென்னகத்தின் முக்கிய இரு தொழில் நகரங்களில் இருந்து கொண்டே, வருடத்திற்கு ஓரிரு முறை மட்டும் அந்த 30 முதல் 40 டன் கொண்ட, மிகவும் விலையுயர்ந்த இயந்திரங்களை இந்தியா முழுமைக்கும் விற்பனை செய்வதுதான் அந்தச் சிறு குடும்ப நிறுவனத்தின் இலக்கு. அன்று அவ்வளவு தான் இந்தியா முழுமைக்குமான தேவையும் இருந்தது. விற்பனை செய்த அந்த மிகத்துல்லியமான, அதிகத் திறன்கொண்ட அந்தப் பெரும் கனரக இயந்திரங்களை நிறுவுவதற்கும், பழுது ஏற்பட்டால் சரி செய்வதற்கும், பொறிய...