மாற்றங்களின் கார்காலம்
90களின் மத்தி அது.கோவையில், கணினி கட்டுப்பாடு கொண்ட, CNC மெஷின்கள் என்ற பெயர் மெதுவாக புழங்க ஆரம்பித்த காலம். அங்கொன்றும் இங்கொன்றுமாய் மலிவான விலையில் தாய்வான் மற்றும் ஆசிய நாடுகளில் இருந்து இறக்குமதியான CNC லேத்துகள் வைத்து, பெரும் கம்பெனிகளுக்கு, காண்ட்ராக்டில் சிறிய அளவில் உற்பத்தி சாலைகளை பரவலாக தொழிலதிபர்கள் துவக்கிய நேரம்.
அந்த நேரத்தில், பெரும் ஆலைகளுக்கு மட்டும் தேவைப் படும், மெஷினிங் சென்டர் என்ற அதி நவீன, பல் திறன் கொண்ட, விலையுயர்ந்த பெரும் CNC மெஷின்களை ஐரோப்பாவில் இருந்து இறக்குமதி செய்து, விற்பனை மற்றும் சேவை தரும் நிறுவனம் அது. தென்னகத்தின் முக்கிய இரு தொழில் நகரங்களில் இருந்து கொண்டே, வருடத்திற்கு ஓரிரு முறை மட்டும் அந்த 30 முதல் 40 டன் கொண்ட, மிகவும் விலையுயர்ந்த இயந்திரங்களை இந்தியா முழுமைக்கும் விற்பனை செய்வதுதான் அந்தச் சிறு குடும்ப நிறுவனத்தின் இலக்கு. அன்று அவ்வளவு தான் இந்தியா முழுமைக்குமான தேவையும் இருந்தது.
விற்பனை செய்த அந்த மிகத்துல்லியமான, அதிகத் திறன்கொண்ட அந்தப் பெரும் கனரக இயந்திரங்களை நிறுவுவதற்கும், பழுது ஏற்பட்டால் சரி செய்வதற்கும், பொறியியல் இளங்கலை அல்லது டிப்ளமா பட்டம் பெற்றவர்களை அந்நிறுவனம் பணியில் அமர்த்தி இருந்தது.
அன்றைய நிலையிலேயே இது மிகவும் cutting edge தொழில் நுட்பம். அக்காலத்தில் Y2K பித்துப் பிடித்து கணினித் துறையில் ஆயிரக்கணக்கில் பொறியியல் பட்டதாரிகள் நுழைந்த சமயம். படித்த துறையிலேயே சிறப்பான வாய்ப்பு வேண்டும் என்று நினைத்த பொறியாளர்களுக்கு அந்த நேரத்தில் இந்த CNC தொழில்நுட்பம் ஒரு அரிதான வாய்ப்பாக அமைந்தது. தொடர்ந்து அந்தத் துறையிலேயே பணி செய்து, முன்னேறவும் ஏதுவானது.
அப்படி நகரில் ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் இயந்திரவியல் இளங்கலை படித்துவிட்டு, அந்நிறுவனத்தில் சேர்ந்த அதிக தொழில் அனுபவம் ஏதுமில்லாத இளைஞன் அவன். கல்லூரியில் படித்தது விடுத்து, முற்றும் புதிய விஷயங்களை அந்த வேலையில் கற்றுக்கொண்டு வந்தான் அவன். அன்று அவனுக்கு, அந்நிறுவத்தின் முக்கிய வாடிக்கையாளரான ஒரு பெரும் ஜவுளி இயந்திரங்களை உற்பத்தி செய்யும் ஆலையில் இருந்து வந்த புகாரை சரி செய்யும் பணி கொடுக்கப்பட்டது.
விவகாரம் சற்றே புதிரானது. அது இயந்திரவியல் சம்பந்தப்பட்டதா, இல்லை மின்பொறியியல் சம்பந்தப்பட்டதா என்று புரியாத நிலை. ஆகவே, அவனுடன் கூடவே மின்னணு பொறியியல் படித்துப் புதிதாக வேலைக்கு சேர்ந்த இன்னொருவரும் இணைந்து அந்தப் புகாரை சமாளிக்க அந்நிறுவனத்தால் அனுப்பி வைக்கப்பட்டனர்.
அந்த இயந்திரத்தில், அதில் உள்ள வெவ்வேறு வகையான கணினி நிரல்களைப் பொறுத்து ( CNC Program ), வெவ்வேறு வகையான உற்பத்தி செயல்முறைகளை செய்விக்க முடியும். அப்படி அதில், அந்த நிரல்களுக்குத் தேவையான மில்லிங் (milling tool ), டிரில் ( drilling tool ) மற்றும் போரிங் ( boring tool ) டூல்களை அதுவே தேர்ந்தெடுக்கும் வகையில் அதில் தானியங்கி அமைப்பு ( Automatic tool conveyor - ATC ) பொருத்தப்பட்டிருக்கும். அதில்தான் பிரச்சினை. அந்த அமைப்பில், ஒவ்வொரு முறையும் நிரல்களில் குறித்த செயல்பாட்டுக்குத் தேவையான டூல் வராமல் அருகாமையில் இருக்கும் வேறு டூல் வரத்துவங்கியது. அதனால், அந்த தானியங்கி அமைப்பில் உள்ள மானி (sensor) மூலம் இயந்திரம் செயல்படாமல் நிற்க நேர்ந்தது. வேறு வேறு நிரல்களை மாற்றினாலும், ஒவ்வொரு முறையும் இதே பிரச்சினை தான்.
முதலில் சேவைப் பொறியாளர்கள் இருவரும் வழக்கமான நடைமுறையாக, அதன் நிரல்கள் மற்றும் கண்ட்ரோலரை சோதித்தனர். அதில் ஏதும் பிழை இல்லை என்று தெரிந்தது. பின்பு தொடர்ந்து செய்த சோதனையில், அந்தத் தானியங்கி அமைப்பின் ஹைட்ராலிக் பம்ப்பில் பழுது இருந்தது கண்டு பிடித்தனர். அந்த CNC மெஷின், AMC எனப்படும் வருடாந்திர பராமரிப்பு ஒப்பந்தத்தின் கீழ் இருந்ததால், தங்கள் கம்பெனிக்கு சென்று வேறு மாற்று பம்ப் ஏற்பாடு செய்துவிட்டு வருவதாக ஆலையின் பொறியாளர்களிடம் தெரிவித்துவிட்டு, இருவரும் அலுவலகம் வந்துசேர்ந்தனர்.
சிலநாட்களுக்குப் பின் புது பம்ப் வந்தவுடன், அதைப் பொருத்துவதற்கு அதுவரை வெளியூர் சென்றிருந்த, அனுபவம் நிறைந்த வேறு ஒரு பொறியாளர் அனுப்பப்பட்டார்.
அவர் சென்று வந்த பின் வெளிவந்த கதையே வேறு. பம்ப் பழுதென்பதும், அது மாற்றப்பட வேண்டும் என்பதும் சரிதான். வெளிவராத விஷயம் என்னவென்றால், சில நாட்களுக்கு முன் அந்தத்தானியங்கி அமைப்பில் உள்ள ஒரு மில்லிங் டூலின் பகுதி உடைந்தபோது, அதன் கம்பெனியி்டம் சொல்லி வாங்குவது நாள்பிடிக்கும் என்பதாலும், அதிக விலை கொடுக்கவேண்டியிருக்கும் என்பதாலும், அந்தப் பகுதியின் முழுமையான வரைபடம் இன்றி, அந்த ஆலையின் பராமரிப்புப் துறையினர், ரிவர்ஸ் என்ஜினீயரிங் முறையில் அதைத் தாங்களே செய்து மாட்டியுள்ளனர். இது ஒன்றும் பெரிதாக பிரச்சினை என்று சொல்ல முடியாது. பரவலாக நிகழ்வதுதான். ஆனால் பிரச்சினை புதிதாக செய்த பகுதி சரியான பொருந்தாதபோதும், அதை அந்தத் தானியங்கித் அமைப்பில் வலிந்து சொருகியுள்ளனர். என்பதுதான். அப்படிச் செய்யும் போது அதில் அதன் உள்ளே இருந்த விலையுயர்ந்த மானி (sensor) பழுதடைந்திருந்தது. மேலும் பழைய உடைந்த பகுதியை அவர்கள் சரியாக வெளியேற்றவில்லை. அந்த உடைந்த பகுதியின் மேலேயே அவர்கள் வலிந்து தள்ளும்போது, உடைந்த உலோகத்துகள்கள், ஹைட்ராலிக் பைப்பின் உள்ளே சென்றதில், பம்பிலும் பழுதை ஏற்ப்படுத்தி உள்ளது. இந்த உண்மை அந்த அனுபவசாலி பொறியாளர் அங்கே சென்று பார்த்த பின், சந்தேகப்பட்டு, அங்குள்ள ஆலையின் பராமரிப்புத் தொழிலாளர்களிடம் பேசியும், அவர்களின் தரவுகளை ஆராய்ந்தும், கண்டறிததால் வெளிப்பட்டது. ஆகவே இது ஆலைத் தரப்பில் நேர்ந்த தவறென்று வெளிப்பட்டதால், செலவு ஆலைத் தரப்பின் பொறுப்பானது.
இல்லையன்றால், புதிய பம்பிற்கான செலவு மட்டுமல்ல, அந்த விலையுயர்ந்த மானியின் செலவையும் சேர்த்து சேவைக் கம்பெனிதான் ஏற்றிருக்கவேண்டும். மேலும் ஆலையின் பராமரிப்புப் பொறியாளர்களுக்கு திருத்திய, சரியான வழிமுறையை அந்த சேவைப் பொரியாளரிடம் இருந்து கற்றுக்கொள்ளவும் ஒரு வாய்ப்பு அமைந்தது. அதனால் ஆலைக்கும் பிற்காலத்தில் இதே போன்ற தவறுகளின் மூலம் வரும் நட்டமும் தவிர்க்கப்பட்டது.
ஆக, இந்த இடத்தில் அந்த இரண்டாவதாக சென்ற பொறியாளரின் அனுபவமும், தொழில் திறனும் முக்கியத்துவம் பெறுகிறது.
உற்பத்திச் சாலைகளிலும், உற்பத்தி இயந்திரங்களிலும், பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் இருந்தே தொடர்ந்து வந்த தானியங்கி அமைப்பிற்கான தேடலும் ஆராய்ச்சியும், 80களிலும் 90 களிலும், CNC மெஷின்கள் பரவலாக்கம் நிகழ காரணமாயின.
அதைத் தொடர்ந்த அடுத்த இருபது முப்பது வருடங்களில் நிகழ்ந்த அதிவேகமான கணிப்பொறி முன்னேற்றமும், உற்பத்தி சாலைகளில் நிகழ்ந்த கண்டுபிடிப்புகளும் இந்தத் துறையை அதி தீவிர மாற்றத்துக்கு உள்ளாகியுள்ளது. அதனால் இன்று சம்பந்தப்பட்ட அனைத்து துறைகளிளும் ஏற்பட்டுள்ள மாற்றம் கவனிக்கத்தக்கது.
தொடர்ந்த ஆராய்ச்சியின் விளைவாக, மானிகளின் (sensor) திறன் கூடியுள்ளதுடன் அதன் விலையும் முன்பைவிட மிக மலிந்துள்ளது. அதேபோல் அதன் பயன்பாடும் அதிகரித்துள்ளது. உதாரணமாக ஒரு சிறிய மோட்டாரில், இருபது முதல் இருபத்தியைந்து மானிகள் இணைக்கலாம். அதன்மூலம் அந்த மோட்டாரின் உள்ளீட்டு மற்றும் வெளியீட்டு வேகம், வெப்பநிலை, முறுக்கு போன்று அதன் அனைத்து அளவீடுகளையும் கண்டறிய முடியும். இதை வைத்து, மேற்கூறிய நவீன மெஷின்களில் மானிகளின் பயன்பாடும், அளவுகளும் எவ்வளவு அதிகரித்திருக்கும் என்று எண்ணிப்பார்க்க முடியும்.
இன்று, புதிய தொழில்நுட்பமான, IIOT எனப்படும் தொழில்துறை பொருட்களின் இணையம் ( Industrial Internet of Things) ஏற்படுத்தியுள்ள மாற்றம் பிரமிக்கத்தக்கது.
மேற்கூறிய இதே பிரச்சினை இன்று ஏற்பட்டால், அனுபவம் மிகுந்த பொறியாளர்களின் தேவை இராது. இதே இயந்திரத்தின் ஒவ்வொரு பகுதியிலும் இருக்கும் மானிகள் ( sensors) , அதன் செயல்பாட்டின் ஒவ்வொரு மாற்றங்களையும் கண்டறிந்து, அதன் அளவீட்டுத் தரவுகளை தொடர்ந்து இணையத்தின் வழியே பெரும் சர்வர் தொகுப்பில் ( cloud storage server) சேர்த்துவிடும். அந்த அளவீட்டு தகவல்களை, இன்று இருக்கும் முன்னேறிய தரவு பகுப்பாய்வு தொழில்நுட்பத்தால், ( data analytics) நடந்து முடிந்த செயல்பாடுகளை மட்டும் அல்ல, இன்னும் சில காலத்தில் நிகழும் என்று எதிர்பார்க்கும் பராமரிப்பு நிகழ்வுகளையும், அதைத் தவிர்க்கத் தேவைப்படும் செயல்பாடுகளையும் கூட கணித்து அறிய முடியும்.
அது மட்டுமல்ல, இந்த கண்டுபிடிப்புகளின் வேகம் அடுத்த ஐந்து வருடங்களிலேயே இன்னும் அதிகரிக்கும். மேலும் அந்தக் கண்டுபிடிப்புகளின் தாக்கமும் அதிகரிக்கும்.
இதனால், இருபது வருடங்களுக்கு முன், இருந்தது போலவே படித்த பிரிவிலேயே வேலை தேடும் பொறியாளர்களுக்கு வேலை வாய்ப்பு குன்றிப்போகுமா?...
இல்லை… அவர்கள் செயல்பாடுகள் மாறிவிடும். அதற்கேற்ப அவர்களின் தகுதிகள் மாறக்கூடும். அதற்கான தயார்படுத்துதல் தேவைப்படும். நமது கல்லூரிகளில் சொல்லிக்கொடுக்கப்படும் பொறியியல் அடிப்படை முக்கியம். ஆனால், அதனோடு கல்லூரிக்கு வெளியே இந்தப் புதிய துறைகளின் அடிப்படை அறிவை, மாற்றங்களை, அதன் முன்னேற்றங்களை, பொறியியல் மாணவர்களிடையே சேர்க்கும் பயிற்சிகளின் மிகப்பெரிய தேவை உள்ளது. ஏற்கனவே மேற்கூறிய தொழில்நுட்பங்களின் கணினிப் பயிற்சிகளின் பகுதிகள், தனித் தனியாக உள்ளன. ஆனால், இயந்திரவியல் (mechanical engineering ), மின்னணுவியல் ( electronics engineering) மற்றும் இரண்டும் இணைந்த மெக்கட்ரானிக்ஸ் ( mechatronics) துறைகளில் ( மெக்கட்ரானிக் துறையே இன்று தமிழகத்தில் அரிதாகத்தான் வெகுசில கல்லூரிகளில் மட்டும்தான் இருக்கிறது) இருக்கும் பயிற்சிகளை, சரியான முறையில் ஒருங்கிணைத்து பொறியியல் மாணவர்களுக்கு அளிக்க வேண்டிய மிகப்பெரிய தேவை இருக்கிறது. இதில் தனியார் பயிற்சி நிறுவனங்களின் பங்கு குறைவு. அவர்களால் இயல்வதும் சந்தேகமே. ஆதலால், தனியார் தொழில்துறை மற்றும் அரசு தொழிற்பயிற்சித் துறையின் கூட்டு செயல்பாடுகள் இதில் தேவைப் படுகிறது. இந்த வகையில் தொழில்நுட்பத்தின் அடுத்த கட்டத்துக்கு தமிழக இளைஞர்களை அழைத்துச் செல்ல அரசின் பங்களிப்பு மிக மிக அவசியம்.
மேலும் அறிந்துகொள்ள:
Comments
Post a Comment