காற்றில் கலந்து போன தமிழ் வாசம்...

 நல்ல புதினங்களை வாசிக்கும் பொது இரண்டு நிலையில் அவை நம்மை பாதிப்பது வழக்கம். சில வரிகளைப் படிக்கும் போது, அவை நம் நினைவடுக்குகளுக்குள் ஒரு பின்னோக்கிய பயணத்தில் ஆழ்த்திவிடுபவையாக இருக்கும். வேறு சில, நமது கற்பனையில் மலர்ந்து, விரிந்து, வேர்விட்டு விடும். பிறகு பலகாலங்கள் கடந்து அந்த வரிகளின் பின்னணியில் அமைந்த இடங்களுக்கோ, சூழ்நிலைகளுக்குள்ளோ நாம் தற்செயலாக கடந்து சேரும்போது, அந்த வரிகளின் உணர்வுகள் அலை அலையாய் மேலெழுவதும், ஆங்கிலத்தில் Deja Vu என்பார்களே, அந்த இனம்புரியாத பரிச்சய உணர்வினை கிளர்ந்து விடுபவையாக இருந்துவிடும்.

அதுவும் ஒரு புதினத்தின் களம், கடந்தகாலத்தில் இருந்துவிட்டால்?... அதுவும் அன்றைய சரித்திர சம்பவங்களின் பின்னணியில், நாம் அறிந்த ஒரு இடத்தில் ஒரு காலும் அறியாத ஒரு நாட்டில் இன்னொரு காலும் வைத்து நம்மை நிறுத்தி காட்சிகளை விரித்தால் ?...
ஒரு தீவிர அபுனைவு வாசிப்பின் பின், ஆசுவாசத்துக்காகவும் இடைவெளிக்காகவும் கையில்லெடுத்த புதினம் இது. ஆனால் இதுவோ, என்னை புதுச்சேரியில் இருந்து கப்பலில் ஏற்றி, சைகோன் வரை ஒரு காலப்பயணத்தில் அழைத்துச்சென்றுவிட்டது.




இதை எழுதிய நாகரத்தினம் கிருஷ்ணா, இன்று பிரான்சின் ஸ்டராஸ்புர்க் நகரத்தில் வாழ்ந்து வந்தாலும் அடிப்படையில் அவர் ஒரு புதுச்சேரித் தமிழர். தொடர்ந்து சிறுகதை, நெடும் புதினம் என்று தொடர்ந்து இயங்கிவருபவர். முக்கியமாக பிரென்ச்சு மொழியில் உள்ள சிறந்த இலக்கியங்களை தமிழுக்கு கொண்டு வரும் பணியை தொடர்ந்து வருபவர். மேலும் அவரின் முதல் நாவல் "நீலக்கடல்" தமிழக அரசின் பரிசினையும், இரண்டாவது நாவல் 'மாத்தா கரி' கு.சின்னப்ப பாரதி அறக்கட்டளை பரிசினையும், மூன்றாவது நாவல் கிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி தமிழக அரசின் பரிசினையும் பெற்றுள்ளன. எனக்கு அவர் எழுத்தை வாசிப்பது இதுதான் முதல் முறை.
சில முன்னணி எழுத்தாளர்களின் எழுத்தில், வாசிப்பவருக்கு உணர்வுகளை வார்த்தைகளின் வழியே வேகமாக கடத்தும் பிரயத்தனம் வெளிப்படும். வாசிப்பவர்கள், படிக்கும் போதே வார்த்தைகளின் வழியே தங்கள் மனதுக்குள் உணர்வு கடத்தப்படுவதை உணர்வர். அது ஒரு வகையான எழுத்து. அதை படிப்பவர்கள் ஆரம்பத்திலேயே உணர்வோடு ஒன்றி, ஒரு உணர்வெழுச்சி நிலையில் தொடர்ந்து இருந்து வருவார்கள். சாமானிய வாசகனுக்கு, இவற்றோடு ஒன்றுவது இயல்பாகவே நிகழும். அப்படி உணர்ச்சிகரமான அந்நிலையில் இருக்கும்போது, சமநிலை குலைந்து, படைப்பாளியின் சிந்தனைகளை அப்படியே தர்க்க ரீதியான ஆய்வின்றி நேரடியாக உள்வாங்குவதும் நிகழும்.
அடுத்து வேறு சில வகை எழுத்துக்கள், உணர்வுகளை வார்த்தைகளில் கொப்பளிக்க விடுவதில்லை. வார்த்தை அலங்காரங்களிலும் இதில் ஏதும் இருக்காது. ஆரம்பத்தில் வெகு தட்டையாக, வறட்சியாக தெரியும் வரிகள், அதில் ஊடாக வரும் பல நிகழ்வுகள் வழியே, அதன் பாத்திரங்களின் குரல் வழியே வெளிப்படும் உணர்வு, கவனமாக வாசிக்கும் வாசகனுக்கு, அவன் ஞாபகங்கள் வழியாக புதிய புரிதல்களை, தன் சொந்த வாழ்வின் வழியாகவே ஏற்படுத்தும். இதற்கு , சற்று கூர்ந்து கவனித்து, அதில் ஆழ்ந்து போக, வாசிப்பவருக்கு சற்றே பயிற்சி தேவைப்படும்.
"வடிவத்தில் சைகோன் ஒரு பெரிய புதுச்சேரி. குறிப்பாகப் புதுச்சேரியின் வெள்ளையர் பகுதியை அவ்வப்போது நினைவூட்டுவதுண்டு. சைகோனைச் சுற்றிலும் மூன்று நதிகள். எனவே வீட்டில் நான்கு சுவர்களுக்குள் உணரும் புழுக்கத்தை வெளியில் காணமுடியாது. வீட்டில் என்னைத் தனிமை வெப்பம் சுட்டெரிக்கும். இந்த இரண்டிலிருந்தும் என்னை விடுவித்துக்கொள்ள சைகோன் விழாக்களும் வீதிகளும் பெரிதும் உதவியாய் இருந்திருக்கின்றன."
இப்படி வரிகள் அதீத உணர்வுக் கிளர்ச்சியின்றி வாசிப்பவரின் மனதோடு உரையாடுவதைக் காணலாம்.
சிறுவயதில், எங்கள் அம்மா ஊரில், எங்கள் வீ ட்டில் மட்டும் அல்ல, பல வீடுகளிலும் எந்த ஒரு நல்லது கெட்டது நடந்தாலும், ராமசாமித்தாத்தா என்று ஒருவர் வந்து முன்னாள் நின்று நடத்திவைப்பது என் கண்ணில் இன்றும் நிற்கிறது. ஆள் சற்று ஏறக்குறைய ஆறு அடிக்கு நிற்பார். அதோடு விவசாயத்தில் பாடுபட்டு வந்ததால் அகன்ற நெஞ்சும், வாட்ட சாட்டமான உடம்புடனும் அவர் வந்து நின்று, தன் கணீர் குரலில் அதட்ட ஆரம்பிக்கும் போது, அந்த நிகழ்வு நன்றாக நடந்துவிடும்.
சாதாரண நாட்களில் அவர், ஊர் எல்லையில் இருக்கும் அவர் தோட்டத்தில் ஓயாமல் பாடு படும் ஒரு கடும் பாட்டாளி. பெரும் வசதி என்றெல்லாம் சொல்ல முடியாது. எந்த வம்பு தும்புக்கும் போக மாட்டார், தான் உண்டு, தன் வேலை உண்டு என்று இருக்கும் மனிதன்.
வீட்டில் அனைவருடன் சேர்ந்தே வளர்ந்த என் அம்மாவின் அத்தை மகன், வயதில் குறைந்த எல்லோராலும் பெரியண்ணன் என்று அழைக்கப்பட்டவர், என்னை எப்போதும் கையில் வைத்து, பாசத்தோடு வேண்டியதை வாங்கிக்கொடுப்பவர், மிக இளவயதில் திடீர் என்று ஒரு அதிகாலை விழுந்து இறந்த போது, அவரை பெற்ற என் அம்மாவின் அத்தை மட்டுமல்ல, என் தாத்தா உட்பட அனைவரும் அதிர்ச்சியில் விக்கித்து நின்றனர். அப்போது, என் தாத்தா " ராமசாமி மாமனுக்கு சொல்லியுடுங்க" என்று தடுமாற்றத்தோடு சொன்னது நினைவிருக்கிறது எனக்கு. அவர் வந்து, அவருடைய கணீர் குரல் அங்கு ஒலிக்க ஆரம்பித்ததும், நடக்க வேண்டிய காரியங்கள் அடுத்தடுத்து கடகடவென நடந்தேறுவதையும் ஐந்தாறு வயது சிறுவனான நான் ஒரு வித ஆச்சரியத்தோடு பார்த்தது ஞாபகம் இருக்கிறது.
"பாகூரில் சின்னையா பிள்ளையென்று ஒருவர் இருந்தார். அம்மா வழியில் சொந்தம். வித்தியாசமான மனுஷன். ஊரில் நல்லதோ, கெட்டதோ எது நடந்தாலும் அவரைக் கூப்பிடவேண்டாம் ஆஜராகிவிடுவார். இதுதான் என்பதில்லை எல்லா வேலைகளையும் இழுத்துப்போட்டுக் கொண்டு செய்வார். பந்தக்காலும் நடுவார், பந்தி இலையை எடுக்கவும் செய்வார். இவ்வளவு செய்கிறவர், கடைசிப் பந்தியிலாவது உட்கார்ந்து, ஒரு வாய் சாப்பிட்டுவிட்டுப் போகலாம் இல்லையா, தொடமாட்டார். அவர் இறக்கும் வரை அப்படித்தான் வாழ்ந்தார். இப்படி வாழ்ந்து என்ன சம்பாதித்தார் என்கிறீர்களா. நிலம் நீச்சு ஆளு அம்பென்று வாழ்ந்த பெரிய மனிதர்களெல்லாம் அவரைப் பார்த்தால் கையெடுத்துக் கும்பிடுவார்கள். மூலவரைச் சேவித்துக்கொண்டு ஊரின் முக்கியமான பெரிய மனிதர்களெல்லாம் நிற்பார்கள், தீபாராதனைத் தட்டுடன் அர்ச்சகர் ஓரமாய் நிற்கிற சின்னய்யா பிள்ளையைத் தேடுவார். “இதற்காகவா இந்த மனுஷன் இவ்வளவையும் செய்யணும்?” என்று ஒருமுறை அப்பாவிடம் கேட்டேன். “நீ கேட்ட இந்தக் கேள்வியைப் பலரும் அவரிடம் ஏற்கெனவே கேட்டாச்சு; மழுப்பலான சிரிப்பைத் தவிர வேறெதையும் அந்தப் பைத்தியக்காரன் சொன்னதில்லை” என்றார். பாகூரில் கேட்ட கேள்விக்கு, எனக்கு விடை கிடைத்த இடம், சைகோன்"
இதைப்படித்த பின் எனக்கும் கூட ஒரு விடை தெரிந்தது.
"எனது கால் பதித்த பூமியை, கைதொட்ட பூவரசு மரங்களை, பழகிய சிநேகிதிகளை, தாயை, தந்தையை, தம்பிகளை, பாகூர் ஏரியை, புதுச்சேரி குயில் தோப்பை, அதிகாலை நாதஸ்வரத்தை, மார்கழி மாதத் திருப்பாவையை, அம்மா ஆசையோடு கொடுத்த அதிரசத்தை என்றாவது ஒரு நாள் திரும்பக் காண்பேன், தொடுவேன், கேட்பேன், ருசிப்பேன் என்ற நம்பிக்கையில் கணங்களைக் கரைத்துக்கொண்டிருக்கிறேன்."
இந்த வரிகளை படிக்கும்போது, பல ஆயிரம் மைல்கள் கடந்து முற்றிலும் வேறு மொழி, வேறு சூழலில் வேலைக்கு போன போது என் மனதில் இருந்த உணர்வுகளை அருமையாக முன்னால் நிறுத்தியது.
1920களின் இறுதியில் துவங்கி, இரண்டாம் உலக யுத்தம் முடியும் வரை நடைபெறும் இந்தக் கதை, வேதவல்லி என்னும் பாகூர் பெண்ணின் வாழ்வை அவர் குரலிலும், அவரைச் சார்ந்தவர்களின் குரலின் வழியாகவும் கூறினாலும், அது வேதவல்லியின் கடிதங்கள் வழியாக விரியும் புற உலகையும், அந்த காலகட்டத்தில் இருந்த சூழல் மற்றும் மனிதர்கள் வாயிலாக ஒரு விரிவான சித்திரத்தையும் நம்கண் முன் விரிக்கிறது. அடுக்கடுக்கான தாமரை போல, ஒவ்வொரு இதழாக, பல அடுக்குகளில் கதை நகர்கிறது.
"பெரியார், பெண்விடுதலைன்னு பேசற ஆம்பிளைகளுக்குக்கூடத் தங்கள் வீட்டுப்பெண்கள் வேதகாலப் பெண்ணா இருந்தால்தான் திருப்தி."
...
"பிறந்த வீட்டு மனிதர்களைச் சந்திக்கிறபோதும் அவர்கள் வீடுகளைத் தாண்டிச்செல்ல நேரும்போதும் எங்கள் கண்களை நீங்கள் பார்த்திருக்கணும்; கார்த்திகை தீபத்தைக் கண்ணுல ஏத்திக்கிட்டு, கண்ணீரை நெஞ்சுல சுமந்துக்கிட்டு, எடுத்துவைக்கும் அடிகளில் இலக்கணைப் பிழைகள் செய்து..."
என்று பெண்ணின் நிலை மற்றும் தடுமாற்றங்களை கூறுவதாகட்டும், இல்லை,
" புதுச்சேரி ஊரையும் இரண்டாகப் பிரித்து ஐரோப்பியர் ஒதுங்கி வாழ்ந்தனர். இந்திய மேட்டுக்குடியினர் இரண்டு வகையினர். முதலாமவர் பழைமைவாதிகள்; இரண்டாம்வகையினர், ஐரோப்பிய வாழ்க்கைமுறையில் மோகம் கொண்டவர்கள். இந்தியப் பழைமைவாதிகளுக்குத் தங்கள் பண்பாட்டில் ஐரோப்பியர் குறுக்கிடாதவரை காலனி ஆட்சி, ஐரோப்பியப் பண்பாடு - இரண்டின்மீதும் தங்களுக்குப் பகையோ, வெறுப்போ இல்லை என்கிற மனநிலை. பிரெஞ்சுக் கல்வி கிடைத்த புதுச்சேரி வாசிகளுக்கு மேற்கத்தியப் பண்பாடு மேலானது; அவர்கள் வாழ்க்கைமுறை உயர்ந்தது."
...
"பிரெஞ்சு அரசு, காலனி மக்கள் பிரெஞ்சுக் குடிமக்களாக மாறுவதற்கு உதவும் அரசாணையைப் பிறப்பித்தது. மாறிய காலனி மக்கள் இந்தியப் பிறப்பு வழங்கியுள்ள சமூக அடையாளத்தைத் துறக்கவும் பிரான்சு தேசத்துக் குடிமக்களுக்கு ஈடாகச் சலுகைகள், உரிமைகள் பெறவும் உறுதி அளித்தது. அரசாணைகளும் சட்டங்களும் விரைவான மாற்றத்திற்கு ஓரளவேனும் உதவக்கூடியவை என்பதை மறுக்கமுடியாது. ஆயினும் அவை ஏட்டுச்சுரக்காய் என்பதுதான் புதுச்சேரியிலும் சைகோனிலும் பிரெஞ்சுக் குடியுரிமை பெற்ற புதுச்சேரிக் காலனி மக்களின் சொந்த அனுபவம்."
...
"புதுச்சேரியில் ஆயிரத்தெட்டுச் சாதிகள். அவர்களை வழிநடத்தும் மக்கள் தலைவர்களுக்குத் தங்கள் அரசியல் செல்வாக்கு பற்றிய கவலைகள்."
...
"பிரெஞ்சு மக்கள் என்றால் பிரான்சு நாட்டிலிருந்து இந்தோசீனாவில் வணிகம் செய்ய, பொருளாதார நடவடிக்கைகளில் ஈடுபட இங்கு வந்தவர்களோடு, புதுச்சேரித் தமிழர்களையும் சேர்த்துக்கொள்ள வேண்டும். புதுச்சேரித் தமிழர்களெனில் பிரெஞ்சுக் குடியுரிமையுடன் இந்தோசீனாவிற்கு வந்தவர்கள். இந்தோசீனா பிரெஞ்சுக் காலனி என்கிறபோதும் புதுச்சேரிக் காலனி மக்களைப்போல இந்தோ-சீனர்களுக்குப் பிரெஞ்சுக் குடியுரிமை கிடையாது. இந்த ஓரவஞ்சனைக்கான காரணத்தைப் பிரெஞ்சுக் காரர்களிடம்தான் கேட்கவேண்டும். பிரெஞ்சுக் குடியுரிமை வாங்கின புதுச்சேரிக் காலனி மக்கள், பிரான்சு தேசத்து மக்களுக்குச் சமம். அவர்களுக்கு என்னென்ன சலுகைகளும் உரிமைகளும் உண்டோ அவ்வளவும் எங்களுக்கும் உண்டெனச் சொல்லப்பட்டது. ஆனால் இதில் உண்மை இல்லை என்பதுதான் எங்களனுபவம்."
என்று பிரெஞ்சு நாட்டின் அரசியல் விளையாட்டுக்களால் விளைந்த நிகழ்வுகளையும் அடுக்கடுக்காக எடுத்து வைப்பதாகட்டும், வரிகளில் பொதிந்திருக்கும் நிகழ்வுகளையும் அதன் பின்னணியையும், கவனமாக ஆழ்ந்து வாசித்தது புரிந்துகொள்வது ஒரு நல்ல முயற்சி .
"உங்கள் கணவரும் நீங்களும் சிங்காரமும் நானும் ரெனோன்சான்கள், பிரெஞ்சுக் குடியுரிமை பெற்றவர்கள். நாங்கள் பிரான்சுக்கு விசுவாசமா இருக்கவேண்டும் என்பதுதான் குடியுரிமை வற்புறுத்தும் நியாயம். பிரிட்டிஷ் இந்தியாவிலும் எல்லா இந்தியரும் பிரிட்டிஷாரிடமிருந்து இந்தியா சுதந்திரம் பெறணும் என நினைப்பதில்லை. அடுத்தவேளை சோறுக்கு என்னவழி என யோசிக்கிற மனுஷனுக்கும் பிரிட்டிஷாரை அண்டி வாழ்வதுதான் சொகமென நினைக்கிற கூட்டத்துக்கும் இந்தியா விடுதலை பெறணும்ங்கிற எந்த அவசியமும் இல்லை. அதேவேளை பிரெஞ்சுக் குடியுரிமை இருப்பதால நாம இந்தியரில்லைன்னு ஆயிடுமா? நம்முடைய பிள்ளைகள் எப்படியோ, நம்மால சோறு சாப்பிடாம இருக்கமுடியுதா? உண்மையைச் சொல்றேன்... எனக்கு இத்தியாவுக்குப் பிறகுதான் பிரான்சு."
என்று இந்தியத் தமிழர்களுக்கும், புதுச்சேரி தமிழர்களுக்கும் உள்ள மன வேறுபாட்டையும், அவர்களின் பொருளாதார நிலைகளையும் அவர் படம்பிடித்துக் காட்டும் போது, அக்காலத்தில் வேறு வேறு நாட்டின் பகுதிகளாக இருந்த தமிழ்மண்ணின் நிலை நமக்கு ஒரு புதிய அநுபவம்.
இந்திய விடுதலைக்கும், தமிழரின் முன்னேற்றத்திற்கும் போராடிய லியோன் பிரஷாந்தி (Leon Prouchandy) என்ற மாமனிதரின் சோக வாழ்வையும், இந்திய மற்றும் வியட்நாமிய சுதந்திர போராட்டத்தையும் ஒரு பேறிழையாக பின்னி எடுத்த திரையின் மீது அவர் மீது ஈர்ப்பு கொண்ட வேதவல்லி, அவர் தம்பி, கணவர், என்று தீட்டிய சித்திரம் அருமையான அனுபவம்.
இப்படி அடுக்குகளில் இருக்கும் கதைகளை ஒரு கோர்வையாக தந்து, இந்தப் புத்தகம் அழைத்துச் சென்ற காலப்பயணத்தில் ஆழ்ந்து, புத்தகம் முடிந்த பின்னும் வெளிவர முடியாமல் இன்னும் தத்தளித்துக் கொண்டிருக்கிறேன்.

Comments

  1. நான் வாசிக்காமலே நூலுக்கும் ஆசிரியருக்கும் அழைத்துச் சென்று விட்டீர் பிரேம். நன்றீர்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

பாலை மனம்

தமிழின் புதிய வெளிகள்

Deccan in Dazzling light