தமிழின் புதிய வெளிகள்

வழக்கமான புதின வாசிப்பு அனுபவங்களில் இருந்து விலகி புதிய வகையான களங்களில், வேறு வகையான அனுபவங்களை தமிழில் பெறவேண்டும் என்றால் மொழிபெயர்ப்பையே பெரும்பாலும் நாட வேண்டி இருக்கிறது. அதைத் தவிர்த்து அப்படி நேரடியாக தமிழில் எழுதப்பட்டதாக வெளிவரும் பல புதினங்கள் சரியான கள அறிவோ, அதற்கான உழைப்போ இன்றி, வெறும் வார்த்தை விளையாட்டுக்களாலும் பல்வேறு சர்க்கஸ் வேலைகள் செய்தும் வாசிப்பவரின் கவனத்தைத் தக்க வைத்துக்கொள்ளப் போராடிக் கவிழ்ந்து விடுகின்றன. அப்படியே அதில் சில, குறிப்பிட்ட அளவில் வாசிப்பவர்களின் கவனத்தைப் பெற்றாலும், அவற்றில் உள்ள போலித்தனம் சிலகாலங்களில் பல்லிளித்துவிடும். என்னதான் வாராது வந்த இலக்கியமாமணி என்ற பாசாங்கும், வாசகர் வட்ட ஜல்லி அடிப்புகள் இருந்தாலும், அந்த எழுத்துக்களின் உள்ளார்ந்த போலித்தனமும், ஆழமில்லாத பார்வையும் காலப்போக்கில் வெளுத்து விடும்.

அப்படி பல்வேறு புதினங்களை வாசித்து, சலிப்படைந்து, தமிழிலேயே தமிழின் வேறுபட்ட பரந்த களங்களை காணமுடியுமா என்று ஏங்கியபோது , கிருஷ்ணா நாகரத்தினம் , அந்தத் தேடலுக்கு ஒரு இலக்கும், அந்த இலக்கில் ஒரு சிறப்பான பயண அனுபவத்தையும், தனது ஆழ்ந்த ஆராய்ச்சியின் வழியாக விளைந்த இந்த நூலில் வழங்கியிருக்கிறார்.
அவரின் இந்த முதல் நாவலான "நீலக்கடல்" தமிழக அரசின் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2005 ஆண்டுக்கான சிறந்த நூல்களில் வெளிநாட்டுத் தமிழ் படைப்பிலக்கியம் எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றது .


சமகால நிகழ்வுகளால் துவங்கி, 18ம் நூற்றாண்டின் புதுச்சேரியையும், மொரீஷியஸையும் நம் கண்முன்னே நிறுத்துகிறார். ஏற்கனவே பிரபஞ்சன் வழியாக நாம் கண்ட 18ம் நூற்றாண்டின் புதுச்சேரியையும் அதன் மக்களையும், குறிப்பாக அனந்தரங்கம் பிள்ளை மற்றும் கனகராய முதலியார் போன்றோரையும் மீண்டும் சந்திக்க வைக்கிறார். ஆனால் அனந்தரங்கம் பிள்ளையின் நாட்குறிப்பின் வழியாக நாம் கண்ட அமைதியான, அதிக ஆர்ப்பாட்டமில்லாத புதுச்சேரி அல்ல. அடிமைத்தனம், ஆட்கடத்தல் என்று கரும் மேகங்கள் சூழ்ந்து புயல் அடிக்கும் புதுச்சேரி இது.
வார்த்தைகளில் வடித்துள்ள சித்திரம், ஒவ்வொரு கணத்திலும் காட்சிகளை கண்முன் நிறுத்துகிறது.
உதாரணமாக,
"ஆறு உயிர்ப்பின்றிக்‌ கடக்கிறது. அங்கொன்றும்‌ இங்கொன்றுமாக ஓடிப்‌ பிடித்து விளையாடும்‌ நீர்த்தாரைகள்‌. முழு நிலவின்‌ ஓளியில்‌, பனியில்‌ நனைந்திருந்த வெள்ளிப்பொடிகளாக மணற்துகள்கள்‌. ஈரமணலில்‌ கட்டுவிரியன்‌ ஓன்று புரண்டுபுரண்டு, சட்டையை உரிக்கிறது. எச்சமிட்டுக்கொண்டு நகரும்‌ நத்தைகள்‌. அவற்றை அவசர அவசரமாய்‌ ஓடும்‌ சதையுமாய்‌ மென்று விழுங்கும்‌ குள்ளநரி. குதித்தோடும்‌ குழிமுயல்கள்‌. அவற்றைச்‌ துரத்தித்‌ செல்லும்‌ உடும்பு. கரையை ஓட்டிய நாணற்‌ புதர்களிலிருந்து மகிழம்பூ வாசம்‌. சாரைப்பாம்பும்‌ நல்லபாம்புமோ அல்லது சாரைப்பாம்பும்‌ கொம்பேறிமூக்கனுமோ கூடுவதாற்‌ பிறப்பதென நம்பப்படும்‌ வாசம்‌. நமதுடல்‌ நடுங்க, குப்பென்று நாசிகளை அடைக்கின்ற வகையில்‌ வீசும்‌ தாழம்பூவின்‌ மணம்‌."
இந்த வரிகளில் குளிரா இல்லை வேறொன்றா என்று தெரியாத நடுக்கம் வருவதை அறியமுடிகிறதா?
18ம் நூற்றாண்டின் பேச்சு மொழியும், தற்கால 90களின் பேச்சு மொழியும் பின்னிப்பின்னி வருகின்றன. அப்படி வரும் பொது, அதன் கால நடைகளை இழக்காமல் வருவது சிறப்பு.
உதாரணமாக தற்கால உரையாடல் ஒன்று,
"- எங்களால நம்ப முடியலைங்க- மீண்டும்‌ வேலு.
- நான்‌ இருமலோடு போராடறதையா... இப்பத்தான்‌ மொளவாத்‌ தூள்‌ போட்டு சாராயம்‌ குடிச்சிருக்கன்‌. எல்லாக்‌ கபமும்‌ தம்பாட்டுக்கு சொல்லிக்கொள்ளாமல்‌ போயிடும்‌.
- அதில்லைங்க, நீங்கதான்‌ வேம்புலி நாயக்கர்னு சொன்னதும்‌ எங்களுக்கு ஆச்சரியமாபோச்சு.
- நம்பிக்கை இல்லாமலா என்னைத்‌ தேடிக்கிட்டு வந்தீங்க...?
- ஒரு வகையில அப்படித்தான்‌.
- ஏண்டா தம்பி, உனக்கு எந்த ஊரு என்ன பேரு?...
அதுவே 18ம் நூற்றாண்டில் வரும் உரையாடல் என்றால்,
' “நாளைக்‌ காலமே... பாகூர்‌ உடையார்‌ புதுச்சேரியிலதான்‌ நிற்பார்‌. அவருக்கங்கு பெத்ரோ கனகராய முதலியார்‌, அனந்தரங்கப்பிள்ளை, சுங்கு சேஷாசல செட்டியென இன்னும்பல வேண்டப்பட்ட பெரிய மனுஷர்கள்‌ உண்டு… உன்னை கோட்டைவாயில்ல தூக்கிலிட்டாலும்‌ ஆச்சரியமில்லை. இந்த இக்கட்டுலேயிருந்து தப்பிக்கவேணுமென்றால்‌, அடுத்தகிழமை கப்பல்‌ ஏறவேணும்‌. ஆனால்‌ அக்‌ கப்பலுக்கு தேவையானபேர்‌ இருப்பதாலே, உன்னை அனுப்பிவக்க முடியுமென்று உறுதியில்லை.”- என்று வயிற்றில்‌ புளியைக்‌ கரைத்தான்‌ தேவராசன்‌.
- அப்படிச்‌ சொல்லவேணாம்‌ சாமி. காலத்துக்கும்‌ உனக்கு அடிமையாக்‌ கிடப்பேன்‌. எப்பாடுபட்டாவது ஏத்திவிடவேணும்‌.
- நீ ஒரு மாசத்திற்கு முன்னே சொன்னால்‌ ஒரு பிரயாசையுமில்லை. இப்போது ரொம்ப சிரமம்‌. உனக்குக்‌ கிடைக்கும்‌ இருபது வராகனில்‌ என்‌ பங்காகப்‌ பத்து வராகன்‌ கணக்குத்‌ தீர்த்தால்‌, உன்னை மஸ்கரேஞ்க்கு (Mascarcignes) போகின்ற கப்பலில்‌ ஏற்பாடு பண்ணலாம்‌." '
இப்படி இரு கால மொழி நடை மாறி மாறி வந்தாலும், படிக்கும் போது  சுவாரசியமும் தொடர்ச்சியும் சற்றும் குழைவில்லாமல் செல்வது மிகச்சிறப்பு.
நீலக்கடல்… மிகப் பொருத்தமான தலைப்பு… இதில் பல ஆழமான பகுதிகளும் அதிகம், அந்த ஆழங்களில் சுழலும் பயங்கர விலங்குகளும் பலவிதம்.
Alex Haley யின் 'Roots' படிக்கும்போது, அமெரிக்க கறுப்பின அடிமை வாழ்வு கலங்க வைத்தது என்றால், இதில் தமிழ் அடிமைகளின் நிலை நடு நடுங்க வைக்கிறது. ஆண்ட பரம்பரைக் கதைகளெல்லாம் இந்த சரித்திரத்தால் சந்தி சிரிக்கிறது.
சிக்கலான 18ம் நூற்றாண்டின் தமிழக அரசியல் சதுரங்க விளையாட்டை அடிப்படை முடிச்சாகக் கொண்டு நகரும் கதை. அதனூடே புரளும் மனித வியாபாரத்தின் கோரம் கலங்க வைக்க அத்தோடு பின்னி வரும் அமானுஷ்ய உத்தியில் வாசிக்கும் நம்மை ஒவ்வொரு கணமும் நகம் கடித்து நகரவைக்கிறது.
"என் பங்கிற்கும் தமிழிலக்கிய எல்லைக்கல்லைப் பிடுங்கி இரண்டு மில்லி மீட்டராவது தள்ளி நடவேண்டுமென்ற ஆசை. காலம் பதில் சொல்லும்."
என கிருஷ்ணா தனது தன்னுரையில் குறிப்பிடுகிறார். மில்லி மீட்டரல்ல, சில மைல்களாவது நகர்த்தியிருக்கிறார் என்றே தோன்றுகிறது.

Comments

  1. Replies
    1. Thank you very much Madam, for your kind words and for stopping by.

      Delete

Post a Comment

Popular posts from this blog

பாலை மனம்

Deccan in Dazzling light