உலகத்தின் ஜன்னல் கதவு

 கட்டுரையோடு எனக்கு இருந்த தொடர்பு சற்று கலங்கிய ஒன்றுதான். பொதுவாக புத்தகங்கள் படிக்கும் பழக்கம், இரண்டாம் வகுப்பில் இருந்தே, என் தாத்தாவின் உதவியோடு எழுத்துக்கூட்டிப் படிக்க ஆரம்பித்ததில் இருந்து வெகு வேகமாக வளர ஆரம்பித்தது. ஆரம்பத்தில் காமிசுக்களைப் படிக்க ஆரம்பித்தவன், கையில் கிடைத்ததையெல்லாம் படித்துப் பார்க்க ஆரம்பித்தேன். தாத்தா வீட்டுக்கு முன்னால் அவர் கட்டி வாடகைக்கு விட்டிருந்த நகைக்கடையில் அவர்கள் வாங்கி வைத்திருந்த வாராந்திர பத்திரிகைகளைப் படிக்கச் சென்று மெதுவாக அங்கே இருந்த நாவல்கள் வரை வேகமெடுத்தது. விடுமுறை நாட்களில், நண்பகல் அங்கே போனால், ஓரமாக ஒரு பென்ச்சில் ஓணான் போல ஒட்டிக்கொண்டு கையில் கிடைத்த பத்திரிக்கைகளையோ நாவலையோ படித்தோகொண்டிருப்பதை அனைவரும் காணலாம்.

ஆரம்பத்தில் புனைவுகளைப்படிக்க ஆரம்பித்த நான், வெகு சீக்கிரத்திலேயே என் வயதுக்கு மீறிய புத்தகங்களை படிப்பதாக எனக்கு மூத்தவர்கள் முணுமுக்க ஆரம்பித்தனர். இரண்டாவது மூன்றாவது படிக்கும் சிறுவன், புஷ்பா தங்கதுரை, ராஜேந்திர குமார் என்று படிப்பது சற்று அதிகம் தான் அல்லவா?
அப்படி கையில் கிடைத்ததையெல்லாம் படித்து, அப்படியே மெதுவாக வட்டமடித்து, கட்டுரைகளை படிக்க ஆரம்பித்தேன். பொதுவாகவே அரசியல் என்பது என் தந்தையைப் பொறுத்தவரை எனக்கு தேவை இல்லாத ஒன்று என்றிருந்தாலும், தாத்தா வீட்டில் அது தான் சுவாசம். திராவிட இயக்கத்தில் இணைந்திருந்து அண்ணாவின் மீது மிக தீவிர நேசம் கொண்டவரான அவருக்கும், பக்தியில் ஊறி பூசை புனஸ்காரம் என்று இருந்த என் பாட்டிக்கும் இடையில் இரண்டையும் பேசும் வாய்ப்பை அந்த வாசிப்பு கொடுத்தது. அரசியல் கட்டுரைகளைப் படித்து விட்டு அப்போது இருந்தே அவரோடு அது சம்பந்தமாக உரையாடுவதும், அவரோடு முரண்பட்டு மல்லுக்கட்டுவதும் சிறு வயதில் இருந்தே ஒரு தொடர் நிகழ்வு. அதற்கு அவர் ஒரு மெல்லிய சிரிப்போடும், கையில் புகையும் சிகரெட்டோடும் என்னையும், என் படபடப்பான பேச்சையும் ஒதுக்காமல் உரையாடியது என்னை உற்சாகப் படுத்தும். விடுமுறை நாட்களில் தாத்தா வீட்டுக்கு ஊரில் இருந்து வந்திருக்கும் போது , ஒவ்வொருநாள் காலையிலும் பலதேய்த்தபின் அந்த உரையாடல் நிகழாமல் நாளே சோபையுறாது எனக்கு. அது எனக்கு கல்லூரி சென்ற காலத்திலும், அதற்கு பின்னும் தொடர்ந்தது. கட்டுரை என்று இல்லாமல், உரையாடவும், தெரிந்துகொள்ளவும் என்றே படிக்க ஆரம்பித்த எனக்கு, மேல்நிலைப் பள்ளி வரும்போது கவனம் எனது அண்ணன் ஒருவர் மூலமாக மெதுவாக மார்க்சியம் பக்கம் திரும்பியது. டீனேஜ் காலத்தில் ஒரு ஜோல்னாப் பையுடன், பைக்குள் ஏதோ ஒரு மார்க்சிய புத்தகத்துடன், எப்போதும் திரிவது வழக்கமானது.
பள்ளியில் எங்கள் தமிழ் ஐயா தமிழோடு, அரசியல், பொருளாதாரம், சமூகம் என்று அனைத்தையும் பேசுவது எனக்கு அடுத்த படி. அவரோடு நான் படித்த மார்க்ஸிய புத்தகத்தில் இருந்து உருவிய மேற்கோள்களை எடுத்து பேசுவது ( மல்லுக்கட்டுவது) பெரும் பேரின்பம். அவரும் அதோடு முழுவதும் உடன்படாவிட்டாலும், ஒரு புன்சிரிப்போடு என் கருத்துக்கு பதிலை அளித்தது எனக்கு உற்சாகத்தை தூண்டியது. அதுவே ஆங்கில பாடத்துக்கு வந்த ஆசிரியர் ஏதாவது மதவாத பிற்போக்குக் கருத்தை அள்ளிவிடும்போது எழுந்து அவரோடு மல்லு காட்டுவதும், அதன் மூலம் அவரை எரிச்சல் படுத்துவதும் ஓரு பேரினம்தான். இதையெல்லாம் என் வாசிப்பு தான் சாத்தியப்படுத்தியது.
பின்னால் படித்து வேலைக்கு வந்த பின் எஸ்.ராமகிருஷ்ணனின் கட்டுரைகளை படித்து அதை விரும்பி, கட்டுரைகளை தேடிப்படிக்க ஆரம்பித்தேன். அங்கிருந்து அ.முத்துலிங்கம் அவர்களின் கட்டுரைகளை படிக்க ஆரம்பித்த பின், தமிழின் உலகம் பார்க்கும் புதிய ஜன்னல்கள் திறக்க ஆரம்பித்தன. அதன்பின் அவருடைய கட்டுரைகளின் மீதும் , அவருடைய எழுத்தின் மீதும் தீவிர அபிமானம் வந்தது. தமிழ் கட்டுரை என்றால் எனக்கு அ.முத்துலிங்கம் அய்யாவின் கட்டுரைகள் தரச்சான்று என்னும் அளவுக்கு மற்றவரின் கட்டுரைகளை அத்தோடு ஒப்பிட்டு வாசித்து பார்ப்பது வழக்கமாயிற்று.
தமிழைப் பொறுத்தவரை, உலக அனுபவங்களை பற்றிய கட்டுரை மிக்க குறைவே. அந்த வகையில் சு.கி. ஜெயகரன் எழுதிய இந்தத் தொகுப்பு அ. முத்துலிங்கம் அய்யாவின் கட்டுரைகளோடு ஒப்பிடும் அளவுக்கு இருந்தது.




ஆரம்பத்தில் அறிவியல் சம்பந்தப்பட்ட விஷயங்களை பேச ஆரம்பிக்கும் இந்தத் தொகுப்பு சில முக்கியமான, சுவாரசியமான விஷயங்களை அவர் அனுபவங்களின் வழியாகவே முன்வைக்கிறது.
"கயிறு ஒன்றைப் பார்த்து அதைப் பாம்பென்று நினைத்தால் அது காட்சிப் பிழை Illusion. ஆனால் கயிறு போன்ற பொருளால் தூண்டப்படாமல், பாம்பொன்று சீறிவருவதாக மனக்கண்ணில் காணுவதை Hallucination என்பர்."
பல இடங்களில் மனித உறவுகளின் மெல்லிய மன உணர்வுகளை அவர் காட்சிப்படுத்தும் இடங்கள் வாசித்து முடித்தவுடன் சற்று மௌனமாய் அசைபோடவும், நம்மை நாமே கேள்விக் கேட்கவும் வைக்கிறது.
"அப்போது என் அப்பா அவரைப் பார்த்து “யாரம்மா நீ. தெரியலையே” என்றார். அது மறக்க முடியாத முகமல்ல என்பது வேறு விஷயம். ‘என்னைத் தெரியலையா, நன்றாக ஞாபகப்படுத்திப் பாருங்கள்’ என்று அவர் கூற, என் தந்தை மறுபடியும் தனக்கு அவரை நினைவு கூற இயலவில்லை என்று கூற, அதைக் கேட்டு அப்பெண் நம்பமுடியாதவர் போல ஒரு கேலிச் சிரிப்பு சிரித்தார். அந்த நிகழ்ச்சி எனக்குப் பழுத்த ஓலையைப் பார்த்துப் பரிகசித்த குருத்தோலையை நினைவுபடுத்தியது. நான் அந்தப் பெண்ணிடம் என் தந்தைக்கு அண்மைக்கால நிகழ்வுகள் அவர் நினைவில் நிற்பதில்லை என்பதை விளக்கி, அவர் வாழ்ந்த காலம் வரை (என் தந்தை இறந்தபோது அவருக்கு வயது 94!) நாம் வாழ்வோமா எனத் தெரியாது என்பதையும், நாமும் ஒருநாள் மூப்படைவோம் என்பதையும் எடுத்துக் கூறினேன். அது அந்தப் பெண்மணிக்கு உறைக்கவில்லை என்பது வேறு விஷயம்."
...
"முதுமை ஒரு பிணியல்ல, அதுவும் அனுபவித்து வாழ்ந்து கடக்க வேண்டிய பருவம் என்பதை உள்வாங்கி, முதுமையை எதிர்நோக்கும் முதிர்ச்சி ஏற்பட்டால் சாயங்களுக்கு வேலையில்லை."
ஜப்பானிய ஹிபாக்குஷிகளைப் பற்றியும், சிறுமி சதாகோ சஸாக்கி அணுவிபத்தில் இறந்தவர்களின் நினைவாக செய்த ஓரிகாமி நாரைகளைப் பற்றியும், அவள் 644வது நாரை செய்து வைத்துவிட்டு, அதே அணுவிபத்தின் விளைவாய் இறந்ததையும் வாசிக்கும் போது, கலங்க மட்டும் இல்லை, சிந்திக்கவும் வைத்தது.
“உலகமெங்கிலும் அமைதி நிலவட்டும். இதுவே எங்கள் விண்ணப்பம். இதுவே எங்கள் மன்றாட்டு.”
ஒரு குறிப்பிட்ட இனத்தின் விடுதலைக்காக போராடுபவர்கள், தாங்கள் அனுபவிக்கும் அடக்குமுறையை சொல்லி, அதன் பேரால் போராடும் போது, மற்ற இனங்களின் மீது அடக்குமுறை பிரயோகிப்பதை ஒரு முரணாகவே பார்ப்பதில்லை என்ற விஷயம் அந்தமான் பூர்வ குடிகளின் நிலைபற்றி கூறும் பொது சுருக்கென்று இருக்கிறது.
"1858 முதல் ஆங்கிலேயர்கள் அந்தத் தீவிற்குக் கலகக்காரர்களையும், கைதிகளையும் தீவாந்திர தண்டனையாக அனுப்பினர். அரசியல் கைதிகளைத் தவிர்த்து பிற கைதிகளைக் காடுகளை அழிக்கவும், கட்டிடங்களைக் கட்டவும் பயன்படுத்தினர். தலைநிலத்திலிருந்து மேலும் குடியேறிகள் வர ஆரம்பித்ததும், 1859இல் திணைக்குடிகள் குடியேறிகளை எதிர்க்கும் முகமாக வில் அம்புகளுடன் தாக்கினர். ஆனால், அந்த எதிர்ப்பு ஆங்கிலேயர்களின் துப்பாக்கிகளுக்கு முன் தோல்வி அடைந்தது. தாக்குதல் பலிக்காமல் போனதற்கு மற்றொரு காரணம், 1857 சிப்பாய்க் கலகத்தில் பங்கேற்றுக் கைதான தூத்நாத் திவாரி என்பவன், தீவுக்காரர்களுடன் பல மாதங்கள் தங்கி அவர்களின் நட்பைப் பெற்று தாக்குதல் பற்றிய தகவலை சேகரித்துக் கொடுத்தது."
இப்படி பல விஷயங்களைப்பற்றி பேசும் கட்டுரைகள், தொடர்ந்து, அவர் வாழ்ந்த ஆப்பிரிக்காவின் பகுதிகளைத் தொட்டுப் பேசும்போது சிறப்படைகிறது. நமது மன அழுக்குகளை மிகக் கூர்மையாக சுட்டி நமக்குள் கேள்விகளை எழுப்புகிறது.
"கிழக்காப்ரிக்காவில் மூன்று நான்கு தலைமுறைகளுக்கு முன் தண்டவாளம் போடவும், சாலைகள் அமைக்கவும் வந்த இந்தியத் தொழிலாளர்களின் வழித்தோன்றல்கள் தம் ரத்தத்தில் ஊறிய வியாபாரத் திறமையாலும், தந்திரத்தாலும் வணிகம் செய்து பெரும் பணக்காரர்களாகி செல்வத்தில் திளைக்கின்றனர். வெள்ளையர் ஆண்ட காலத்தில் ஆப்ரிக்கர்களைவிடச் சற்றே உயர்வானவர்களாக நடத்தப்பட்டதாலும், ஆசியர்களுக்கே உரித்தான இனத்திமிராலும், ஆப்ரிக்கர்களை கிழக்காப்ரிக்காவில் வாழ்ந்த இந்திய வம்சாவழியினர் கீழ்ச்சாதி போல அன்று நடத்தினர். இன்றும் நடத்திக்கொண்டிருக்கின்றனர்."
...
சியராலியோனியர் அங்கு வாழ்ந்த தென்னிந்தியர்களையும் இலங்கைத் தமிழரையும் கறுப்பு இந்தியர் என்றும், வட இந்தியர்களை முக்கியமாக தடானி, தோலானி என்பன போன்ற பெயர் கொண்ட சிந்திகளை 'வெள்ளை இந்தியர்' என்றும் இருபெரும் பிரிவுகளாகப் பகுத்துள்ளனர் என்பது பின்னரே தெரியவந்தது. பல சியராலியோனியர் 'கறுப்பு இந்தியர்' கற்பித்த பள்ளிகளில் படித்தவர்கள் என்பதனால் அவர்கள் மீது மரியாதையும், அவர்கள் வட இந்தியர்களை விடப் பழகுவதற்கு எளிமையானவர்கள் என்று அவர்கள் எண்ணியதையும் தெரிந்து கொண்டேன். ஒருமுறை என்னிடம் நனைந்த பனைமரம் போன்ற நிறங்கொண்ட தமிழர் ஒருவர், 'இந்தக் கறுப்பர் பற்றி உங்களிடம் ஒன்று சொல்ல வேண்டும்' என ஆரம்பித்தபோது, நான் 'நாமனைவரும் கறுப்பர்கள் தானே, இங்கு நீங்கள் யாரைக் குறிப்பிடுகிறீர்கள் எனக் கேட்க, அவர் திகைத்து நின்றார். ஆப்ரிக்காவில் பலவிடங்களில் வாழ்ந்த நாட்களில் நம்மவர் பலர் ஆப்ரிக்கர்களைத் தீண்டத்தகாதவர்கள் போலப் பார்த்ததையறிந்து வேதனையுற்றேன்.
...
"பிரிட்டிஷ் குடியுரிமை பெற்று, அங்கு வாழ்ந்து கொண்டிருந்த குஜராத்தியர் ஒருவரிடம், 'ஏன் ஆப்ரிக்கர்களைத் தாழ்வாக நடத்துகிறோம்?" என்று கேட்டதற்கு சப்பைக்கட்டு கட்டும் முகமாகத் தம் கலாசாரம், மதம் பற்றிப் பேசி, 'அவர்கள் மாட்டிறைச்சி உண்பவர்' என்று கூறியபோதுதான் பாரம்பரியம் என்னும் போர்வையில் 'தீண்டாமை' என்னும் நச்சை அவர்கள் இங்கு இறக்குமதி செய்துள்ளதை உணர்ந்தேன். இத்தகைய நிலையின் வெளிப்பாடே பத்தொன்பதாம் நூற்றாண்டில் தென்னாப்ரிக்கக் கரும்புத் தோட்டங்களில் வேலைசெய்யக் கொத்தடிமைகளாக வந்த இந்தியர்களின் வழித்தோன்றல்கள் இன்றும் தம் சாதிப் பெயர்களுடன் உலா வருவது."
இதே போன்ற பேச்சுக்களை பல பயணங்களில் நானும் கண்டிருக்கிறேன். ஆனால் அதை அப்போது கடந்து போன என்னால், அவர் எழுத்தில் இதை வாசித்தபோது, தொண்டையில் ஏதோ கனமாக சிக்கயதைப் போல் உணர்ந்தேன்.
கறுப்புக் கிருஸ்து ஓவியத்தைப்பற்றி அவருடைய வரிகள், நிறம் என்னும் வெறுப்பு உலகம் முழுவது எப்படி விரவி இருக்கிறது என்றும் அதை மீட்கும் நிலை பற்றிய கேள்விகளையும் நம் முன் நிறுத்துகின்றன.
இதை எழுதிய சு.கி.ஜெயகரன் ஒரு சர்வதேச தரமான சுழலியல் நிலவியலாளர். ஆப்பிரிக்காவில் பலகாலம் பணிபுரிந்தவர் . அவர் அனுபவங்களின் வழியே எழுதிய இந்தத் தொகுப்பு, உலகப் பார்வையை தமிழுக்கு கொண்டுவந்து நிறுத்தும் முக்கிய படைப்பு.

Comments

Popular posts from this blog

Vistas of Evolution

இலக்கியம் - சமர்

The art of silencing the Voices from the past