வாசிப்பது இன்பம்.

 

நூல்: மொழிவது சுகம் - தொகுதி 1

ஆசிரியர்: கிருஷ்ணா நாகரத்தினம்

பதிப்பகம்: நோஷன் பிரஸ்





சிந்தனைகளும், சரித்திரங்களும் , பாடல்களாகவும் கவிதைகளாகவும், புதினங்களாகவும் காலகாலமாக கடத்தப்பட்டு வந்த தமிழ்ச் சமூகத்தில் கட்டுரைகள் மிகத் தாமதமாகவே வெளிவந்தன. அப்படி வந்த கட்டுரை என்ற வடிவத்தின் முக்கியத்துவம், மற்றும் இடம் என்ன என்ற கேள்வி எனக்குள் சிலநேரம் தொனிப்பது உண்டு.

முறையான தமிழ் இலக்கிய கல்வி இல்லாத நான், அந்த கேள்விக்கு என் வாழ்வியல் நிகழ்வுகளில் இருந்தே புரிதலை வடித்து எடுத்துக்கொண்டேன்.

சிறுவயதில் என் தகப்பன் என்னைத் தன்னருகில் படுக்க வைத்து தூங்க வைக்க காதோடு மெல்லிய குரலில் பாடிய “ ஓராயிரம் பார்வையிலே”, “என்னடி ராக்கம்மா” மற்றும் “மேரே சப்புனோன்க்கி” ஆகியவை என் நினைவோடும், உணர்வோடும் கலந்து, எனக்கே எனக்கான ஒன்றாக இன்றும் காதுகளில் ஒலிக்கின்றன. இன்றும் அமைதியில்லாமல் தூக்கம் வராத என் இரவுகளில், என் காதுகளில் ஐபாட் உபயத்தில் என் காதோடு கிசுகிசுத்து, தூங்க வைக்கின்றன. அதைப்போன்றவை தான் வண்ணதாசன், கலாப்ரியா ஆகியோரின் கவிதைகள் தரும் உணர்வும்.

தொடர்ந்து, வளர் பருவத்தில் வளரும் போது , பாட்டி சொல்லும் கதைகளின் வழியே வாழ்வின் விழுமியங்களையும், மதிப்பீடுகளையும் கட்டமைத்தது. அப்படி தொடர்ந்து எனது புதினங்களின் வாசிப்பு அப்படித்தான் விரிவடைந்ததது. அந்த வாசிப்பின் வழியே ஏற்பாடு புரிதல் தான் இன்று எனது புகைப்பட ஆர்வம், எழுத்து ஆகிய அனைத்தின் ஊக்கி…

சற்று வளர்ந்து பதின்ம வயதில், நேரடியான உரையாடல்கள் எனக்கும் என் தாத்தாவுக்கும் நிகழ்ந்தது. பள்ளி, கல்லூரி முடிந்து சாயங்கால வேளையில் அவர் எனக்கு வாங்கி வைத்திருக்கும் நொறுக்கு தீனிகளை அவர் அறையில் சென்று எடுத்து உண்டுகொண்டே அவரோடு அரசியல், சினிமா, என் தினசரி நிகழ்வு, அவர் அனுபவங்கள் என்று எந்த குறிப்பிட்ட வரம்பும் இன்றி உரையாடுவது எனக்கு ஒரு தவறவிட முடியாத தினசரி நிகழ்வு. தீனிச்சுவையை விட அந்த உரையாடல்தான் என்னை அவர் அறைக்கு தினமும் அழைத்தது என்று நினைக்கிறேன். அவருக்கும் அப்படித்தான் இருந்திருக்க வேண்டும்; தினமும் அந்த தீனிப்பாக்கெட்டுகள் மட்டும் தீராமல் புதிதாகவே வாங்கி வைக்கப்பட்டிருக்கும்.

அந்த உரையாடல்கள் எனக்கு அளித்த அனுபவ விரிவும், அவர் அனுபவங்கள் வழியே, அவரோடு வாதங்கள் ஊடே நான் கண்டறிந்த விஷயங்களும், இன்றைய ஆளுமையை செதுக்கியவை என்றே தோன்றுகிறது.

இன்று என் தாத்தா என்னோடு இல்லை. ஆனால் அவரோடு உரையாடும் அனுபவத்தை கட்டுரை வாசிப்பு எனக்கு அளிக்கிறது. கட்டுரைகளில், ஏற்படும் புரிதல்கள் ஒருவழிப்பாதை அல்ல. கவிதைகளில் இருக்கும் மேலிருந்து கீழாக இடம் மாறும் உணர்வு படிமங்கள் இங்கே இருப்பதில்லை. மாறாக, இது ஒரு சமநிலை நிலவும் தகவல் பரிமாற்றமாக இருக்கின்றன. புதினங்களில் இருப்பது போல் சம்பவங்களின் ஊடே புகுந்து, உணர்வை அடையும் மந்திரம் இல்லை. மாறாக நேரடியாக கனமான கருத்துக்களை நேரடியாக உடைத்து அறிய முடியும்.

அப்படி வாசிக்கும் சில கட்டுரை நூல்கள் மிகப்பெரிய வாசிப்பனுபவத்தை, புரிதலை எனக்கு அளித்து நினைவில் நிற்கின்றன.

சமீபத்தில் நான் படித்து அனுபவித்த கட்டுரைத் தொகுப்பு, கிருஷ்ணா நாகரத்தினம் அவர்களின், மொழிவது சுகம், முதல் தொகுப்பு, அப்படி ஒரு நூல்தான்.

பிரான்சில் வசிக்கும், புதுவையைச் சேர்ந்த கிருஷ்ணா எனக்கு ஏற்கனவே நீலக்கடல் போன்ற பல சிறந்த புதினங்கள் மூலம் அறிமுகமாகி இருந்தாலும், அவருடைய கட்டுரைத் தொகுப்பைக் கண்டவுடன், - அவருடைய சரளமான, எளிமையான தமிழ் நடையை ஏற்கனவே அனுபவித்திருந்ததால் - படிக்கும் ஆர்வத்தை தூண்டியது.

எதிர்பார்த்தது போலவே அதிக ஆர்ப்பாட்டமில்லாத இயல்பான தமிழிலில், பாசாங்கு ஏதும் இல்லாமல், வாசிப்பவருக்கும் எழுத்தாளருக்கும் சமநிலையில் நடக்கும் ஒரு உரையாடல் போலவே இதன் வாசிப்பனுபவம் நிகழ்கிறது.

என் தாத்தாவோடான உரையாடல் போலவே இங்கே எந்த திட்டமான வரைமுறையும் இல்லாமல், பரந்த விரிந்த தளங்களில் கட்டுரைகள் செல்கின்றன. தனிமனித சிக்கல்கள், மேற்கத்திய நாடுகளின் அரசியல், உலக வரலாறு, மார்க்சிய முரண்கள், மொழிபெயர்ப்புகள், Ghost writer எனப்படும் பின்னணி எழுத்தாளர்கள் என்று everything under the sun என்பார்களே, அப்படி, வானத்தின் கீழ் உள்ள அனைத்து விஷயங்களைப்பற்றிய சுவாரசியமான உரையாடலாகவே இதன் வாசிப்பு இருக்கிறது.

தொகுப்பு முழுவதும், அவர் எழுத்தில் , உலகில் வாழும் அனைத்து மானிட இனத்தின் மீதான அக்கறை எந்த அரிதாரமும் பூசாமல் வெளிப்படுவது அழகு. அதே சமயம் இன்றைய உலக நிகழ்வுகளை கவலையுடன் அது பதிவும் செய்கிறது.

“‘நான் சிந்திக்கிறேன் எனவே வாழ்கிறேன்’ - ‘Je Pense donc je suis’ என்பார் ரெனே தெக்கார்த். ‘எழுதுகிறேன் எனவே சுதந்திரமாக இருக்கிறேன்’, என்பது எனது சொந்தப் புரிதல்.”

சுவர் பிறந்த காரணத்திற்கு சுயநலம் ஒரு கிரியாஊக்கி. மனிதரினத்தில் இச்சுவர்களுக்குப் பல பெயர்கள். நிறம் என்கிறோம், சாதி என்கிறோம், மதம் என்கிறோம், மொழி என்கிறோம், உங்களுக்குத் தெரிந்த இங்கே சொல்ல அலுப்புற்றவையும் அவற்றுள் அடக்கம்.”

“‘வெடிபட்டு சாகாமல் வெகுளியாய் விஷக்காற்றைக் குடித்துப் பின் நலிவுற்று முடமாய் துடிக்காமல் முழு உடம்பாய் இயற்கையாய் சாவது அரிது, அரிது இன்று மிக அரிது!’ ”

அதே சமயம், கிருஷ்ணா, தான் வாழும் ஐரோப்பா கண்டத்திலும், பிரெஞ்ச்சு தேசத்திலும் நிகழும், நிகழ்ந்த, இதுவரை நாம் அறிந்திராத, கருப்பு பக்கங்களை துளங்கச்சொல்லி, தனது மனநிலையையும் நேர்மையுடன் பதிவு செய்கிறார்.

தருமிக்கு ghostwriter யாரென்று கேட்டால் சிவபெருமானைச் சொல்வோம். The Count of Monte Cristo, The Three Musketeers, Twenty Years After புகழ் அலெக்ஸாந்த்ரு துய்மாவிற்கும் ஒரு Ghostwriter உண்டு பெயர் மக்கே என அழைக்கபட்ட ஒகுய்ஸ்த் மக்கே (Auguste Maquet).”

எனக்குப் பிரச்சினை, துய்மாவாக யார் நடித்தார்கள் என்பதல்ல? மக்கேவை ஏமாற்றிப்பிழைத்த துய்மாவின் சாமர்த்தியம்.”

சரித்திரத்தின் இருண்ட காலத்தின் தடங்களை தொட்டுச் செல்லும் எழுத்து, நம்மை கலங்க வைக்கத் தவறுவதில்லை.

ஹைத்தி மக்கள் பிரெஞ்சுமொழியை அரசாங்க மொழியாகக் கொண்டிருக்கிற காரணம் அவர்கள் உந்துதலைத் துரிதப்படுத்தி இருப்பதாகச் சொல்கிறார்கள். பிரெஞ்சும்சரி ஆங்கிலமும்சரி உலகளவில் முக்கிய மொழிகளாக வளந்ததற்குச் சொல்லப்படும் காரணங்களுள் இதுபோன்ற தந்திரங்களும் அடங்கும். எனினும் தாரைத் தப்பட்டி மாநாடுகளை நடத்தி தங்கள் மொழிகளை அவர்கள் வளர்த்ததாகச் சான்றுகளில்லை.”

வல்லான் வகுத்ததே வாய்க்கால் என்பது மனித தர்மமாக இருக்கிறபோது இயற்கைக்குள்ள இதுபோன்ற கோபதாபங்களை புரிந்துகொள்ள முடிகிறது. இடிபாடுகளில் ஒன்றாக ஹைத்தி அதிபரின் மாளிகையைக் காட்டியபொழுது இயற்கை சார்பற்று காரியம் ஆற்றியிருக்கிறதென்ற அருவருப்பான திருப்தி எனக்குள் உண்டாயிற்று. குடிசைவாசிகளைக்காட்டிலும் மாளிகைவாசிகள் இவ்விஷயத்தில் அதிகப் பாதுகாப்பின்றி இருப்பதில் எனக்கு வக்கிரம் கலந்த சந்தோஷம்.”

இப்படி வலிமையையாய் கவலையையும் அக்கறையையும் பதிவு செய்யும் அவர் எழுத்து, சமயத்தில் வாழ்வின் நகைச்சுவை கலந்த பக்கங்களையும் வருடிவிடாமல் செல்வதில்லை.

வாய் விட்டு சிரித்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். ஆயுளும் நீடிக்கும் எனவே மன இறுக்கத்தைக்குறைக்க சிரியுங்கள் என்கிறார்கள். யார் சிரித்தால் யாருக்கு ஆயுள்கூடும் என்பது குறித்தும் ஓர் ஆய்வுதேவை?”

நான் கல்லூரியில் படித்தபோது முத்தமிழ் விழாவுக்கு அழைத்திருந்த கழக சட்டமன்ற உறுப்பினரொருவர், ‘சற்று முன்னர் சிற்றுண்டியும் சிறுநீரும் அருந்தினோம்’ என்று அடுக்குமொழியில் பேசுவதாக நினைத்துக்கொண்டு உளறிவைத்தார். ”

இறுதியில், தனது படைப்புகளை உருவாக்கும் முயற்சியைப் பற்றியும், அதன் முத்தாய்ப்பாக மொழிபெயர்ப்பின் முக்கியத்துவத்தையும் குறிப்பிடுகிறார்.

மூல எழுத்தோடு மொழிபெயர்ப்பாளனுக்கு நெருக்கம் வேண்டும்.”

ஒரு படைப்பை மொழிபெயர்ப்பாளனைத் தவிர்த்து வேறொருவர் அத்தனை ஆழமாகப் படிப்பதில்லை என்று சொல்லப்படுகிறது.”

அவர் எழுத்தை, குறிப்பாக அவர் மொழி பெயர்ப்பைப் படித்தவர்களால் அதைப் புரிந்துகொள்ள முடியும். அப்படிப் புரிந்து கொள்வது தான் அவர் எழுத்தின் வெற்றி என்று தோன்றுகிறது.

 

Comments

Popular posts from this blog

பாலை மனம்

அன்பே மருந்து

Deccan in Dazzling light