ஏரோப்பிளேன் என்ஜின் முதல் ஏலக்காய் டீ வரை…
புத்தகம்: கபர்
ஆசிரியர்: கே. ஆர். மீரா
பதிப்பகம்: எதிர் வெளியீடு
ஒரு இருபது வருடங்களுக்கு முந்திய நிகழ்வு இது. அப்போது தான் கம்பெனியில் சேர்ந்து சில வருடங்கள் ஆகியிருந்தது. வெளிநாட்டில் ஒரு முக்கியமான செயல்பாட்டில் ஈடுபட்டு வெற்றிகரமாக திரும்பியிருந்த நேரம். அடிப்படையில் இயந்திரவியல் பொறியாளனான நான், எங்க துறைக்கு தேவைக்கு மேலயே மென்பொருள் பயன்பாட்டில் பயிற்சி பெற்றிருந்தேன். ஆனா மென்பொருள் நிரல்களைப் பொறுத்தவரை ( Software Programming ) சற்றே பழமையான வழிமுறைகளைக் தான் கற்றுத் தேர்ந்து இருந்தேன். அதோட எங்க மென்பொருள் சம்பந்தமான அடிப்படை நிரல்களை எழுதுவதில் நானா தடவித் தடவி கத்துக்கிட்டிருந்தேன். அப்பல்லாம் ஜாவா, J2K அப்படீன்னு சக்கை போடு போட்டுக்கிட்டிருந்தாலும் நான் வெறும் C மற்றும் சில ஸ்கிரிப்டிங் நிரல்களை வைத்து முடிந்த அளவு சில பல வித்தைகளை செய்து அங்கே பெயர் ஈட்டியிருந்த வேளை. கையில பெரிய கத்தி இருந்தா புல் வெட்டறதுல இருந்த சவரம் செய்யறவைக்கும் எல்லாத்தையும் அத வெச்சே செஞ்சுறலாம்னு நெனைச்ச காலம். சிறு வயசு, இளங்கன்னு பயமறியாதுன்னு எங்க ராமு பெரியப்பா வழக்கமா அள்ளி விடுற பழ மொழி மாதிரி ஏதோ ஒண்ண எடுத்து விட்டுக்கலாம்.
அப்போ ஊர் வந்து சேர்ந்த போது, எங்க அலுவலகத்துல எங்களுக்கு மென்பொருள் உருவாக்கத்துல பெரிய அண்ணனா இருந்தவர் வேற, பையன் வெளிநாட்டுல எல்லாம் வெட்டி முறிச்சுட்டு வந்திருக்கான் அப்படீன்னு ஒரு நம்பிக்கைல அப்போ புதுசா வந்திருந்த SOA அப்படீங்குற புது நிரல் வழிமுறையை பத்தி ஒரு முன்னணி நிறுவனம் IISCல நடத்திய ஒரு கருத்தரங்குக்கு, செலவு பண்ணி கூட்டீட்டு போனார். அதுல அவிங்க இந்த மென்பொருள்ல் உலகமே மாறபோகுதுன்னு அடிச்ச உடுக்கையக் கேட்டு அடேங்கப்பா, நம்ம கம்பெனி சரக்கும், நம்ம பண்ணையமுமே காலியாயிருமாட்ட இருக்கே வேலான்னு வாயப் பொளந்து பாத்துட்டு, அவிய இலவசமா குடுத்த டீ சர்ட்டை எடுத்தது மனச தேத்தீட்டு ஊடு வந்து சேர்ந்தேன். வந்த வேகத்துல கொஞ்ச நாள் நம்ம மென்பொருள்ள இந்த புது மாதிரி தொழில்நுட்பம் எல்லாம் இல்லாததனால், பெரிய குறைன்னு பெனாத்திகிட்டு இருந்தேன்.
ஆனா, இதெல்லாம் தகவல் தொழில் நுட்பத்துறை, 2 வருடத்துக்கு ஒரு முறை இது மாதிரி புதுசா தங்கள் இருப்பை நிலைநிறுத்த ஏதாவது விஷயத்தை கொண்டு வரும்னு எனக்குப் புரிய சில வருஷ அனுபவம் தேவைப்பட்டது.Y2K முதல் இதுபோல பல உடுக்கை அடிச்ச நெடிய வரலாறு தகவல் தொழில் நுட்பத் துறைக்கு இருக்கே…
இடைப்பட்ட காலத்துல, தொழில் நடவடிக்கைகளுக்கு தேவைப் பட்டா இந்தப் புது தொழில் நுட்பங்களை சில பல சமரசங்களுடன், ஏற்கனவே இருக்கும் அமைப்பு எடுத்துப் பயன்படுத்திக் கொள்ளும் எனப் புரிந்தது. அந்தப் புரிதல் எங்கள் நிறுவன மென்பொருளில் எப்படி அந்த தொழில்நுட்பமும் அதற்குப் பின் வந்த வேறு பல புது நுட்பங்களும் எடுத்தாளப்பட்டது என்பதில் தெளிவடைந்தது.
இதில் முக்கியமாக புரிந்து கொள்ளவேண்டியது என்னவென்றால், எது நடைமுறையில் இருக்கும் நேரடி பயனாளர்களுக்கு, அவர்களின் வழக்கமான செயல்பாடுகளில் ஆதாயம் தருமோ, அவர்களின் வழிமுறைகளுக்கு மேம்பாடு தருமோ, அதுவே உட்கொள்ளப்பட்டு மேலும் சிறப்புறும். வெறும் தொழில்நுட்ப நுணுக்கத்துக்காக - அது எவ்வளவு நுணுக்கமானதாக இருந்தாலும் - எதுவும் நிலைப்பதில்லை. ஏரோப்பிளேன் எஞ்சின் முதல் ஏலக்காய் டீ வரை அதுதான் உண்மை.
இடையில் வேறு பெரு நிறுவனத்தில் அதன் தொழில் நுட்பத்துறையில் இருந்தபோது, அந்தத் துறைக்குள் நிகழும் இது போன்ற சித்து விளையாட்டுக்கள் மூலம் அதை நன்கு உணர்ந்தேன். அவர்கள் அடித்த உடுக்கை மற்றும் வேப்பிலையில் மயங்கி, தடுமாறியதால் 100 வருட நிறுவனம் இன்று துண்டு துண்டானது சமீப சரித்திரம். அது ஒரு தனிக்கதை.
இதுபோலவே இலக்கியத்திலும் பல புதுப் புது நடைமுறைகளும் உத்திகளும் அவ்வப்போது வருவது இயல்பு. உலகம் முழுதும் இதுதான் வழக்கம். அப்படி ஒரு உத்திதான் மாய யதார்த்தம் என்னும் மேஜிக் ரியலிசம் ( Magic Realism ). கடந்த 50-60 ஆண்டுகளா இருக்கும் ஒரு உத்திதான் இது. ஆனால், இதுவும் வெறும் நுணுக்கத்துக்காக பயன்படுத்தினால், அதன் வாசிப்பு அனுபவம் சுவைப்பதில்லை. எந்த இலக்கிய நுணுக்கமும் மானுட வாழ்வியலின் கூறுகளை எடுத்தாளும்போதுதான் அது சிறப்படைகிறது.
அப்படி சமீப காலங்களில் சிறப்பாக மாய யதார்த்தம் ஊடே மனித வாழ்வியல் சிக்கல் ஒன்றை வண்ணம் பிரித்துத் தருவது தான் மீராவின் “கபர்”. அடிப்படை மனித உறவுகளின் சிக்கல்களை அலசி, அதன் உளவியல் சிக்கலை மாய யதார்த்தம் வழியாக விரித்து, அதன் மூலம் ஒரு அழகியல் அனுபவத்தையும் தரும் ஒரு சிறப்பான புதினம் இது.
மணவிலக்குப் பெற்று, மாவட்ட நீதிபதியாக பணியாற்றும் நடுத்தர வயதான பாவனா என்னும் பெண்ணின் பார்வையில் விரியும் கதை இது. 4-5 வயதான மகனுடன் தனியாக வாழும், பாவனா கோர்ட்டில் எதிர்கொள்ளும் ஒரு வழக்கும், அதனோடு பின்னப்பட்ட அவளுடைய மூதாதையரின் சரித்திரமும், அந்த வழக்கினால் ஏற்பட்ட தடுமாற்றங்களும்தான் இதன் மையாக கரு. அதன் வழியே வாசிப்பவருக்கு கிடைக்கும் அனுபவம் மிக தனிப்பட்ட ஒன்று. Magical realism என்ற உத்தியை மிக நளினமாகப் பயன்படுத்தி மிக இயல்பாக வாசிப்பவரை உள்ளிழுத்துக்கொள்ளும் லாவகம் அபாரம்!
மீரா சமீப காலங்களில் மலையாளத்தில் மட்டுமல்ல, இந்தியா முழுமைக்கும் பெண்மையையும், சுயமரியாதையையும் சமரசமில்லாமல் உறக்கச்சொல்லும் குரலாக இருக்கிறார். தமிழில் இந்தப் புதினத்தை மொழிபெயர்த்த மோ.செந்தில்குமார், கோவை அரசுக் கல்லூரியின் தமிழ்ப் பேராசிரியர். மீராவின் சாகித்ய அகாடமி விருது வாங்கிய “ஆராச்சார்” புதினத்தை இவர் ஏற்கனவே மிகச்சிறப்பாக மொழி பெயர்த்திருக்கிறார். இந்தப் புதினத்திலும் மிகச் சிறப்பான வாசிப்பனுபவமும், இலகுவான மொழி நடையும் இவர் பங்களிப்பு.
மீராவின் கதைகளில் அவருடைய குரலாக எப்படியும் ஒரு கனமான பெண் பாத்திரம் இருக்கும். இதில் பாவனாவின் அம்மா! அவர் குரலில் ஒலிக்கும் வரிகள் இந்தக் கதையின் மைய நீரோட்டத்தில் தடுமாறும் பாவனாவின் மனதுக்கும், அதனோடு பயணித்து அதன் அனுபவங்களை உள்வாங்கி அதைத் தன் சுய உணர்வுகளோடும், தனி மனித உறவுச் சிக்கல்களோடும் இணைத்து வியக்கும் வாசகருக்கு, பாவனாவுடைய தாயின் குரல் ஒரு கலங்கரை விளக்கு.
“ உலகத்தில் டெலிபதியும் ஹிப்னாடிசமும் எல்லாம் இருக்கலாம். ஆனா, நீ அனுமதிக்காம உன் மனசுக்குள்ள எந்த யோகீஸ்வரனையும் எந்தத் தங்ஙளும் கட்டி இறக்கமுடியாது.”
“ ஒருத்தரோட பணிவிடைகளுக்கு இன்னொருத்தர் கொடுக்கிற கைமாறல்ல அன்பு. அது ஒருத்தர் இன்னொருத்தங்க கிட்ட கண்டடையற பூரணத்துவம்.”
கதையின் இறுதியில் அடிப்படை முடிச்சு அவிழ்ந்து, பாவனாவோடு சேர்ந்து நாம் ஸ்தம்பித்து நிற்கும் போது, திரும்பவும் அந்தக் குரலின்
எதிரொலி, நம்மை பிரம்மிக்க வைக்கிறது!
“ பாரம்பரியத்தப் பத்தி அதிகமா பெருமைப்படறதுல வார சிக்கல் அதுதான். எல்லாத்தையும் வெளிப்படையாச் சொல்ல முடியாது. அப்போ புதுசா ஒரு ஐதீகத்த உண்டாக்கவேண்டி வரும்.”
Comments
Post a Comment