சொல்லப்படாத வரலாறுகள்....
சிறுவயதில், தமிழின் சரித்திரக்கதைகள் எனக்கு அறிமுகமானது குமுதம் மற்றும் கல்கி இரண்டிலும் தான். அதிலும் குமுதத்தில் தொடர்ந்து சரித்திரக்கதைகள் என்ற பெயரில் வந்த கதைகள் அனைத்திலும், பொதுவாக குதிரையில் விரைந்தோ, கப்பலில் பயணம் செய்தோ சாகசம் செய்யும் இளவரசர்களும், இடை சிறுத்த, வளைவு நிறைந்த, அந்த இளவரசர்கள் வாயைத்திறந்து இரட்டை அர்த்தம் தெறிக்கும் வசனங்களை பேசும் போது மட்டும் முகம் சிவக்கும் பைங்கிளிகளும் தான் பெரும்பாலும் உலவினர்.
ஏனோ திரைப்படங்களில் இருந்த கண்டிப்பு இப்படி மெதுவாக தமிழ் படிக்க ஆரம்பித்து வேகமாக வீட்டில் வரும் வார இதழ்கள் படித்தஇந்த 6-7 வயது சிறுவனுக்கு இல்லை. விடுமுறை காலத்தில் என் தாத்தாவின் திரையரங்கத்துக்கு தினமும் நினைத்த நேரத்தில் சென்று படம் பார்க்கும் எனக்கு “A” அல்லது “UA “ சான்றிதழ் வாங்கிய படங்கள் என்றால் மட்டும், ( நகரமும் இல்லாது, கிராமமும் இல்லாத அந்த ஊரில் பொதுவாக மேட்டனி காட்சியில் தான் அப்படிப்பட்ட படங்கள் வெளியிடப்படும்) என் வருகை தடை செய்யப்படும். அதற்காகவே வாயில் காப்போர் சிலரை என் தாத்தா ஏற்பாடு செய்திருந்தார் என நினைக்கிறேன். அகஸ்மாத்தாக சில குறிப்பிட்ட படங்களுக்கு அந்தத் தடை விரிவாக்கப்படும். உதாரணமாக, ஜெய் சங்கர் நடித்த ஜம்பு என்ற படத்துக்கு அப்படிப்பட்ட தடை இருந்தது நியாபகம் வருகிறது. அதையும் தாண்டி ப்ரொஜெக்டர் அறையில் இருந்து அதைப்பார்த்தது வெளியில் சொல்லாத என் தொழில் ரகசியம்.
இதே போல் ஒருமுறை சீன சரித்திரப்பின்னணியில், அமைந்த சண்டைப்படம் ஒன்று மேட்டினி காட்சியில் திரையிடப்படும் என்று அறிந்து வேக வேகமாக போய் பார்த்தபோது, அங்கே பெட்டி வராததால் எதோ ஒரு கருப்பு வெள்ளை மலையாளப்படம் திரையிடப்பட்டது. விடாமல் அதையும் பார்த்துவிட்டுத்தான் வீட்டுக்கு போவது என்ற முடிவோடு இருந்த எனது சங்கல்பம், “ ப்ரேமு, ப்ரேமு… தாத்தன் கூப்புடுது வா…” என்று திடுமென்று வந்து நின்ற பணியாளர் ஒருவரின் குரலால் தடைபட்டது. காலையில் வழக்கம் போல் மில்லில் இருந்து மதிய உணவுக்கு வீட்டுக்கு சென்ற தாத்தாவுக்கு விஷயம் தெரிந்து, ஆளனுப்பியிருக்கிறார். அவர்கள் என்னை கையோடு சைக்கிளில் வைத்து கொண்டு சேர்த்ததும், அதன் பிறகு எனக்கு வீட்டில் டும் டக்கா மண்டகப்படி நிகழ்ந்ததும் இணைப்பு செய்தி.
ஆனால், விசித்திரமாக இப்படிப்பட்ட தடை ஏதும் குமுதத்தில் வந்த சரித்திரக்கதைகளுக்கு இருந்ததில்லை. இதற்கும், அவ்வவப்போது சாகசம் நிகழ்த்தும் அந்த அரசகுமாரர்கள், முழு நேரம், இளம் பெண்களின் அவயங்கள் பற்றிய ஆராய்ச்சியிலும், அதன் பகுப்பாய்வுகளிலுமே ஈடுபட்டிருந்தனர். அந்த வருணனைகள் அனைத்தும், A படங்களின் காட்சிகளே பரவாயில்லை என்னும் அளவுக்கே இருந்தன. இளைய பல்லவர்களும், வந்திய தேவர்களும், இன்ன பிற குதிரை வீரர்களும் வந்த அந்தக் கதைகளில், மருந்துக்கும் கூட சாமானிய மனிதர்களை பற்றிய சித்திரம் இருந்ததில்லை என்பது எனக்கு அப்போது உரைக்கக்கூட இல்லை.
பிறகு, ஆங்கிலத்தில் புதினங்கள் வாசிக்க ஆரம்பித்து, கென் ஃபாலெட், ராபர்ட் ஹாரிஸ், என்று படிக்க ஆரம்பித்த போது, வரலாற்றுப் புனைவுகளில், அவர்கள் கதை நடக்கும் காலத்தின் புறவுலகை, அதன் மக்களை காட்சிப்படுத்த அவர்கள் எடுத்துக்கொண்ட அக்கறை பிரமிக்க வைத்தது. பிறகு அங்கிருந்தது, மெதுவாக, எட்வர்ட் ரூதர்ஃபோர்டு, ஜேம்ஸ் மிச்சனர் போன்றோர் எழுதிய வரலாற்று புதினங்களில் துலங்கிய உலகம் இப்படி தமிழிலும் என்றாவது வருமா என்ற ஏக்கத்தை எனக்குள் ஏற்படுத்தியது.
அந்த ஏக்கம், என்னை பிரபஞ்சனின் “ வானம் வசப்படும்” மற்றும் “மானுடம் வெல்லும்” என்ற இரண்டு மிக முக்கியமான புதினங்களில் கொண்டுவந்து நிறுத்தியது. அவற்றை வாசித்த பின் எனது தாகம் சற்று தனிய ஆரம்பித்தது. வரலாற்றுப் புனைவு என்பது இடை சிறுத்த இளங்குமரிகளையும் தினவெடுத்த தோள் கொண்ட வீரர்களைப் பற்றியும் அல்ல என்று உறக்கச்சொல்லின அவ்விரண்டு நூல்களும்.
அந்த வரிசையில் அதைவிட விரிந்த உலகை “சைகோன் - புதுச்சேரி “ என்ற நூலிலும், பிறகு “நீலக்கடல்” என்ற நூலிலும், எனக்கு அறிமுகம் செய்து வைத்தவர் கிருஷ்ணா நாகரத்தினம் அவர்கள். குறிப்பாக நீலக்கடல் சமீபகாலங்களில் என்னைக் கவர்ந்த வரலாற்றுப் புனைவு. அதை பற்றி ஏற்கனவே விரிவாக எழுதியுள்ளேன்.
கிருஷ்ணா நமக்கு ஏற்கனவே அறிமுகமானவர். பிரான்சில் வசிக்கும் புதுச்சேரியைச் சேர்ந்த அவர், தமிழ், பிரெஞ்சு, ஆங்கிலம் என்ற பன் மொழித் தளங்களில் கதை, கட்டுரை என்று விரிவாக இயங்குபவர். தமிழின் குறிப்பிடத்தக்க எழுத்தாளுமைகளில் ஒருவர்.
அதையடுத்து மிக சமீபத்தில் நான் வாசித்த அவருடைய புதினம், கிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி. இதன் வீச்சு நான் ஏற்கனவே மிகச்சிறப்பு எனக் கருதிய நீலக்கடலையும் தாண்டியது. இதில் நான் கண்டது, தமிழின் சாமானியர்கள், விளிம்புநிலை மனிதர்கள் ஆகியோரின் வரலாற்றை அக்கால அரசியலோடு இணைத்து பின்னப்பட்ட ஒரு பெரும் தூரிகையின் ஓவியம். இதில் அரசர்கள் இருக்கின்றனர். ஆனால் அவர்கள் அவர்களின் நிறை குறைகளுடன், அவர்களின் தோல்விகளையும், வெற்றிகளையும் எந்த ஒளிவு மறைவும் இல்லாமல் சுமந்து திரிகின்றனர். அவர்களின் சிறுமைகளும், பலவீனங்களும் எந்த மேல்பூச்சும் இல்லாமல் வெளிப்படுகிறது.
நிகழ் காலத்திலும், கடந்த காலத்திலும் பயணிக்கும் கதை, சற்று எதிர்காலத்தையும் எட்டிப்பார்த்து நிறைவு பெறுகிறது. 16ம் நூற்றாண்டின் விஜயநகர காலத்தில் நாயக்கர் அரசுகளிடையே நடக்கும் அரசியல் சதிகளின் பின்னணியில் சாமானிய மனிதர்களின் வாழ்வில் அது ஏற்படுத்தும் இன்னல்களைப் பேசும் புதினம் இது.
ஆரம்பிக்கும்போது நிகழ்காலத்தில் நடக்கும் கதையில், ஆசிரியர், காட்சிகளை கண்முன் கொண்டு வர எளிய பேச்சு தமிழில், பாண்டிச்சேரி மற்றும் செஞ்சியின் பகுதிகளை பயன்படுத்துகிறார்.
ஆனால், காலத்தில் பின்னோக்கி செல்லும்போது, தமிழின் வீச்சு அக்கால மொழியில் மிகச் செம்மையாக மேல் எழும்புகிறது.
“இருட்டின் பௌருஷதத்தை பிரமாண்டமான விருட்ஷங்கள் கூட்டியிருந்தன. பறவை விலங்குகளின் நடமாட்டங்களற்றதொரு வெறுமை. இறையெடுத்த விலங்கைப்போல அரை மயக்கத்தில் இரவு துயில் கொண்டிருக்கக் கண்டான், அதன் கரியசருமம் பெய்திருந்த மழையில் பளபளத்தது. இரவின் நித்திரையை தமது குறுக்கீடு கலைத்துவிடலாமென்று அஞ்சியவன்போல காலெடுத்து வைத்தான். நாசிதப்பிய அதன் மூச்சுக்காற்றில் காவற்காட்டின் மரங்கள் அசைந்து கொடுத்தன. மௌனமான அவ்வதிர்வை சரீரம் உறிஞ்சிக்கொண்டது. உரோமங்கள் குத்திட்டுக்கொள்ள தசைகள் ஒரு முறை உதறி அடங்கின. காற்றிலுங்கூட மழையின் கசகசப்பு கலந்திருப்பதை தேகம் உணர்த்திற்று. மழை விடாது பெய்துகொண்டிருந்தது. தொடர்ந்து இடிச்சத்தமும் கேட்டது. கீழ்வானில் மூர்க்கத்துடன் வெட்டிய மின்னலிற் சிதறித் தெறித்த ஒளித்துணுக்குகள் ஈரம் உலராதிருந்த தோப்புக்குள் விழுந்தன. இடி மலைச்சரிவுகளில் விழுந்து உருண்டது., கருவேலமரமொன்று தீப்பற்றி சடசடவென்று எறிந்தது. அந்த சில நொடிகளில் பெருமுழக்கத்துடன்கேட்ட இடி காலடி அருகே நிலமதிர கடந்த போது உடல் வெடவெடத்தது. முதுக்குப்பின்னே வெகுதொலைவில் பாறாங்கற்கள் ஒன்றோடொன்று மோதி சிதறுவதுபோல இடி எதிரொலித்து அடங்கியது. அருங்குழைமிளை புதரிலிருந்து சாம்பல் நிற காட்டுமுயலொன்று பந்துபோல தாவிக்குதித்து மண்டிக்கிடந்த கருமிளை செடிகளுக்குள் மறையக்கண்டான்.
ஒருவழியாக காவற்காட்டைத் தாண்டியிருந்தான். பழகியவர்களன்றி அந்நியர்கள் எவரும் காவற்காட்டிற்குள் புகுந்து மீளமுடியாது. முட்புதர் காடுகளைப் பிரித்து நீண்ட ஒற்றையடிபாதையில் இறுதியாக குறுக்கிட்ட செடிகொடிகளை விலக்கியபோது குறுங்கற்பபரவிய திறந்தவெளியில் நின்றிருந்தான். எதிரே மூன்றுமலைகளையும் இணைத்து எழும்பிய அடையவளைந்தான். சில அடிதூரத்தில் அகழி. மதிற்சுவரின் மறைவான நிலைகளில் காவல்வீரர்கள் இருக்கலாம். மழையில் நனைந்த சம்பங்கூடை கூடுதலாகக் கனத்தது. தலையைப் பின்பக்கம் இறக்கி மலையை அண்ணாந்துபார்க்க முடிந்தது. சிறுமேகக்கூட்டம் உடைந்த தாழியின் வெண்ணெய்போல இராயகிரி உச்சியில் வழுக்கி இறங்கக் கண்டான். நட்சத்திரங்கள் சீதளவானத்தில் அடக்கமாகவே பிரகாசித்தன. சாம்பல் வண்ணத்தில் ஒளி சன்னமான திரைத்கணிபோல காற்றில் அலைந்துகொண்டிருந்தது. சர்க்கரை பாகின் நிறத்தில் கம்பியாக இறங்கிய மழையூடாக அவ்வொளியில் அமிழ்ந்துகிடக்கும் மலைகளைப் பார்த்தான். மேற்பரப்பில் இரைப்போலவும் கீழ்ப்பரப்பில் ஆழ்கடலின் அடர்த்தியுடனும் இருள் பரவிக்கிடந்தது.”
இந்தப் புதினம் நாயக்க அரசர்களையும், அவர்களின் அரசியல் சதுரங்கங்களையும் பேசினாலும், அவர்கள் இதில் சாகசநாயகர்களாக இல்லை. சாமானிய மனிதர்களின் குறைகளுடனும், அவர்கள் பதவி தந்த செருக்கால் விழைந்த பிடிவாதத்துடனும், தம் குடிகளைப்பற்றி எந்த அக்கறையுமின்றி ஆடம்பரத்துடன் திரிகின்றனர்; சந்தர்ப்பவாதிகளாக, சமயத்தில் தங்கள் உடல் இச்சை, பொருள், பதவிகளுக்காக பற்பல சமரசங்களைச் செய்துகொள்கின்றனர்.
அதைத்தாண்டி இந்தப் புதினம் விரித்துக்காட்டும் புறவுலகம் மிக நுணுக்கமானது. அரசர், பிராதானிகள், அந்தணர், குடியானவர்கள் என்ற அடுக்குகளும், அவற்றுக்குள் ஒளிந்திருக்கும் பூசல்களும், அடக்குமுறையும் நன்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
பல்லவர் காலத்திழும், பிற்கால சோழர்கள் காலத்திலும், துலங்கி, விஜயநகர அரசாட்சியில் பரவலாக இருக்கும் தேவதாசி முறையும், அதன் சுரண்டலும், அழுக்கும், மிகத் தெளிவாக காட்சிப்படுத்தப் படுகிறது.
அனைத்தையும் தாண்டி, செண்பகம் என்ற சேடிப் பெண் வழியே தளிச்சேரி விழுப்பு நிலை உலகமும், அதன் அழுத்தமும் காட்டப்படும் போதே, அந்தப்பெண்ணின் குரல் வழியே கதை விரிகிறது.
ஒரு தமிழ் புலவரின், முறையாக தமிழ் கற்ற மகளான அவள் ஒரு தாசியின் சேடியாக ஆள் பிடிக்கும் இழி நிலைக்கு ஆளான நிலை, அக்காலத்தில், நாயக்கர்கள் ஆட்சியில், தமிழின் சரிவை காட்டுகிறது. அவள் குரலிலேயே அதன் வலியையும் பதிவுசெய்கிறார் ஆசிரியர்.
“நான் அழகி, வர்ணிக்கமுடியாத அழகி. தமிழில் தேர்ந்தவள். நாயக்கர் ஆட்சியில் தமிழை அப்பியாசம்செய்து பலன் என்ன கண்டோம். யாப்பிலக்கண புலமையினும், வேசிக் குடில் ஊழியம் மீசுரமென்று அனுபவம் கதைத்தது. ஊதியம். மரக்கால் நெல்லும் இரண்டு வேளை சோறும். கிழவர்கள் அலுத்துபோக இளம்வயது தீட்சதனிடத்தில் காதல் என்றாள் அவள். பரத்தையரில்லத்தில் ஆள்பிடித்து ஓய்ந்தநேரங்களில் பிறபணிகள்.”
இந்தக்கதையில் தனித்து நிற்கும் பெண் அவள்தான். செண்பகமாக இருக்கும் போது, அவள் தடுமாற்றமும், ஏக்கமும், ஏமாற்றமும் நம்மை கவனிக்க வைத்தது போலவே, வஞ்சிக்கப்பட்டவுடன், பொங்கியெழும் அவள் குரல், அவள் கற்றுத்தேர்ந்த தீந்தமிழில் முழங்குவது, பாத்திரத்தின் தனித்தன்மையை விளங்கிக்கொள்ளும் வகையில் வடித்திருக்கும் ஆசிரியரின் பிரமிக்க வைக்கும் படைப்பு.
“இவ்விடத்தில் உடைந்தும், நொறுங்கியும் மண்ணிற் புதைந்தும் புலவன் குடில் சுவடிகள் போல எலும்புக்கூடுகள். எமது சீவனும் பிற சீவன்களைப் போலவே நீர்பிரிய மலம்தள்ள ஆத்தும நிவேதனத்திற்கு தயாராகிறது. இனி பூர்வீகச் சொத்தை துய்க்க வருபவைபோல எறும்புகளில் ஆரம்பித்து வண்டுகளும் புழுக்களும் தேடிவரும், அவை தின்று முடித்த மிச்சம் மீதிகளை இலைப்புழுபோல மண் தின்னும். அவற்றின் கவனத்திற்குத் தப்பி எஞ்சிய சதைத் துணுக்குகளுடம் எழும்புகளும் கிடக்கலாம். கடந்த சில நாட்களாக அவற்றை நக்கியே பசியாறுகிறேன். மனிதர் எழும்புகளை உறிஞ்சியிருக்கிறீர்களா?விளைந்ததையெல்லாம் அளந்து கொடுக்கும் எம்குல குழந்தைகள் வட்டிலை கையிலேந்தியபடி விரல் சூப்புவதற்கு பெயர் என்னவாம்? சிற்சில சமயங்களில் எமது கரங்களை, கால்களை அசைக்கிறபோது அவை நீர்கலந்த களிமண்ணைப்போன்ற புழுத்த சதைத் துண்டுகளில் ஒட்டிக்கொண்டிருகின்றன. தற்போது அத் துர்வாடை தவறினாலோ பசிமயக்கங்ககூட வருவதில்லை.”
“எமதுலகில் பகல் எது, இரா எதென்று பிரித்துணரமுடியாது. இரவுபகல்பேதம் மயானத்திற்கெதற்கு? பழகிப்போனால் எதுவும் சௌகரியம். இருட்டோடு கதைக்கவும், சோழி விளையாடவும், சண்டைபிடிக்கவும் தேர்ச்சிபெற்றுவிட்டேன். பசிவேளைகளில் இருட்டை கொறிக்கிறேன், நாவில் வாங்குகிறேன். உருட்டி விழுங்குகிறேன். ஓநாய் போல சில நேரங்களில் நாவையும் குறியையும் தொங்கவிட்டபடி பச்சைக் கண்கள் மினுங்க அந்தகாரம் என்னை வெறித்துபார்க்கிறது. நாய்களைக் காட்டிலும் ஓநாய்கள் வீரியம் மிக்கவை. பெண்ணொருத்தி ஆணிடம் எதிர்பார்க்கும் இட்டபோகங்கள் சர்வமும் ஓநாய்களிடம் இருக்கின்றன.”
அவள் குரல் அதன் வெறுமையையும், சோகத்தையும் தீந்தமிழில் உணர்ச்சி மிக சொல்லும் பொது நம் மனம் அதிர்வது, தமிழா? அவள் உணர்வா? இல்லை ஆசிரியரின் படைப்பா?...
“பாதரே! கன்னிப்பெண்ணின் பிள்ளையை இறைதூதராக ஒப்புக்கொண்ட உம்மையன்றி வேறெவர் எம்மையும் எம் புத்திரனையும் புரிந்துகொள்வார்கள். நீர்மாத்திரமே சிசு கர்ப்ப பைக்குள் வந்த விதம்பற்றி வினா தொடுக்க மாட்டீர். அப்படி கேட்பது தெய்வ குற்றமென்று அறியமாட்டீரா என்ன? சில கிழமைகளுக்கு முன்பு வயிற்றினுள் கைகொண்டு கிளருவதுபோல இருந்தது. நோக்காடுகளில்லை. விதை எனக்குள் முளைவிட்டிருந்தது தெரியும். தேகத்தின் மாறுபாடுகளை எதிர்பார்த்ததில்லை. இயற்கையின் மாந்திரீயங்களை கிரகித்துக்கொள்ளவும், பதற்றத்தில் மூச்சுத் திணறிய நெஞ்சைத் தேற்றவும் கடினமாகவிருந்தது.
எமக்கே ஆகாரமில்லாதபோது வயிற்றிலிருந்த கரு எதைப்புசித்து வளர்ந்திருக்குமென்ற ஓயாதகேள்விகளுடன் தருகித்திருக்கிறேன். என் வயிற்றிலிருக்கும் சிசு என்ன குற்றம் செய்ததென கிணற்றில் தள்ளியவர்களிடம் கேட்டேன்.”
பிறகு கமலக்கண்ணியாக உருவெடுத்த அவள், ஆரம்பத்தில் அது சமூகத்தின் கண்களில் இருந்து தன்னை மறைத்துக்கொள்ள என்ற தெளிவோடு இருந்திருந்தாலும், மெதுவாக - ஆங்கிலத்தில் split personality என்று சொல்வார்களே - அந்த நிலைக்கு ஆளாகி தன்னை ஒரு துணை தெய்வமாகவே உருவகிப்பதும், தன் நிலைக்கு மருந்தாக அதையே கைக்கொள்வதும் பிரமாதமாக வந்துள்ளது.
“என்ன செய்வது சகலமும் ஜெகதீசனால் விளைந்தது. அவன் மேலுள்ள கோபாக்கினியை அப்பேதைப்பெண்ணிடமும் காண்பிக்கவேண்டியிருக்கிறது.
சண்டாளன் என்ன பேசினான்? நான் கூடாதாமே? அத்தனை சுலபமாக மறக்க கூடியதா என்ன. அவனுக்கு வேண்டியவர்கள் எவரென்றாலும் எனக்கும் வைரிகள். இந்த தேசத்தில் எத்தனை நடுகல்கள், எவ்வளவு தேவதைகள்? எத்தனையெத்தனை கன்னிச்சாமிகள்? அவர்களில் ஒருத்தி என்கிற அந்தஸ்து எனக்கும் வேண்டும், கிராமத்து எல்லையில் நிற்கவேண்டும். தேவதையெனக்கூறி எனக்குப் பாவாடை சாற்றவேண்டும், பலி வேண்டும். குரல்வளையைக் கடித்து உதடுகள் சிவக்க புருஷர்கள் குருதியை மாந்தவேண்டும்.”
இறுதியில், இயற்கையின் பெருங்காரங்களால் எழுதப்படும் சரித்திரம், தற்கால நிகழ்வுகளில் என்ன தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை கதை சொல்லும் விதம் அருமை.
இறுதியாக, அதன் முடிவு, நம்மை இருக்கையின் நுனிக்கு இட்டுச்சென்று, பிரமித்து வாயடைத்துப்போக செய்கிறது.
இதுவரை நான் படித்த கிருஷ்ணா நாகரத்தினம் அவர்களின் கதைகளில், என்னைப் பொறுத்தவரையில் இது தான் மிகச்சிறப்பானது என்று தயங்காமல் கூறுவேன். ஆயினும் இது அவருடைய மற்ற புதினங்கள் அளவு பரவலான கவனம் பெறாதது ஏன் என்று எனக்கு புரியவில்லை.
Comments
Post a Comment