மூடுபனி விலகும்போது

ஆங்கிலப் புதின வாசிப்பு என்பது எனக்கு சற்றே தாமதமாக தொற்றிய பழக்கம் தான். எழுத்துக்கூட்டிப் படிக்க ஆரம்பித்த காலத்தில் இருந்தே தமிழில் கையில் கிடைத்ததை எல்லாம் வாசிக்க ஆரம்பித்துவிட்டேன். ஆரம்பத்தில் இரும்புக்கை மாயாவி, வேதாள மாயாத்மா என்று காமிக்சில் ஆரம்பித்து, மெது மெதுவாக வாண்டு மாமா, பி.டி.சாமி, என்று வேகமெடுத்து, இரண்டாவது மூன்றாவது வகுப்பில், ராஜேந்திரக்குமார், புஷ்பா தங்கதுரை என்று எட்டிப்பிடித்துவிட்டேன். வயசுக்கு மீறிய பிஞ்சிலே பழுத்தது என்று பெருசுகள் முணுமுணுத்தது காதில் விழுந்தாலும் என் வாசிப்பு என்னவோ நிற்கவேயில்லை. காமிக்சுகளில் மாத்திரம் ஆங்கிலம் தமிழ் என்ற பாகுபாடு எப்போதும் இருந்ததில்லை. ஆங்கில நெடும் புதினங்கள் அவ்வப்போது வாசித்தாலும் தமிழ் அளவுக்கு அதில் வேகமில்லை. அதற்கு காரணம் வீட்டில் அப்பா கண்டிப்பாக ஹிந்து பேப்பர் தவிர ஏதும் வாங்குவதில்லை என்பதோடு என் வாசிப்பு அனைத்தும் விடுமுறையில் தாத்தா வீட்டுக்கு ஊருக்கு வரும்போதுதான். கோவைக்கு அருகாமையில் அமைந்த சிறிய ஊரான அங்கே தமிழ் காமிசுக்களுக்கே கோவை சென்று தான் வாங்கி வரவேண்டும். மற்றபடி தினப்பத்திரிக்கை என்றால் தினகரன், தினத்தந்தி, வாரப்பத்திரிக்கைகள் என்றால் குமுதம், ஆனந்தவிகடன் முதல் கல்கண்டு முத்தாரம் வரை, நாவல்கள் என்றால் ராணிமுத்து, மாலைமதி என்று வகைதொகை இல்லாமல் கிடைப்பதைப் படிக்கும் வெறிபிடித்த பண்டிதனாகிவிடுவேன்.



கோவை வந்தவுடன் ஆங்கிலத்திலும் வாசிப்பின் வேகம் அதிகரிக்க ஆரம்பித்தது. அதற்கு முக்கிய காரணம் பாரதி வித்யா பவன் நூலகமும் என் நண்பன் குருவும் தான். மெதுவாக என் ஆறாவது படிக்கும் வயதில், பள்ளிக்குப் பின்னான நடன வகுப்பின் நடுவே, எனிட் பிளைட்டன், ஹார்டி பாய்ஸ், அகதா கிரிஸ்டி என்று நூலக புத்தகங்களை பரிந்துரைத்து, ஆர்வத்தை தூண்டிப் படிக்க வைத்துவிடுவான். நகரத்து தடபுடல்களை புதிதாக பார்த்து மிரண்ட எனக்கு, அவன்தான் புதிய விஷயங்களை அறிமுகப்படுத்திடும் கலைஞானி, சகலகலா வல்லவன் எல்லாம். நடன வகுப்பு முடிந்ததும், அங்கேயே பவன் நூலகத்தில் நேரம் போவது தெரியாமல் புத்தகத்தில் மூழ்கவும், இரவாகியும் வீடு வரவில்லை என்று தேடி வந்த என் பாட்டனாரிடம் திட்டு வாங்கவும் காரணம் அவன்தான். பிறகு மெதுவாக ஹெரால்ட் ராபின்ஸ், இர்விங் வாலஸ் என்று அறிமுகப்படுத்தி முன்னணி நாவலாசிரியர்களான அலிஸ்டர் மேக்லீன், ஜெஃப்ரி ஆர்ச்சர், கென் ஃபாலட், ஃப்ரெட்ரிக் ஃபோர்சித், லட்லம், வில்பர் ஸ்மித் என்று என்னை நிலை நிறுத்தியதும் அவன்தான். காலங்கள் பல கடந்து இருவரும் உலகின் வேறு வேறு மூலையிலிருந்தாலும், இன்றும் அவர்களின் புதிய புத்தகம் வருவது எங்களைப் பொறுத்தவரை ஒரு திருவிழாதான்.
அப்படி வாசிக்க ஆரம்பித்தவுடன், ஒரு புதிய உலகம் எனக்கு அறிமுகமானது. புதிய களங்கள், சம்பவங்கள், அவை நிகழும் காலகட்டங்கள் மற்றும் இடங்கள், அதில் உலவும் மனிதர்கள் என்று விரியும் அந்த வாசிப்பு இதுவரை அனுபவிக்காத முழுமையான அனுபவத்தை அளித்தது. வாசித்து முடித்த பின்பும் அதன் பாதிப்பில் சில மணி நேரங்களோ, சில நாட்களோ, திளைத்து இருப்பதும், வேறு புதிதாக வாசிக்க ஆரம்பித்தால் இதன் அனுபவம் பிறழ்ந்து விடுமோ என்று தயங்கியதும் நிகழும். கூடவே தமிழில் முன்னணிக் கிரைம் கதைகள் என்று பரவலாக விற்கப்படுபவை முக்காலே மூணு வீசம் வெறும் குப்பைதான் என்ற புரிதலுடன் அந்த வாசிப்புக்கு அப்போதே தலைமுழுக்குப் போட்டதும் நடந்தது. அப்படி முழுக்குப்போட்ட பின்புதான் தமிழில் தி.ஜா, கி.ரா., போன்ற முன்னோடிகளின் வாசிப்புக்கு தடம் மாறி புதிய ரசனைக்கு வழிகிடைத்தது. வாத்தியார் சுஜாதாவின் எழுத்தைக் கூட வேறு கோணத்தில் தேடி வாசிக்கவும் வழி கிடைத்தது. ஒருவகையில் அதற்குக் காரணம் ஆங்கில கிரைம் நாவல்கள் என்பது நகை முரணாகத் தெரியலாம், ஆனால் அதுதான் எனக்குத் திருப்பு முனை.
இன்று மேலே குறிப்பிட்ட முன்னோடி கிரைம் எழுத்தாளர்களில் சிலர் மட்டுமே இன்னும் தொடர்ந்து எழுதி வருகின்றனர். அவர்களுக்கு அடுத்த நிலையில் புதிய தலைமுறை ஆங்கில எழுத்தாளர்கள் பலர் வந்துவிட்ட போதும், அவர்களுள் பலர் திரைப் படங்களையும் சின்னத்திரைத் தொடர்களையுமே குறி வைத்து எழுதுகின்றனர் எனத் தோன்றுகிறது. அவர்களின் முந்தைய தலைமுறை போன்று ஆழமாக இல்லை என்ற நெருடல் நெடுநாட்கள் எனக்கு இருந்தது. அதுவே என்னை மொழிபெயர்ப்புகள் வழியே மற்ற நாட்டு / மொழி எழுத்தாளர்களிடம் என்னை இட்டுச் சென்றது. அப்படி வாசித்தவர்களில் சமீப காலத்தில் நான் கண்டடைந்த கியெல் ஓலா டால் ( Kjell Ola Dahl) என்ற நார்வேஜிய புனைக்கதை எழுத்தாளர் மிகச்சிறப்பான கதைகளை நமக்கு அளிக்கிறார். நார்வேயின் கிரைம் எழுத்தின் முடிசூடா மன்னன் என்று அழைக்கப்படும் அவருடைய புத்தகங்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு சமீப காலங்கள் அதிகம் விற்பனை செய்யப்படுகின்றது. 1993 ம் ஆண்டில் எழுத ஆரம்பித்த அவருடைய புத்தகங்கள் நார்வேயில் மட்டும் அல்ல, மற்ற ஐரோப்பிய நாடுகளிலும் மிக அதிகமாக வாசிக்கப்படுகிறது.
பொதுவாக ஸ்டீக் லார்சன் (Steig larsson), யு நெஸ்ப ( Jø Nesbo) போன்ற ஸ்வீடிஷ், நார்வேஜிய எழுத்தாளர்களின் நூல்களால் பரவலாக அறியப்பட்ட நார்டிக் கிரைம் நூல் பரப்பில் டால் ஒரு முக்கிய ஆளுமை.




இந்த வகை நூல்கள் பரப்பு பரவலாக ஆங்கில வாசிப்புத் தளத்துக்குள் வந்து சேர முக்கிய காரணம் அதன் மொழிபெயர்ப்பாளர்கள். அந்த வகையில் டான் பார்லெட், யு நெஸ்ப மற்றும் டால் இருவரின் குறிப்பிடும்படியான புத்தகங்களையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர். அவருடைய திறனுக்கு அவர் மொழிபெயர்த்த டேனிஷ், நார்வெஜிய மற்றும் ஸ்வீடிஷ் எழுத்தாளர்களின் நூல்கள் ஆங்கிலத்தில் அடைந்த வெற்றியே சாட்சி.




அவருடைய சில புத்தகங்களை வாசிக்க ஆரம்பித்த நான், சமீபத்தில் வாசித்த “ த கூரியர்” ( The courier) என்ற புத்தகம், நான் வாசித்த டாலின் படைப்புகளிலேயே மிகச்சிறப்பான ஒன்று, என்று அறுதியிட்டுக் கூற முடியும்.
பொதுவாக நார்வேஜிய எழுத்தாளர்களின் படைப்புகளை அப்படியே படித்தால் அதன் வீச்சு புரியாது. அதற்காக அவர்களின் சரித்திரம் மற்றும் தற்போதைய சமூக அமைப்பு பற்றிய பின்னணி வாசிப்பும் மிக அவசியம்.
அந்தவகையில், இரண்டாம் உலகப்போர் காலகட்டமான 1942, அதன் பின்னான 1967 ஆகிய இரண்டு தளங்களில் பயணிக்கும் இந்தப் படைப்பு தற்காலத்தில் (2015) துவங்கி முடிகிறது. இரண்டாம் உலகப்போரை தவிர்த்துவிட்டு 100 ஆண்டு ஐரோப்பிய சரித்திரத்தை எழுத முடியாது. குறிப்பாக நாஜிகள் நார்வே நாட்டை ஆக்ரமித்து, அவர்களின் அரசரையும் ஜனநாயக அரசையும் துரத்திவிட்டு தங்களுக்கு தலையாட்டும் ஒரு அரசை வைத்து தங்கள் கைப்பிள்ளை போல நடத்தியதை நார்வே நாட்டினர் மறக்கவில்லை. கூடவே வெளியே தெரிந்தும், தெரியாமலும் ஹிட்லர் அங்கே நடத்திய பல நடவடிக்கைகள் இன்றும் அதன் சமூக அமைப்பில் தாக்கம் செலுத்துகின்றன.
அதைப்பற்றிய பின்னணி அறியாமல் இந்தப் புதினத்தை வாசிக்கும்போது வேகமாக கடந்துபோகும் அபாயம் உள்ளது. உதாரணமாக, ஒரு இடத்தில், போர்கால பின்னணியில், முக்கிய பாத்திரத்தை விசாரிக்க வரும் நார்வேஜிய நாஜி போலீஸ் அதிகாரியின் தோற்றத்தையும் அவன் நீலக் கண்களையும் குறிப்பிடும் இடம்.
காணாமல் போன நகையை மீட்கும் முயற்சி என்ற முடிச்சில் துவங்கும் இந்தக் கதை, ஒரு கொலை என்ற அச்சில் சுழல ஆரம்பிக்கிறது.
வழக்கமான “ whodunit” எனப்படும் ‘ ஒரு மர்மக் கொலைக்குற்றம், அதைக் கண்டுபிடிக்கும் துப்பறிவாளர் ‘ என்ற வகையாக இல்லாமல், அந்தக் கொலை என்பதை ஒரு அடிநாதமாக கொண்டு, போர்கால சமூகப் பிரச்சினை, அரசியல் முரண்பாடுகள், உளவு நடவடிக்கைகள், என பல தளத்தில் பயணித்து, ஆரம்பித்த இடத்திலேயே முடிந்து விடுகிறது. உண்மையில், அந்தக் கொலை நடக்க நிகழ்வை விவரிக்கும் போதே கொலையாளி யார் என்ற ஊகம் வாசிப்பவருக்கு வந்து விடுகிறது. இருந்தபோதும் கதை சொல்லும் போக்கும், சம்பவங்களும், விவரணைகளும் வாசிப்பவரைக் கட்டி வைத்து ஒவ்வொரு அடுக்காக உரித்து, உண்மைகளை ஒவ்வொன்றாக அவிழ்க்கும் போது பிரமிக்க வைக்கிறது.

அந்த வகையில் அலிஸ்டர் மெக்லீன் நாவலை ஒத்த சாயலை அளித்தாலும், அதை விட மிக ஆழமான ஒரு புரிதலை வாசிப்பவர்களுக்கு அளிக்கிறது. வாசித்து முடித்தவுடன் அதன் தாக்கம், ஒரு நாள் முழுவதும் வேறு எந்த புத்தகத்தையும் கையில் எடுக்கவிடாமல் பனிபடர்ந்த நார்வேர்ஜிய இரவின் குளிரோடு நம்மை பயணிக்க வைக்கிறது. 

Comments

Popular posts from this blog

பாலை மனம்

அன்பே மருந்து

Deccan in Dazzling light