பாலை மனம்

என் தாத்தா, தான் பிறந்து, வளர்ந்து, பல வருடங்களாக தொழில் நடத்திய ஊரையும், தலைமுறை தலைமுறையாய் வாழ்ந்த ஊரின் மத்தியில் இருந்த பெரிய வீட்டையும் விட்டு, என் படிப்பிற்காக நகரின் மத்தியில் வந்து குடியேறிய சிலகாலங்களில் டேவிஸ் அண்ணன் வந்து சேர்ந்து கொண்டான். மலையாளம் கலந்த தமிழும், வியப்புகலந்த விழிகளில் எப்போதும் சிரிப்புடனும், தன் ஆட்டோவோடு வந்து எங்கள் தாத்தாவின் ஆஸ்தான சாரதியாகவும், பாட்டியின் அனைத்து வெளிவேலைகளுக்குமான கண்ணனாகவும் மிக இயல்பாக இணைந்து கொண்டான். சிவந்த நிறத்தோடு, உயரமாக, கூரிய நாசி, சுருட்டை முடியுடன், கிட்டத்தட்ட நடிகர் சுரேஷ் மேனனைப்போன்ற தோற்றத்துடன் இருந்த அவனை அப்படிப் பார்ப்பது பலருக்கு கடினமாக இருக்கும்; அவனோடு அவர்கள் பேசிப்பார்க்கும் வரை. பேசினால் மிக அப்பாவியான “யதார்த்தமான” பேச்சு அவனை அனைவருக்கும் பிடித்தவனாக மாற்றிவிடும். கேரளத்தின் நெம்மரா பக்கமிருந்து கோவைக்கு வந்து அந்நகரின் அங்கமாகிப் போனவன் அவன். சொந்த ஊரில் இருந்தே வெகு காலமாக ‘தொர முதலாளியிடம்’ இருந்து வந்த இடது, வலது கரங்களையும், துவாரபாலகர்களையும் மீறி அவரின் அன்புக்கு அவன் பாத்திரமானது அதிசயம். அவனுக்காகவே காரை விடுத்து அவன் ஆட்டோவில் தான் தாத்தா எங்கும் சென்று வந்தார்.

எனக்கு டேவிஸ் அண்ணனாகவும், மழலைக்கு “தேவித் மாமா” வாகவும் எங்கள் வளர்பருவ நிகழ்வுகளில் கட்டாயமான அங்கமாக அவன் எப்போதும் இருந்தான். எங்கே ஆட்டோ ஓட்டிச்சென்றிருந்தாலும், தாத்தாவுக்கு எங்காவது செல்லவேண்டிய நேரத்துக்கு வந்து சேர்ந்துவிடுவான். அவன் மணமுடித்து வந்தவுடன், முதல் குழந்தை பிறந்தவுடன், என்று அவன் வாழ்வின் முக்கிய நிகழ்வு தாத்தா பாட்டியின் ஆசியுடன் நடந்தது. “போடா… எப்படி இப்படி பெப்பளத்தான் மாதிரி இன்னும் எவ்வளவு நாளைக்கு தான் சுத்திகிட்டு இருப்ப?... ஒரு குடும்பம்னு ஆயி, கொழந்த பொறந்தாச்சு… பேசாம ஒரு காரு கீறு வாங்கி டாக்ஸி ஒட்டு, லோன் வேணா ஏற்பாடு பண்ணலாம்” என்று என் தாத்தா அவனை கடிந்து சொன்னதை கேட்டேன். அதற்கு அவன் பிடிகொடுக்காததால், பேசாமல் காரோட்ட கற்றுக்கொடுத்து அவனை ட்ரைவர் ஆக சேர்த்துக்கொள்ளவும் யோசித்து வந்தார் தாத்தா..



நான் கல்லூரியில் சேர்ந்த பின் முதல்முறையாக கல்லூரி நடத்திய பெற்றோர் சந்திப்புக்கு, கோவையில் இருந்து ஆட்டோவில் என்னையும் தாத்தாவையும் டேவிஸ் அண்ணன் தான் ஓட்டிச்சென்றான். அநேகமாக அந்த கூட்டத்துக்கு, ஆட்டோவில் வந்த ஒரே மாணவன் நானாகத்தான் இருக்கும். கூட்டம் முடிவதற்குள், கல்லூரி முழுதும் சென்று எது எது எங்கே உள்ளது என்று தெரிந்து வைத்துக்கொண்டு எனக்கு விளக்க முயற்சிசெய்தான். “ப்ரேமு… இங்க எல்லாமே சூப்பரா இருக்கு… என்ன சாப்பாடுதான் கொஞ்சம் கஷ்டம்… அண்ணா, மத்தியான சோறு அனுப்பிச்சு தரணும்?” என்று தாத்தாவிடம் சிபாரிசு செய்தான்.
இப்படி எங்கள் வீட்டின் எல்லா முக்கிய நிகழ்வுகளிலும் தவறாமல் இடம் பெற்ற அவன் மீது, தாத்தாவுக்கு ஒரு நாள் எதோ ஒரு மனத்தாங்கல் ஏற்பட்டு, அவன் வருவது தடைபட்டது . அதில் அவனுக்கு பெரும் மனவருத்தம். அந்த வருத்தத்தோடு, எங்கோ முயன்று அரபு நாட்டில் வேலை என்று ஒரு நாள் வந்து சொல்லிவிட்டுப் போனான். அதன் பின் அவனிடம் இருந்து எந்தத் தகவலும் இல்லை. அவனிடம் இருந்து எந்த செய்தியும் இல்லாததால், அவன் குடும்பமும் காத்திருந்து காத்திருந்து சொந்த ஊருக்கே சென்று விட்டது தாமதமாகத்தான் தெரிந்தது. அதன் பின் எத்தனையோ கார் டிரைவர்கள் தாத்தாவுக்கு அமைந்தாலும், டேவிஸ் அண்ணனை அனுப்பி விட்டதைத்தான் தாத்தா நினைத்து வருந்தினார். வேலைக்கு போன அவனுக்கு என்ன ஆனதோ என்ற கவலை சில நேரம் அவரை வாய் விட்டு புலம்பவும் செய்தது.
சமீபத்தில் வாசித்த “ஆடு ஜீவிதம்” எனக்கு வளைகுடா நாடுகளில் சென்று வேலை செய்ப்பவர்களில் விளிம்பு நிலை மனிதர்களை நஜீபின் வழியே எனக்கு அது அறிமுகம் செய்து வைத்தது. அவர்களின் கனவுகளை, அவர்களின் எளிய ஆசைகளை எனக்கு மிக அண்மையில் காட்டியது.
“இரண்டு மாதங்கள் காத்திருப்பிலும் கனவுகளிலும் கழிந்தன. இன்னொரு சுற்று கடன் வாங்குவது தொடங்கியது. ஏஜெண்டுக்குக் கொடுக்க வேண்டிய மீதம் பத்தாயிரம் ஏற்பாடு செய்தாக வேண்டும். அதற்குள் நான் தொடர் கனவுகள் கண்டேன். கல்ஃபில் இருக்கும் பதினான்கு லட்சம் மலையாளிகள் கேரளாவில் இருந்தபோது கண்ட கனவுகளேதான் - தங்க வாட்ச், ஃப்ரிட்ஜ், டிவி, கார், ஏசி, டேப் ரெக்கார்டர், விசிபி, தடியான தங்கச் சங்கிலி. இரவில் சேர்ந்து உறங்கியபொழுது சைனுவிடம் அவற்றைப் பகிர்ந்துகொண்டேன். 'எனக்கு எதுவும் வேண்டாம் இக்கா. நம்ம கொழந்தையோட எதிர்காலத்துக்குத் தேவையான அளவு சேத்ததுக்குப் பிறகு பத்திரமா திரும்பி வந்துடுங்க. என்னோட சகோதரங்க மாதிரி நாம சொத்து சேக்க வேணாம். மாளிகை எதுவும் வேணாம். கூட சேந்து வாழனும். அவ்ளோதான்.' "
“கல்ஃபிற்குப் போக நினைக்கும் ஒவ்வொரு கணவனிடமும் அவன் மனைவி ஒருவேளை இப்படித்தான் கூறுவார்களாக இருக்கும். இருந்தும், அவர்கள் அங்கே இருபது முப்பது வருடங்கள் கழிக்க நேரிடுகிறதே? என்ன காரணம்?”
அப்படி மலர்ந்த ஆசைகள் கொடுமைகளின் ஊடே கருகுவதை மிக நெகிழ்ச்சியாக வார்த்தைகளில் வடித்திருக்கிறார். அப்படி மருகி மருகி உருவெற்றிய ஆசைகள் பிறகு வெறும் உயிர்வாழும் துடிப்பாக, தனிமையில் சிக்கிய உயிருக்கு ஒரு நம்பிக்கை இழையாய் மீந்துபோனது.
“நம் துயரங்களைப் பகிர வேறொருவர் இருந்தால் நாம் எத்தகைய துயரங்களையும் தாங்க முடியும். ஆனால் தனிமை கொடுமையானது. வார்த்தைகள் என்னுள் வெள்ளிமீன்களாகத் துடிதுடித்தன. பகிரப்படாத உணர்ச்சிகள் எனக்குகத் அடித்துகொண்டு குமிழ்களாகி வாயில் நுரை தள்ளின. என் துக்கங்களைக் கொட்டித் தீர்க்க ஒரு காது, என்னைப் பார்க்க இரு கண்கள், என்னருகே ஒரு கன்னம், நான் உயிர் வாழ அவசியமாகின. இவைகள் இல்லாதபோது ஒருவர் பைத்தியமாகலாம், தற்கொலைக்கு முயற்சிக்கலாம். தனிமையில் சிறைப்படுத்தப்பட்டவர்கள் புத்தியிழப்பதற்கு இது காரணமாக இருக்கக்கூடும். அந்த வார்த்தைகளை வெளியே கொண்டு வருவது, பிடித்துத் தள்ளுவது மிகப் பெரிய மனச் சமாதானத்தை வழங்கக்கூடியது.”
“இந்த வாய்ப்பில்லாதவர்கள் வார்த்தைகளில் மூச்சுத் திணறி இறக்கலாம். நானும் அவ்வாறே இறந்திருக்கக்கூடும். ஆனால் நான் என் போச்சக்காரி ரமணி, என் மேரிமைமுனா, என் கௌசு, என் அராவு ராவுத்தர் - இவர்களிடம் நான் கூறிய கதைகளால் எனக்குள் சேர்ந்து கொண்டிருந்த வார்த்தைகளை வெளியேற்றினேன். என் மனதிற்குப் பிடித்தவர்களுடன் உரையாடுவதுபோல் நான் அவர்களுடன் பால் கறக்கும் போதும், நடை அழைத்துச் செல்லும்போதும், பாத்திரங்களை நிரப்பும் போதும், தீவனம் கொடுத்த போதும் எல்லாம், உரையாடினேன். என் கண்ணீரை, வலிகளை, துயரங்களை, உணர்ச்சிகளை, கனவுகளைக் கொட்டினேன். அவர்கள் எதுவும் புரிந்துகொண்டார்களா என்பது எனக்குத் தெரியாது. ஆனால் அவர்கள் எனக்குச் செவி சாய்த்தார்கள். கண்களைத் தூக்கி என்னைப் பார்த்தார்கள், என்னுடன் சேர்ந்து கண்ணீர் விட்டார்கள். அதுபோதும் எனக்கு.”
கருகிய கனவின் தடம் வெறும் வலி தரும் தழும்புகளாக நிலைத்துவிடுவது பெரும் சோகம்.
“கடிதத்தை மடித்தேன். கண்களை மூடினேன். சிறிது நேரம் அழுதேன். அந்தக் கடிதத்தில் உண்மை இல்லை, ஆனால் என் கண்ணீரில் இருந்தது. அந்த உண்மையை யாரும் படிக்கவில்லை.”
“இறுதியில் ஆடு மேய்ப்பனாக வேலை கிடைத்தபொழுது என் கனவிலிருந்து அது எத்தனைத் தொலைவில் இருந்தது என்பதை வலியுடன் நினைத்துப் பார்த்தேன். தூரத்திலிருந்து பார்க்க நன்றாகத் தெரிபவைகளையும் என்னவென்றே தெரியாதவைகளையும் குறித்து நாம் கனவு காணக்கூடாது. அத்தகைய கனவுகள் நனவாகும்போது அவை ஏற்றுக்கொள்ள முடியாதவைகளாக இருக்கின்றன.”
அப்படி மீளமுடியாத பெரும் கொடுங்கனவை வாழ்வா, சாக முடியாத கடும் தண்டனையா என்று புரியாமல் தள்ளாடி, தள்ளாடிக் கடந்து வருவதும், பாலையில் விழுந்த மழையாய், கிடைத்த வாய்ப்பை வைத்து தப்புவதும் தனிப்பட்ட மனிதர்களின் மனிதநேயத்தின் மீதான நம்பிக்கையை மீட்டு விடுகிறது.
இருந்தபோதும், இந்த புத்தகம் காட்சிப்படுத்தும் அந்த நாட்டின் நிறுவனமயமான சுரண்டலையும், கொடுமையையும், எளிதில் கடந்து போக முடியவில்லை. நஜீப் தப்பித்தாலும், அவரைப்போன்ற எத்தனை எத்தனை உயிர்கள் மணலில் புதைக்கப்பட்டுள்ளனவோ என்ற கேள்வியில் , உயிர்வரை நடுங்குவதை தடுக்கமுடியவில்லை.
“ஹமீத் வேறெதுவும் சொல்லத்தேவையிருக்கவில்லை. அவன் கண்கள் உறைந்துபோயிருந்த இடத்தில் என் பார்வையைத் திருப்பினேன். ஓர் அரேபியர் எங்களை நோக்கி வந்துகொண்டிருந்தார். அவர் எங்களை வந்தடைவதற்கு முன்பே ஹமீத் அலறினான். அதனாலேயே அந்த அரேபியருக்குத் தன் இரையைத் தேடி வேறெங்கும் பார்க்கத் தேவையிருக்கவில்லை. அவர் தேடிவந்த ஒன்று அவர் கண் முன்னே பெருங்குரலில் அழுது கொண்டிருந்தது.”
“ஹமீதைப் பார்த்ததுமே சிறுத்தை ஒன்று தன் இரைமீது பாய்வதுபோல் பாய்ந்து அவனைத் தொடர்ந்து தாக்கினார். அவனைத் தன் கைகளாலும், பெல்டாலும், தன் குத்ராவைக் கட்டியிருந்த ஈகாலாலும் அவர் கோபம் தனியும்வரை அடித்தார். அங்கிருந்த மற்றவர்களைப்போல என்னாலும் அதைப்பார்த்து அழத்தான் முடிந்தது.”
“ ‘எனக்கு வீட்டுக்கு போகனும். என்னால் அங்க ஒரு நொடி கூட இருக்க முடியாது. என்னப் போக விடுங்க... ப்ளீஸ் என்ன விடுங்க... என்ன விடுங்க...' ஹமீத் அலற அலற அந்த அரேபியர் அவனை வார்டன் இருந்த அறைக்கு இழுத்துச் சென்றார்”.
“அன்றுதான் நான் கடைசியாக ஹமீதைப் பார்த்தது. அவனுக்கு என்ன நடந்தது என்று அறிய விரும்பினாலும் அவன் எங்கிருக்கிறான் என்று தெரியவில்லை. முழுமைபெறாமல் இப்படி எத்தனை எத்தனை வாழ்க்கை முடிந்திருக்கின்றன! இன்னொருவரிடம் தன் கதையைக் கூறக்கூட முடியாமல் தொலைந்துபோகும் பாவப்பட்ட ஜீவன்கள்.”
இந்த புத்தகத்தை வாசித்து முடித்த இரவில், என் கனவில், அழுக்கடைந்த நீண்ட முடிகளுடன் ஒரு மெலிந்த உருவம் வந்தது. அது அருகில் வர, வர, கண்ணீர் தாரை வரைந்த அதன் முகத்தை பார்த்ததும் அது டேவிஸ் அண்ணன் தான் என்று எனக்குப் புரிந்து போனது.

Comments

Popular posts from this blog

அன்பே மருந்து

Deccan in Dazzling light