புயலுக்குப் பின்
மலரும் மலரும் என்று அதற்காக உடல் வருத்தி , நிலத்தை செம்மைப் படுத்தி, விதைத்து, நீரூற்றி, காத்து, காத்திருந்த வலி முழுதும், பூவாகி, கனியாகி சிறக்கும் கணத்தில் மனம் பூத்து மகிழ்வது விதைத்தவர் இயல்பு. அந்த கணத்தில் அவன் தொழிலாளி என்ற நிலையில் இருந்து படைப்பாளியாக மிளிர்கிறான். அந்த உணர்வு தான் அவனை மேலும் மேலும் உழைக்கத் தூண்டுகிறது.
உழவுக்கு மட்டும் அல்ல வாழ்வுக்கும் அப்படித்தான். நாம் தேடிப் படைக்கும் ஒவ்வொரு விஷயத்தையும் நாம் மிக விரும்பி, அதற்காக பாடுபட்டு பின் அந்தப் படைப்பு முழுமைபெற்று மிளிரும்பொழுதில் அடையும் மன நிறைவு ஈடில்லாதது.
மாறாக நாம் வெகு காலமாக எதிர்பார்த்து காத்திருந்த ஒன்று, கனிந்து வரும் போது, நம் எதிர்பார்ப்புக்கு நேரெதிராக, ஒரு கணத்தில் விரும்பத்தகாத நிலைக்கு மாறிப்போனால், அதனால் ஏற்படும் ஏமாற்றமும் வலியும் மிக அதீதமாகவே இருக்கும்.
சாதாரணமாக இருக்கும் கானகம் தீக்கொன்றை மலரும்போது, திடுமென தீப்பற்றியது போல் அழகாக மாறிவிடுகிறது. அது போலத்தான் காதலும், சாதாரண மனித வாழ்வை அழகாக மாற்றுகிறது. பருவம் தவறாமல் மலரும் காதலும் தீக்கொன்றையும் இயல்பாக நிகழ்வது.
அப்படி இயல்பாக மலரும் ஒன்று ஏதொவொரு அசாதாரண நிகழ்வால், மலராமல் தப்பிப்போனால்? அது மலரவேண்டும் என்று ஏங்கிக் வெகு காலமாக காத்திருக்கும் போது தீக்கொன்றைக்கு பதிலாக சில ஆண்டுகளுக்கு ஒரு முறை அரிதாக மலரும், அகோரமாக பெரிதான(grotesquely large ), அழுகிய பிண வாடை அடிக்கும் பிணக்கொன்றை மலர்ந்தால்?!…
அப்படி ஒரு நிகழ்வை படம்பிடித்துக்காட்டும் புத்தகம் தான் “தீக்கொன்றை மலரும் பருவம்”. நைஜீரியாவில் வாழும் இதை எழுதிய அபுபக்கர் ஆடம் இப்ராஹிம், கதாசிரியர் மட்டும் அல்லாது ஒரு பத்திரிகையாளரும் ஆவார். அதனால் தான் அவரால் சம்பவங்களை நிஜத்துக்கு மிக அண்மையில் வடித்தெடுக்க முடிந்திருக்கிறது. இந்த நூலுக்காக அவர் 2016ல் நைஜீரியாவின் NNLG இலக்கியத்துக்கான பரிசை வென்றது. இதை மொழி பெயர்த்த லதா அருணாச்சலம், பல காலம் ஆப்பிரிக்காவில் வாழ்ந்து இந்தக் கதை நடந்த களத்தை மிக அண்மையில் பார்த்தறிந்தவர். அதனால் தான் அவரால் கதையோடு ஒன்றி, சிறந்த மொழிபெயர்ப்பை அளிக்க முடிந்திருக்கிறது.
பிரச்சனைகள் நிறைந்த காலகட்டத்தில் நைஜீரிய நாட்டின் வடபகுதியில், நிகழும் சம்பவங்களின் அடிப்படையில் பிண்ணப்பட்ட அருமையான கதை இது. இதன் முக்கிய களம், பேத்திகளும் மகன்களும், மகள்களும் கொண்ட விதவையான ஹஜியா பிந்தா என்னும் பேரிளம் பெண்ணுக்கும், அவளுடைய மகன் வயதிலான வழிதவறிய, கரடு முரடான ரெஸா என்னும் இளைஞனுக்கும் ஏற்படும் பற்றியெரியும் உறவு.
சொல்ல வந்த விஷயம் மிக நாசுக்காக கையாளவேண்டிய ஒன்று. கொஞ்சம் தவறினாலும் அது தாளம் தப்பிபோகக்கூடிய ஒன்று. ஆனாலும், அது சொல்லப்பட்ட விதத்தாலும், அதன் களத்தை விரித்துக்காட்டும் சம்பவம் மற்றும் பாத்திரக்கோர்வைகளாலும் மிக அருமையாக விரிகிறது. மொழிபெயர்ப்பு என்ற உணர்வின்றி ஏதோ தமிழிலே நேரடியாக வடித்தது போல் ஒரு நேர்த்தி.
இதில் பிந்தா, அவள் பேத்தி, ரெஸா என அனைவரின் வாழ்வும், நாட்டில் நிலவும் மத அடிப்படையிலான கலவரங்களால் ஏற்கனவே புரட்டிப் போடப்பட்ட பின்னணி மிக அருமையாக விரிகிறது. அதில் அவரவர், செயல்களும் , அதற்கான நியாயங்களும் மிக நேர்த்தியாக விரிகிறது. மத அடிப்படையிலான என்று கூறினாலும், உள்ளே ஒளிந்திருப்பது, இன ரீதியான வெறுப்பே.. சந்தர்ப்பவாத அரசியல், ஊழல் மலிந்த அரசமைப்பு, இனவாத வெறுப்பு என ஆப்பிரிக்க நாடுகளில் பலவற்றிலும் வழிந்தோடும் பிரச்சினைகளே இதிலும்.
காதல் வாழ்க்கை சீக்கிரமே கருகிப்போன பிந்தாவுக்கு, இளவயதில் கலவரத்தால் மாண்டு போன தன மகன் மீதான ஏக்கம் கரு நிழல் போல் படர்ந்து அழுத்திவந்தது. எப்போதும் தன்னிடம் இருந்து பிடுங்கப்பட்ட மகன் மீதான தாபம், அவளுடைய வறண்ட வாழ்வில், கனவில் குளிர்ச்சி தரும் கானலாக ஊறிவந்தது.
மறுபுறம், மிக சராசரியான, ஆனால் அன்பான தன் தந்தையையும் தன்னையும் கைவிட்டு விலகி வசதியான வாழ்வைத் தேடிப்போன தன் தாயின் மீதான கோபமும் ஏக்கமும் ரெஸாவின் மீது ஒரு சாபமாக அவனை அலைகழிக்கிறது. ஒரு தாயை தேடிய அவனுக்கு, அந்த தேடலே ஒரு தாபமாக உள்ளார்ந்து முகிழ்ந்து, மறைந்திருந்தது.
இருவரின் உணர்வுகளும் எடிபஸ் காம்ப்லெக்ஸ் ( Oedipus complex) என்ற ஒன்றாக வெளிப்பட, எதிர்பாராத, அசாதாரண சந்திப்பு ஒன்று தேவைப்பட்டது. அந்த நிகழ்வு என்ற ஒற்றைப் புள்ளியில் சந்தித்து, இருவரின் உணர்வுகளும், பெரு நெருப்பாக கனன்று எரிந்து தகித்தது.
அவனுடைய முதுகைத் தட்டிக்கொடுத்து அவன் மீது சாய்ந்து கொண்டாள். அந்த உணர்வு எப்படி இருக்கும் என்று பல சமயங்களில் நினைத்து வியந்து போவாள். எந்த முன்னேற்பாடுகளுமின்றி, அப்படியே கதவைத் திறந்து வெளியேறிச் செல்வது. பறவையொன்று கூண்டிலிருந்து தப்பிச் செல்வதைப் போல. அப்படிச் சென்றுவிட வேண்டுமென்று அவ்வப்போது உணர்ந்ததுண்டு. ஆனால் மனவலிமை போதாமையால் அந்த எண்ணத்தைக் கைவிட்டு விடுவாள். அவனுடைய முதுகில் தலை சரித்து அமர்ந்திருக்கும் அந்த வேளையிலும் அப்படித்தான் உணர்ந்தாள். அர்த்தமற்ற கற்பனையாயினும், அவனுடன் வெளியேறி, எந்த விதமான சமூக நிர்ப்பந்தங்களுமற்ற, குடும்பப் பொறுப்புகளற்ற வேறொரு மாய உலகத்துக்குச் சென்று, தடைகளேதுமின்றி அன்பு செய்து கொண்டே வாழ்ந்து விடலாம் என்று மனதில் தோன்றியது. ஆனால் அது சாத்தியமில்லை என்பது அவளுக்குத் தெரியும். ஏனென்றால், நீண்ட வாழ்நாட்காலம் அவன்முன்னே காத்திருக்கிறது. தவிர்க்க முடியாத இழப்புக்கு, அவளிடம் அவன் சலிப்படையப் போகும் அந்த நாளுக்கு அவள் தயாராகத்தான் வேண்டும். பெருமூச்சுடன் படுக்கையில் விழுந்தாள்.
இந்த சந்திப்பின் தொடர்ச்சியாக நடந்தேறும் நிகழ்வுகளும் அதில் உலவும் பாத்திரங்களும் நம் கண் முன்னே அழுத்தமாக அப்பிக்கொள்கின்றனர். ஆரம்பத்தில் பெயர்களை ஞாபகம் வைத்துக்கொள்வது சிரமமாக இருந்தாலும், அவர்களின் தனித்தன்மையான படைப்பு, அவர்களை ஞாபகம் வைத்துக்கொள்வதை மிக எளிதாக்குகிறது.மாலம் ஹரூணா, ஃபைஸா, முன்கைலா, ஸாதியா என்று அனைவரும் வாசித்து முடித்த பின்பும் நம் மனதை விட்டு விலகாமல் வாழ்கின்றனர்.
குறிப்பாக, ரெஸா தன் தாயை பிரிந்து போகும் துயரமான சம்பவமும், பிறிதொரு சமயத்தில் அவனைத் தேடி வரும் தாயை அவன் சந்திக்கும் கணங்களும் கவிதைகள்!
நான் உன் அம்மா அல்லவா, அதனால்..."
மரத்தின் பட்டைகளை விரல்களால் நோண்டிக் கொண்டிருந்தவன் சட்டென்று கொத்தாக ஒரு பட்டையை உரித்தெடுத்தான். அதனடியில் தங்கியிருந்த எறும்புக் கூட்டத்தின் மீது மங்கலான சூரிய வெளிச்சம் சட்டெனப் பாய்ந்ததால் பயந்து போன எறும்புகள் அங்குமிங்கும் திக்கற்று ஊர்ந்தன. அவனால் முற்றிலுமாக உரித்துப் பிய்த்தெறிந்து வீசிய மரப்பட்டைச் சிராய்கள் காலடியில் சிதறின.
"இப்போது நான் போக வேண்டும், எங்கிருந்து வந்தீர்களோ, அங்கேயே நீங்களும் போகலாம், புரிகிறதா?"
"தயவு செய்து இன்னும் கொஞ்ச நேரம் இருக்கிறாயா?”
அவள் குரலின் பிரயாசைக்குப் பின்னால் இருந்த வெறுமையே அவளை பாலைவனத்தைத்தாண்டி அவனைக் காணத் துரத்தியிருக்கிறதென உணர்ந்தான். ஆனால், அவளுடைய ஜில்பாபை நம்பிக்கையுடன் பற்றியிருந்த தனது பிஞ்சு விரல்களை இரக்கமின்றி எப்போது விடுவித்துச் சென்றாளோ அப்போதிலிருந்து அவனுள் பற்றி எரிந்துகொண்டிருக்கும் சினம் அவள் பாலிருந்த பச்சாதாபத்தை விழுங்கிச் செரித்திருந்தது.
எதையோ சொல்ல வாயெடுத்த அவள் உதடுகளைக் குரோதத்துடன் பார்த்தான். ஏதோ முக்கியமான ஒன்றைச் சொல்ல விரும்புகிறாளென்று கண்ணீர் நிரம்பிய அவள் கண்களிலிருந்து அறிந்து கொண்டான். ஆனால் அது என்னவென்று தெரிந்து கொள்வதில் அவனுக்கு அக்கறையில்லை இனிமேல் எப்போதும் இருக்கப்போவதில்லை..
"நீ வருவாயென்று தெரிந்திருந்தால் அந்த சனியன் பிடித்த மோதிரத்தை எடுத்துக் கொண்டு வந்திருப்பேன்."
அவன் வேகமாக நகர்ந்தபோது அவள் சத்தமாக அவன் பெயரைச் சொல்லி அழைக்கும் சப்தம் கேட்டது. அந்தக் குரல் அவன் இதயத்தைப் பின்னோக்கி இழுத்தது, அவன் வேகமாக ஓடினான். அவள் குரலில் இருந்த தவிப்பை, வெறுமையை, நீண்ட காலமாக அவன் மனதில் சுழன்று கொண்டிருக்கும் அந்த நறுமணம் அனைத்தையும் விட்டு எவ்வளவு தூரம் விலகிச் செல்ல முடியுமோ அவ்வளவு தூரம் விலகி வேகமாக ஓடிக்கொண்டிருந்தான்.
அப்படியே மகேந்திரனின் ஜானி என் கண் முன் நிழலாடினான்!
என்னதான் கூடா உறவின் விளைவாக விளைந்த உணர்வை வெளிப்படுத்தினாலும் பிந்தாவும், ரெஸாவும், தங்கள் ஈரத்தையும், மனிதத்தையும் தொலைக்காமல் ஊசலாடும் நிலையையும், வரிகள் வாசிப்பவரின், நெஞ்சில் வடித்துவிடுகின்றன.
அவள் இங்கிருந்து உயிரோடு திரும்பிச் சென்றால், என்றாவது ஒரு நாள் அவனது எலும்புகளைத் தோண்டி பிரிட்டிஷ் மியூஸியத்தில் வைக்கப் போகிறாள் அல்லது இப்போதே ஆடை போர்த்தியிருக்கும் தொல் படிமத்தின் களைத்த உயிரணு போல இருக்கும் அவன் அப்பாவைக் கூட வைக்ககூடும் என்று கற்பனை செய்தான்.
வஞ்சனை நிறைந்த ஒருத்தியின் மீது, நிபந்தனையற்ற ஒருதலை காதலைச் செலுத்தியதிலேயே, அவர் காலங்கள் கரைந்து இப்போது தொன்மத்தின் மீதங்களே உள்ளன.
லைலாவின் வேதனை தாங்கிய கண்களைப் பார்த்தான் ரெஸா. அது,தன்னைச் சந்திக்க வந்திருந்த அன்னையைக் கண்டு வெறுப்புடன் முகத்தைத் திருப்பிக் கொண்டபோது அவள் முகத்தில் படர்ந்திருந்த வேதனையை அவனுக்குக்கு நினைவூட்டியது.
அவளுடைய விரல்களிலிருந்து பார்வையை உயர்த்தி அவன் கண்களைப் பார்த்தாள்.
"ஏனென்றால், நான் ஏன் மனிதாபிமானத்தை விட்டுத்தருவதில்லை, ஏன் உன் விஷயத்தில் இன்னும் விட்டுக் கொடுக்கவே மாட்டேனென்கிறேன் என்பதையும் நீ புரிந்து கொள்ள வேண்டும்.”
இறுதியில், அதீதமான முடிவு என்றபோதும், இந்தப் பிணக்கொன்றை வாசம் கூட மனதில் ஏதோ ஒரு மெல்லிய உணர்வை அழுத்தமாக எழுப்பிவிட்டே செல்கிறது.
Comments
Post a Comment