பனிமூட்டத்திற்கு அப்பால்

 சிலவருடங்களுக்கு முன் ஒவ்வொரு வார இறுதியிலும் நண்பர்களோடு ஒரு குறிப்பிட்ட மலையேற்றக் குழுவினருடன் இணைந்து மேற்குத் தொடர்ச்சி மலையின் அழகை நேரடியாக காண வெவ்வேறு பகுதிகளுக்கு மலையேற்றம் செல்வதுண்டு.

அப்படி ஒரு முறை சென்ற பயணக் குழுவில் அனைத்து வயதிலும் உறுப்பினர்கள் இடம் பெற்றிருந்தனர். குறிப்பாக இளைஞர்கள் வழக்கம் போல் உற்சாகத்தோடு பெரும் அளவில் இணைந்திருந்தனர். பொதுவாக ஏறப்போகும் மலைப்பகுதியைப்பற்றி பெரும் உற்சாகம் குழு முழுவதுமே பரவலாக இருந்தது. பேசிப்பார்த்ததில் பெரும்பாலோனோர், இமயமலை பகுதிகளிலும், வ.கி. மாநிலங்களிலும் உள்ள மலைப் பகுதிகளில் மலையேற்றம் செய்வதையே தங்கள் லட்சியமாகக் கூறிக்கொள்வதை கேட்கமுடிந்தது.




வெற்றிகரமாக மலையேற்றத்தை முடித்துக்கொண்டு, மறு நாள் காலையில் உணவு நேரத்தில், இயல்பாகவே சிறு சிறு குழுவாக பிரிந்து நிதானமாக உரையாடிக்கொண்டிருந்தோம். அப்போது, ஒரு இளம் பெண், கையில் காபிக்கோப்பையுடன், எங்கள் உரையாடலில் வந்து இணைந்து கொண்டார். மெதுவாக இயற்கை, மலையோர தாவரங்கள் மற்றும் பிராணிகள், என்று சென்ற உரையாடல், வீட்டுப் பிராணிகளில் வந்து நின்றது. அப்போது வீட்டில் வளர்க்கும் நாய்களை பற்றிப் பேசும் போது, மிக இயல்பாக, அந்தப் பெண், “இப்பெல்லாம் இந்த வ.கி. ஆட்கள் நம்ம நகரத்தில ரொம்ப மலிஞ்சு போயிட்டாங்க. ஓட்டல், ஆஸ்பத்திரி, கடைகள், எல்லா இடத்திலேயும் அவிங்க வந்து நுழைஞ்சுட்டாங்க… இதில நாமதா நம்ம நாய்ங்கள ரொம்ப பத்திரமா பாத்துக்க வேண்டி இருக்கு. இவனுங்க வந்ததுக்கு அப்புறமா செல்லமா வளக்கற நம்ம நாய்ங்களுக்கு ஒரு பாதுகாப்பும் இல்ல. சிக்கினா பிடிச்சுட்டு போய் திண்ணறாங்க” என்று சொன்னார். அதைக்கேட்ட எனக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது. அவர் முகத்தை நம்ப முடியாமல் பார்த்தேன். என் அதிர்ச்சி முகத்தில் தெரிந்திருக்கும் என நினைக்கிறேன். அதனால், அவர் தொனி இன்னும் கடுமையானது. “எங்களுக்கு தெரிஞ்ச ஒரு வீட்டில அவங்க செல்ல நாய் காணாமப் போச்சு. அவங்க வாசல்ல இருந்த கேமராவில நடு ராத்திரில சில வ.கி. ஆட்கள் வந்து அவங்க நாய ஒரு சாக்குப் பைக்குள்ள தூக்கிப் போட்டுட்டு போனது தெரிஞ்சுது. இப்பல்லாம் நான் தெரிஞ்சவங்க எல்லார்கிட்டயும் முடிஞ்ச அளவுக்கு வ.கி. ஆட்கள தவிர்க்க சொல்லிட்டு இருக்கேன். நீங்களும் அதையே செய்யுங்க” என்று கடுமையாக சொன்னார். மேலும் வ.கி. சமூகத்தவரை பற்றி, சீனாவோடு சம்பந்தப்படுத்தி, மானே தேனே என்று பொதுவெளியில் குறிப்பிடமுடியாத வார்த்தைகள் வேறு. CCTV காணொளியை வைத்து எப்படி நாயைத் தூக்கிச்சென்றவர்கள் வ.கி. மாநிலத்தவர்தான் என்று முடிவு செய்ய முடியும் என்ற கேள்வி ஒருபுறம் இருக்க அவர் வரிகளில் கொப்பளித்த வ.கி. மக்களின் மீதான வன்மமும், இனப் பாகுபாடும், ஜீரணிக்க முடியாதது.
வ.கி. மாநிலங்களைப்பற்றி, அந்த நிலப்பகுதி முழுவதும் ஒரு மண்ணில் வந்த சொர்க்கம், மிக பின்தங்கியது, மனிதனின் காலடி அதிகம் படாதது என்று ஒரு கனவுலகமாகவே பெரும்பாலானோரின் மனதில் இருக்கிறது. மாறாக, அங்கிருக்கும் மக்களைப் பற்றி மட்டும் மோசமான பார்வை இருப்பதை மறுக்க முடியாது. வ.கி. மக்கள் பற்றிய பார்வை மிக தீவிரமாக எதோ ஒரு பக்க சார்பாகவும், தட்டையாகவும் இருப்பதாக எனக்குத் தோன்றும். அநேகர், அவர்களை, சீன சார்பு கொண்ட பிரிவினைவாதிகளாகவும், அதற்கு மாறாக இன்னும் சிலர், அவர்கள் அனைவரும் வஞ்சிப்பட்டவர்களாகவும், அரசின் அடக்குமுறை நித்தமும் எதிர்கொள்பவர்களாகவும் கருதி மிகத் தீவிரமாக அதற்கு எதிர்வினை ஆற்றுவதைப் பார்க்கலாம். உண்மை மட்டும் எங்கோ இதற்கு நடுவில் ஒளிந்துகொண்டிருக்கவேண்டும் என்ற சந்தேகம் எப்போதும் எனக்குண்டு.
அந்த வகையில் இந்தப் பிரச்சினையின் ஆழத்தை அறிமுகம் செய்து கொள்ள எனக்குக் கிடைத்த "Insider Outsider: Belonging and Unbelonging in North-East India" என்ற புத்தகம் மிக முக்கியமானது என்று கருதுகிறேன். சாம்ராட் சவுத்திரி மற்றும் ப்ரீத்தி கில் மிகச்சிறப்பாக தொகுத்து வழங்கியுள்ள இந்த கட்டுரைத் தொகுப்பு, எந்த சமரசமும் இன்றி பிரச்சினையின் எல்லா முகங்களையும் நமக்கு அறிமுகம் செய்கிறது. அதை வாசிக்கும் போது வ.கி. மாநில மக்கள் என்பவர்களின், மாநிலம் கடந்த பல்வேறு இன அடையாளங்களும், சரித்திரங்களும் , அவர்களின் பிரச்சினைகளும் மெதுவாக விளங்குகிறது. பொதுவாக வ.கி. மாநிலத்தவர் என்று தோற்றத்தை வைத்து நாடு முழுவதும் ( சம்பந்தப்பட்ட மாநிலங்கள் தவிர்த்து) ஒரே குழுவினராக அடையாளப்படுத்தப்பட்டாலும், அடிப்படையில், பல்வேறு பழங்குடி மொழி மற்றும் இனக்குழுக்களாகவும், மலைவாழ் குடியினர் மற்றும் அல்லாதோர் என்றும் அவர்களுக்குள்ளேயே வேறுபாடுகள் பல. மேலும் அவர்களின் அந்தக் குழு அடையாளம் என்பது மாநில எல்லைகளைக் கடந்த ஒன்று என்பதும் விளங்குகிறது.
அடிப்படையில் அங்கே உள்ள பல்வேறு இனக்குழுக்களுடன், ஆங்கிலேய அரசின் காலத்தில் அரசுப்பணி சார்ந்த செயல்பாடுகளுக்காக அங்கே வந்து சேர்ந்த வங்காள மற்றும் பல்வேறு சமூகங்களும் இணைந்து வாழ்ந்ததும், பிறகு தலைமுறைகளாக அவர்கள் அனைவரும் அதுவே தங்கள் மண் என்று வாழ்ந்த நிலையும் புரிகிறது. ஆங்கிலேய அரசின் தவறான ஆட்சி முறையால், பிரச்சினையின் விதை அங்கே தூவப்பட்டு, சுதந்திர இந்திய ஒன்றிய அரசின் தீவிர அடக்குறை நடவடிக்கைகளால் நீருற்றி வளர்க்கப்பட்ட நச்சு நாற்று இன்று பெரும் ஆலமரமாக வளர்ந்து, பலரையும் விழுங்கி இன்னும் தாகம் தீராமல் தொடர்ந்து ரத்த குளியல் நடத்துவது பெரும் சோகம். இன அடிப்படையிலான, உள்ளூர் பழங்குடியினர், வெளியூர் வந்தேறிகள் என்று ஆங்கிலேயர் வரைந்த கோடு, இன்று வேரூன்றி மலைவாழ் பழங்குடியினர் தவிர்த்து மற்ற இனக்குழுக்களை, குறிப்பாக வங்காளிகளை, மத பாகுபாடு இன்றி ஆண்டாண்டு காலமாக வேட்டையாடும் நிலை விளங்குகிறது.
சுதந்திரத்திற்கு பின் வெகு காலமாக இருந்து வந்த காங்கிரஸ் அரசிலும், அதன் பின்னர் வந்த கூட்டணி அரசுகளிலும் கடுமையான அடுக்குமுறை கூடுதலாக வந்ததைத் தவிர பெரிதும் மாற்றம் எதுவும் நடந்துவில்லை என்பதை இதிலுள்ள கட்டுரைகள் படம் பிடித்துக்காட்டுகின்றன. அத்தோடு, காங்கிரசுக்கு மாற்றாக இன்று பதவியில் இருக்கும் அரசு, அங்கிருக்கும் நிலையை சரிசெய்வதாக கூறி, அடக்குமுறையை இன்னும் பலமாக நிலைநிறுத்தியுள்ளதையும், தடுப்பு நடவடிக்கை என்ற பெயரில் மதரீதியிலான தனது சித்தாந்தத்தின் அடிப்படையில் திட்டங்களை ஆரம்பித்து வைத்து, ஏற்கனவே எரிந்து கொண்டிருக்கும் பிரச்சினைகளுக்கு எப்படி எண்ணெய் வார்த்துள்ளது என்பதையும், புரிந்துகொள்ள முடிகிறது.
இந்துக்களின் பாதுகாவலன் என்று கூறிக்கொண்டு பிரிவினை மற்றும் காஷ்மீரி பண்டிட்டுகளின் முதுகிலேறி ஆட்சிக்கட்டில் ஏறிய இந்த அரசு, வ.கி. ன் வங்காளிகள் மட்டுமே, வாழ்நாளில் இரண்டு முறை பிரிவினையின் சோகத்தைச் சந்தித்த சமூகம் என்பதை வசதியாக மறைத்துத்துவிட்டது. மேலும் தன் அரசியல் விளையாட்டுக்காக, இதை இஸ்லாமிய வங்க நாட்டவர் மற்றும் உள்நாட்டுமக்களுக்கு இடையிலான பிரச்சினை என்று மடைமாற்றிவிட்டது. அதனால் ஒட்டுமொத்த வங்காளி மற்றும் மற்ற பிராந்திய குழுக்களுக்கு மட்டுமின்றி, வேறு பல வ.கி. பழங்குடியினருக்கும் அது தீங்கிழைக்கிறது என்பதை இந்த தொகுப்பில் உள்ள கட்டுரைகள் நமக்கு உணர்த்துகின்றன.
இதன் விளைவாக, வருங்காலத்தில் என்னென்ன பாதிப்பை ஏற்படும் என்பதற்கு, மணிப்பூரின் தற்போதைய நிலை ஒரு முன்னோட்டம். 2019ல் வெளிவந்த இந்த தொகுப்பு சுட்டிக்காட்டிய நிலை இன்று நிஜமாகியுள்ளது, இந்தியாவைப்பற்றி கவலைப்படும் அனைவரும் கவனம்கொள்ள வேண்டிய விஷயமாகும். அந்த வகையில் வ.கி. மாநிலங்களைப்பற்றி புரிந்து கொள்ளவேண்டிய அனைவரும் வாசிக்க வேண்டிய தொகுப்பு எனக் கண்டிப்பாக கூறுவேன்.

Comments

  1. வணக்கம் பிரேம்! என் பெயரும் பிரேம் :) நல்ல தெளிவான பதிவு. புத்தகத்தைப் பற்றியும், அதற்குண்டான உங்களது பின்கதை பற்றியும். சமீபத்தில் மேகாலயாவில் பணி புரியும் தமிழக அரசு அதிகாரி ராம்குமார் பற்றி தெரிந்து கொண்டேன். அவரது பேச்சில் அங்கு நிலவும் நிலவரம் மிகவும் சிக்கலானது என்று பட்டது. அவர் கதைகளும் எழுதியுள்ளார். உங்கள் கவனத்திற்கு -

    https://tamil.wiki/wiki/%E0%AE%9A%E0%AE%BE.%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D

    நானும் ஒரு காலத்தில் மேற்கு தொடர்ச்சி மலைகளில் ஏறுவதை ஆர்வமாக செய்திருக்கின்றேன். உங்களுக்கு வாழ்த்துக்கள்! தொடர்ந்து எழுதுங்கள் :-)

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் , கனிவான வார்த்தைகளுக்கும் மிக்க நன்றி பிரேம்!... தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும் . ராம்குமாரின் படைப்புகளை இதுவரை வாசித்ததில்லை . இனி வாசித்துவிடுகிறேன் . அதை பரிந்துரைத்ததற்கு மிக்க நன்றி ! ... ஊக்கமளிக்கும் உங்கள் வார்த்தை உற்சாகமளிக்கிறது . தொடர்ந்து வாசித்து உங்கள் கருத்துக்களைப் பதிவிடுங்கள்.

      Delete

Post a Comment

Popular posts from this blog

பாலை மனம்

தமிழின் புதிய வெளிகள்

Deccan in Dazzling light