அந்தரங்க நதி

 என் தாத்தா, நான் பிறந்து இரண்டு வயதாகும் முன்பே தவறிவிட்டார். அவருடைய் நினைவு என்பது ஒரு கரும் போர்வை போர்த்தி குனிந்து முகம் பார்த்த ஒரு நெடிய உருவமாக எனக்கு ஒரு புகை மூட்டம் போல் எப்போதும் நினைவில் நிற்கிறது. அதே போல், என் அம்மாவின் பாட்டி, (என் கொள்ளுப்பாட்டி) சிவகாமிப்பாட்டி, எனக்கு “தாரங்கம், தாரங்கம்” என பாடும் சிவந்த உருவமாகவே நினைவு.

அவர்கள் வாழ்வையும், பாசத்தின் நெகிழ்வையும் நேரில் அனுபவிக்கக் கொடுத்துவைக்கவில்லை. எனினும் தொடர்ந்து ஓடும் நினைவின் இழைகளுக்குள் அவர்கள் எப்போதும் ஏதோ ஒரு கரையில் அமர்ந்தே தான் இருக்கின்றனர்.
இப்படி நம் ஒவ்வொருவருக்குள்ளும் நினைவுகளின் நீரோட்டத்தால் ஒரு நதி எப்போதும் ஓடிக்கொண்டே. இருக்கிறது. வாழ்வின் ஓட்டத்தோடு அந்த நதி இணைந்தே வருகிறது; வளர்கிறது. நம் வாழ்வு முடிந்த பின்பும் அதில் வழிந்தோடிய நீர், நம் சந்ததியினரின் நினைவுகளில் இடம்மாறி தொடர்ந்து ஒடிக்கொண்டுதான் இருக்கிறது. மொழி இல்லாத ஆதிகாலம் முதலாகவே அப்படிக் கடத்தப்படும் நினைவுகள் ஏதோ ஒரு வகையில் கதை வடிவாகவே கடத்தப்பட்டது இயல்பானது.



ஒரே நதிக்கரையின் வேறு வேறு இடத்தில் நிற்பவர்களைப் போல ஒரே சம்பவத்தின் நினைவு, சமகாலத்தில் அதைக் கடந்த ஒவ்வொருவருக்கும் கூட, வேறு வேறான உணர்வுகளைத் தருவதும் இயல்புதான். இதில் யார் சரி யார் தவறு? அவரவர் நதி, அவரவர் உரிமை, அவரவர் அந்தரங்க ரகசியம்.
மனித வரலாற்றின் முக்கிய கட்டங்களில் இப்படி எத்தனை எத்தனை நதிகள் குறுக்கும் நெடுக்கும் ஓடுகின்றன? அந்த வரலாறே இப்படி பல இழைகளின் வழியே ஆய்வின் துணை கொண்டு வரையறுத்த பொது உண்மைகளின் தொகுப்புதானே?....
அப்படி ஒரு கொந்தளிப்பான காலகட்டத்தை, தனது முன்னோரின் வரலாற்றின் வழியே பயணம் செய்ய நம்மை அழைத்துச் செல்கிறார், கேட் கிரான்வில். கேட், ஆஸ்திரேலியாவின் முதன்மையான எழுத்தாளர்களில் ஒருவர். அவர் தனது முப்பாட்டனின் வாழ்வை அறிந்துகொள்ள செய்த ஆய்வின் முடிவில், அத்தோடு புனைவைச் சேர்த்து, கற்பனையான ஒரு பாத்திரத்தின் வழியே
ஆஸ்திரேலிய கண்டத்தின் முக்கிய சமூக மாற்றத்தை படம் பிடித்துக் காட்டுகிறார்.




பதினெட்டாம் நூற்றாண்டின் காலகட்டத்தில் லண்டன் நகரத்தின் தேம்ஸ் நதியில் படகோட்டியாக, சமூகத்தின் கடைநிலையில் இருந்த வில்லியம் தார்ன்ஹில் என்னும் ஒரு எளிய மனிதன் தான் இந்தக் கதையின் முக்கிய கதாபாத்திரம். தான் செய்த குற்றத்திற்காக ஆஸ்திரேலியா அனுப்பப்படும் குற்றவாளிகளில் ஒருவனாக தன் குடும்பத்துடன் சிட்னி வந்தடையும் அவன், அங்கு குடியேறும் முயற்சியில் அங்கே ஏற்கனவே கால காலமாக இருக்கும் பூர்வகுடிகளை எதிர்கொள்கிறான். பிரிட்டிஷ் சமூக அமைப்பின் கடைநிலையில் லண்டனில் இருந்த அவனுக்கு, மூச்சு முட்டும் அந்த அழுத்தம் சிட்னிவாசியாகி நிலவுடமையாளனாக மாறியும் எந்தவகையிலும் குறையவில்லை. மாறாக முன்னாள் குற்றவாளி என்ற அடையாளமும் சேர்ந்து அழுத்தியது. அத்தோடு அதுவே பணம் சேர்ந்த பின் “ஊர்” திரும்ப வேண்டும் என்று அவனது ஆரம்பக் கனவையும் துடைத்தெரிந்தது.
புதிதாக வந்த வெள்ளையர்கள் அடிப்படையில் வேளாண் குடிகளாக தங்களை நிலைநிறுத்திக் கொள்ள முயல்கின்றனர். ஆனால் அவர்கள் உழவு செய்ய முயன்ற நிலங்களில் ஏற்கனவே இருந்த அபோர்ஜினல் பூர்வ குடிகள் வேட்டையாடிகளாக இருந்தனர். அடிப்படையில் இருவரின் வாழ்வியலும் முரண்பட்டதாக இருந்தது.அத்தோடு ஆங்கிலேய சமூகத்தின் கடைநிலை குடிகளாக அடையாளப்படுத்தப்பட்ட ஆஸ்திரேலிய நிலவுடைமையாளர்கள், பூர்வகுடிகளை தங்களிலும் கீழானவர்களாக காணத்துவங்கினர். அவர்கள் வாழ்வியலையும் முரண்பட்ட ஒன்றாகவே பார்த்தனர். அதனால் பூர்வகுடிகள் மீது வெறுப்பை நெருப்பென கொண்டனர்.
அப்படி இருந்த முரண்பாட்டினால் அவர்களுக்கிடையே ஏற்பட்ட பூசல் ஒரு கட்டத்தில் முற்றி, பூர்வகுடிகளோடு போராக மாறி அந்தப்பகுதி அபோர்ஜினல்களை அடியோடு அழிக்கிறது. இறுதித் தீர்வாக எஞ்சியவர்களை ரிசர்வேஷன் பகுதிகளில் அடைந்துபோகவும் செய்தது.
அதன் பின்னாக தார்ன்ஹில், படிப் படியாக செல்வம்சேர்த்து பெரும்செல்வந்தனாக மாறினாலும், அப்போர்ஜினல்களின் மீது நடந்த அடக்குமுறையினால், உள்ளாக குற்றவுணர்ச்சியை வளர்த்துக்கொண்டு ஏதோ ஒரு வகையில் அதற்கு பிராயச்சித்தம் தேடுகிறான். வாழ்வின் இறுதியில் அது அவனுக்கு கிட்டியதா?
இதில் கேட் முன்வைக்கும் பார்வை இருவேறானது. ஒன்று, வாழ்வியல் முரண் கொண்ட ஆங்கிலேய மற்றும் பூர்வகுடி சமூகத்திற்கு நடுவே ஏற்படும் போராட்டமும், அதில் பூர்வகுடிகள் மீது ஆங்கிலேய சமூகம் நடத்திய அடக்குமுறையும். இது வெளிப்படையானது. இது போன்ற நிகழ்வுகள் மனித வரலாறு முழுவதும் விரவி உள்ளன. நமது மத மற்றும் சித்தாந்த நம்பிக்கைகளை உறுத்தும் என்பதற்காக சில சமயங்களில், அப்படி ஏதும் நடக்கவில்லை என்று பூசி மெழுகினாலும், வரலாற்று, மனிதவியல் மற்றும் விஞ்ஞான ரீதியான தரவுகள் அதை பல்லிளிக்கவைத்து விடுகின்றன.
அடுத்து அவர் முன்வைக்கும் பார்வை சற்று ஆழமானது. மண்ணின் மைந்தர்களை, வந்தேரிகளான ஆங்கிலேயர் வென்ற பின்பும் அவர்களுக்கு வரும் வெறுமை. அந்த வெறுமைக்குக் காரணம், என்னதான் வாழ்க்கையில் வென்றிருந்தாலும், செல்வம் வந்தாலும், மண்ணோடு இயல்பாக பூர்வகுடிகளுக்கு இருக்கும் அடங்காத நேசமும், தொடர்பும் தங்களுக்கு இல்லை என்ற புரிதல். இந்த புதினத்தின் முக்கிய இடம் தார்ன்ஹில்லும், எல்லோரும் அழிந்த பின்னும் எஞ்சித் திரியும் ஒரு பூர்வகுடி மனிதனுடனான் உரையாடல். அதில்தான் அந்த மனிதனுக்கும் அந்த மண்ணுக்குமான பந்தத்தின் முன் தனது வெற்றி ஏதும் இல்லை என தார்ன்ஹில்லுக்கு புரியும் தருணம்.




இந்த இரண்டாவது பார்வை தான் கேட்டுக்கு இந்த புத்தகத்தை தொட்டு ஆரம்பத்தில் எழும்பிய எதிர்ப்புக்கும் இலக்கிய மற்றும் ஆஸ்திரேலிய வரலாற்றாளர்கள் எழுப்பிய சச்சரவுக்கும் காரணம்.
அதைக் கடந்து அவர் புத்தகம் நிற்பதற்கும் அதே பார்வைதான் காரணம்.


Comments

Popular posts from this blog

பாலை மனம்

தமிழின் புதிய வெளிகள்

Deccan in Dazzling light