வரலாற்றின் வரையறைகள்

 சிறுவயதில், பள்ளிக்காலத்தில், பாடம் நடத்திய வரலாற்று ஆசிரியர்கள் தொடர்ந்து குச்சியால் அடித்து உருவேற்றிய விஷயங்களில் ஒன்று அரசர்களின் ஆட்சிப் பரப்பை வரைபடங்களில் குறிப்பது. குறிப்பாக மௌரிய மற்றும் குப்த அரச வம்சம் ஆண்ட நிலப்பரப்பை இந்திய வரைபடத்தில் வரைவது ஒரு தேற்றமாகவே நிலைபெற்றது. ஒவ்வொரு தேர்விலும், தென் இந்தியா விடுத்து சற்றேறக்குறைய மொத்த இந்தியப் பரப்பையும் சேர்த்துக் குறித்தால் மொத்த மதிப்பெண் உறுதி.

அதேபோல் தான் அசோகர், கணிஷ்கர் போன்றோரின் அரசாட்சியின் தனிச்சிறப்பு. சாலை எங்கும் மரம் நடப்பட்டதையும், சட்டம் ஒழுங்கு பராமரிக்கப்பட்டதையும் சேர்த்து இன்னும் சில வரிகளை இணைத்தால் போதும் அதற்கான மதிப்பெண்ணும் ஓரளவு தேற்றிவிடலாம்.
வெகு காலம் கழித்து அந்த வம்சங்களின் எந்த ஒரு அரசின் காலத்திலும் மொத்த மானாவாரியாக ஆட்சி செய்த நிலப்பரப்பு அப்படி இருந்ததே இல்லை என்பதும், பள்ளிகளில் சொல்லி கொடுத்தது அந்த வம்சங்களின் அனைத்து அரசர்கள் ஆட்சியில் மாறி மாறி இருந்த நிலப்பரப்பின் தோராயமான குறிப்பு மட்டுமே என்று அறிந்தபோது அந்தக் காதைத்திருகிய அந்த வரலாற்று பாட ஆசிரியர் மீது பரிதாபம் தான் வந்தது.



ஸ்தல புராணங்களே நம்பகமான வரலாறு என்று பரவலாக நம்பப்பட்டு, அவை நிஜங்களாக அரிதாரம் பூசி சமூக வெளிகளில் உலவ விடப்படும் இக்காலத்தில், வரலாறு எப்படி உருவாகிறது, அதை வரையறுக்க அறிவியலின் பங்கு என்ன என்று புரிந்துகொள்வது அவசியமாகிறது.
சிலகாலம் முன்பு, மனித இன தோற்றம்பற்றிய வரலாற்றுத் தரவுகளும், கருதுகோள்களும் எப்படி உருவாகி வந்தன, அதில் அறிவியலின் பங்கு என்ன, எப்படி மனித இனத்தின் ஊற்றுக்கண் ஆப்பிரிக்க கண்டம் என்று எவ்வாறு நிறுவப்பட்டது என்பது பற்றிய நான் வாசித்த, மிக முக்கியமான, மார்ட்டின் மெரேடித் எழுதிய "Born in Africa" நூல் பற்றிப் பதிவிட்டிருந்தேன். அதில் என் உணர்வுகளை ஆங்கிலத்தில் வடித்திருந்தேன். பொதுவாக மதவாதிகள் மற்றும் , அறிவியலை புறந்தள்ளுபவர்களின் வழக்கமான கூற்று “ எங்கள் மறைநூல்களின் வழியான நம்பிக்கை உறுதியான ஒரு பதிலை கூறுகின்றதே. மாறாக, நீங்கள் தூக்கிப்பிடிக்கும் அறிவியல் அதன் நிலைப்பாட்டை அடிக்கடி மாற்றிக்கொள்கிறதே… அப்படிப்பட்ட அறிவியலின் படி வகுத்த வரலாறு எப்படி நம்பத்தன்மை கொண்டதாக இருக்கமுடியும்?”. இந்த நூல் அந்த வாதத்தை அக்கக்காய் உடைத்தெரிந்தது.
அதன் தொடர்ச்சியாக சமீபத்தில் நான் வாசித்த “ India Discovered “ அல்லது “இந்தியா கண்டுபிடிக்கப்பட்டது” என்ற, ஜான் கீ ( John Keay ) என்ற மானிடவியல் ஆய்வாளர் எழுதிய நூலைக் குறிப்பிடமுடியும். இந்த நூல், நான் மேலே குறிப்பிட்ட புரிதலோடு, இந்திய வரலாறு கடந்த 300 ஆண்டுகளில் எப்படி உருவாகி, மாற்றத்துக்கு உள்ளாகி பின் அறிவியலின் விரிவான துணை கொண்டு நிலைபெற்றது என்று, ஒரு மர்ம நாவலின் சுவாரஸ்யத்துடன் விறுவிறுப்பாக சொல்லிச்செல்கிறது. ஆங்கிலத்தில் அமைந்த இந்தப் புத்தகம் வரலாற்று நிகழ்வுகளைப்பற்றி நேரடியாக இல்லாமல், இந்திய வரலாறு என்ற ஒன்றின் தோற்றத்தையும், அதன் பரிமாண வளர்ச்சியையும் பற்றி குறிப்பிடுகிறது. ஆகவே இதைப்பற்றி ஆங்கிலத்தில் எழுதுவதை விட தமிழில் ஒரு பரவலான வாசிப்புத் தளத்துக்கு அறிமுகம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடன் எழுத முடிவு செய்தேன்.




ஆரம்பத்தில் ஒரியன்டலிஸ்ட்டுகள் ( Orientalists ) என்று குறிப்பிட்ட கருதுகோள், இந்திய வரலாற்றையும், கலாச்சாரத்தையும் எப்படி ஒரு பொருட்டாகவே கருதவில்லை என்ற நிலையில் ஆரம்பித்து, அது எப்படி தனிப்பட்ட ஆய்வாளர்களால் மாற்றம் பெற்றது என்று குறிப்பிடுகிறது. 19ம் நூற்றாண்டின் மத்தியில் மெக்காலே மற்றும் அவரின் பார்வையோடு ஒத்தவர்களின் கடும்போக்கு எப்படி இந்தக் முயற்சிகளில் முட்டுக்கட்டை போட்டது என்பதையும், அதை தாண்டி, ஜோன்ஸ் வில்லியம்ஸ் போன்றோரின் விடாத முயற்சி எப்படி இந்திய கலாச்சார வரலாற்றின் துவக்கப் புள்ளியாக அமைந்தது என்ற புரிதலையும் இந்நூல் முன்வைக்கிறது. அதைத்தொடர்ந்து, இந்திய சரித்திர ஆராய்ச்சிக்கு பெரும் உழைப்பைக்கொடுத்து உயிரையே விட்ட ஜேம்ஸ் பிரின்செப்பின் முயற்சி அதை நிலைநிறுத்தியது விரிவாக குறிப்பிடுகிறது. அவர் காலத்தில் அவர் எடுத்த முயற்சியால் கிரந்த மற்றும் கரோஷ்டி எழுத்துருக்கள் இருந்தது உறுதிப்படுத்தப்பட்டது. அசோகர் என்ற பேரரசன் இருந்ததும், புத்தமதம் ஒருகாலத்தில் இந்திய நிலப்பரப்பில் பெரும் மதமாக நிலவியதும் விளங்கியது. அதுவரை அசோகரின் தூண்கள் அலெக்ஸாண்டரின் வெற்றி சின்னங்கள் மட்டுமே என்றும் இந்தியப் பரப்பு முழுவதும் இந்து மதம் மட்டுமே நிலைபெற்று இருந்தது என்றும் பரவலாக நம்பப்பட்டது என்பது தெரியும் போது ஆச்சர்யம் பெருகுகிறது.













அதன்பின் ஜெனரல் அலெக்சாண்டர் கன்னிங்கம் எடுத்த அளப்பரிய பெருமுயற்சி நாடு முழுவதும் பல பெரும் அகழ்வாராய்ச்சிகளை முன்னெடுத்து, இந்திய வரலாற்றுப் புரிதலில் பெரும் மறுமலர்ச்சியை உண்டு பண்ணியது. இந்திய அகழ்வாராய்ச்சி கழகம் என்ற ஒன்று நிறுவப்பட்டதும் அதன் தலைவராக பல வருடங்கள் இருந்து அதை அவர் திறம்பட வழிநடத்தி, பல புதிய புரிதல்களை துலக்கி, வரலாற்று அறிவில் பெரும் பாய்ச்சலையும் நிகழ்த்தியது பெரும் ஆச்சர்யம் தருகிறது. அவருடைய ஒவ்வொரு கண்டுபிடிப்பும் மிக சுவாரஸ்யமான நிகழ்வாக இந்தப் புத்தகம் விரித்திருக்கும் நடை மிக அருமை. அவர்காலத்தில் தான் சிந்து சமவெளி நாகரிகத்தின் கண்டுபிடிப்பும் நிகழ்ந்தது. அதற்கு அவர் எடுத்த முயற்சிகளும் அதன் அளவும் பிரமிக்க வைக்கிறது. இந்தக்காலகட்டத்தில் அகழ்வாராய்ச்சி, மொழியியல் மற்றும் வேதியியல் போன்ற அறிவியல் கூறுகள் இந்தத் துலக்கத்தில் எப்படிப் பெரும் பங்காற்றின என்பது அருமையாக விளக்கப்படுகிறது.
இறுதியில் வரலாற்று அறிவு என்பது ஒரு அறிவியல் பயணத்தின் விளைவு என்பதும், அந்த அறிவியல் எந்த ஒரு குறிப்பிட்ட மூலத்தை மட்டும் சாராமல், அகழ்வு, மொழியியல், வேதியியல், என்று விரிந்து இன்றைய மரபியல் என்று பரந்த ஆதாரங்களின் மூலம் நிறுவப்படும் உண்மை என்று புரியும் போது, மதவாத அடிப்படைவாதிகளின் கூற்று அர்த்தமற்றதாக தெரிகிறது.

Comments

Popular posts from this blog

பாலை மனம்

அன்பே மருந்து

Deccan in Dazzling light