வாசிப்பது இன்பம்.
நூல்: மொழிவது சுகம் - தொகுதி 1 ஆசிரியர்: கிருஷ்ணா நாகரத்தினம் பதிப்பகம்: நோஷன் பிரஸ் சிந்தனைகளும் , சரித்திரங்களும் , பாடல்களாகவும் கவிதைகளாகவும் , புதினங்களாகவும் காலகாலமாக கடத்தப்பட்டு வந்த தமிழ்ச் சமூகத்தில் கட்டுரைகள் மிகத் தாமதமாகவே வெளிவந்தன. அப்படி வந்த கட்டுரை என்ற வடிவத்தின் முக்கியத்துவம் , மற்றும் இடம் என்ன என்ற கேள்வி எனக்குள் சிலநேரம் தொனிப்பது உண்டு. முறையான தமிழ் இலக்கிய கல்வி இல்லாத நான் , அந்த கேள்விக்கு என் வாழ்வியல் நிகழ்வுகளில் இருந்தே புரிதலை வடித்து எடுத்துக்கொண்டேன். சிறுவயதில் என் தகப்பன் என்னைத் தன்னருகில் படுக்க வைத்து தூங்க வைக்க காதோடு மெல்லிய குரலில் பாடிய “ ஓராயிரம் பார்வையிலே” , “ என்னடி ராக்கம்மா” மற்றும் “மேரே சப்புனோன்க்கி” ஆகியவை என் நினைவோடும் , உணர்வோடும் கலந்து , எனக்கே எனக்கான ஒன்றாக இன்றும் காதுகளில் ஒலிக்கின்றன. இன்றும் அமைதியில்லாமல் தூக்கம் வராத என் இரவுகளில் , என் காதுகளில் ஐபாட் உபயத்தில் என் காதோடு கிசுகிசுத்து , தூங்க வைக்கின்றன. அதைப்போன்றவை தான் வண்ணதாசன் , கலாப்ரியா ஆகியோரின் கவிதைகள் தரும் உணர்வும்....