காணப்படாத மனிதர்கள்
ஈழ மக்களின் ஏதிலி வாழ்வு என்பது அவர்களாக விரும்பி அணைத்துக்கொண்ட வாழ்வு அல்ல. அப்படிப்பட்ட வாழ்வைத் தேடிக்கொண்ட ஒவ்வொருவரும் வேறுபட்ட மனவோட்டங்களும், பின்னணியும் கொண்டவர்கள். அப்படி முகமற்று, முகவரியற்று உலவும் அந்த மனிதர்கள் வெகு சராசரியானவர்கள்.
போர் வாழ்வின் தியாகங்களை, சாகசங்களை, வெற்றிகளை, அவலங்களை அவர்கள் மேல், ஏற்றாமல், அவற்றின் எதிரொலிகளாய், சாதாரண மனிதர்களாக அவர்களின் சாமானிய சறுக்கல்களுடனும், சமரசங்களுடனும் நடமாடவிடுவது அரிது. பொதுவாகவே ,ஈழ மக்களை, தியாகம், ஒடுக்குமுறை, வீரம் என்று பல சட்டகங்களில் அடைத்தே பல வகை எழுத்துக்களால் தமிழகத்தின் சகோதர உறவுகளுக்கு இங்கு கட்டமைக்கப்பட்டுள்ளது. அதற்கு பலவேறு அரசியல், இருப்பு சார்ந்த காரணங்கள் இருந்தாலும், அதைத்தாண்டி அவர்களை, அவர்களின் வாழ்வை, புலம்பெயர்ந்தவர்களாக, ஏதிலிகளாக, அன்றாடம் சந்திக்கும் சாமானிய மனிதர்களாக படம்பிடிக்கும் எழுத்துக்களும் எழுத்தாளர்களும் மிக மிகக் குறைவு. அப்படி அந்த வகையில் தனியாக தெரியும் எழுத்துக்களில் சயந்தனின் எழுத்துக்கள் குறிப்பிடத்தக்கவை.
இந்த சிறுகதைதொகுப்பில், அப்படிப் பலமனிதர்கள் அவர்களின் அன்றாட வாழ்வின் தருணங்களை எதிர்கொள்பவர்களாக, ஒப்பனைகளை கலைத்து நிஜமான முகங்களுடன் எதிரே வலம் வருகின்றனர். அவர்களின் இயல்பான மெல்லிய நகைச்சுவையுடன் வாழ்வின் கணங்களை எதிர்கொள்கின்றனர்.
அவர்களுக்குள் இருக்கும் நம்பிக்கைக்கும், நடைமுறை வாழ்க்கைக்கும் உள்ள முரண்பாடை ஒருவரை ஒருவர் பகடி செய்து சமன் செய்து கொள்ளப்பார்க்கின்றனர்.
“இப்பொழுதுதான் மெஸ்ஸில் வேலைகளை முடித்து வந்தான். சோற்றுப்பானையை கிணற்றடியில் உருட்டி உருட்டித் தேய்த்துக் கழுவியபோது கன்னத்திலும் மூக்கிலும் கைகளால் சொறிந்ததால் உண்டான கறுப்புக் கோடுகள் இவனை வேவுப்புலி ஆக்கியிருந்தன.”
‘சிவராசண்ணைக்கு இருபத்தாறு வயதுகள் இருக்கலாம். குளித்து முடித்து நெற்றியில் திருநீற்றினை அள்ளிப் பூசினார் என்றால் அவரை ஒரு இயக்கக்காரர் என அடையாளம் காண்பது வெகு சிரமம். தென்னவன் வாக்குவாதப்படுவார். “என்ன கருமத்துக்கு இந்தச் சாம்பலைப் பூசுறீங்கள், இல்லாத கடவுளுக்கு இதெல்லாம் என்ன கோதாரிக்கு எண்டு எனக்கு விளங்கேல்லை..” ’
அந்த நகைப்புக்கும் எள்ளலுக்கும் பின் ஒவ்வொருவரும் அனுபவித்த அதீத கொடுமைகள் மறைந்திருக்கின்றன. அக்கொடுமைகளின் தீவிரம் அந்த எள்ளலைத் தாண்டி, ஒரு வறண்ட சிரிப்பாக வெளிப்படுகிறது. அப்படி சிரித்துக் கடந்து போக முடியாத நேரத்தில், உள்ளூர வடியும் கண்ணீராக அப்படியே உறைந்தும் போகிறது.
“வழக்குகளில் எனக்கு நம்பிக்கையிருக்கவில்லை. எந்த வழக்கின் முடிவும் அவர்களுக்குத் தண்டனையைப் பெற்றுத்தரப்போவதில்லை. எந்த வழக்கின் முடிவும் எனது அண்ணனை மீளத்தரவும் போவதில்லை. என்ன கேட்டீர்கள், அண்ணனை ஏன் சுட்டார்கள் என்றா..? ஏன் சுட்டார்கள் என்று எங்களுக்கு இதுவரை புரியவேயில்லை. அண்ணனும் அறிந்திருக்க மாட்டான். சுட்டவர்களிடம் கூட காரணமேதுமிருந்திருக்காது அவன் ஒரு தமிழன் என்பதைத் தவிர.. ”
‘ “ம்.. சொல்லோணுமெண்டு நினைச்சனான். நாமகளும் இங்கைதான் அதே முகாமில இருக்கிறாள் பிள்ளையோடை, புருசனைப் பிடிச்சுக்கொண்டு போயிருக்கிறாங்கள். அவன் கொம்பனி ஆள் இல்லை. நிர்வாகப்பிரிவில சம்பளத்துக்கு வேலைதான் செய்தவன். பாவம் அவள், மாற்றுத்துணிகூட இல்லாமல் கஸ்டப்படுறாள்… அவளின்ர அப்பா.. ” .. .. .. வெளிநாட்டுத்தொலைபேசிகள் பாதியில் அறுந்தால் தொலைபேசி அட்டைகளில் காசு முடிந்துவிட்டதென அங்கே நம்புவார்கள். அவனும் நம்பியிருப்பான். ’
சாதிப்பாகுபாடு என்பது தமிழ் சமூகத்தை தொடர்ந்து வரும் பிணி. போர்வாழ்க்கை அதை துடைக்க முயன்றாலும், போரின் நெருக்கடியிலும், போர் கடந்த ஏதிலி வாழ்விலும், அது அவ்வப்போது தலைகாட்டத் தவறுவதில்லை. மனிதர்களுக்கிடையே ஆன சமூக ஏற்ற தாழ்வுகளை அந்த மனிதனே விட்டொழிக்க விரும்புவதில்லை. சாதிய பாகுபாட்டின் முற்கள் ரணங்களாய் தங்களையும், தங்களைச் சார்ந்தவர்களையும் குத்திக்கிழிக்கும் போதும், அகதி மற்றும் ஏதிலி வாழ்வில் கடல் கடந்தும் அதை முதுகில் சுமந்து செல்கின்றனர். அதனால் பாதிக்கப்பட்டாலும், மற்றவர் மீது அதை வீசத்தயங்குவதில்லை. வெளிநாட்டில் நிறவேறியின் கோர முகம் அதன் கொடிய பற்களால் குத்திக்கிழிக்கும் போதும், அதையே மற்றொருவர் மீது வீசவும் செய்து மருந்தாக பயன்படுத்த முயல்கின்றனர்..
‘ “ஓ.. பிரச்சனைதான். ஆர் என்னாக்கள் எண்டு ஒண்டும் தெரியாத கண்ட கண்ட நாயெல்லாம் வந்து கோயில் கிணத்தில குளிச்சிட முடியுமோ.. எல்லாத்துக்கும் ஒரு முறையிருக்கு. இது சாமிக்கு அபிசேகத் தண்ணியெடுக்கிற கிணறு.” என்ற கோயிற்காரர் “கொண்டா இங்கை” என்று வாளியை இவனிடமிருந்து பறித்து கயிற்றைக் கப்பியிலிருந்து கழற்றிய நேரம் இவனுக்குக் கோபம் கிளம்பியது. சோப்புப் போட்டவரைப்பார்த்து குரலை உயர்த்தி “அண்ணை வாங்கோ, எனக்கு இயக்கக்காரரைத் தெரியும். போய்ச் சொல்லுவம். வெளிக்கிடுங்கோ” என்றான். இப்போது கோயிற்காரர் வாளியைக் கீழே பொத்தென்று வைத்துவிட்டு இவனை முறைத்துப் பார்த்தார். “அண்ணை நீங்கள் உங்கடை சித்தப்பாட்டைச் சொல்லுங்கோ. அவர் இயக்கத்தில பெரிய ஆளெல்லே..” என்று தீபன் சொன்னபோது அவர் கழற்றிய கயிறையும் வாளிக்குள் செருகி வைத்தார். “கலிகாலமாப் போச்சு. எல்லா ஆச்சாரமும் போச்சு.. ஆரார் எங்கையெண்டு ஒரு முறையில்லாமல் போச்சு” என்று புறுபுறுத்தவாறே கோயிற்காரர் பின்வாங்கினார். இவர்களைத் திரும்பியும் பார்க்கவில்லை. ஆனால் கோபமாக திட்டியபடி போவது தெரிந்தது. ’
‘ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கப்பட்டிருந்த பேணிகளின் மீது பந்தை கோபத்தோடு வீச்சுடன் எறிந்த போது மீண்டும் ஒருதடவை “அகதிச்சாதியள்” என்று அவன் சொல்லிக்கொண்டான். அந்த வார்த்தை அவனைக் காயப்படுத்தியிருந்தது. இவனுக்குத் தெரிய அப்படியொரு சாதி இருந்திருக்கவில்லை. ஆனாலும் நாய்ச்சாதியென்ற ஒன்றை பத்மாக்காவும் மில்கார பாலுவும் அடிக்கடி சொல்ல இவன் கேட்டிருந்தான்.’
‘அவசர அவசரமாக பஸ்சில் ஏறியவர் காலியாய் கிடந்த இருக்கையொன்றில் அமர்ந்து தோளில் மாட்டியிருந்த பையை மடியில் வைத்துக் கொண்டார். அருகாக வயதான வெள்ளை மூதாட்டியொருத்தி இருந்தாள். றமணன் அண்ணா அவளிடத்தில் மெதுவாகத் தலையை அசைத்து “குத்தெர்ண் மோர்ஹன்” என்றார். அவள் கண்களை இடுக்கி ஒரு அருவருக்கத்தக்க பிராணியைப் பார்ப்பது போல றமணன் அண்ணாவைப் பார்த்தாள். முகத்தின் தசைகள் கோணின. சட்டென்று எழுந்தாள். “ஸைச அவுஸ்லான்டர்” என்றவாறு இருக்கையை விட்டிறங்கி தள்ளி நின்று கொண்டாள். ஸைச அவுஸ்லான்டர் என்றால் மிகக் கேவலமான வெளிநாட்டுக்காரர்கள் என புரிகிற அளவிற்கு றமணன் அண்ணாவிற்கு ஜெர்மன் தெரிந்திருந்தது. பஸ்சில் அத்தனை பேருக்கும் மத்தியில் நிர்வாணமாக உடல் ஒடுங்கி கைகள் குறண்டியிருந்ததாய் அவர் உணர்ந்தார்.’
புலம்பெர்ந்து வாழ்வது என்பதும், அகதியாய், நாடற்ற எதிரியாய் வாழ்வது என்ன என்றும் அறியாத சாமானிய வாழ்க்கை வாழும் தமிழகத்தின் வெகு சனத்திற்கு, இந்தத் தொகுப்பு ஒரு சாளரமாக அதன் பல பரிமாணங்களை விளக்கிக்காட்டுகிறது. வெகு சனநடை என்று ஒரே வகையான, அல்லது அடிக்கடி பழகிப்போன நடைக்கும் மொழிக்கும் ஒன்றிய பெரும்பாலான தமிழக வாசகர்களுக்கு இந்த இந்த ஈழ மொழி நடை சற்று மலைப்பைத் தந்தாலும், அது ஏந்தி வரும் உணர்வுகள் ஒன்றும் அந்நியமாய் இருக்கப்போவதில்லை.
இந்தத்தொகுப்பில் அனைத்துச் சிறுகதைகளும் மிகச்சிறப்பாக இருந்தாலும் அவற்றில், 90 சுவிஸ் பிராங்குகள், சாம்பலில் சிறகு பொசுங்கிய சிறு பறவை மற்றும் இந்தியாக்காரன் ஆகியவை தனித்து தெரிகின்றன.
Comments
Post a Comment