இலக்கியம் - நெல்லை மணம்

நீங்கள் சினிமாவை விரும்புபவரா? உங்களுக்கு இது பிடிக்கும். உங்கள் பால்யகால நினைவுகளை மறக்காமல் திரும்ப அசை போடுவதில் சந்தோசப்படுபவரா? கண்டிப்பாக உங்களுக்கும் பிடிக்கும். திரையிசையை விரும்பி ரசிப்பவரா? இளையராஜாவை தேடி ரசிப்பவரா? உறுதியாகப்பிடிக்கும். திருநெல்வேலி அறிந்தவரா? ரசித்தவரா? பிடிக்கும்... பிடிக்கும்... இதையெல்லாம் தாண்டி, திருநெல்வேலிக்கே இதுவரை சென்றிராதவரா? உங்களுக்கு இதற்கப்புறம் அந்த ஊரும், மக்களும், உணவும், மொழியும் மற்ற எல்லாமும் மிக தீவிரமாக பிடிக்க ஆரம்பித்து விடும். 



பொதுவாக திருநெல்வேலி என்றாலே அது எதோ ஒரு வகையில் நம்மைவிட நம் நாவுக்கு மகிழ்வளிக்கும். நெல்லை என்று சொல்லும்போதே அல்வாவில் ஆரம்பித்து சொதியில் பிரண்டு இன்ன பிற சுவைகள் நம் சுவை மொட்டுக்களில் ஊறத்துவங்குவது  இல்லை? இதைப்படிக்க ஆரம்பிக்கும் போது, திருநெல்வேலியில் உள்ள உணவுகளையும், அதை பரிமாறும் சைவ உணவகங்களையும், முதலில் அறிமுகப்படுத்தி அந்த உணர்வை கிளறி, நம் இதயத்திற்கு வயிற்றின் வழியே எழுத்தால் ஒரு பாலம் அமைக்கத் துவங்குகிறார், சுகா. 

சுகா, பலருக்கும் தெரிந்த பேச்சாளரான நெல்லை கண்ணனின் மைந்தன். தந்தையின் வழியில் செல்லாமல், தனக்கென்று ஒரு பாதையை திரைத்துறையில் அமைத்துக்கொண்டவர். கதாசிரியராக, திரை இயக்குனராக, கதை சொல்லியாக பல தளத்தில் இயங்குபவர். 'சொல்வனம்' தளத்தின் வாசகர்களுக்கு, தன் நெல்லை மணம் வீசும் கட்டுரைகளால், ஏற்கனவே பரிச்சயமானவர். தொடர்ந்து, தாயார் சந்நிதி, உபசாரம், வேணுவனவாசம் என்று பல புத்தகங்கள் எழுதியிருந்தாலும், எனக்கு, இந்த புத்தகம், மிகவும் நெருக்கமானது. 
நெல்லை சென்றதே இல்லையென்றாலும், சுகா கைபிடித்து அழைத்துச்செல்லும் அவர் சிறு வயது ஞாபகங்கள், அதன் பழஞ்சுவையைத் தேடும் மனதுக்கு, பிடித்த சக பயணியோடு ஒரு சந்தோஷமான பயணம் போனது போல் இருக்கும்... அவரின் கதைசொல்லும் நடையிலும், எழுத்திலும் இயல்பாகவே துள்ளும் எள்ளலும் நகைச்சுவையும், நெல்லை மணத்தை சற்று தூக்கலாகவே கூட்டித்தருகிறது. அவரும், குஞ்சுவும், மீனாட்சிசுந்தரமும் சிறு வயதுக்கே உரிய அப்பாவித்தனத்துடனும், குறும்புடனும், விடலைத்தனமாக செய்யும் செயல்கள், நம் வயிற்றைப் பதம்பார்த்துவிடுகின்றன... முதல் முதலாக வேட்டி அணிந்த பின் (அங்கே அதை சாரம் என்றுதான் சொல்கின்றனர்) அவர்கள் அடிக்கும் கூத்தாகட்டும், கடலைக்குழம்பை, அசைவம் என்று நினத்து தின்று பண்ணும் அளப்பறையாகட்டும், மிதிவண்டி ஓட்டத்தெரியாமல், பெண்கள் முன் அவர்கள் செய்யும் 'சாகசம்' ஆகட்டும், படிக்கும் பொது யாரும் பக்கத்தில் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது அவசியம். இல்லையென்றால், தன்னந்தனியாக சிரிப்பதைப்பார்த்து அவர்கள் நம்மை வேறு மாதிரி நினைத்து விடக்கூடும். இதைப் படித்தபின், நெல்லையின் ஒவ்வொரு இடமும் இவர்களின் சாகசத்தைக் கொண்டே நம் நினைவில் நிற்கும். அடுத்த முறை நெல்லை செல்லும் போது ஒருக்கால், அந்த இடங்களுக்குச் சென்றால், சுகாவையும் , அதை விட அவர் நண்பன் குஞ்சுவையும் நினைத்து ஒரு மெல்லிய சிரிப்பு, பிறர் அறியாவண்ணம், உதட்டோரம் வந்து போகும் என்று நினைக்கிறேன்.


சுகா தன் தித்திப்பான, நகைச்சுவையான அனுபவங்கள் மற்றும் எழுத்தால் தனது பால்யகால திருநெல்வேலிக்கு நம்மை கைபிடித்து அழைத்துச்சென்று தாமிரபரணியில் முக்குளிக்க வைத்து விடுகிறார்.. அவர் அறிமுகப்படுத்திய சுவையான நெல்லை உணவின் விருந்து போலவே அவர் எழுத்தைப் பரிமாறி இருக்கிறார். திரும்பி வர இயலாமல் தடுமாறி விட்டேன்... நீங்களும் வந்து பார்க்கலாம்... சுஜாதாவின் ஸ்ரீரங்கத்து தேவதைகள் பிடித்தவர்கள், கண்டிப்பாக அனுபவிக்கவேண்டிய எழுத்து... 

தொகுப்பு: மூங்கில் மூச்சு 
ஆசிரியர்: சுகா 
பதிப்பகம்: விகடன் பிரசுரம்

Comments

Popular posts from this blog

பாலை மனம்

அன்பே மருந்து

Deccan in Dazzling light