இலக்கியம்: ஒரு புகைப்படக்காரனின் இதயம்.
'கவிதை என்பது என்ன? அது என்ன மாதிரியான மாற்றங்களை மனதில் ஏற்படுத்துகிறது? எந்த கணங்களில் அது நம் மனதை கலக்கிறது? '
இப்படிப்பட்ட கேள்விகளை எனக்குள்ளே நான் பல நேரம் கேட்டுக் கொள்வதுண்டு.
சிறு வயதில் இருந்தே பாரதியும், வள்ளுவனும், பாரதிதாசனும் என் வாழ்வின் கடினமான நேரங்களில் துணை வந்த போதும், கவிதை என்னும் வஸ்து, தொடர்ந்து பலவித மாற்றங்களை தன்னுள் கொண்டு மாறி வரும்போது, மாறிவரும் அதன் இருப்பும், அதன் வடிவமும், அதன் கருவும் இந்தக் கேள்விகளை எனக்குள் மறுபடியும் மறுபடியும் சுழன்று வரச் செய்து கொண்டே இருந்தது .
என் தேடல் என்னை கல்யாண்ஜி (வண்ணதாசன்) கவிதைகளிடம் நிறுத்தியபோது, அந்த வரிகளில் எனக்குள் ஏதோ ஒன்று உள்ளே உடைந்து உருகியது உணர முடிந்தததும், அதற்காகவே அவர் எழுத்தை திரும்ப திரும்ப நாடியதும் நடந்தது. இருந்த போதும் என் கேள்விக்கு பதில் மட்டும் தெளிவாக கிடைக்கவில்லை…
என் வாசிப்பின் எல்லை, புகைப்படக்காரனாய் என்னை நிறுத்தியபோதும், அதன் தாக்கம் எனக்குப் புரிபடாத ஒரு மாயமாகவே இருந்தது. என் புகைப்படங்கள், தி.ஜா., அ.முத்துலிங்கம், எஸ்.ரா என்று கதைசொல்லிகளின் பார்வைகளின் வழியே விரிந்த போதும், கவிதைகளின் தாக்கம் உணரப்படாமலே இருந்தது.
அது என்னவோ தெரியவில்லை, நெல்லை என்ற பெட்டகம் அளித்த இன்னொரு கற்கண்டு, இப்போது தான் சுவைக்கக் கிடைத்தது. கலாப்பிரியாவின் எழுத்துக்களை படித்திராத எனக்கு, இந்தப் புத்தகம், கவிதைகளின் நோக்கத்தை எனக்குள் வார்த்தெடுத்தது.
இந்த தொகுப்பில் ஒவ்வொரு கவிதையும், எனக்கு ஒரு சக புகைப்படக்காரனின், படத்தைப் பார்க்கும் பரவசத்தை அளித்தன; அப்படி அளித்து படிமம் என்பது கவிதையின் உள்ளுயிர் என்பதை உணர வைத்தன.
“எந்த ஊரை மழை நனைத்தாலும்
சொந்த ஊர் மழை பற்றிய செய்தியிலேயே
அதிகம் நனைகிறது இதயம்”
என்ற வரிகளில் நடக்கும் நிகழ்வின் பௌதீகம் மேலும் வரும் கவிதைகளின் வருகையால் தெளிவுறுகிறது.
“நீண்ட நடைப்பயணம்
தந்தை தோளில் இருந்து
குழந்தையைத் தாய்
மறுபடி வாங்கிக் கொள்கிறாள்
மிகமிக மகிழ்ச்சியோடு
தாவுகிறது தாயிடம்
இந்தப் படிமத்தை
நீங்கள் உள் வாங்கிக்
கொள்வதைப் போலவேதான்”
என்ற வரிகள் விளக்குவது போல் , அந்தப் பௌதீகத்தை இதைவிடத் தெளிவாக விளக்க முடியாது…
அதற்குப்பின்,எனக்குள் இருக்கும் புகைப்படக்காரன், ஒவ்வொரு வரிகளிலும் ஆனந்தக் கூத்தாடுகிறான். புகைப்படங்களின் ஆழமும் அழகும் அதை உருவாக்கும் புகைப்படக் கலைஞர், ரசிக்கும் சில கணங்களின் உணர்வுகளை, பார்வையாளருக்கு கடத்தும் மாயம் தானே…. அதைத்தான் கவிதைகளும் செய்கின்றன. அதைச் செய்வதற்கு வார்த்தைகள் ஒரு கருவி மட்டுமே, கேமராவைப்போல்…
இந்தத் தொகுப்பைப் பொறுத்தவரை கலாப்பிரியா , அவர் முகநூல் பக்கத்தில் பதிந்த குறுங்கவிதைகளின் தொகுப்பாக வெளிவந்துள்ளது… இந்தத் தொகுப்பில் இருப்பதெல்லாம் முத்தா என்றால், எனக்கு உடன்பாடில்லை தான்.
“நாத்து என்பது
சேத்து மொழி” என்பது போன்ற சில கூழாங்கற்கள் இடறத்தான் செய்கிறது… அதனாலென்ன, கடலின் ஆழத்தில் சென்று அள்ளும் போது பல முத்துக்கள் மட்டும் அல்ல, சிறு கற்களும் தானே கைகளில் சிக்கும்…
நெல்லையின் சுவைகளில், கலாப்பிரியாவின் எழுத்துச் சுவை ஒரு வகை… நெல்லைக்காரரான அவர், வார்த்தைகளில் எழுப்பும் உணர்வுகளில் படிப்பவரை அமிழ்ந்து போக வைப்பவர், சக நெல்லைக்காரரான வண்ணதாசனைப்போல்…
தொகுப்பு: சொந்தஊர் மழை
ஆசிரியர்: கலாப்பிரியா
பதிப்பகம்: நற்பவி பதிப்பகம்
Comments
Post a Comment