மாரி ஆயியும் மாட்டுக்கறியும்.
பொதுவாக சாதி அடையாளமற்றவர்கள் என்று கூறிக்கொள்ளும் மேல்தட்டு மனிதர்கள், “ நான் சாதியெல்லாம் பார்க்கறது இல்ல சார்… நான் என் நண்பர்களை சாதி பார்க்காம வீட்டுக்கு கூட்டிட்டு வந்து சேர்ந்து சாப்பிடுவேன் தெரியுமா?” என்று கூறுவதை அடிக்கடி நாம் கேட்டிருக்கலாம். இந்த வார்த்தைகளில் ஒலிக்கும், போலித்தனம், மேட்டிமைத்தனம் மற்றும் மறைமுகமான சாதீயம், வெளிப்படையாக கேட்கப்படாத ஒரு கேள்வியில் ஒளிந்திருக்கிறது.
“என்றாவது அதே கீழ்சாதி நண்பரின் வீட்டிற்கு சென்று அவர் உணவைப் பகிர்ந்து உண்டு இருக்கிறீர்களா?” என்பதே அந்தக் கேள்வி. அந்தக் கேள்விக்குப் பதில், பெரும்பாலும் மௌனமாகவே இருக்கும். மறைந்திருக்கும் சாதீயம் வெளிப்படும் தருணம் அது. இது போன்ற உரையாடல்கள் எப்போதும் ஒரு வழிப்பாதையானவை. அது எப்போதும் மேல் சாதியின் உணவுப் பழக்க வழக்கங்களைப் பற்றி மட்டுமே பேசுமே தவிர தாழ்த்தப்பட்டவர்களின் உணவுப் பழக்கங்களை அல்ல.
சில நாட்களுக்கு முன், சமூக வலைதளத்தில் ஒரு புத்தகத்தின் சுட்டி ஒன்று கிடைத்தது. அதைப் படிக்கும் போது எழுந்த எண்ணங்கள்தான் மேலே சொன்னவை.
அது, ஒரு வித்தியாசமான நூல். விற்பனையில் இல்லாத, “இது இந்திய உணவு இல்லையா?” என்னும் தலைப்பில், வலைதள வெளியீடாக (“Isn’t this plate Indian ?”) வெளியாகிய நூல். இது, புனே பல்கலைக்கழகத்தின், கிராந்தி ஜோதி சாவித்ரிபாய் பூலே திறந்தவெளி பெண்கள் கல்வி மையத்தின், மாணவியர்கள், ஆங்கிலத்திலும் மராத்தியிலும் உருவாக்கியது . அதை வெளியிட்ட தொகுப்பாசிரியர்களில் ஒருவரான ஷர்மிளா ரெகே (Sharmila Rege), அதைத் தன் வலை தளத்தில் வெளியிட்டுள்ளார்.
அவர்களின் பாடத்திட்டத்தின் பகுதியாக முதலில் பெண்கள் மற்றும் சாதி பற்றிய ஒரு பட்டறையாக, ஜோதிபா பூலே , பெரியார் , அம்பேத்கர் ஆகியோரின் பெண்ணுரிமை மற்றும் சாதி ஒழிப்பு பற்றிய நூல்களின் வாசிப்பின் வழியே, சமூக உணவுப் பழக்கவழக்கங்களின் நினைவுகளைப் பகிர்ந்து கொள்ளும் ஒரு நிகழ்வு, பின் அவர்களின் முழுமையான கள ஆய்வாக விரிவடைந்தது. அது அந்த மாணவியர்களுக்குள் கட்டமைக்கப்பட்ட உணவுப் பழக்கங்களில் மறைந்திருக்கும் அரசியலையும், சாதீயம் மற்றும் பாலியல் பாகுபாட்டுக் கருத்துக்களையும் அவர்களையே கேள்வி கேட்க வைத்து உள்ளது. அதன் தொடர்ச்சியாக வெளியான இந்த நூல்,, படிக்கும் ஒவ்வொருவருக்குள்ளும் அந்தக் கேள்விகளை எதிரொலிக்க செய்கிறது.
மேல்சாதி இந்துக்களின் உணவை “இந்திய” / “பிராந்திய” / “உண்மையான ” உணவாக கட்டமைப்பதின் வழியாக, ஒடுக்கப்பட்ட சாதிகளின் உணவை ஒதுக்கி வைக்கும் கொடுமையையும் , அதன் ஒடுக்குமுறை அரசியலையும் படம் பிடித்துக் காட்டும் முயற்சியாகவே இதைப் பார்க்க வேண்டும். இதன் மீட்சியாக, எங்கும் நிறைந்து வழியும் “இந்திய” சமையல் குறிப்பு புத்தகங்கள் ஒன்றில் கூட ஒடுக்கப்பட்டவர்களின் உணவுக்கு இடம் ஒதுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மாறாக அவையனைத்தும் “சுத்தமான ” சைவ உணவு வகைகளும் , “வித்தியாசமான ” அசைவ உணவுகளும் என்று மேல்சாதிகளின் உணவையே அடையாளப்படுத்துகின்றன என்னும் உண்மையை வெளிச்சமிட்டுக் காட்டுகிறது இந்த ஆய்வு .
மேல்தட்டு இந்தியா, எப்படி ஒடுக்கப்பட்ட சமூகங்களின் உணவு வகைகள் , பழக்க வழக்கங்கள் மற்றும் அவர்களின் உணவுக்கான இடம் ஆகியவற்றில் எந்தப் புரிதலும் இல்லாது இருக்கிறது என்னும் அவலத்தை உரக்க சொல்கிறது. மேல்சாதி சமூகம், “ சாத்வீக” உணவு மற்ற உணவு வகைகளை விட மேலானது என்று கூறி, நுட்பமான வழிகளில் வலிந்து பிராமணிய அடக்குமுறையை, ஒடுக்கப்பட்ட சமூகங்களின் இருப்பு மற்றும் வாழ்வாதார அடிப்படையான உணவில் திணிக்கின்றன என்பதை ஆவணப்படுத்துகிறது.
இந்த முயற்சி, அப்படி ஒதுக்கி வைக்கப்பட்ட மக்களின் உணவுப்பழக்க வழக்கங்களை மட்டும் அல்ல, அதைச்சார்ந்த அந்த மக்களையும் , அவர்கள் வாழ்வையும் ஆவணப்படுத்துவத்தின் மூலம் அவர்களின் குரலையும் பதிவு செய்கிறது.
இந்த ஆய்வு மகாராஷ்டிரா மாநிலத்தில் , குறிப்பாக புனே நகரம் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் நடத்தப்பட்டு இருந்தாலும் , அது மராட்டிய மாநிலத்தின் பூர்விகமான ஒடுக்கப்பட்ட சாதிகளைப் பற்றி மட்டும் பேசவில்லை. அது பலதரப்பட்ட மக்களை, உதாரணமாக , வேறு மாநிலங்களில் இருந்து இங்கு வந்து, தலைமுறைகளாய் இங்கு வாழ்ந்து, அந்த மாநிலத்தின் கலாச்சாரத்தோடு கலந்து போன தலித்துகள், முகமதியர்கள் எனப் பலரின் குரலாகவும் ஒலிக்கிறது. இந்த ஆய்வில் காட்சிப்படுத்தப்படும் மக்கள், பல்வேறு சிறு தொழில்கள் செய்துவருபவர்கள். சாதீய அடக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டவர்கள். பலர், நகரச் சமூகப் பரப்பில், தங்கள் சாதீய அடையாளங்களை மறைத்து வாழப் பழகியவர்கள்.
வீட்டில் என்ன சமையல் என்ற கேள்விக்கு, மாட்டுக்கறி என்பதை மறைத்து, இயல்பாகவே, உருளைக்கிழங்கு என்று சொல்ல பயிற்றுவிக்கப்பட்ட சிறுமி முதல், தான் பிறந்த ராஜஸ்தானத்துக்கு - தான் எந்த சாதியைச் சேர்ந்தவன் என்று கூறினால் என்ன நிகழும் என்று அறிந்து - சிவாஜியின் வழித்தோன்றலான மராட்டியன் எனச் சொல்லி மரியாதையையும் அங்கீகரிப்பையும் பெற்ற ஒரு தலித் ஆண் வரை, பலரும் மறைத்து வைத்த தங்களின் அடையாளத்தையும் , பாரம்பரியத்தையும் உணவிலேயே மீட்டெடுக்கின்றனர் என்னும் நிலையை ஆவணப்படுத்துகிறது.
இந்த ஆய்வு, இந்திய நிலப்பரப்பின் பல்வேறு தொடர்பின் கண்ணிகளையும் காட்சிப்படுத்துவது குறிப்பிடத்தக்கது . உதாரணமாக மராத்திய மாநிலத்தில், “மாரி ஆயி” என்று ஒடுக்கப்பட்டவர்களின் தெய்வமாய் வழங்கும் ஒரு பெண் தெய்வ வடிவம்தான், “மாரியம்மன்”, “எல்லம்மா ” என்று வேறு வேறு பெயரில் தென்னாடு முழுவதும் ஒடுக்கப்பட்டவர்களின் திராவிட பெண் தெய்வமாக உள்ளது என்பது ஒரு முக்கியமான ஆவணமாகும்.
இந்த ஆய்வின் இறுதியாக அந்த ஆய்வு நிகழ்த்திய மாணவியர்களுக்கு இது ஒரு பெரிய கற்றல் அனுபவமாக, அவர்கள் ஒவ்வொருவருக்குள்ளும் இருந்த மனத்தடைகளை உடைத்து அவர்களின் சாதி மற்றும் பாலின வேறுபாடு விழிப்புணர்வுக்கும் வழிவகுத்ததை அவர்களின் குரலில் இருந்தே பதிவு செய்கிறது. அதன் மூலம் வாசிப்பவர்களுக்கும் ஒரு புரிதலை ஏற்படுத்தி விடுகிறது. ஒரு முக்கியமான முன்னெடுப்பு.
மேலும் வாசிப்புக்கு:
https://www.goya.in/blog/blood-and-beehives-culinary-ingenuity-of-the-marginalised-dalit-food
https://blog.worldvision.com.au/dalits-untouchables/
Comments
Post a Comment