ஊழல் ஒழிப்பு வீரர்களும், அவர்களின் சாகச கதைகளும்...
பொதுவாக தேர்தலுக்குத் தேர்தல், ஊழல் ஒழிப்பு நாயகர்களும் அவர்களின் ஊழல் ஒழிப்பு கோஷங்களும் நம் மக்கள் முன் வைக்கப்படுவதும், அதைத் தொடர்ந்து, தீவிரமாக மக்களின் தேர்தல் நேர கனவுகளை தூண்டுவதும் நிகழ்ந்தே வந்திருக்கிறது. தேசிய அளவில் சில கால கட்டங்களில் அவை எழுப்பப்பட்டு மக்களும் அதற்கு செவி சாய்த்து, ஆதரவளித்ததும் பிறகு ஏமாந்தததும் நமது சரித்திரத்தில் இடம் பிடித்தே இருக்கிறது. உதாரணமாக, அண்ணா ஹசாரே எழுப்பிய எழுச்சி இதற்கு ஒரு சமீப கால நிகழ்வு.
இதில் பெருமளவில் ஈர்க்கப்படுவது நகர்மய நடுத்தர மற்றும் உயர் வருமான பிரிவினர் தான். பத்திரிக்கைகளை பொறுத்தவரை, அவர்களின் பசிக்கு கிடைத்த தீனி என்று, அவர்கள் அதை பரவலான உணர்வாக சித்தரித்து, அதை படிக்கும் மேல்தட்டு மற்றும் நடுத்தர மக்களின் கண்களை கவர்ந்து கொண்டு, வருமானத்தை அதில் ஈட்டிக்கொள்கின்றன.
உண்மையில் நமது சமூகம் மட்டுமல்ல, வேறு பல சமூகங்களிலும் ஊழல் என்பது வெளிப்படையாகவும், மறைமுகமாகவும் விளங்கியே வந்திருக்கிறது. நமது நாட்டை பொறுத்தவரை, பழங்கால அரசர் காலம் முதல் தற்கால ஆட்சியாளர்கள் வரை பல்வேறு அளவுகளில் அது படர்ந்தே வந்திருக்கின்றது. மேலை நாடுகளிலும், மற்ற வெளிநாடுகளில்லும், பல்வேறு அரசாங்க வகைகள் இருந்த போதும் அதில் ஊழல் என்று கருதக்கூடிய செயல்பாடுகள் தொடர்ந்தே வந்திருக்கின்றன. தொழிலாளிகளின் பொதுவுடைமைச் சோசியலிச உலகமான சோவியத்தில் கூட, மக்கள் ரொட்டிக்கு வரிசையில் நின்று கொண்டிருந்த போது கூட ஆட்சியாளர்கள் தங்களுக்கான வசதிகளை பெருக்க ஊழல் செய்வது நிற்கவில்லை.
முதலாளித்துவத்தின் ஆதர்சமான அமெரிக்காவிலும், சிறிய நாடான சிங்கப்பூரிலும் கூட மறைமுகமான அளவில் ஊழல் நடந்திருப்பதை சரித்திரம் பதிவு செய்திருக்கிறது.
பிறகு ஊழல் என்பதை எப்படிப் பார்ப்பது? அதை ஒழிப்பது என்பது சாத்தியம் இல்லையா?
இந்தக் கேள்விகளுக்கு போகும் முன், நமது அரசியல் மற்றும் நிர்வாகம் என்பது என்ன, அவை எப்படி செய்யப்படுகின்றன என்று நாம் புரிந்து கொள்வது முக்கியம். அதிலும் அரசியல் அதிகாரம் என்று திடீர் ஊழல் ஒழிப்பு நாயகர்களின் பார்வையில் மாநில சட்டசபையும், மாநில ஆட்சியும் ஊழல் ஒழிப்புக்கான இடங்களாக அடையாளப் படுத்தப்படுகிறன.
நமது கூட்டாச்சியின் அடிப்படைகளான ஊரக மற்றும் கிராம சபைகள் அவர்கள் கண்களுக்குத் தெரிவதில்லை. ஆனால், நமது அரசியல் அதிகாரங்கள் அங்கிருந்தே கட்டியெழுப்பப்படுகின்றன . சாமானிய மக்களின், அடிப்படை செயல்பாடுகளான பிறப்பு, இறப்பு, மற்றும் அடிப்படை தேவைகளான சாலை, நீர், வீடு வசதி ஆகியவற்றுக்கான திறவுகோல் அங்கிருந்து தான் இயக்கப்படுகிறது. ஆகவே அதைப் பற்றிய புரிதல் இல்லாமல் வெறுமனே சட்டமன்ற தேர்தலில் ஊழல் ஒழிப்பேன், ஹெலிகாப்டரில் சட்டமன்றம் சென்று ஆட்சி அமைப்பேன் என்பது வெறும் வெற்று கோஷம் மட்டுமே.. அவை திரைப்படங்களுக்கு வேண்டுமானால் கைதட்டல் பெறும் காட்சியாக இருக்கலாமே தவிர, மக்களின் தேவைகளுக்கு அது வழி வகுக்காது.
தமிழகத்தைப் பொறுத்தவரை, 30 மாவட்டங்களில், 385 வட்டங்களாக 12,620 பஞ்சாயத்துகள் இயங்கி வருகின்றன.
மேலும் அவை வருவாய் அடிப்படையில், ஒன்பது வகைகளாகவும்,
மக்கள் தொகை அடிப்படையில் ஆறு வகைகளாகவும் பிரித்து அடையாளப்படுத்தப்படுகின்றன.
இந்த ஊழல் ஒழிப்பு வீரர்கள் குறிப்பிடும் ஊழல் நிறைந்த நடைமுறைகளான பிறப்பு சான்றிதழ் வழங்குதல் , இறப்பு சான்றிதழ் வழங்குதல், நில பட்டா வழங்குதல் போன்ற பெரும்பாலான செயல்பாடுகள் இந்த உள்ளாட்சி அதிகார அமைப்புகளிலே நிகழ்வது தான். இதற்கு முதல்வர் ஆணையிடுவதில்லை. அதிகபட்சம் வட்டாட்சியர் அளவிலேயே முடிந்து விடுகிறது. இவை அனைத்தும் சரி செய்ய அமைப்பு ரீதியான மாற்றங்கள் தேவை இல்லை. தொழில்நுட்ப உதவியுடன் நிர்வாக அளவிலான மாற்றங்கள் போதும்.
உதாரணத்துக்கு, எனது பிறப்புச் சான்றிதழில் எனது பெயர் இல்லை. பத்தாண்டுகளுக்கு முன்பு என் அலுவலக தேவைகளுக்காக, என் பிறப்பு சான்றிதழில் என் பெயர் இணைக்க, வட்டாட்சியர் அலுவலகத்துக்கு நடந்து, என் மாமா, சித்தப்பா என அனைவரும் அவர்களின் அதிகார தொடர்புகளை பயன்படுத்தியும், கடைசியில் பணம் கொடுத்தே முடிக்க வேண்டி இருந்ததது. அங்கே அதிகாரமோ, அதை செய்ய வேண்டிய ஊழியர் எங்கள் ஊர் நபரோ, தெரிந்தவரோ எதுவும் உதவவில்லை.
ஆனால் அதுவே சில வருடங்களுக்குப் பிறகு, என் மகனின் பிறப்பு சான்றிதழை வீட்டில் இருந்த படியே கேட்டுப் பெற முடிகிறது.
மொழி தெரியாமல் 15 வருடங்களுக்கு முன் புதிய, தெரியாத ஊரான கான்பூரில், ஒரு முதல் வகுப்பு இரயில் பயணச்சீட்டு எடுக்க, அங்கிருந்த சோட்டே ராம் என்ற, இந்திய இரயில்வேயில் எந்த பதிவியிலும் இல்லாத, அந்த பகுதியின் தாதா தேவைப்பட்டார். ஆனால் இன்று அதுவே எனது தொலைபேசியில் இருந்து எங்கிருந்து வேண்டுமானாலும் எந்த இடத்துக்கும் பயணச்சீட்டு வாங்க முடியும்.
இவை அனைத்தும் நிர்வாக அளவில் தொழில் நுட்பம் இணைந்து செய்த மேம்பாடுகள். இதை செய்ய அந்தந்த நிர்வாக அமைப்பை தெரிந்த, அந்த நிர்வாகமும் , அரசும், மக்களும், மற்ற தரப்பும் இணைந்து செயல்பட வேண்டும். அது தொடர்ந்து நிகழ்வுகொண்டே இருக்கிறது. இதற்கப்பாலும்,ஊழல் ஒழிந்து விடுமா என்றால் ஒரே அடியாக அவை ஒழியாது. புதிய நடைமுறைகள், அதைத்தொடர்ந்து அதில் புதிய ஓட்டைகள்,திரும்பவும் புதிய மேம்பாடுகள் என்ற அளகு தொடர்ந்து நடைபெறும். அது நிற்காமல் நடைபெற அதிகார பரவலாக்கல் என்பது நடக்கவேண்டும்.
அந்த அதிகாரப்பரவலாக்கல், அடிப்படை உள்ளாட்சியில் இருந்தே நடைபெறவேண்டும். பெண்கள் பங்கெடுப்பு, சமூகத்தின் அனைத்து மக்களின் பங்களிப்பு என்று தொடர்வது அங்கே தான்.
குத்தம்பாக்கத்தில் நிகழ்ந்த ஒரு நிர்வாக செயல்பாடு, ஒரு பெரு நெருப்பாகப் பற்றிக்கொண்டு, ஒரு இசைவான அரசு அதிகாரத்தில் இருந்ததால் தமிழகம் முழுவதும் சமத்துவபுரமாய் மலர்ந்தது, ஒரு மறக்க முடியாத நிகழ்வு… இப்படி அதிகாரமும் ஆட்சியையும் அடிப்படை கிராம நிர்வாகமும் இணைந்துதான் நமது ஜனநாயகத்தில் மாற்றங்கள் கொண்டு வர முடியும் . வெறும் தனிமனித ஊழல் ஒழிப்புக் கூச்சல்கள் , மாறாக , தேர்தல் பத்திர ஊழல், ரபேல் ஊழல் என்ற வகை வகையான மாபெரும் ஊழல்களும், பணமதிப்பிழப்பு , GST போன்ற விபரீத நிகழ்வுகளும் நிகழத்தான் வழி வகுக்கும்.
குறிப்பு: தமிழக ஊரக மற்றும் ஊராட்சித்துறை வலைதளம்
Ministry of Statistics and Program Implementation Report: Women and Men in India 2016
குத்தம்பாக்கம் பஞ்சாயத்து பற்றிய காணொளி
ஓடந்துறை பஞ்சாயத்தின் சாதனைகள்
குத்தம்பாக்கம் இளங்கோ பற்றிய குறிப்பு
Comments
Post a Comment