கானகத்தின் குரல்

 நாம் காணாத கதைக்களங்கள் பல நூறு ஒளிந்திருக்கிறன, நமது பரப்பில். குரலற்றவர்களின், முகமற்றவர்களின் குரல் வழியே பல நூறு சுவாரசியமான கதைகள் கொடுக்க முடியும் என்று லட்சுமி சரவணகுமார் இங்கு உறுதிப்படுத்தியிருக்கிறார். ஒரு வேட்டையின் நூலிழையின் வழியே, ஒரு காட்டின் உள்ளே நம்மை உள்ளிழுத்து ஒரு வனத்தை நம் மனதினுள் விதைத்து, நீரூற்றி, உயிர் பெற வைத்தது, அதனோடு நம்மை வாழவே வைத்திருக்கிறார்.



கதை நடக்கும் காலம் 1980 களின் ஆரம்பகாலம்... அதன் பரவலான நிகழ்வுகளைச் சுட்டியிருந்தாலும், அவை அவரின் கதைக்குள், எந்த முக்கியமான அடிப்படையையும் பாதிக்கவில்லை. அவரின் காடு காலம் கடந்த ஒன்றாகவே இருக்கிறது, பளிச்சியைப் போல், பாட்டாவைப் போல், அவர்களை வணங்கும் பளியர்களைப் போல்...

அதன் மனிதர்கள் அதிக குழப்பமின்றி மிகவும் எளிமையானவர்கள். அவர்களின் வாழ்வியல் மட்டும் அல்ல, மனதாலும். அவர்களின் கோபங்கள், தாபங்கள், கவலைகள், வன்மங்கள் எல்லாமே எளிமையாக, வெளிப்படையாக, உக்கிரமாக வெளிப்படுகிறது. வெகு ஜன வாழ்வில் நாம் சாதாரணமாக எதிர்கொள்ளும் உறவுகளின் உறுதியும், திண்மையும் இந்த மனிதர்களிடையே இல்லையென்றாலும், அந்த நெகிழ்ந்த உறவுகளிடையே ஏற்படும் அடிப்படை உணர்வுகளை, அதன் தன்மைகளை இழக்காமல் காட்டுவது, பல இடங்களில் நெகிழ வைக்கின்றது.

"தன் தாய்மையை அங்கீகரிக்கும் எல்லோரையும் ஒரு பெண் அதீதமாய் நேசிக்கத்தான் செய்வாள்."

அந்த காலகட்டத்தில் காட்டுக்கு ஏற்பட்ட மாற்றங்கள், அதன் விளைவு ஆகியவற்றை பின்புலமாகக் கொண்டு, பளியர்கள், கருமாண்டி, ஜமீன்தார் என்று ஒவ்வொருவரின் உருவகமும், அவர்களின் சிந்தனைகளும், அவர்களின் வாழ்வோட்டமும் ஒரு நவீன பாணி ஓவியம்போல் ஒவ்வொரு வண்ணமாக, ஒன்றின் மீது ஒன்று எனப் பிண்ணிப் பிணைந்து, நம்மையும் அதனுள் இழுத்துக்கொள்கிறது.

சில இடங்களில், குறிப்பாக வேட்டை நடவடிக்கைகள், வன விலங்குகளைப்பற்றி நாம் முன்பே படித்து வரைந்துள்ள சித்திரங்களுடன் ஒத்துப்போகாமல் இருந்தாலும் கூட , கதையோட்டத்தின் வழியே அதைக் கடந்து கதைக்குள் ஆழ்ந்து போக முடிகிறது.

நிற்க.

ஒரு கதை என்ற தளத்தில் இருந்து, குறியீட்டுகளின் வழியே வேறு ஒரு சரித்திர நிகழ்வை குறிப்பிடுகிறாரோ என்ற எண்ணம் இடை இடையே உறுதியாக எழுவதைத் தடுக்கமுடியவில்லை. நகர நாகரீகத்தை விடுத்து, காட்டோடு ஒன்றி வாழும் பளியர்கள், அவர்களுக்கு காப்பாக இருக்கும் பாட்டா என்னும் புலி, அதை வேட்டையாடும், அந்தக்காட்டுக்குள்ளேயே வாழும் தங்கப்பன், அந்தக் காட்டைக் கவர்ந்து, அதன் வளங்களை சூறையாட நினைக்கும் பல்வேறு வெளியூர் தரப்பு, அந்தக் காட்டையும், விலங்குகளையும் அழிக்கின்றவர்களை திரும்ப வேட்டையாடி அழிக்கும் விலங்குகள், இறுதியில் தங்கப்பனை வெல்லும் புலி என்று விரியும் சம்பவங்களும் அதன் காரணிகளும் மட்டும் அல்ல, கதையின் ஊடே கதையில் வருபவர்களின் வழியே, பொதுவான விவரணைகள் இடையே வரும் வரிகளில்

தொக்கி நிற்கும் உணர்வுகளினால் நமக்கு அப்படி ஒரு அனுபவத்தை அளிக்கின்றது.

"ஒரு மனிதன் அல்லது இனம், சரணடைவதற்கு முன்பாக மரணத்தைத் தேர்வு செய்யும் ஆன்ம பலத்தைக் கொண்டிருக்காவிட்டால், அடிமையாவதுதான் தவிர்க்க முடியாத விளைவாக இருக்கும்."

"எல்லா தத்துவங்களுக்கும் அடிப்படை வாழ்க்கை தானேயன்றி, புத்தகங்கள் அல்ல."

"யுத்தம் ஒருவகையான வேட்டை. ஆனால் எதிரியைத் தாக்க அனுமதிக்காது நடக்கும் யுத்தங்கள் யுத்தங்களே அல்ல, அது சூது. நல்ல வீரன் மிருங்களை ஓடவிட்டுக் கொல்ல மாட்டான். இப்போது வேட்டைக்குப் போகப்போகிறவர்கள் வேட்டையாடத் தகுதியற்றவர்கள். எந்த மிருகத்தையும் அதன் கண்களை எதிர்கொண்டு அதனோடு யுத்தமிடத் தவறுகிறவன் தன்னைத் தானே கொலை செய்து கொள்கிறான்."

இப்படி இடையே வரும் வரிகள், இது கதையல்ல, வேறு எதோ சம்பவத்தின் குறியீடு என்ற எண்ணத்தை வெகு ஆழமாக விதைக்கிறது. அதனால் வேறு ஒரு அனுபவத்தை கதை மூலமாகவே, அந்தக் கதையைத் தாண்டிய பரப்பில் அது நமக்குள் விதைத்துச் செல்கிறது. அதுவே இதன் வெற்றி என்றும் தோன்றுகிறது.


புத்தகம்: கானகன்.

ஆசிரியர் : லக்ஷ்மி சரவணக்குமார்

பதிப்பகம் : ஸீரோ டிகிரி பதிப்பகம்.

Comments

Popular posts from this blog

பாலை மனம்

அன்பே மருந்து

Deccan in Dazzling light