சுதந்திரத்தின் விலை.
இந்த புத்தகத்தின் ஆசிரியர், சீனாவின் கலாச்சாரப் புரட்சியின் போது பெய்ஜிங்கில் இருந்து உள் மங்கோலியாவின் மேய்ச்சல் பகுதிக்கு அனுப்பப்பட்ட மாணவர்களில் ஒருவர். அப்போது அங்கு இருந்த மேய்ச்சல் நில மங்கோலிய இன மக்களுடன் வாழ்ந்து அந்த வாழ்வை நெருக்கமாக அறிந்து கொண்டு, அதன் பாதிப்பில் எழுதிய புதினமாகும் இது . அந்த நிலத்தின் கலாச்சாரத்தையம், மக்களையும் நேசிக்க ஆரம்பித்த அவர், அழிக்கப்பட்ட அந்த வாழ்வை மிக நுணுக்கமாகவும் நெகிழத்தக்க வகையிலும் பதிவு செய்த காரணத்தால் மிகுந்த வரவேற்பைப்பெற்ற நூலானது. சீனாவிலும், பின் ஆசியாவிலும் மிகுந்த வரவேற்பைப்பெற்ற இந்த நூல், தமிழில், சி.மோகன் அவர்களின் மொழிபெயர்ப்பில் வெளிவந்துள்ளது. சி.மோகன் தமிழில் குறிப்பிடத்தக்க இலக்கிய ஆளுமைகளில் ஒருவர், அதிகம் அறியப்படாதவர். அவரின் தேர்ந்தெடுத்த உலக சிறுகதைகளின் தொகுப்புகள் ஏற்கனவே பெரு வரவேற்பைப் பெற்றவை. அவரின் மொழி ஆளுமையால் இந்த நூலை அதன் கணமும், உணர்வும் சற்றும் குன்றாமல் தமிழ் வாசகர்களுக்கு ஏந்தி வழங்கியிருக்கிறார்.
தித்திக்கும்பழம் தின்னக் கொடுப்பார்;
மதுரப் பருப்பு வழங்குவார் உனக்கு;
பொன்னே. மணியே, என்றுனைப் புகழ்வார்;
ஆயினும் பச்சைக் கிளியே அதோபார்!
உன்னுடன் பிறந்த சின்ன அக்கா,
வான வீதியில் வந்து திரிந்து
தென்னங் கீற்றுப் பொன்னூசல் ஆடிச்
சோலை பயின்று சாலையில் மேய்ந்து
வானும் மண்ணுந்தன் வசத்திற் கொண்டாள்!
தச்சன் கூடுதான் உனக்குச் சதமோ?
அக்கா அக்கா என்றுநீ அழைத்தாய்.
அக்கா வந்து கொடுக்கச்
சுக்கா மிளகா சுதந்திரம் கிளியே?
மனிதச் சமூகம், சுதந்திரம் என்ற வார்த்தைக்கு பல அர்த்தங்களை தானே சமைத்துக்கொண்டுள்ளது. ஆனாலும், அது கட்டற்ற சுத்தந்திரம் என்பதை தொலைத்தே, கண்விற்று சித்திரம் வாங்கியிருக்கிறது. பாசம், அன்பு, அக்கறை என்ற பெயர்களில் பல தளைகளை தனக்கும், தனக்கு சுற்றி உள்ள அனைத்துக்கும் தடையின்றி வழங்கியே வருகிறது. மனிதனின் நலனே முக்கியம் என்று தொடர்ந்து அந்தத் தளைகளின் வழியே அனைத்தையும் ஆள முயல்கிறது.
அப்படி மானுடம், மற்றும் அதன் நலனே முக்கியம் என்று முன்னிருத்தப்படும் ஒரு சமூகத்துக்கும், இயற்கையோடு ஒன்றிய வாழ்வோடு இருக்கும் சமூகத்துக்கும் உள்ள போராட்டமே இந்த புதினம். சுதந்திரம் என்பது என்ன, அதற்காக எவ்வளவு விலை கொடுப்பது என்ற கேள்விக்கு, தனது வாழ்வின் மூலம் விளக்கம் கொடுக்கும் ஒப்பற்ற உயிர்களான ஓநாய்களைப் பற்றியும்,அந்த ஓநாய் குலத்தவரான மேய்ச்சல் நில மங்கோலியர்களைப் பற்றியும் ஒரு ஒப்பற்ற சித்திரமே இந்தப் புத்தகம்.ஓநாய்களின் வாழ்விலும், செயலிலும் இருந்தே வாழ்வைக் கண்டடைந்து வழிநடத்தியவர்கள் அந்த மேய்ச்சல் நில மக்கள்.
“அதிக அளவில் நிலமும் மக்களும் இருப்பதால் மட்டும் எவராலும் ஒரு யுத்தத்தை வென்றுவிட முடியாது. நீ ஒரு ஓநாயா அல்லது ஆடா என்பதைப் பொறுத்தது அது.”
“பொறுமை இல்லாவிட்டால் நீ ஒரு ஓநாய் இல்லை; நீ ஒரு வேட்டைக்காரன் இல்லை; நீ ஒரு ஜெங்கிஸ்கான் இல்லை.”
“நான் இதை என் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயற்சி செய்தபோது, என்னைக் கடிக்க வந்தது. ஓநாய்கள் நாய்களில்லை; அவை தம்மை மாற்றிக் கொள்வதைவிட இறந்து போய்விடும். ஒரு புலியைப் போலவோ, சிங்கத்தைப் போலவோ ஒரு சர்க்கஸில் ஒரு ஓநாய் செய்வதை நீ எப்போதாவது பார்த்திருக்கிறாயா? “
இப்படி ஓநாய்களின் ஒவ்வொரு நடவடிக்கையையும் பார்த்து, அதன் வழி வாழ்வையும், சரித்திரத்தையும் அமைத்துக்கொண்ட ஒரு மேய்ச்சல் சமூகம், அதனோடு முழுவதும் முரண்பட்ட, மேய்ச்சல் நிலத்தின் சூழல் புரியாத சீன விளைச்சல் நில சமூகத்தோடு போராடி, தன்னை இழக்கும் சோகத்தை மிக நெருக்கமாக பதிவு செய்கிறது இந்தப் புத்தகம் . விஞ்ஞானம் ஒவ்வொரு முறையும் பழமையோடு நடத்தும் போராட்டமும், அதில் பழமையை தழுவிய சமூகம் மாற்றத்திற்கு உள்ளாவதும் இயல்பே. ஆனால், இங்கோ புதுமையும் பெயரால், மாற்றத்தின் மறைவில், ஒரு சமூகம் வேறொரு சமூகத்தின் மீது நிகழ்த்தும் அடக்குமுறை துயரம் தோய்ந்த நிகழ்வுகளால் கட்டமைக்கப்படும் நிதர்சனம் அழுத்தமாக பதியப்படுகிறது.
“சீனாவின் கடைசிப் பேரரசர் அடைந்த துயரங்கள் பற்றி எல்லோருமே பேசுகிறார்கள்; ஆனால் கடைசி நாடோடி மேய்ப்பனின் துயரங்கள் அதைவிட மிக அதிகமென ஜென் நினைத்துக்கொண்டான். ஆயிரம் ஆண்டு கால சீன அரச பரம்பரை தூக்கி எறியப்பட்டதை விடவும் பத்தாயிரம் ஆண்டு கால மேய்ச்சல் நிலத்தின் அழிவை ஏற்பதென்பது எவ்வளவு கொடுமையான விசயம். ஒரு சமயத்தில் மிகுந்த ஆற்றலோடு இருந்த முதியவரின் உடல், இப்போது காற்றெல்லாம் வெளியேறி விட்டதைப் போல பாதியளவாகச் சுருங்கிவிட்டிருந்தது. அவருடைய முகச் சுருக்கங்களினூடாகக் கண்ணீர் வழிந்தோடியது.”
இவற்றுக்கு மாற்றாக, ஓநாய்களின் வாழ்வானது இந்த வன்முறைகள் நிகழ்த்தப்படும் போதும், சுதந்திரத்தையும், உரிமையையும் தொடர்ந்து எந்த சமரசமும் இல்லாமல் கடைசிவரை போராடி அடங்கியது, பிரமிக்கத்தக்க வகையில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
“வெகு நாட்கள் வரை, உணவும் அதற்காகக் கொல்லுவதுமே ஓநாய்களுக்கு முக்கியமான விசயமென்று ஜென் நினைத்திருந்தான்; ஆனால் உண்மையில் அதுவல்ல விசயம். மனித நடத்தைகள் பற்றிய புரிதல்களிலிருந்தே அவனுக்கு அப்படித் தோன்றியிருக்க வேண்டும். ஓநாய்களின் இருத்தலானது, உணவையோ, கொல்வதையோ நோக்கமாகக் கொண்டதல்ல; மாறாக, அவற்றின் புனிதமான சுதந்திரமும், சுயநிர்ணயமும், கௌரவமுமே அவற்றின் வாழ்க்கை நோக்கம்.”
அப்படிச் சமரசமில்லாத சுதந்திரம் என்பதை அறியாத இனக்குழு, அடக்குமுறைக்கு ஆட்படுவது காலம் காலமாக சரித்திரம் நமக்கு உணர்த்ததும் பாடமாக இருந்தாலும், அதைத் தங்கள் வாழ்வின் செய்தியாகவே ஓநாய்கள் நமக்கு உணர்த்துகின்றன.
அந்தப் பாடம் கற்காத எந்த ஒரு இனமும் எப்படி சமரசங்கள் மூலம் தங்கள் சுயத்தையும், சுதந்திரத்தையும் இழந்து, அடையாளமற்று, சமூகப்பெருவெளில் மூழ்கி கரைந்து போகிறது என்ற பாடத்தையும் இந்தப் புத்தகம் நமக்கு உணர்த்துகிறது. இது தனிமனித வாழ்விலும் உணர்த்தும் பாடம் ஒவ்வொருவரும் அறியப்படவேண்டிய விஷயம்!
“ஒரு மனிதன் அல்லது இனம், சரணடைவதற்கு முன்பாக மரணத்தைத் தேர்வு செய்யும் ஆன்ம பலத்தைக் கொண்டிருக்கா விட்டால், அடிமையாவதுதான் தவிர்க்க முடியாத விளைவாக இருக்கும். ஓநாய்களின் தற்கொலையெனும் ஆன்ம பலத்தை முன்மாதிரியாக மேற்கொள்ளும் எவரும் ஆளுமைமிக்க நாயகனாகலாம்; பாடல்களாலும் கண்ணீராலும் அவன் புகழ் பாடப்படும். தவறான பாடத்தைக் கற்றுக்கொள்வது, சாமுராய் அடக்குமுறைக்கே வழி வகுக்கும். சரணடைவதற்கு முன்பாக மரணம் என்ற ஆன்ம பலத்தை இழந்துவிட்டிருக்கும் எவரும் சாமுராய் அடக்குமுறைக்குப் பணியவே நேரிடும்’’
“ஆனால் ஒரு காலத்தில் உலகை உலுக்கிய குதிரைகளின் குளம்படிகள், மங்கோலிய மேய்ச்சல் நிலத்தை விட்டே விரட்டப்பட்டுவிட்டன. இப்போதெல்லாம் ஆடு மேய்ப்பர்கள் மோட்டார் சைக்கிள்களைப் பயன்படுத்துவதாகக் கேள்விப்பட்டேன்; வளமையின் அடையாளமாகத் தொலைக்காட்சியில் காட்டினார்கள். உண்மையில், ஓநாய்கள் மறைந்ததற்குப் பின்பு, மேய்ச்சல் நிலத்தால் குதிரைகளுக்கான உணவைத் தர முடியாததால் ஏற்பட்ட விளைவே இது.”
மாவோவின் “பெரும் கலாச்சார புரட்சி” எப்படி சமூக, சூழலியல் நிலைகளை கருத்தில் கொள்ளாமல் வன்முறையாக, எதேச்சதிகார முறையில், மாற்றங்களை திணித்தது, அதன் விளைவு என்ன என்பதை விமர்சிக்கும் புதினம் இது. அந்த வகையில், பல இடதுசாரிகள் இதை வலதுசாரி எழுத்து என்று புறந்தள்ளுவதை பார்த்தேன். அது உண்மையல்ல…
சூழலியலும் சமூகவியலும் எப்போது வலதுசாரியாயின? மாறாக எந்த மாற்றத்தின்போதும் கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கியமானவை அவை என்று உரத்து ஒலிக்கும் கலகக் குரல் தான் இது… அதைவிட, இந்த புத்தகம் கம்யூனிஸ சீனத்தில் பெரும் வரவேற்பை பெற்று, அதற்குப்பின் பிற நாடுகளில் வெளி வந்த ஒரு புத்தகம் என்பதே அப்படி அடிப்படை இன்றி கூறுபவர்களுக்கு பதிலாக அமையும்.
இந்தப் புத்தகத்தின் கடைசிப்பக்கம் கடக்கும் பொது கனத்த மனதோடு மட்டுமின்றி, மாற்றம் என்பது எதற்கானது ? அப்படி திணிக்கப்படும் மாற்றங்களின் மதிப்பு மற்றும் அதற்கு கொடுக்கப்படும் விலை ஆகியவற்றைப்பற்றிய கேள்விகளை நமது மனதில் தொடர்ந்து எதிரொலிக்கச் செய்கிறது.
அவையனைத்தையும் விட, என்ன விலை கொடுத்தாலும், தளைகளற்ற சுதந்திரம் என்பது விலைமதிப்பற்றது என்ற விதையை நம் மனதுள் ஆழ விதைத்துச்செல்வதே இதன் வெற்றி.
Comments
Post a Comment