கி.ரா. என்னும் நெருக்கம்.

 90களின் இறுதியில் தில்லியில் இருந்து வேலையாக, வடநாடு முழுதும், பயணமாகும் போது, என்னுடன் கூடவே பயணம் செய்யும் புத்தகங்களில் முதன்மையானது கி.ரா.வின் சிறுகதைகளே... மொழியறியா தேசங்களில், முகமறியா மனிதர்களுடன், புதுப்புது நிலப்பரப்புகளிலும் கூட, என்னோடு வசித்து, என் வேர்களுக்கு நீர் வார்த்தவை அவர் மொழியும், அது உயிர்ப்புடன் வைத்திருந்த அந்த கரிசல் மனிதர்களுமே...




அந்த அபிமானம் எனக்கு என்றுமே அவர் எழுத்துக்களுக்கு உண்டு... பிறகொரு காலத்தில் அவர் புதுவைக்கு நகர்ந்த பின் அவர் எழுத்துக்கள், குறிப்பாக சிறுகதைகள், மாற்றத்திற்கு உள்ளான போது, அந்த நெருக்கம் சற்றே நெகிழ்ந்த போதும், ஒரு முறை பழகிய அந்த கரிசல் மணம் மாறவே இல்லை. தொடர்ந்து அவர் எழுத்தில் அந்த மணத்தை உலகத்தின் வேறு வேறு பகுதிகளில் இருந்த போதும், அனுபவிப்பதும் சற்றும் குறையவில்லை.

அந்த வகையில், அவர் சிறுகதை தொகுதி ஒன்று கிண்டிலில் புதிதாக வந்தபோது, உடனே வாங்கிப் படிக்க ஆரம்பித்தேன். அவர் இலக்கிய வாழ்வின் நெடிய பரப்பில் படைத்து, வேறு வேறு கால கட்டங்களில் வந்த தொகுதிகளில் இருந்து தேர்ந்தெடுத்த 40 சிறுகதைகள் இந்தத் தொகுதியில் படிக்கக் கிடைக்கிறது. அவர் ஆரம்ப காலத்தில் படைத்த, பழம் மணிக்கொடி எழுத்து நடையில் வந்த கதைகளில் தொடங்கி, கோபல்ல கிராம கட்டம் தொட்டு, அவர் புதுவையில் இருந்த போது எழுதியவை சேர்த்து, வயது வந்தவர்களுக்கு என்ற தொகுதியில் முற்றுப் பெறுகிறது.
அப்படி சேர்த்த அனைத்துமே எனக்கு பிடித்தவை என்று கூற முடியாது. என் கருத்தில் முக்கியமானவை என்று தோண்டியவற்றை இங்கே பட்டியலிடுகிறேன்.

1.
வெள்ளைச் சேவலும் தங்கப் புதையலும்
புதையல் மீது மனிதர்களுக்கு உள்ள மோகமும், அது உறவுகளுக்குள் ஏற்படுத்தும் விளைவுகளும், அதன் நிலையற்ற தன்மையையும், மெல்லிய கிராமிய நகைச்சுவை இழையோட (Dark Comedy) சொல்லும் நுட்பம் தனியாக அவர் முத்திரையை பதிக்கிறது.

2.
அவுரி
கிராமிய விவசாய தற்கால வாழ்வில் இருக்கும் பிரச்சினையை படம் பிடித்துக் காட்டும் சிறுகதை இது... பிரச்சினைகளைப்ப பேசுவதால் வறட்சியான கதையல்ல இது...

"
அது ரொம்பச் சொகமான உழவு. கலப்பை பூமியிலெ முங்கி இருபுறமும் பொங்கி ‘மகுந்து’ விமுகிற அந்தக் கரிசல் மண்ணைப் பாத்துக்கொண்டே இருக்கலாம். அப்படி உழவு அமையிறதே அபூர்வம். உழவு பிடிக்கிறவனுக்கும் சந்தோஷம், மாடுகள்கூட உடம்பில் பிடிக்காமல் அசை போட்டுக்கொண்டே நடக்கும்!"

என்ற வரிகளில், ஒரு விவசாயி அனுபவிக்கும் சந்தோசத்தை, வாசிக்கும் நமக்கு மாற்றும் வித்தையை நிகழ்த்துகிறார்.

"
விவசாயங்கிற தொழில், அதிலும் கரிசல்காட்டு விவசாயங்கிற ஒரு தொழில் அழிஞ்சிக்கிட்டு வருது வேகமா. இது யார் கண்ணுலேயும் பட்டதாகத் தெரியலையே ஒரு தச்சாசாரி ஒரு நாக்காலி செய்தா, மரம் வாங்கின விலை, அவனோட உடல் உழைப்புக்கான கூலி இதை வச்சி ஒரு விலை சொல்வான். விலையைக் குறைச்சிக் கேட்டா கட்டாதுன்னு சொல்லிவிடுவான். சம்சாரியாலெ ஏன் அப்படிச் சொல்லமுடியலெ? செஞ்ச செலவுகளுக்கும் குறைச்சில்லெ பொருளை விக்க வேண்டியதிருக்கு. இந்த அநியாயத்துக்கு எப்பொ ஒரு முடிவு வரும்." என்ற வரிகளில், விவசாயிகளின் பிரச்சினையான தொழில் சமன்பாடு குறைபாட்டை ( unequal Terms of trade ) உரத்த குரலில் உரைக்கிறார்.

3.
நிலை நிறுத்தல்
4.
கதவு
5.
நாற்காலி

இவை மூன்றுமே கிட்டத்தட்ட சாகாவரம் பெற்றவையாய் நிலைத்துவிட்டவை... ஏழ்மையையும், சாதிய ஏற்ற தாழ்வுகளையும், கிராமிய மனிதர்களின் துயரங்கள், அவர்களுக்கு உள்ளே ஊற்றெடுக்கும் ஈரம் ஆகியவற்றை எள்ளலோடும் உருக்கத்தோடும் படம்பிடித்து காட்டுபவை.

6.
சிநேகம்
தொலைந்து போன சிறுவயது நடிப்பின் ஏக்கத்தை, அதன் சேர முடியாத வலியை மனதோடு ஒட்டவைக்கும் மந்திரம் இது. கதையில் வரும் ராமிக்கும், ராஜாவுக்கும் அல்ல, வாசிக்கும் அனைவருக்கும் இருக்கும் வலி தான்.

"
ராஜா தன்னையே பார்த்துக்கொண்டிருக்கிறான் என்பது ராமிக்குத் தெரியும்; தன்னைப் பார்க்கவே வந்திருக்கிறான் என்பதும் ராமிக்குத் தெரியும். ஆனாலும், அவள் ராஜாவின் பக்கம் பார்க்கவே இல்லை.

என்ன காரணம் என்று தெரியவில்லை; பக்கத்திலிருப்பவர்கள் பார்த்துவிடுவார்களோ என்று பயந்து, கண்களைத் துடைத்துக் கொள்ளும்போது, கீழ்க்கண்டவாறு சொன்னான் ‘சை’ கண்ணில் தூசி விழுந்துவிட்டது. அவன் கண்களைத் துடைத்துக்கொண்டதையோ அவன் அப்படிச் சொன்னதையோ அங்கு உண்மையில் யாரும் பார்க்கவுமில்லை; அதைக் கேட்கவும் இல்லை!"


7.
இல்லாள்
பிறந்த வீட்டின் சம்மதமின்றி புகுந்த வீட்டுக்கு வந்து, அதனால், இரு வீட்டுக்கும் ஏற்பட்ட பகையால் வலியை தனித்து அனுபவிக்கும் ஒரு பெண்ணின் வேதனை. மரணம் கூட இணைத்து வைக்க முடியாத வேதனை... இந்தக் கதை எனக்கு மிக நெகிழ்வானது...

8.
புவனம்
கைகூடாத, மெல்லிய, காதலா நட்பா என்று இனம்பிரிக்க முடியாத, படர்ந்து விலகிய உணர்வின் ஏக்கத்தை கூறும் கதை. சரி, தவறுகளைத் தாண்டி, வாசிக்கும் நமக்கு ஒரு வித மென்சோகம் வழிவது தவிர்க்க முடிவதில்லை.

9.
வேலை... வேலையே வாழ்க்கை
உண்மையில், மிக நுணுக்கமான இலக்கியம் என்று கூற வேண்டிய சிறுகதை இது....

"
கெங்கம்மா படுக்கையில் இல்லை; படுக்கையின் கதகதப்பு ஆறி ஜில்லிட்டிருந்தது. அவள் மாடுகளுக்குக் கூளம் போட்டுவிட்டு இன்னேரமெல்லாம் முற்றும் தெளித்து சாணிப்பால் கரைத்துக் கொண்டிருப்பாள். நாகையா புரண்டு படுத்தார். அடித்துப் போட்டதுபோல் மேலெல்லாம் ஒரு அசதி போர்த்திக்கொண்டிருந்தது."

"
பால் மாட்டுக்கு மட்டும்  தண்ணீர் காட்ட அவருக்குப் பொறுமை இருப்பதில்லை; அதை அவள்தான் காட்டி அடைக்கணும் . கெங்கம்மா, பால்மாட்டுக்கு 'ஒரு அஞ்சலில்' தண்ணீர் காட்டி விடுவாள். 'பசுமாடுகளே ரொம்ப நுட்பமுடையதுகள்'. நம்முடைய ஆத்திரப்படுதல், பொறுமையின்மை இதைகளை எப்படியோ தெரிந்துகொண்டு விடுகின்றன!  நிச்சயம் இவைகளுக்கெல்லாம் அவை பணிந்து போவதில்லை."

"
எல்லா குழந்தைகளும் வாங்கித் திங்க பருத்தி கொடுத்தனுப்பினாள். குத்துக்காலிட்டு முழங்காலைக் கட்டிக்கொண்டு உட்கார்ந்திருந்த புருஷனின் முதுகுப்புறமாக அருகே வந்து உட்கார்ந்துகொண்டு, குழந்தைக்குப் பால் கொடுத்தாள். நாகையாவின் மௌனம் அவளுள் புன்னகையை வரவழைத்தது. மெதுவாக புருஷனின் முதுகின் மேல் ஒருக்களித்துச் சாய்ந்துகொண்டு திரும்பி, அவருடைய முகத்தைப் பார்த்து சிரித்தாள். பதிலுக்கு அவர் நறுக்கென்று அவளை ஒரு கிள்ளு கிள்ளி வைத்தார். வலியால் முகத்தைச் சுளித்துக்கொண்டு அவளுடைய புஜத்தைப் பிடித்து தள்ளினாள். அவர் லம்பி, கிழே சாயாமல் கையை ஊன்றிக்கொண்டார். தாயார் தகப்பனாருக்கு இடையில் நடக்கும் இந்த விளையாட்டை என்ன என்று தெரியாமல், காம்பிலிருந்து முகத்தைத் திருப்பி அதுசயத்தோடு அவர்களைப் பார்த்தபோது, குழந்தையின் தோளின் மேல் பால் சொட்டியது."

இந்த வரிகளில் தொக்கி நிற்கும் அழகியல், அவரின் வேறு கதைகளில் எளிதாக காணாத ஒன்று... இந்தத் தொகுதியிலேயே சிறந்த கதை இதுதான் என்று எளிதாக அடித்துக்கூற முடியும்.

இந்தத் தொகுதியின் இறுதி பகுதி, அவரின் வயது வந்தவர்களுக்கான கதை தொகுதியைச் சேர்ந்தது... ஆபாசமின்றி, விளிம்பில் நின்றும் , வெளிப்படையான வார்ததைகளிலும், இலை மறைக்காயான அர்த்தங்களுடனும், ஊசலாடும் கதைகள்.

மொத்தத்தில், பரவலான ரசனைகளை திருப்திப்படுத்தும் தொகுப்பு.... அவற்றில் கரிசல் மண் வாசம் கொண்ட கதைகள் மாத்திரம், ஒரு பழக்கப்பட்ட கள் போல தனியாக மயக்கி இருப்பதை மறுக்க முடியாது.

Comments

Popular posts from this blog

பாலை மனம்

தமிழின் புதிய வெளிகள்

Deccan in Dazzling light