கட்டஞ்சாயாவும், பருப்பு வடையும் மற்றும் உடைக்கப்படாத அணையும்.

 ஒரு கட்டஞ்சாயாவும் பருப்பு வடையும் சேர்ந்து உண்ணும் சுவை தற்கால தமிழ் நாவுக்கு பழக்கப்பாடாத ஒன்றென்றாலும், அது கொண்டு வரும் கேரள மண்ணின் வாசமும் சுவையும், பழகிய பின், அது உள்ளொடு ஓடும் ஒரு உணர்வாகவே எப்போதும் இருக்கும். அது போன்றதுதான் கேரள இலக்கியங்களும். அதை படிக்கும் தமிழ் வாசகர்களுக்கு அது முதலில் சற்று புரிபடாததாகவும், எளிதில் பிணைந்து கொள்ள முடியாத கதையோட்டமாகவே இருந்தாலும், அதன் களமும், அந்தக் களம் கூடிவரும் மண்வாசனையும், அதன் மனிதர்களும் பழகியபின், திரும்பத்திரும்ப நினைவில் ஒட்டிக்கொண்டு ஓடுவது தவிர்க்க முடியாது. அந்த உணர்வை, சுவையை, தமிழ்ப் படுத்த முயற்சிக்கும் போது தான் , அதன் உயிரோட்டம் செத்துப் போய்விடுகிறது.



நல்ல வேலையாக அப்படிப்பட்ட எந்த தவறையும் இந்த மொழிபெயர்ப்பாளர், ஜயசங்கர் மேனன் இங்கு செய்யவில்லை. அதனால் சில நேரங்களில், மலையாளத்தில் படிப்பது போலவே உணர்வு வருவதும் தவிர்க்க முடியவில்லை.

இதை எழுதிய, தம்பி அந்தோணி, தமிழுக்கு முழுதும் அந்நியமல்ல. தமிழில் பல படங்களில் நடித்த பிரபல நடிகர், பாபு ஆன்டனியின் அண்ணன் என்று சொன்னால் எளிதில் விளங்கும். இவரும், சினிமா நடிகர், கதாசிரியர் என பன்முகம் கொண்டவர்.

ஒரு நல்ல இலக்கியம் குறிப்பாக புதினம் எதோ ஒரு முடிவை நோக்கி, ஒரு முடிச்சை அவிழ்க்கும் புதிர்போல செல்ல வேண்டுமா என்ன? இலக்கில்லாமல், மனிதர்களின் வாழ்வையும், அதில் வரும் நிகழ்வுகளை மட்டுமே சுவாரசியமாக காட்டிச் செல்வது நல்ல இலக்கியம் இல்லையா என்ன?

என்னைப்பொறுத்தவரை அதுவும் ஒரு இலக்கியம் தான். அதை கி.ரா, கோபல்ல கிராமத்திலேயே நமக்கு சொல்லிச்சென்றுவிட்டார். அதனால், இந்தப் புதினம், என்னைப் பொறுத்தவரை ஒரு குறிப்பிடத்தக்க மொழிபெயர்ப்பாகும்.

பல வருடங்களுக்கு முன், பொட்டேகாட்டின் "விஷக்கன்னிகை" படித்தபோது ஏற்பட்ட பரவச உணர்வு, அதைத் தொடர்ந்து ஜெயமோகனின் "காடு" பின்னால் படிக்க நேர்ந்த பொது, சுவையான மாம்பழத்துக்கு பதில், ஒரு மட்டமான அழுகல் பழம் உண்ட ஏமாற்றம் தந்தது.

இந்தக் கதையில் வரும் கூனம்பாறை மனிதர்கள், ஒரு கட்டுக்குள் அடங்காதவர்கள். தங்கள் மனம் அழைத்துச்செல்லும் வாழ்வில், விருப்பம் போல், நடமாடுபவர்கள். அந்த வாழ்வின், சுகம், துக்கம் அனைத்தையும் அனுபவித்து, மெல்லிய நகைச்சுவையுடன், கடந்து போய்விடுபவர்கள்.

இடுக்கியின், பீர்மேட்டின் பின்னணியில், ஒரு சிறு நகரமும் இல்லாமல், கிராமமும் இல்லாமல் இருக்கும் ஒரு இடத்தில் இருந்து அதன் மணத்தோடு உலாவுபவர்கள். அவர்களைக் கொண்டு தற்கால அரசியல், சமூக நிகழ்வுகளை, மெல்லிய எள்ளலோடு நமக்குத் படைத்திருக்கிறார் தம்பி அந்தோணி.

கேரள தமிழக தற்கால பிரச்சினையான, குறிப்பாக இடுக்கி மற்றும் தேனி மாவட்டங்களின் அடிப்படை முரண்பாடான முல்லை பெரியாறு அணைப் பிரச்சினையை, சுற்றி வருகிறது இந்த புத்தகம். அதை உடைத்து / கைவிட்டு புது ஆணை கட்டவேண்டும் என்ற கேரள அரசியல் நிலைப்பாட்டை வலியுறுத்தும், கேரள அரசியல் சார்பாக எழுதியிருக்கும் நூல் இது. தற்கால கேரள அரசியலில் இது ஒரு முக்கிய பிரச்சினையாக, திரும்பத்திரும்ப கட்டமைக்கவும், அது சம்பந்தமாக இருக்கும் கேரள வெகுஜன பயத்தை கிளறி விடும் முயற்சி இதிலும் காணப்படுவது சலிப்படையச்செய்கிறது. அது மாநில நீர் மேலாண்மை மற்றும் இரு மாவட்டங்களின் வாழ்வாதாரப் பிரச்சினையாக இல்லாமல், தமிழர், மலையாளிகளுக்கு இடையேயான அடிப்படை பிரச்சினையாக காட்டும் முயற்சி தெளிவாக கைக்கொள்ளப்பட்டிருப்பது சலிப்படைய செய்கிறது. அதைத்தாண்டி, இரு மாநில மக்களின் அச்சங்கள், கவலைகள், போன்றவற்றை நியாயமாக அணுகும் முயற்சிகளை அரசியல் தாண்டி இலக்கிய உலகில் எடுக்கப்படவேண்டிய அவசியத்தை தவிர்த்து, திரும்பத் திரும்ப ஒரு சாரருக்கு அச்சம் ஏற்படுத்தும் அவசியம் என்ன என்ற கேள்வி எழுகிறது. இரு மாநில மக்களுக்கும் ஒரு புரிதலை ஏற்படுத்தும் முயற்சி ஏதும் எடுக்கப்படாதா என்ற கேள்வி பதிலளிக்கப்படாமலே செல்கிறது. அந்த வகையில், இந்த மொழிபெயர்ப்பின் நோக்கம் என்ன என்ற கேள்வி எழுவது தவிர்க்க முடியவில்லை.

Comments

Popular posts from this blog

பாலை மனம்

அன்பே மருந்து

Deccan in Dazzling light