வில்லங்க விளையாட்டுக்கள்

 விவசாயிகளின் போராட்டத்தின் முடிவில், மூக்கில் வழியும் ரத்தத்தை துடைத்தபடி, அடுத்த அடக்குமுறைக்கு தயாராகிக்கொண்டிருக்கிறது இந்துத்துவ தரப்பு. தொடர்ந்து பலவகையிலும், விவசாயிகளின்  மீது வரலாறு காணாத அடக்குமுறை, பொய்ப்பிரச்சாரம் என்று மாறிமாறி கட்டவிழ்த்தும் மண்ணைக்கவ்விய நிலையில்,  அது தந்த  அதிர்ச்சியில் இருந்து எழுந்து அடுத்த அடக்குமுறைக்கு அது  தயாராகிக் கொண்டிருக்கிறது.
அருஞ்சொல்லில் வெளிவந்த அருணா ராயின் கட்டுரையில் குறிப்பிட்டது போல், சமீபத்தில் ஹைதராபாதில் உள்ள தேசிய காவல் துறை அகாடமியின் பயிற்சி முடிப்பு அணிவகுப்பு நிகழ்ச்சியில் அஜித் தோவல் தன உரையில் சமூக செயல்பாட்டாளர்கள் மீது “நான்காம் தலைமுறைப் போர்" என்று சூசகமாக குறிப்பிட்டுள்ளார். இதன் விளைவு இன்னும் சிலநாட்களில் தெரியவரும் என எதிர்பார்க்கலாம்.
சிலவருடங்களாகவே வெகுஜன வாழ்விலும், சமூக செயல்பாட்டாளர்களின்  மீதும் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் அடக்குமுறையும், வரலாறு காணாத பொய்ப்  பிரச்சாரங்களும் ஒரு தொடர் நிகழ்வாகவே இருந்துள்ளது.
நண்பர் அரவிந்தன் சிலநாட்களுக்கு முன் டிரம்ப்பின் முன்னெடுப்புகளும், அரசியல் செயற்பாடுகளையும் பற்றி அமெரிக்க அரசியல் ஆராய்ச்சியாளர், பிரான்சிஸ் ஃபுகுயாமாவின் கருத்துகளைப்பற்றி குறிப்பிட்டிருந்தார். அரவிந்தனின் பார்வை அமெரிக்க சமூகத்தின், அதன் அரசியல் நடவடிக்கைகளின் மீதான பார்வையாக இருந்தாலும், அதில் ட்ரம்பின் அமெரிக்க  நடவடிக்கைகளின் பின் உள்ள நோக்கமும், அதில் உள்ள உத்திகளையும், அதனோடு இருந்த வெளிநாட்டுத் தொடர்பையும், ஒத்திசைவுயும் சுட்டியது.

அது தொடர்பாக ஸ்டான்போர்டு பல்கலைக்கழகம் வெளியிட்ட, ஃபுகுயாமா  மற்றும் சில குறிப்பிடத்தக்க சமூக, அரசியல் ஆராய்ச்சியாளர்கள் எழுதிய ஒரு வெள்ளை அறிக்கையை படிக்க நேர்ந்தது. அது முக்கியமாக ஐரோப்பிய மற்றும் அமெரிக்க சமூகத்தின் மீதான பார்வையுடன்   போன வருடத்தின் ஆரம்பத்தில் வெளியிடப்பட்டது என்ற போதும், இந்துத்துவ அரசியல் நடவடிக்கைகளை விளக்கும் வகையில் வருவதால் அது  ஒரு முக்கியமான ஆவணமாகும்.  தொடர்ந்து அதைப்பற்றிய உரையாடல்கள் பொதுவெளியில் நிகழ வேண்டும் என்ற நோக்கில் இதை எழுதுகிறேன்.


இந்த வெள்ளை அறிக்கையின் நோக்கம் உலகளவில் கடந்த சிலவருடங்களாக வெகு ஜன அரசியல் என்ற பெயரில் நிகழ்ந்து வரும்  தீவிர வலதுசாரி அரசியல் எழுச்சி பற்றியதாகும். எவ்வாறு அவை அனைத்தும் ஒரே மாதிரியான உத்திகளின் வழியாக ஜனநாயக சமூகங்களுக்கு குழிபறித்து, அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றுவதுடன், தொடர்ந்து அடக்குமுறையை பயன்படுத்தி, தங்கள் அதிகாரத்திற்கு எதிரான எதிர்ப்புகளை அடக்குகின்றன என்பதை விரிவாக இந்த அறிக்கை அலசுகிறது.


Michael Mc-Faul

Didi Kuo

Anna Grzymala-Busse

Francis Fukuyama

ஜனநாயக அமைப்பில் உள்ள சில ஓட்டைகளையும், பலவீனங்களையும் பயன்படுத்தியே இந்த வலதுசாரி இயக்கங்கள் தங்களை நிலைநிறுத்திக்கொள்கின்றன. குறிப்பாக ஜனநாயகத்தின் மூன்று பலவீனங்களை அவை தொடர்ந்து குறிவைக்கின்றன.

முதலாவதாக, அரசியல் கட்சிகளின் தேர்தல் அமைப்பின் மீதான அடைப்படை நம்பிக்கை. பொதுவாகவே, தேர்தலுக்குப் பின்னான காலகட்டத்தில், தோற்ற கட்சிகள், வென்ற கட்சிகளின் மீது தேர்தல் நடவடிக்கை சம்பந்தமாக பல்வேறு குற்றச்சாட்டுகளை அள்ளி வீசினாலும், அடிப்படையில் அடுத்த தேர்தலை எதிர்நோக்கியும், மறுபடியும் வெல்வோம் என்ற நம்பிக்கையினாலும் மக்களின் அடிப்படைப் பிரச்சனைகளை மனதில் கொண்டும் களமாடத் தொடங்கிவிடுகின்றனர். வெற்றி பெற்ற கட்சியும் கூட ஆரம்பத்தில்  முறையற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டாலும், அடிப்படையில் தேர்தல் அமைப்பை சீர்குலைக்கும் வேலைகளில் அதிகம் ஈடுபடுவதில்லை. அதற்குக்  காரணம், நாளை காட்சிகள் மாறும் போது தாங்களும் தோல்விபெற்ற பக்கம் நிற்கவேண்டியது இருக்கும் என்ற பயம் தான். இதுவே தேர்தல் அமைப்பின் இயல்பு. ஆனால் தொடர்ந்து, நம் நாட்டில், பொது ஜன எண்ணத்தில், அடிப்படையில் ஒருவருக்கொருவர் ஊழலில் பங்கு கொடுத்துக்கொள்வர், அதனால் எதுவும் நிகழாது என்ற வெறுப்பு நிலை தொடர்ந்து ஊட்டப்பட்டுக் கொண்டே வந்திருக்கிறது.

அடுத்து, அரசாங்கத்தின் வெளிப்படையான தன்மை மற்றும், தகவல் அறியும் வழிமுறைகள். தகவல் அறியும் சட்டம் சட்டம் வரும்முன்பிருந்தே, பல  வகைகளில், பத்திரிக்கைகளின் வழியாகவும், NGO போன்ற முறைசாரா மற்றும் முறை சார்ந்த இயக்கங்களின் செயல் பாடுகள் மூலமாவும், அரசாங்கத்தின் ஊழல்களும் முறைகேடுகளும் வெளிவருவது இயல்பாக நடப்பது தான். குறிப்பாக தகவல் அறியும் சட்டம் வந்த பின்பு, அது சாமானியரின் ஜனநாயக உரிமைகளில் மிகப் பெரிய தாக்கத்தை உருவாக்கியது. அதை விரும்பாத ஆளும் கட்சிகள், அப்படி களமாடுபவர்களின் மீது பலவித தாக்குதல்களையும், திரைமறைவு  சமரச நடவடிக்கைகளையும் செய்து வந்தன. ஆனால், அடைப்படையில் அந்த ஜனநாயக உரிமையை ஒரு போதும் அவை தடை செய்யவில்லை. ஆனாலும், அப்படி களமாடுபவர்களின் மீதும், கட்சிகளின் மீதும் ஒரு வித ஊழல் பிம்பம் தொடர்ந்தது. பொதுஜன எண்ணவோட்டத்தில் இருந்த அந்த ஒருவித  அவநம்பிக்கையை, ஊடகங்களின் வழியாக, கடந்த  10-20 ஆண்டுகளாகவே  தொடர்ந்து ஊதிப் பெரிதாக்கப்பட்டு வந்துள்ளது.

அடுத்தது, பொதுவாகவே ஜனநாய கட்சிகளில் காலப்போக்கில் ஒரு மெத்தனமும், அலட்சியமும் சேர்ந்து, அவை மீது ஊழல் படிந்த ஒரு தோற்றத்தை உருவாக்கி விடுகிறது. பொதுவாக அப்படி நிகழும் பொது, கட்சியில் ஒரு பிளவோ, கொள்கை தூய்மையுடன் புதிய கட்சியோ உருவாகி மக்களின் நம்பிக்கையை பெற போராடுவதும், வெல்வதும் ஜனநாயக இயல்பு. ஆனால், வெகு காலமாகவே அப்படி நடக்கும் நிகழ்வுகளின் மீது சேறு இறைப்பதும், அந்த நிகழ்வுகளும் வெளிப்படையற்ற தன்மையுடனும் நிகழ்வது வழமையாகிவிட்டன. ஆகவே அவற்றின் மீதான பொதுசன

நம்பிக்கை குறைந்தே வந்துள்ளது. குறிப்பாக தெருவில் இறங்கிப் போராடுபவர்கள் மீது திட்டமிட்டு மோசமான பிம்பம் கட்டமைக்கப்பட்டு வந்துள்ளது.

தீவிர வலது சாரி அமைப்புகள், ஜனநாயக அமைப்புகளை சீர்குலைக்க மேற்கூறிய அடிப்படை முரண்பாடுகளைத் தான் கையில் எடுத்துக் கொள்கின்றன.

முதலாவதாக முறைசார்ந்த அமைப்புகளான, நீதிமன்றம், சட்டசபை, நாடாளுமன்றம் ஆகியவற்றின் மாண்பை திட்டமிட்டு பொய் பிரச்சாரம் மற்றும் அவதூறுகள் வழியே கரைத்துவிடுகின்றன. முறைசாரா அமைப்புகளான பொது ஜன அமைப்புகள், கட்சிகள் ஆகியவற்றின் மீது வன்முறையை கட்டவிழ்த்து விடுவதன் மூலமும், தங்கள் மிகப்பெரிய தொழிநுட்பப் பிரிவின் பலம் கொண்டு, பரப்ப இயலும் பொய்யான ஆதாரங்கள், அவதூறுகள் வழியேயும் அவற்றின் இருப்பை கரைத்துவிட முயல்கின்றன. சமீபத்தில் விவசாயிகளின் போராட்டத்தில் கூட அதுவே நடந்தது. அதற்கு முன்பாகவே, நீதி மன்றங்கள், சிபிஐ போன்ற அடிப்படை அதிகார அமைப்புகளை தங்கள் ஆதரவு அமைப்பாக மாற்றிக்கொண்டதும் நிகழ்ந்தது.

இரண்டாவதாக தாங்கள் செய்யும் நாசவேலைக்கு தங்களுக்கு தேவையான பலத்தை சேர்க்க , மக்களை பிரித்து, சிறுபான்மையினர், சமூக விளிம்பு நிலை மக்கள் ஆகியவர்களை தொடர்ந்து தீயவர்களாக கட்டமைத்து, பெரும்பான்மை சமூகத்தை தங்கள் பக்கம் இழுத்துக்கொள்கின்றனர். அதை தொடர்ந்து, அதை தக்கவைத்துக் கொள்ள, தொடர்ந்து விஷப்பிரச்சாரங்களையும் அவதூறுகளையும் தங்களுக்கு ஆதரவான ஊடகங்கள் வழியாக கட்டவிழ்த்து விடுகின்றனர். CAA சட்டத்தை அவர்கள் கையில்  எடுத்ததையும் அதன் எதிர்ப்புப் போராட்டத்தில் அவர்கள் எப்படி நடந்து கொண்டார்கள் என்பதையும்  பார்த்தால் இதைப்புரிந்து கொள்ளமுடியும்.

மூன்றாவதாக தேர்தல் அமைப்பின் மாண்பையும், அதன் வெளிப்படைத் தன்மையையும் குலைத்து, அதை தங்களின் ஆதரவு அமைப்பாக மாற்றிக்கொள்வது. தற்போதய ஒன்றிய அரசு, பதிவியேற்றவுடன் முக்கியமாக செய்தது, புதிய தேர்தல் பாண்டுகளை கொண்டுவந்து, தேர்தல் நிதி வழங்கும் செயல்பாடுகளை வெளிப்படையற்றதாகவும், ஆளும் தரப்புக்கு முற்றும் சாதகமாகவும் மாற்றியதுதான். அதன் வழியே மற்ற கட்சிகளை இல்லாமல் செய்யும்  செயலை முனைப்புடன் செய்தது. மேலும் தேர்தல் சமயத்தில் நடந்த வரலாறு காணாத அவதூறும், பொய் செய்திகளும், பிரதமர் முதற்கொண்டு அனைத்து அரசு செயல்பாடுகளும் தேர்தலை நோக்கியே இருந்ததும் கண்கூடு.

இந்தியாவைப் பொறுத்தவரை செயல்முறைகள் மட்டும் வேறாக இருந்தாலும், இவையனைத்தும் வலதுசாரி அமைப்புகள் உலகம் முழுவதும் ஒன்றுக்கொன்று ஒன்றிணைந்து ஒத்திசைவாய் செய்யும் உத்திகள்தான் என்பதையும், அவர்களின் உத்திகள் ஒன்றாகவே இருப்பதையும் ஐரோப்பாவிலும், அமெரிக்காவிலும் நடந்த நிகழ்வுகள் வழியே இந்த வெள்ளை அறிக்கை உறுதி செய்கிறது.

தலையாவதாக, எதிர்க்கட்சிகளும் மக்கள் சமூகங்களும் இணைந்து, சரிந்து போன ஜனநாயக அமைப்புகளை மீட்டெடுப்பதும், பலப்படுத்துவதும் மிக அவசியம். அதைச்செய்ய, அதன் தொடர்ச்சியாக, மக்களின் நம்பிக்கையை பெற எதிர்கட்சிகள் செய்ய வேண்டிய மூன்று எதிர்வினைகளை இந்த அறிக்கை குறிப்பிடுகிறது.

முதலாவதாக,  கட்சிகளின் கொள்கைகள் மக்களின் நேரடிப்பிரச்சினைகளை பேசவேண்டும். அவர்களின் முழக்கங்கள் மக்களின் அடிப்படை பிரச்சினை சார்ந்ததாக இருக்கவேண்டும். மேலும் தங்களுக்குள் உள்ள வேறுபாடுகளை ஒத்திவைத்து, மக்களின் நலம் சார்ந்து தங்களுக்குள் கூட்டணி அமைத்து இயங்கவேண்டும். அரசியல் வெளிப்படைத்தன்மை நோக்கி அவர்கள் செயல்பாடுகள் இருக்க வேண்டும்.

இவை அனைத்தும் பொதுவான சிந்தனைகளாக இந்த அறிக்கையில் முன்வைக்கப்பட்டாலும் நமது நாட்டில் உள்ள ஆளும் இந்துத்துவ தரப்பின்   நடைமுறையில் இருந்தும், அவர்களின் பலம் மற்றும் மற்றும் பலவீனங்களின் அடிப்படையில் படிப்பினைகளும், உத்திகளும் கடைபிடிக்கப் படுவதும், அதற்கு முன் அதைப்பற்றிய வெளிப்படையான உரையாடல்களும் அவசியம்.

அதைத்தான் ஒரு வருடமாய் தெருவிலிறங்கி, பல்வேறு அடக்குமுறைகளையும், அவதூறுகளையும் எதிர்கொண்டு, பல தியாகங்களுக்குப் பின், இந்த நாட்டின் எளிய விவசாயிகள் நமக்குக் கூறிச் சென்றிருக்கும் செய்தி.


Comments

Popular posts from this blog

பாலை மனம்

அன்பே மருந்து

Deccan in Dazzling light