புதிய தலைமுறை மின் வாகனங்களும் அவை எழுப்பும் கேள்விகளும், சந்தேகங்களும்.
உலகத் தானியங்கித் துறையில் ஒரு பெரும் திருப்பமாக, மின்சார பேட்டரியால் இயங்கும் எலக்ட்ரிக் வாகனங்கள் இப்போது பிரபலமடைந்து வருகின்றன. தமிழகம் உள்பட பல மாநிலங்களில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டுள்ளன. ஆனால், இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் பல விபத்துகள் ஏற்படுவதாக ஊடகங்களில் வரும் செய்திகள் கவலையளிப்பவையாக உள்ளன.
2022 ஆம் ஆண்டு,
மார்ச் மாதம் 26ம் தேதி, கவுஹாத்தியைச் சேர்ந்த பல்வந்த் சிங் ஒரு எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்கினார். அதை
அவர் மகன் ஓட்டிச் சென்ற போது, விபத்து நிகழ்ந்தது.
சாலையில் ஒரு வேகத்தடையை எதிர்கொண்ட அவர் மகன், பிரேக் பிடிக்க முயற்சித்த போது, எதிர்பாராமல்
வண்டி வேகமெடுத்து, தூக்கிவீசப்பட்டு விபத்துக்குள்ளானதாக
பல்வந்த் குறிப்பிடுகிறார். விபத்தில் படுகாயமடைந்த தன் மகனை, பல்வந்த் உடனடியாக கவுஹாத்தியில்
இருந்து மும்பைக்கு விமானம் மூலமாக அழைத்துச் சென்று சிகிச்சை அளித்தார். அங்கே அவரது
மகனுக்குப் பலகட்ட அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டன. அதன் பின்னரும், விபத்தில் பலத்த
சேதமடைந்த இரு கைகளும் இயல்பு நிலைக்குத் திரும்புமா என்பது கேள்விக்குறியாக இருப்பதாக
தகவல்கள் தெரிவிக்கின்றன.
வாகனத்த்தின்
இயக்கத்தில் ஏற்பட்ட சிக்கலால் இந்த விபத்து நடந்ததால், சிகிச்சைக்கு வாகன நிறுவனமே
பொறுப்பேற்க வேண்டும் என பல்வந்த் கோரினார்.
ஸ்கூட்டரை வாங்கும்போது, நுகர்வோருக்குத் தேவைப்பட்டால், வாகனத்தின் இயங்குநிலைத்
தகவல்கள் (operational runtime data) தரப்படும் என ஸ்கூட்டரை உற்பத்தி செய்த நிறுவனம்
கூறியிருந்தது. எனவே, விபத்து எவ்வாறு நடந்தது என்பதை அறிந்து கொள்ள, வாகனத்தில் இருந்து
சேகரிக்கப்பட்ட இயங்குநிலைத் தகவல்கள் வேண்டும் என பல்வந்த் கேட்டிருந்தார்.
இயங்குநிலைத்
தகவல்கள் என்பது, எலக்ட்ரிக் ஸ்கூட்டர் நிறுவனங்கள் புதிதாக அறிமுகப் படுத்திய ஒரு
சேவையாகும். எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் பல்வேறு உப இயந்திரங்கள் இயங்குவதைக் கண்காணித்து,
தரவுகளைப் பல்வேறு மானிகளின் (Sensors) வழியாகப் பெற்று, ஸ்கூட்டர் நிறுவனம் தனது தகவல்
சேமிப்பு தொகுப்புகளில் (cloud storage) சேமித்து வைக்கும் என்றும், தேவைப்படும் போது
நுகர்வோருக்கு உபயோகமாகும் வகையில் அவற்றைப்
பெற்றுப் பயன்படுத்திக் கொள்ள முடியும் என்றும்
அந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர் உற்பத்தி நிறுவனம் கூறியிருந்தது.
ஆனால், பல்வந்த்
கேட்டபோது, இயங்குநிலைத் தகவல்களை அந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர் உற்பத்தி நிறுவனம் அவருக்குக்
கொடுக்கவில்லை. மாறாக, விபத்து நடந்து ஒரு மாதம் கடந்தபின், விபத்து தொடர்பான விரிவான
மறுப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அந்த அறிக்கை, வாகனத்திலிருந்து சேகரிக்கப்பட்ட
இயங்குநிலைத் தகவல்களின் அடிப்படையிலானது என அந்நிறுவனம் கூறியது.
மறுப்பு அறிக்கையில்,
வாகனத்தின் இயங்குநிலைத் தகவல்கள் இணைக்கப்பட்டிருக்கவில்லை. வாகனத்தின் இயங்குநிலைத்
தகவல்கள், நடுநிலையான நிபுணர்களுக்குக் கிடைக்கும் சாத்தியமும் இல்லை எனத் தெரிய வருகிறது.
தொடர்ந்து சமூக
வலைதளத்தில் அந்த அறிக்கையைப் பற்றி பல்வந்த் எழுப்பிய வினாக்களுக்கு, கம்பெனி தரப்பிலிருந்து
அவரின் வாயை அடைக்கும் வகையில் கோர்ட் நோட்டீஸே பதிலாக வந்துள்ளதாகத் தெரிகிறது. எலக்ட்ரிக்
ஸ்கூட்டர் உற்பத்தி நிறுவனத்தின் இந்த நடவடிக்கைகள், கேள்விகளுக்கான திருப்தியான விளக்கங்களைத்
தருவதற்கு பதிலாக மேலும் சந்தேகங்களையே எழுப்புகிறது.
அண்மைக் காலங்களில், பல்வேறு நிறுவனங்களின்
எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களில், பேட்டரி வெடித்துத் தீப்பிடித்தல், அதனால் பல நுகர்வோருக்கு
ஏற்பட்ட காயங்கள் என்பன தொடர் செய்திகளாக வந்துள்ளன. பேட்டரிகள்
அளவுக்கு மீறி சார்ஜ் செய்யப்படுவதினால், அவை
சூடாகி வெடித்துவிடுகின்றன என்று வாகனத்
தயாரிப்பாளர்களின் தரப்பில் இருந்து பதில் கூறப்படுகிறது.
ஆனால், கவுஹாத்திப்
பிரச்சினையில் சம்பந்தப்பட்ட வாகன நிறுவனம் அளித்த அறிக்கை, வேறு சில முக்கியமான கேள்விகளை
எழுப்புகிறது. அவற்றைப் புரிந்துகொள்ள, இந்த நவீன எலக்ட்ரிக் வாகனங்களின் இயங்கு தகவல்
பரிமாற்றச் செயல்பாடுகளை நாம் அறிந்து கொள்ளுதல் அவசியமாகிறது.
அடிப்படையில்,
இந்தப் புதிய தலைமுறை எலக்ட்ரிக் வாகனங்கள், ஸ்மார்ட் போன்களை ஒத்தவை. ஸ்மார்ட் போன்களைப்
போலவே இவற்றிலும் பல்வேறு அடிப்படை வாகனச் செயல்பாடுகள், மென்பொருள் வழி நெறிப்படுத்தப்படுகின்றன.
வாகனச் செயல்பாடுகள் தொடர்பான தகவல்கள், சேமிப்புத் தொகுப்பிடத்தில் (cloud storage)
சேமிக்கப்படுகின்றன. ஆனால், இது தொடர்பான ஒரு தெளிவான விளக்கத்தை, நிறுவனங்கள் நுகர்வோருக்கு
அளிப்பதில்லை. சாமானியர்களுக்கு விளங்காத வார்த்தைகளில் அவை வாகனம் தொடர்பான கையேடுகளில்
இடம் பெறுகின்றன. இவை இந்த எலக்ட்ரிக் வாகனங்களின் மீதான கவர்ச்சியைக் கூட்டி, விற்பனையை
அதிகரிக்கும் ஒரு உத்தியாகப் பயன்படுத்தப்படுவது போலத் தோன்றுகிறது.
ஆகவே, முதலில் இந்த சேவைக்கான கணினி வலை அமைப்பைப்பற்றிய
அடிப்படைகளை நாம் அறிந்து கொள்ளவேண்டும்.
இதன் அடிப்படை வடிவமைப்பில் நான்கு முக்கிய உறுப்புகள்
உள்ளன.
- எலக்ட்ரிக் வாகனம் - ஸ்மார்ட் போனைப் போலவே இதில் பொருத்தப்பட்டிருக்கும்
மானிகளின் (sensor) மூலம், வாகனத்தின் வேகம், பிரேக்கிங், என்ஜின் வெப்பநிலை,
GPS பயன்பாடு, போன்ற பலவிதமான செயல்பாட்டுத்
தரவுகள் கண்டறியப்பட்டு, அவை தகவல் சேமிப்புத் தொகுப்புக்கு (Cloud Storage) அனுப்பப்படும்.
அதை சாத்தியமாக்கும் வகையில், இதில் சிம் கார்டு அல்லது வேறு வகையான இணைய இணைப்பு
செயல்படுத்தப்பட்டிருக்கும்.
- வாகனம் மற்றும் அதன் இயக்கம் தொடர்பான தகவல்கள் சேகரிக்கப்பட்டு, அதன்
சேமிப்புக்கும் மேலாண்மைக்கும் அமைக்கப்படும் பெரும் சேமிப்புத் தொகுப்பு. இந்த
சேமிப்புத் தொகுப்பு, தயாரிப்பு நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும்
- பராமரிப்பு மேலாண்மை சர்வர் - பொதுவாக இது போன்ற மின் வாகனங்களை வாங்கும்போது,
கூடவே ஒரு வருடம் அல்லது குறிப்பிட்ட காலகட்டத்துக்கான பராமரிப்பு ஒப்பந்தமும்
சேர்த்தே விற்கப்படும். பராமரிப்பு ஒப்பந்த காலம் முடிந்தவுடன், அதை ஒவ்வொரு முறையும்
வாகன உரிமையாளர் புதுப்பிக்க வேண்டும்.
அப்படித்
புதுப்பிக்கும் போது, வண்டிகளின் உள்ளே இயங்கும் மென்பொருள், தானியங்கி முறையில் மேம்படுத்தப்படும்.
புதுப்பிக்க தவறினால், அந்த மேம்பாடு நிகழாது. அதாவது, பராமரிப்புத் திட்டத்தை புதுப்பிக்காத
பெரியசாமியின் வண்டிக்கு மேம்பாட்டை வழங்காமல் இருக்கவும், புதுப்பித்த சின்னசாமியின்
வண்டிக்கு மேம்பாட்டை தொடர்ந்து வழங்கவும் இந்தத் தளத்தில் இருந்து தகவல் சேமிப்புத்
தொகுப்புக்கு ஆணை செல்லும்.
- நிறுவனத்தின் பகுப்பாய்வு சர்வர் – இதுதான் இத்தொழிலின் மூளை. நிறுவனத்தின்
கட்டுப்பாட்டில் இயங்கும் தகவல் சேமிப்புத் தொகுப்பில் உள்ள தகவல் மற்றும் தரவுகளைக்
கொண்டு, பல்வேறு தகவலறிக்கைகளையும், முடிவுகளையும், இந்த பகுப்பாய்வு சர்வர்தான்
எழுத உதவும்.
இதில் இந்தக்
கடைசி கட்டமைப்பின் மூலம் பெறப்பட்ட தரவுகள்தான் கவுஹாத்தி விபத்தில் தயாரிப்பு நிறுவனம்
வெளியிட்ட அறிக்கைக்கு அடிப்படையாக அமைந்தது.
பொதுவாக வாகனத்தின்
இயங்குதகவல்கள், எலக்ட்ரிக் வாகனங்களில் பொருத்தப்பட்ட மானிகள் மூலம், நுகர்வோரின்
வெளிப்படையான அனுமதி இல்லாமல் பெறப்படுகிறது. இது போன்ற தகவல் சேகரிப்பு மேல்நாடுகளில்,
தனிமனித உரிமை மீறல்ப் பிரச்சினையாக எழலாம். ஆனால், இது பற்றிய பெரும் விழிப்புணர்வு
இல்லாததால், நம் நாட்டில் இன்னும் இது பெரும் பிரச்சினையாக மாறவில்லை
நுகர்வோரின்
முறையான அனுமதி இல்லாமல் பெறப்படும் இத்தகவல்கள், உற்பத்தி நிறுவனங்களின் கட்டுப்பாட்டில்
மட்டுமே இருக்கும் என்பது, தனி மனித உரிமை மீறலை விட பெரும் பிரச்சினைக்குரியதாகத்
தோன்றுகிறது. இது நுகர்வோர் மனதில் பல சந்தேகங்களை எழுப்புகிறது.
ஏனெனில், பல்வந்த்
அவர்களின் மகனுக்கு நிகழ்ந்த விபத்து மாதிரியான சந்தர்ப்பங்களில், கம்பெனி அளிக்கும்
அறிக்கையை இயங்கு தகவல்களுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்க பயனாளிக்கோ அரசுக்கோ எந்த வழியும்
இல்லை. இது நிறுவனத்தின் செயல்பாடுகளில் உள்ள வெளிப்படைத்தன்மையும், நம்பகத்தன்மையும்
கேள்விக்குள்ளாக்குகிறது.
எலக்ட்ரிக்
வாகனங்களில் இருந்தது பெறப்படும் இயங்கு தகவல்களும், தரவுகளும், வாகன உரிமையாளரின்
காப்பீட்டு நிறுவனங்களுடன் பகிர்ந்து கொள்ளப்பட்டால், விபத்துக்குப் பின் நுகர்வோர்
பெறும் மருத்துவ சேவையைப் பாதிக்கும் அபாயமும் உள்ளது. காப்பீட்டு இழப்புகள் பெறுவதிலும்,
நுகர்வோருக்கு எதிராக இத்தகவல்கள் பயன்படுத்தப்படும் சாத்தியங்களும் உள்ளன.
கவுஹாத்தி விபத்தில்
பாதிக்கப்பட்ட பல்வந்த், தன் மகனை விமானத்தில் அழைத்துச் சென்று மேல்வைத்தியம் பார்க்கும்
அளவுக்கு வசதி வாய்ந்தவர். வாகன பயன்பாட்டுத் தரவுகள் பற்றி அறிந்து கொண்டு, அவற்றைப்பற்றிய
கேள்விகளை எழுப்பியவர். ஆனால், இந்தியாவின் பெரும்பான்மையான இரு சக்கர வாகன உரிமையாளர்கள்,
அவரைப்போல் உலக அறிவும், வசதியும் இல்லாதவர்கள். இதைப் பற்றி எந்த தெளிவும் இன்றி இருக்கும்
கடைக்கோடி மக்களுக்கு இது போல விபத்து நடந்தால், அவர்கள் நலன் எப்படிப் பாதுகாக்கப்படும்
என்பது சமூகத்தின் முன் உள்ள கேள்வி.
விமானப் போக்குவரத்து
மற்றும் தகவல் தொடர்புத் துறையில் பல்வேறு ஒழுங்குமுறைக் கட்டுப்பாடுகளும் ஆணையங்களும்
(DGCA, TRAI) இருக்கின்றன. இத்துறைகளில் விபத்து
நேர்ந்தாலோ அல்லது வேறு சர்ச்சைகள் ஏற்பட்டாலோ, அவை வெளிப்படையாகவும், நேர்மையாகவும்
தீர்க்கப்படும் என்னும் அடிப்படை நம்பகத்தன்மையை அவை உறுதி செய்கின்றன.
ஆனால் எலக்ட்ரிக்
வாகனப் பயனாளிகளிடமிருந்து பெறப்படும் தகவல்களைப் பெறுவதற்கும், சேமிப்பதற்கும், விதிமுறைகளும்,
ஒழுங்குமுறை அமைப்புகளும் இல்லை. தானியங்கித் துறை ஆராய்ச்சிக்கென, இந்தியத் தானியங்கித்
துறை ஆராய்ச்சி நிறுவனம் (Automative Research Association of India ARAI) என ஒரு நிறுவனம்
செயல்பட்டு வருகிறது. இது ஓட்டுநர் பாதுகாப்பு, வாகனங்களின் செயல்திறன் மேம்பாடு மற்றும்
தரம் சார்ந்த விஷயங்களில் ஆய்வுகளைச் செய்து அறிக்கைகளைத் தரும் ஆலோசனை நிறுவனம்தானே
ஒழிய தானியங்கித் துறையின் செயல்பாடுகளை கண்காணித்து வழிநடத்தும் ஒழுங்குமுறை நிறுவனமல்ல.
சமீபத்தில்
எலக்ட்ரிக் வாகன விபத்துகள் தொடர்பாக, ஒன்றிய தரைவழிப் போக்குவரத்துத்துறை அமைச்சர்
நிதின் கட்கரி முக்கியமான எச்சரிக்கையை எழுப்பியிருக்கிறார். இதை அவரது அமைச்சகம் மேலும்
முன்னெடுத்து, எலக்ட்ரிக் வாகனச் செயல்பாடுகளுக்கான சரியான பாதுகாப்பு விதிகளை உருவாக்க
வேண்டும். எலக்ட்ரிக் வாகனச் செயல்பாடுகளின் இயங்கு தகவல்களைப் பெறவும், உற்பத்தியாளர்,
நுகர்வோர், காப்பீட்டு நிறுவனங்கள் என அனைவருக்கும் அத்தகவல்கள் வெளிப்படையாகக் கிடைக்கும்
வண்ணம் ஒரு தானியங்கித் துறை ஒழுங்கு நிர்வாகம் உருவாக்கப்பட வேண்டும். அதுவரை வாகன
தயாரிப்பு கம்பெனிகளின் கையில் உள்ள இந்த தகவல்கள், உற்பத்தி நிறுவனங்களுக்குச் சாதகமாகவும்,
நுகர்வோருக்கு எதிராகவும் பயன்படுத்தப்படும் வாய்ப்புகள் உள்ளன.
எலக்ட்ரிக்
வாகனத் தொழிலில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள், வாகனங்களில் ஏற்படும் இந்த விபத்துகள் பற்றிய
நம்பகமான ஆய்வை மேற்கொண்டு, அவற்றைத் தவிர்க்கும் வழிகள் பற்றிய ஆராய்ச்சிகளை முழுமையாகச்
செய்து நுகர்வோருக்கு பாதுகாப்பான வாகனங்களை உற்பத்தி செய்து சந்தைப்படுத்த வேண்டும்.
எலக்ட்ரிக் வாகனச் செயல்பாடுகளின் இயங்கு தகவல்களை, நம்பகத் தன்மை கொண்ட ஒரு பொது நிறுவனத்திடம்
ஒப்படைத்து, விபத்துகள் ஏற்படுகையில், அவை, நுகர்வோருக்கும் மற்றவர்களுக்கும் எளிதில்
கிடைக்கும் வண்ணம் செய்ய வேண்டும்.
தானியங்கித் துறையின் வருங்காலமாகக் கருதப்படும் இந்த எலக்ட்ரிக் வாகனத் தொழில் நிறுவனங்கள், இப்பிரச்சினைகளை தொடக்கத்திலேயே தீர்த்து வைப்பது அனைவரின் நலனுக்கும் முக்கியம்
Comments
Post a Comment