உணர்வுகளின் முகங்கள்
பொதுவாக,மிதமான கோவை தென்றலை அனுபவித்துக்கொண்டே, ஒணத்தியாக ரெண்டு அன்னபூர்ணா சாம்பார் இட்லியை உள்ளே தள்ளிக்கொண்டு, ‘காங்கயம் கரூர் அல்லாம் தாண்டுனா, பூரா வேறமாதிரி சனங்க…’ அப்படீன்னு வேக்கானம் பேசற ஆட்களை கோவை முழுவதும் பரவலாகக் காணலாம். அட, நான் கூட ஒரு காலத்தில் அப்படித்தாங்க இருந்தேன்.
அதனாலோ என்னவோ, அப்போதெல்லாம் என் மனம் தஞ்சை பயணத்தின் போது - லாலாப்பேட்டை வரும்போதே - வந்தியத்தேவனின் குதிரையிலும், மதுரை பயணத்தின்போது சுந்தரபாண்டியனின் வாள்வீச்சிலும் மூழ்கிவிடும் அபாயம் எப்போதும் இருந்ததுண்டு. அது தவிர்த்து எனக்கு நெல்லை என்ற ஊரைப்பற்றியெல்லாம், காந்திபுரம் நெல்லை லாலா சுவீட்ஸ் தாண்டி வேறெதுவும் தெரியாது.
முதன்முதலில் மணிரத்னத்தின் படத்தில் ஜொலித்த நெல்லையின் மனிதர்களும் தாமிரபரணிக் கரையின் பசுமையையும் ஒரு புது கனவுப்பிரதேசமாகவே எனக்கு அது தென்படத்துவங்கியது.
வெகு காலத்திற்குப் பின், இணையத்தில் தமிழ் மணக்கத் துவங்கிய நாட்களில், சுகா என்பவர் யார் என்று தெரியாது. ஆனால் அவர் சொல்வனத்தில் தவழ விட்ட நெல்லை மனிதர்களுக்கும், அதன் மண் மணத்துக்கும் மயங்கியவன் நான். தாயார் சந்நிதி, மூங்கில் மூச்சு ஆகியவற்றில் ஆரம்பித்து அவர் அனைத்து புத்தகங்களையும் தேடித்தேடிப் படித்தவன் என்பதோடு, மூங்கில் மூச்சு புத்தகத்தை எனக்கு பிடித்த நண்பர்கள் அனைவருக்கும் தொடர்ந்து வாங்கி பரிசளித்தது வருகிறேன். ஆகவே சுகாவின் புதிய தொகுப்பு ஒன்று வெளிவந்திருக்கிறது என்றவுடனே மனம் பரபரவென அடித்துக்கொண்டது. உடனடியாக வாங்கிப் படிக்க ஆரம்பித்துவிட்டேன்..
அவரின் அனைத்து எழுத்துக்களும் ஆரம்பத்தில் சிரிக்கவும் உருகவும் வைத்தாலும், அவற்றில் சில இறுதியில் தொண்டைக்குழிக்குள் கட்டி போல் இறங்கி, திடும்மென விக்கித்து நிற்கவைக்கும் வரிகளுடன் முடியும். அந்த சில கட்டுரைகள் மாத்திரம் நம் மனதில் நிரந்தரமாக ஆணியடித்து அமர்ந்துகொள்ளும். அவர் அறிமுகப்படுத்திய கணேசண்ணனும், செம்பகத்தக்காவும் என் நினைவில் அப்படித்தான் நிரந்தரமாக குடியிருக்க ஆரம்பித்தனர்.
"விழா முடியும் வரை குஞ்சு ஒரு விதப் பதற்றத்துடனேயே இருந்ததைக் கவனித்தேன். ‘ஏம்ல வெளக்கெண்ணெ குடிச்சா மாரியே இருக்கெ?’ என்று கேட்டதற்கு, ‘போலெயபோ. எந்த நேரம் க்ருஷி ஸார்வாள் மேடையேறி ‘அடுத்து மூங்கில் மூச்சு புகழ் குஞ்சு ‘நான் ஆளான தாமர’ பாடலுக்கு டான்ஸ் ஆடுவார்னு சொல்லீருவாரோன்னு பயந்துக்கிட்டு இருந்தேன்’ என்றான்"
….
"தான் பாடி வந்த காலகட்டத்தில் ஜென்ஸி, பல இளம் பெண்களுக்கும், இளைஞர்களுக்கும் பிடித்த பாடகியாக இருந்த காரணத்தை இப்போது யோசித்துப் பார்த்தால் ஒன்று தெளிவாகப் புரிகிறது. எந்த நளினமும், மேதைமையும் இல்லாத ஜென்ஸியின் குரலைத் தங்களின் குரலாக அப்போதைய பெரும்பாலான யுவதிகளும், தங்கள் சகோதரிகளின், காதலிகளின் குரலாக அப்போதைய இளைஞர்களும் நினைத்திருந்தார்கள் என்றே தோன்றுகிறது.
….
”அம்மா தன் இறுதி நாட்களில், புற்றுநோயால் துடித்துக் கொண்டிருந்தாள். அவள் சீக்கிரம் புறப்பட்டுவிட வேண்டுமென மனதாரக் கடவுளை வேண்டிக் கொண்டிருந்தேன். வேண்டுதல் பலித்தபோது, அதுவரையில் அழுதுகொண்டிருந்தவன், ஒரு வகையான நிம்மதியுடன் அமைதியாகிவிட்டேன். அதற்குப் பிறகு, காலமான அம்மாவைக் கருப்பந்துறையில் கொண்டு வைத்து, கொள்ளி வைக்கும் வரை அழவே இல்லை. உறவினர்கள் சூழ்ந்திருக்க, தலைமயிரை மழிக்க, குனிந்து உட்கார்ந்திருக்கும்போது, தாமிரபரணிக் கரையில் தவழ்ந்தபடி எங்கிருந்தோ ‘அழகிய கண்ணே’ பாடல் ஒலித்தது. வெடித்து நான் அழ ஆரம்பிக்க, தம்பியும் உடன் சேர்ந்துகொண்டு குலுங்கினான். ‘இப்ப அளுது என்னத்துக்குல? போனவ வரவா போறா?’ விவரம் புரியாமல் தாய்மாமன் சொன்னான். என்னையும், தம்பியையும் கதற வைத்தது, அம்மா மட்டுமல்ல, இளையராஜாவும்தான் என்பது அவனுக்குத் தெரிய வாய்ப்பில்லை."
சிறு வயதில், ஒரு இரண்டரை மூன்று வயதிருக்கும் என நினைக்கிறேன். அப்போது பாட்டி வீட்டில் வளர்ந்து வந்தேன். வீட்டிற்குள் வீசிய தங்கு தடையில்லாத கொங்கு கிராமியக் காற்றின் வாசத்தால், பார்த்தவர்களிடம் எல்லாம் வயது வித்தியாசமில்லாமல், பேசும் போது ஒரு ஃப்ளோவில், அப்படியே "போடா மசு….டி" என்று முடிப்பது வழக்கம். மழலையின் அழகில் தாத்தாவும், பாட்டியும், அதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளாததால், தொடர்ந்து அதுவே ஒரு விளையாட்டாகவே பேசத் துவங்கினேன் என நினைக்கிறேன்.
அந்த அதீத தைரியத்தில், அடுத்த முறை, வெளியூரில் வேலையில் இருந்த, விடுமுறையில் வந்திருந்த அப்பாவிடம் அந்த பிரமாஸ்த்திரத்தை பயன் படுத்த, அதிர்ச்சியடைந்த அவர் ருத்ரமூர்த்தியாக அவதாரமெடுத்தார். பதிலுக்கு அவர் தண்டாயுதத்தை பயன்படுத்தி அந்த ஃப்ளோவை நிறுத்த வேண்டியிருந்தது… அதன் பின் அவர் உடனடியாக கோவைக்கு மாற்றல் வாங்கி என்னை அவர்களுடனே வைத்து தொடர்ந்து எடுத்த 'அஹிம்சை' வகுப்புகளால் கெட்ட வார்த்தைகள் என்பவை, வெகு நாட்களுக்கு எனக்கு ஒரு கெட்ட கனவாகவே ஆனது.
பிறகு கல்லூரி வந்த பின்பு மெலிதாக வீசிய அந்த சுதந்திரத் தென்றல், தில்லி சென்றபின் தீவிர வாடையாய் வீசியது. சாதாரணமாக தில்லிக்காரர்களுக்கு வசவின்றி வரும் பேச்சு, மசாலா இன்றி சமைத்த தந்தூரிக் கோழி போல, சீனி கம் சாய் போல ருசிப்பதில்லை போலும்... எதைப்பற்றிப் பேச ஆரம்பித்தாலும் "பேன்….த்" என்று சர்வசாதாரணமாக சேர்த்துக் கொண்டே ஆரம்பிப்பர். சுகாவின் வரிகளைப் படித்தால், அப்படி பேச்சில் வசவு கலந்து பேசுவது ஒரு வசதியான அடிப்படை உரிமை என்பதும் கடந்து அது ஒரு ரசனை என்றே எண்ணத்தோன்றுகிறது.
“மீனாட்சியைப் பார்த்தேன். அந்த மூதேவி பழக்கம் காரணமாகத் தங்குதடையில்லாமல் பாடியபடி முன்னே சென்றான். இயலாமையில் கோயில் என்பதை மறந்து மீனாட்சியைக் கெட்ட வார்த்தையில் திட்டினேன். சிவனடியார்களின் பெரும் குரல்களுக்கிடையில் அது அமுங்கிப் போனது.”
…
“மரணத் தறுவாயிலிருக்கும் கர்ணனிடம் கிழவன் வேடத்தில் வந்து தர்ம புண்ணியங்களை ரத்தத்தில் தாரை வார்த்து கிருஷ்ணன் வாங்கிக் கொள்ளும்போது ‘தாயளி இவம்லாம் வெளங்குவானா’ என்று வாய் விட்டு ஏசி, பிறகு படம் விட்டு வீட்டுக்குப் போகும்போது ‘கிருஷ்ணா, தெரியாம ஏசிட்டென். மேத்ஸ்லஃ பெயிலாக்கிராதெ’ என்று மனதார பயந்து நடுங்கி பொற்றாமரைப் பிள்ளையாரை கிருஷ்ணராகப் பாவித்து தோப்புக் கரணம் போட்டு மன்னிப்பும் கேட்டிருக்கிறேன்”
தொடர்ந்து அவர் புத்தகங்களில் இசைக்கு அடுத்து அனுபவித்து ஆராதிக்கும் ஒரு விஷயம், உணவு. மனுஷன் விதவிதமான உணவு விடுதிகளையும், அதன் சுவைகளையும் இழுத்து வந்து பந்தி விரிப்பது, படிக்கும் நமக்கு அவர் எழுத்தின் வழியே நேரடியாக நமது நாவில் சுவையை தடவியது போன்ற உணர்வை அளிக்கிறது. மற்ற ஆளுமைகளைப் பற்றி அவர் உருகி விளக்கும் இடங்களில் கூட உணவின் வழியே சிலாகிப்பது சுவையை மட்டும் அல்ல, அது வரும் தடத்தையும் வரைந்து காட்டுகிறது.
“கனாட்பிளேஸ் மதராஸ் ஹோட்டல் சட்னி வெறும் பொட்டுக் கடலையாலேயே தயாரிக்கப்பட்டிருக்குமாம். சிறுவயதில் சனிக்கிழமைதோறும் எண்ணெய் தேய்த்துக் குளிக்கும்போது, தலைக்குத் தேய்த்த கடலைமாவு வாயில் வழிந்தால் என்ன ருசியோ அதே ருசிதான் மதராஸ் ஹோட்டல் சட்னிக்கும் என்கிறார் பாட்டையா. மனுஷனுக்கு என்ன ரசனை பாருங்கள்!”*
...
“திருநெல்வேலிக்கு வர இருப்பதை வழக்கம் போல குஞ்சுவுக்கும், பின் மீனாட்சிக்கும் சொல்லியிருந்தேன். நெல்லை எக்ஸ்பிரெஸ்ஸில் போய் இறங்கியவுடனேயே மீனாட்சி ஃபோனில் அழைத்தான். ‘வந்துட்டேளா சித்தப்பா? நான் எப்பொ எங்கெ வரணும்?’ ‘சாயங்காலம் ஜானகிராம் ஓட்டலுக்குப் போகணும். வந்துரு.’ ‘விஞ்சைக்குப் போயிருவோமெ! நாளாச்சுல்லா. அண்ணாச்சியும் ஒங்கள பாத்தா சந்தோசப்படுவா.’ ‘ஏமூதி! திங்கிறதுலயெ இரி. ஜானகிராம் ஓட்டல்ல நம்ம நாறும்பூ ஸாரோட பொஸ்தகம் வெளியிடுற விளால.’ “
இவர் குறிப்பாக நெல்லை உணவு வகைகளை பேசும்போது அவற்றின் சுவையை தேடும் மனது அதை மயிரிழையில் நான் தொலைத்த சரித்திரம் கண் முன்னே நிழலாடும்.
கல்லூரி காலத்தில், நண்பர்களோடு சென்றிருந்த குற்றால பயணம் அது. அங்கு சென்ற பின் திடீரென்று மற்ற நண்பர்கள் இன்னும் இரண்டு நாட்கள் அந்த பயணத்தை நீட்டித்து இருந்து, நெல்லை வரை சென்று வர முடிவெடுத்தனர். ஆனால், வேறு சில நிகழ்வுகள் இருந்ததால், நான் மட்டும் திரும்பி ஊர் வர வேண்டிய நிலை.
கடைசி நாள், நண்பர்கள் எல்லாம் தென்காசி வந்து என்னை பஸ் ஏற்றி விட வந்தனர். கூடவே வந்து அடுத்து இரண்டு நாட்கள் தங்களின் திட்டங்களைப் பற்றி பேசிப் பேசியே திட்டமிட்டு வெறுப்பேத்தினார்கள். பசியெடுத்ததும் அனைவரும் சேர்ந்து சாப்பிட அங்கே ஒரு ஓட்டலில் சென்று அமர்ந்தோம்.
அங்கே மெனுவில் வழக்கம் போல் நெய் ரோஸ்ட், மசால் ரோஸ்ட் என்று பார்த்துக்கொண்டே வந்தபோது, AK 47 என்றிருந்த ஒரு புதிய ஐட்டம் பளிச்சென்று தெரிந்தது. உடனே அதை சாப்பிட்டுப் பார்க்கவேண்டும் என்று வழக்கம் போல் நானே முந்திக்கொண்டுஆர்டர் செய்தேன்.
"வேலு, பஸ் ஏறப்போற… ஏதாவது ஏடா கூடமா ரவுசு பண்ணிக்காத…".
" போடா, லூசாடா நீ?.. வெளியூறு வந்தா, வந்த எடத்துல புதுசா ட்ரை பண்ணோனும்… டூர்ங்கறது அந்தூர் சாப்பாடு, அந்தூர்ல இருக்கற புதுப்புது விசியம் எல்லாத்தியும் அனுபவிக்கோணும், ஆராயக்கூடாது. அதான் எப்பவும் இந்த நெய் ரோஸ்ட்டு, மசால் ரோஸ்ட்ன்னு நம்ம அன்னபூர்ணாவுல வழக்கமா சாப்புடுவோமே… புதுசா இந்த தோசையத்தான் சாப்பிட்டு பாப்பமே… அதோட, ஒரு வாரமா குற்றாலத்து கடைல வேற, SRT பஸ் டயர் மாதிரி அவன் மொத்த மொத்தமா போட்ட தோசைய தின்னு நாக்கு செத்து கெடக்குதுடா" என்று நான் அடம் பிடித்து அந்த தோசையையே வாங்கித் தின்றுவிட்டு பஸ் ஏறினேன்.
பஸ் நகரும்போது கண்ணயர்ந்த நான் சிறிது நேரத்திலேயே விருக்கென்று விழிப்பு வந்து சீட்டில் நிமிர்ந்தேன். என் வயிற்றுக்குள் அந்த AK 47 ஒரு போரைத் துவங்கியிருந்தது புரிந்தது. என்ன செய்வது என்று தெரியாமல் அதோடு சமாதான பேச்சு வார்த்தை நடத்த முயன்று தோற்றுக் கொண்டே பீதியில் சீட்டோடு சீட்டாக ஒட்டி சாய்ந்திருந்தேன். நடுவில் மதுரையில் பஸ் நின்ற போது கூட, அங்கே நடு இரவிலும், சுடச் சுட வேக வைத்து பளிச்சென்று இருந்த மல்லிகைப்பூ இட்டிலியும், மணக்கும் சட்டினியும், எனக்கு மட்டும் திகிலைக் கிளப்பியது. கண்ணை மூடி தூக்கம் வரவைக்க முயன்றேன். ஆனால், வயிறு, ' டேய், அப்படியெல்லாம் டிமிக்கி குடுக்க முடியாது ராஜா…' என்ற படியே குரலுயர்த்தியதும், அதுவே திகிலாக மாறியது.
ஒரு வழியாக விடியற்காலை, குற்றுயிரும் குலையுயிருமாய் கோவை வந்து சேர்ந்து, எப்படியோ ஆட்டோ பிடித்து வீடு வந்து, விடுதலையானதும் தான் நிம்மதி கிடைத்தது. அத்தோடு எனக்கான நெல்லை சுவைக்கான வாய்ப்பு விடை பெற்றது.
அவர் கூறிவது போல் உணவின் ருசி என்பது வகையிலும் இடத்திலும் மட்டும் இல்லை உருவாக்கும் மனதிலும் இருக்கிறது என்பது உலக உண்மை அல்லவா?... படிக்கும்போது, எங்கள் பாட்டி செய்யும் ஐயங்கார் சட்னி, அரிசிம்பருப்பு சாதத்தின் சுவை நிழலாடுவதற்குக் காரணம், கைப்பக்குவம் மட்டும் அல்ல.
"இரவு நேரங்களில் ‘தண்ணி ஊத்தின சோற்றுக்கு’த் தொட்டுக் கொள்ள, அம்மியில் தேங்காய், கல் உப்பு, கொஞ்சம் பொரிகடலை (சென்னையில் அதை ஒடச்ச கடலை என்கிறார்கள்) வைத்து நைத்து, மையாக அரைத்து, உருட்டி ஒரு பந்து சைஸுக்கு ‘பொரிகடலை தொவையல்’ வைப்பாள் ஆச்சி. என் வாழ்நாளில் அப்படியொரு ‘அமிர்த ருசி’யை நான் இதுவரை வேறெங்கிலும் சுவைத்ததில்லை. நாஞ்சில் நாடன் சித்தப்பாவிடம் இது பற்றி ஒருமுறை சொல்லிக்கொண்டிருந்தபோது அவர் சொன்னார். ‘ஆச்சி மனசு கைவளியா தொவையல்ல எறங்கியிருக்கும்லா! அதான் அந்த ருசி.’ "
"அம்மாவின் சமையலை ஊரே மெச்சினாலும் அம்மா என்னவோ ஆச்சியின் சமையலுக்கு முன்னால் தன்னுடையது ஒன்றுமேயில்லை என்பாள். அவளுக்குத் தன் தாயார் வைக்கும் ஒவ்வொரு சின்னச் சின்ன பதார்த்தமும் அவ்வளவு ருசியை அளித்தவை. ‘வெறும் புளித்தண்ணி வச்சாலும் எங்க அம்ம கைமணமே மணம்.’ மகள் நோய்வாய்ப்பட்டுப் படுக்கையில் கிடக்கும்போது, அவளுக்குப் பிடித்த ‘கத்திரிக்காய் கொத்சு’ செய்து, சோற்றுடன் பிசைந்து, சின்னக் குழந்தைக்கு ஊட்டி விடுவது போல் ஆசை ஆசையாக ஆச்சி ஊட்டி விட்டதைப் பார்க்க முடியாமல் அந்த இடத்தை விட்டுத் தள்ளிவந்து அழுதேன். இரண்டொரு தினங்களில் அம்மா காலமானாள்."
அவர் வரையும் சொற்சித்திரங்கள், மெல்லிய நகையுணர்வு அளவாக சர்க்கரை சேர்த்த காபி போல் சுவைப்பது இனிமை.
"முடியெடுக்கும் இடத்துக்கு வந்து சேர்வதற்குள் அதை மாற்றி மாற்றி வாங்கி ஆளாளுக்குக் கொஞ்சி அதன் கொஞ்ச நஞ்ச தூக்கத்தையும் தொலைப்பார்கள். அழுகையின் ஆரம்பக் கட்டத்திலிருக்கும் குழந்தை, மொட்டையடிக்கப் போகிறவரைப் பார்த்தவுடன் நிச்சயம் வெடித்து அழத் துவங்கும். ஜடா முடியும், பெரிய மீசையுமாக இருக்கும் அவர் சிரித்தபடியே , ‘அளக்கூடாது. ஒங்க பேரென்ன ராசா? என் தங்கம்’ என்று வரவேற்பார். குழந்தையின் தாய்மாமனின் மடியில் வைத்து சரட் சரட்டென்று பிஞ்சுத் தலையை மழிக்கத் துவங்கும்போது குழந்தையுடன் சேர்ந்து அருகில் நின்றுகொண்டிருக்கும் அதன் தாயும் கண்ணீர் சிந்துவாள். மற்ற உறவினர்கள் காற்று புக இடமில்லாமல் நெருக்கமாக எட்டிப் பார்த்தபடி சூழ்ந்து நிற்பார்கள். ஒரு சிலர் கையில் கிலு கிலுப்பை, பலூன், விசில் போன்றவற்றை வாங்கி வந்து அழுதுகொண்டிருக்கும் குழந்தையின் முன்னால் வந்து அதன் தாய்மாமனின் காதில் ஊதுவார்கள். தாங்க மாட்டாமல் அவனும் அழ ஆரம்பிப்பான்."
பொதுவாகவே, கொழுப்பும் நக்கலும் கொங்குப் பகுதியில் சற்று தூக்கலாகவே இருக்கும். அது சில சமயம் அதீத குத்தலாகவே வெளிப்படும்.
எங்களூரில், நாங்கள் பெரிதும் மதித்த ஒரு பெரியவர், திருமணம் செய்துகொள்ளாமல், தன் அண்ணன் குடும்பத்தைப் கவனித்துப் பார்த்துக்கொண்டு வீட்டில் சமையல் முதல்கொண்டு அனைத்தையும் பார்த்துக்கொள்வார். அவர் வைத்த குழம்பை கேட்டு வாங்கிச் சென்ற அவர் வீட்டில் குடியிருந்த பெண்மணி அவரிடம் வந்து, " ஏனுங்கையா… நீங்க வச்ச பூண்டுக் கொழம்பு மாத்திரம் எப்படி இவ்வளவு ருசியா வருது?.. எம்பட வீட்டுக்காரருக்கு ரொம்ப பிடிச்சுப் போச்சுங். அந்த மாயத்தை எனக்குங்கொஞ்ச சொல்லிக் குடுக்க மாட்டீங்களா?…"
"ம்? … அது,.. உன் மேல் சேலைய எடுத்து தூக்குல தொங்க உட்டுட்டு கொழம்பு வச்சுப் பாரு…. அதுக்கப்புறம் பாரு, உன்ற ஊட்டுக்காரன் உன்னையவே சுத்தி சுத்தி வருவானாக்கும்.." என்று நக்கல் கொப்பளிக்க சொன்னது அந்தப் பெண்மணியே குறிப்பிடக் கேட்டிருக்கிறேன். கொங்கு பகுதியில் கணவனை வீட்டுக்காரர் என்றும், மனைவியை வீட்டுக்காரம்மா என்றும் குறிப்பிடுவது வழக்கம்.
ஆனால் இந்த நக்கல் மண்ணிலேயே, நெல்லை மனிதர்களின் மொழி மீது ஒரு எச்சரிக்கை இருக்கும். ஒருமுறை என்னிடம் ஒரு விவகாரம் சம்பந்தமாக தாத்தா " பிரேம.. தின்னவேலிக்காரங்க கிட்ட பேசும்போது கொஞ்சம் வேய்க்கானமா இருக்கோணும். அவிய பேசறத வாயப் பாத்துட்டு, கேணக்கேணன்னு இருந்தீனா, பேச்சிலயே சொறுகறதும் தெரியாது, உறுவரதும் தெரியாது…" என்றார். அதை சுகாவின் வரிகளில் காண்பது, அதுவும் நெல்லை மனிதர்கள், கொங்கு மனிதர்கள் என்று பாராபட்சம் இன்றி அனைவரையும் குறிப்பிடும்போது காண்பது, ஒரு நகை முரண்தான்!...
"ராஜகோபால் மீது எனக்கிருக்கும் தனி பிரியத்துக்குக் காரணம், அவரும் திருநவேலிக்காரர். விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்தின் முக்கியப் பொறுப்பில் இருக்கிறோம் என்கிற மமதை சிறிதும் இல்லாதவர். சாதாரண ஆனந்த விகடன் வாசகர்களிடம் கூட சகஜமாகப் பேசிப் பழகக் கூடியவர்."
…
"நண்பர் என் கைகளைப் பற்றி அழுத்தமாகக் குலுக்கி, ‘விகடன்ல நீங்க எளுதுன முந்தான முடிச்சுக்கு நான் அடிமை’ என்று பலாப்பழ வாசனையுடன் குளறலாகச் சொன்னார். மேலும் ரகசியமாக ஏதோ சொல்லும் தோரணையில் என் காதருகே ‘௨’ என்று உதட்டைக் குவித்தபடி நெருங்கினார். நெற்றியிலுள்ள திருநீற்றைப் பார்த்து, ‘உலகம் சிவமயம்’ என்று சொல்ல வருகிறாரென்று நினைத்து, காதை நீட்டவும், எதிர்பாராவிதமாகக் கன்னத்தை எச்சிலாக்கினார்."
இறுதியாக சுகாவின் வார்த்தைகளில் அவரைப் பற்றிக் கூறும் இந்த வரிகள்,
"‘ஒலகத்துல இருக்கிற திருநவேலிக்காரன்லாம் ஒம்மப் பாத்தாத் தூக்கிட்டே போயிருவான் பேரப்பிள்ள. பத்திரமா இரியும்.’ சொல்லிவிட்டுச் சத்தமாகச் சிரிப்பார்."
சுகாவைப் பொறுத்தவரை இந்தக் கூற்று, நெல்லைக்காரர்களுக்கு மட்டுமல்ல, தமிழில் வாசிக்கும் அனைவருக்குமே பொருந்தும்.
Comments
Post a Comment