என்பிலதனை வெயில் காயும்

 புத்தகத்தின் பெயர்: என்பிலதனை வெயில் காயும்

ஆசிரியர்: நாஞ்சில் நாடன்
பதிப்பகம்: விஜயா பதிப்பகம்.



ஆரம்பத்தில், தான் படித்து வளர்ந்த நாஞ்சில் நாட்டை விட்டு மும்பைக்கு வேலை தேடிச் சென்று, மிக எளிமையான துவக்கத்துக்குப் பின் படிப்படியாய் வளர்ந்து, ஆரம்பித்த கம்பெனியிலேயே மேலாளராக உயர்ந்தவர் சுப்பிரமணியம் என்கின்ற நாஞ்சில் நாடன். தன்னைவளர்ந்த மண்ணின் மீதும் மொழியின் மீதும் தாளாத நேசம் கொண்டவர்.
முகம் தெரியாத ஊரில் எளிமையாகத் துவங்கிய அவருக்கு, அவர் பிறந்த மண்ணின் மீதான அடையாளம் மிக முக்கியமானதாக இருந்திருக்க வேண்டும். அதனால் தான் நாஞ்சில் நாடன் என்று அடையாளப் படுத்திக் கொள்கிறாரோ என்று எனக்குத் தோன்றும்.
மும்பைக்கு செல்லும் தமிழர் பலர் தவறாமல் சந்திக்கும் பிரச்சினை ஒன்றுண்டு. வடநாட்டில் இருக்கும் பெயருக்குப் பின்னாலான, பின்னொட்டு தான் அது. தமிழகத்தில் இருக்கும் வரை, சில தலைமுறைக்கு முன் சுயமரியாதை சிந்தனைகளால் காணாமல் போன பின்னொட்டு, இங்கிருந்து அங்கே போன பின் அவர்களில் சிலருக்கு பிள்ளை பூச்சிக்கு கொடுக்கு முளைத்தது போல் திடீரென முளைத்து விடுவது உண்டு. அப்படி ஏதும் நெருக்கடி நாஞ்சில் நாடனுக்கு ஏற்படவில்லை என நினைக்கிறேன்.
மாறாக அவர், தனது மொழியும், தன் மண்ணும் தான் தனக்கான அடையாளம் என்று முடிவு செய்திருக்க வேண்டும். இன்று அதுதான் அவரை தமிழ் மண்ணில் , தமிழின் குறிப்பிடத்தக்க சில எழுத்தாளர்களில் ஒருவராக அடையாளம் தந்திருக்கிறது. தொடர்ந்து அவர் எழுத்துக்கள், அவர் பிறந்த மண்ணையும், வாழ்ந்த நிலப்பரப்புகளையும், அவற்றில் உலவிய மனிதர்களையும் சித்திரமாய் வடித்து வந்திருக்கின்றன. அவர்களின் வாழ்வியல் சிக்கல்களையும், மனவோட்டங்களையும், வார்த்தையில் வடிப்பதை ஒரு கலையாகவே நாஞ்ல் நாடன் சிறக்க வைத்திருக்கிறார்.
பொதுவாக சுயமரியாதை என்பது, தன்னம்பிக்கையின் அடிநாதம். ஒரு சமூகமாக அதை நாம் அணைத்துக் கொண்டு கடந்து வந்திருக்கும் பாதை மிக நீளமானது. நம்மில் சுயமரியாதை கொண்டவர்களாக அடையாளப் படுத்துபவர்களில் கூட, சில நேரங்களில், பாசத்திற்காக, நட்பிற்காக என்று செய்யும் சமரசங்களால் தங்களை அறியாமலே சில விஷயங்களில் சுயமரியாதை உணர்வை இழப்பதுண்டு. அப்படி நேரும் போது அவர்களை சார்ந்தவர்களும் அவரோடு சேர்ந்து வழுக்கி விழும் நிலை வருவதுண்டு. அதைப்பற்றிய முடிச்சு தான் இந்தப் புதினம்.
இந்தப் புதினத்தைப் படித்த போதும், பிறகு அதைப்பற்றிய நூல் அறிமுகங்களை படித்தபோதும், எனக்கு ஒரு நெருடல் இருந்துகொண்டே இருந்தது. ஏனெனில் பெரும்பாலானவர்கள் சுடலையாண்டி என்ற பதின்ம வயது ஆணின் ஊசலாட்டங்களை நாஞ்சில் நாடன் சிறப்பாக வடித்திருந்த விதத்தைத்தான் குறிப்பிட்டிருந்தனர். வெகு சிலர் அவன் தாழ்வுணர்ச்சியைப் பற்றி குறிப்பிட்டிருந்தனர்.
எனக்கென்னவோ அதையும் தாண்டி, இல்லாத ஒரு தாழ்ச்சியை தனக்குள்ளதாக நினைத்துக்கொண்டு, அதன் மூலம் தனக்கு நேரும் இகழ்வுகளை நியாப்படுத்திக்கொள்ளும் இயல்பை, அதன் ஆதி முடிச்சைத் தொட்டிருக்கிறாரோ என்று தான் தோன்றுகிறது.
சுடலையாண்டி சிறுவயதிலேயே தாயையும் தந்தையும் இழந்தவன். அவன் தந்தை, தன்னை விட தாழ்ந்த சமூகம் என்று கருதப்படும், மாற்று மொழி சமூகத்தில் இருந்து வந்த ஒரு பெண்ணை கைபிடித்தவர். இளவயதில் தாயையும், தந்தையையும் இழந்த அவனுக்கு அவர்களைப்பற்றிய நினைவுகள் ஒரு துளங்காத சித்திரமாகவே இருந்தது.
“அப்பா பற்றியதான முதல் ஞாபகம் தனக்கு எப்போது தொடங்கியது? சுடலையாண்டி மூளையைத் தூர் வாங்கினான். எங்கிருந்து தொடங்கினாலும் அந்த நிகழ்ச்சியில் தான் சென்று எண்ணம் நின்றது.அதுதான் முதலில்.அதற்கு முன்பு? ஒன்றும் புலப்படாத மங்கல். பழையாற்றின் கயத்தில் ஆழங்கண்டு மண் எடுக்க முக்குளிக்கையில், கொஞ்ச ஆழம் இறங்கியதும், மூச்சு முட்ட லோடு கூடி நீரின் கூரையைப் பார்க்கையில் ஒரே நீலமாகத் தோன்றுமே, அதுபோல் எங்கும் நீலம். அடர்வான நீலம். சிந்தனைக் கத்தி துளைக்க முடியாத கட்டி நீலம்… சன்னஞ் சன்னமாக அந்த முதல் நிகழ்ச்சி சுடலையாண்டியின் மனதில் ஆழமாகச் செலுத்தப்பட்டு விட்டது. அப்போது எத்தனை வயதிருக்கும்? ஆறு அல்லது ஏழு.”
“இந்தப் பாலக் கலுங்கில் படுத்துக் கொண்டு ஆகாயத்தைத் துளைக்கையில் - இனம் புரியாத அந்த வயதில் அப்பாவுக்கு உண்டாக்கிய காயம்.”
...
“அம்மா சிவப்பாகவும் வாட்ட சாட்டமாகவும் இருந்ததாகச் சொல்கிறார்கள். “ஒரு சாக்கு நெல்லை ஒத்தையிலே தூக்கீருவா...” “நாலு கொடந் தண்ணீ பிடிக்க வென்னிப் பானையைச் சடக்குண்ணு தூக்கிப் பொறவாசல்லே கொண்டு வச்சிருவா...” ஆத்தா வெவ்வேறு சமயங்களில் சொல்லிய செய்திகள் எல்லாம் நினைவில் வந்தன. முகம் மட்டும் நெஞ்சில் கூடவே இல்லை.”
அவன் தந்தை சாதிமாறிக் கைபிடித்த பெண்ணையும், அந்தப் பெண் பெற்ற பையனையும் சமயம் வாய்க்கும் போது ஊரில் உள்ளவர்கள் சாதிக்காழ்ப்பால், அவன் பிறப்பை வைத்து அசிங்கப்படுத்திடும் நிலை இருந்தது. சுடலையாண்டிக்கு பெற்றோர் இல்லை என்றாலும், அவன் தந்தையை பெற்றவர்கள் அவனை பேரன் என்று, பெற்ற மகனுக்கு வழங்கியதை விட அதிக பாசத்துடன் , கடும் ஏழ்மையிலும் விடாமல் தாங்கிப் பிடித்திருந்தனர்.
அது போதும் சுயமரியாதை கொண்ட ஒருவனுக்கு. ஆனால் அதையும் மீறி சுடலையாண்டிக்கு ஒவ்வொரு முறையும், தன் பிறப்பைப்பற்றிய, தாயைப் பற்றிய வசவு வரும்போதெல்லாம், தாழ்வுணர்ச்சியால் குமைந்து கொள்கிறான். அப்போது அவன் தாத்தா பாட்டியின் உணர்வின் பின் இருக்கும் நியாயமும் புரிவதில்லை; அதன் பலமும் பயன்படுவதில்லை.
“எப்போதும் இப்படியே அப்பாவின் திவசத்தன்று இந்த ஊமைக் கூத்து. அவரவர் மனங்களில் அவரவர் சுமைகள். ஒப்பாரியாகக் கரைக்க முயன்ற ஆத்தா. விழுங்கிச் சீரணிக்க முயன்ற தாத்தா. என்னவென்று அறியாத ஒரு மனப் பிசையல். வீட்டில் இருக்க முடியாமல் எழுந்து வெளியே நடந்தான் சுடலையாண்டி.”
“தாள்களை வாங்கிக் கொண்டு நகர்ந்த பிறகு, தங்கப்பனிடம் சுந்தரம் சொல்வது கேட்டது. “அதில்லடா தங்கப்பா... உனக்கு விசயந் தெரியாதா? பயகிராசுல்லா. படிக்கதுக்குக் கேக்கவா வேணும்.” பல நாட்கள் அதன் பொருள் புரியவில்லை. சுடலையாண்டிக்குப் புரிந்தபோது – நெஞ்சு சுட்டது. இது சுடச்சுட, வேறு மாணவர்களிடமிருந்து விலகத் தொடங்கினான். அண்டை அசல் பையன்களோடு அவன் சண்டை போட்டால், சண்டை முடிந்ததும் பையன்களின் பெற்றோர் அவனை மட்டும் குறிப்பாக்கித் திட்டிய போது... எல்லாம் சின்னச் சின்னக் காயங்கள்.”
"பலவேசம் பிள்ளையின் கண்களைப் பார்க்கப் பயமாக இருந்தது. உக்கிரமான ஆராசனைக்காரன் முகம் போல்... “ஓடுலே செறுக்கி மவனே... தோப்புக்குள்ளே இனி காலை வச்சே, முட்டுக்குக் கீழே மொறிச்சிருவேன். அப்பன் பேரு தெரியாத பயலுக்கு ஆசை. ஓடுலே இங்கேருந்து...”
என் நண்பர்கள் வட்டத்தில், சிறு வயத்தில் இருந்தே பழகி வரும் நண்பன் ஒருவன் இருந்தான். அவன் என்னிடம் எப்போதும், எனக்கு ஒப்புமை இல்லாத, நான் அதீத வெறுப்பு உணர்வு என்று கருதும் கருத்துக்களைக் கொட்டுவது வழக்கம். நட்பிற்காக என்று சிறு வயதில் இருந்தே அவன் கூறுவதற்கு மேலோட்டமாய் ஆமோதிப்பை தந்தாலும், ஒரு வழிப்பாதையான அவன் பேச்சுக்களை வெறுமனே கேட்டுக் கடந்து வந்திருக்கிறேன். அந்தக் கருத்துக்களோடு எனக்கு உடன்பாடு இல்லை என்று அவனுக்கு தெரிந்த போதும், நான் ஆமோதிப்பைத் தருகிறேன் என்பதால், தொடர்ந்து அதன் வீரியம் கூடிக்கொண்டே போனது. ஒரு கட்டத்தில் அந்த முரண்பாடால் விழைந்த அழுத்தம் எனக்குள் கூடிக்கொண்டே போனது. இதைப்படித்தவுடன், மின்னல் வெட்டியது போல் ஒரு புரிதல் எனக்கு ஏற்பட்டது.
எதற்காக ஒப்புதல் இல்லாத ஒன்றுக்கு தொடர்ந்து, செவி கொடுத்திருந்தேன் என்று யோசனை வந்தது. நட்புக்கு பங்கம் வந்து விடுமோ என்று வெறுமனே அவன் குரலுக்கு செவி கொடுத்தது புரிந்தது. அதன் பின் அடுத்த முறை சிறு சீறலுடன், அரசியல், வாழ்வியல், நம்பிக்கை சம்பத்தப்பட்ட எதையும் தவிர்த்து எது வேண்டுமாலும் பேசலாம் என்று உறுதியாகக் கூறினேன். அதன் பின்னால் நட்புக்கு ஏதும் பங்கம் வரவில்லை. மாறாக ஒப்புமை இல்லாத எதையும் நான் இனியும் காது கொடுத்து கேட்க மாட்டேன் என்ற புரிதல் அவனுக்கு வந்தது. அவன் அதன் பின் அதிகமாக நான் விரும்பாதவற்றை பேசுவது இல்லை.
ஆனால் பாவம் சுடலையாண்டிக்கு, அவன் வாழ்வின் வறுமையும், அதைத் கடக்க அவன் போராடும் வாழ்வியல் உண்மையும், அவனுக்கு அந்த மாற்றத்தைக் கொடுக்கவில்லை.
அதனால்தான், வறுமை சற்றே நீங்கிய நிலையிலும், சமாதானத்தின் பெயராலும், அடக்கத்தின் பெயராலும் அவமானங்களைத் தொடர்ந்து ஏற்றுக்கொள்கிறான். அவற்றை சிலுவைகள் போல் சுமக்கிறான். கடைசியில் வேலை தேடி செல்லும் மாமனிடமும் , அவன் வெறும் காசு கொடுத்தது அவமானப் படுத்தும் போதும் கூட, தன்மான உணர்வின்றி பரிதாபமாக அவர் முகத்தைப் பார்த்து நிற்கின்றான். சுயமரியாதை என்ற எழும்பில்லாத உயிராக அவமானம் என்ற நெருப்பில் தொடர்ந்து உழல்கிறான் சுடலையாண்டி.
“தலையைத் தண்ணீருக்குள் நுழைத்துக் கொண்டு சத்த மெழுப்பிக் கொண்டு அழுதான். ஒரு மலையாள ஈழவப் பெண்ணைக் கூட்டிக்கொண்டு ஓடி வந்த அப்பாவுக்காக, அப்பாவை நம்பி வந்து அல்லல் தாங்காமல் தன்னையே அழித்துக் கொண்ட முகம் தெரியாத தன் அம்மாவுக்காக, அந்த அம்மா வயிற்றில் பிறந்து விட்டதால் அங்கீகாரம் இழந்து நிற்கும் தனக்காக.”
...
“ 'ஜோலியா? அது அத்தற எளுப்பமாயிட்டு கிட்டுல்லல்லோ... வல்லிய பாடாணு... எனிக்கு ஆரும் அறிஞீடா... தான்... வேறு எவிடயெங்கிலும் அன்யேஷிச்சோ-எடீ! நீ ஒரு பத்து ருப்பியா எடுத்தோண்டு வா...' ஒரு மெளன நாடகக் காட்சியாய்த் தெரிந்த நினைப்பி னுள்ளும், அந்த மாமா முறை மனிதரின் முகத்தில், அம்மாவின் சாயல் ஏதேனும் காணக் கிடைக்கிறதா என்று சுடலையாண்டி தேடினான். “


#சிறுகதை  #நாஞ்சில்_நாடன்  #புதினம் 

Comments

Popular posts from this blog

பாலை மனம்

தமிழின் புதிய வெளிகள்

Deccan in Dazzling light