ஆமைக்கறியும், ஆங்கில புத்தகமும்…

எத்தனையோ நல்ல புத்தகங்களைப் பற்றி இங்கே பதிந்து வந்திருக்கிறேன். ஆனால்  நான் இன்று குறிப்பிடுவது அதுபோல் ஒன்றல்ல. பொதுவாக நல்ல புத்தகங்களையும், அதன் வாசிப்பு அனுபவத்தையும் மட்டுமே குறிப்பிடுவது என்ற உறுதியை ஆட்டிப்பார்க்கவும் ஒரு தகுதி வேண்டும் அல்லவா? அப்படி ஒரு ‘ தகுதி ‘ வாய்ந்த புத்தகத்தையும், அதன் எழுத்தாளரையும் பற்றித்தான் இன்று நான் குறிப்பிட விரும்புகிறேன்.

வழக்கமாக புத்தக அங்காடி எங்கிருந்தாலும் உடனே ஆர்வத்துடன் அங்கு சென்று புத்தகங்களை நோட்டமிட்டு, அவற்றில் சில புத்தகங்களை கையில் எடுத்து அவற்றின் சில பக்கங்களை ஒரு திட்டமான நோக்கம் ஏதும்  இல்லாமல்,  படித்து பார்த்து விட்டு அதை வாங்கும் முடிவை எடுப்பது வழக்கம். அப்படிப் படித்து பார்த்து புத்தகங்களை தேர்ந்தெடுப்பதே ஒரு பேரானந்தம் என்பதால், வேறு நாடுகளுக்கு செல்லும் போதும் கூட, அங்கே சில தங்கும் விடுதிகளில் அடுக்கி வைத்திருக்கும் புத்தகங்களை புரட்டி, சில புத்தகங்களைத் தேர்ந்தெடுத்து, அங்கே தங்கியிருக்கும் போதே படித்து முடிக்க முயல்வேன். இல்லை என்றால் குறித்து வைத்துக்கொண்டு ஊர் வந்ததும் அதை வாங்கிவிடுவேன். 

மைசூரில் ஒரு பழம் பெரும் உணவு விடுதி எனக்கு மிகவும் பிடிக்கும். அதன் காரணம் அங்கே கிடைக்கும் உணவல்ல… அது வெகு சுமார் தான். ஆனால், உணவுக்குப் பின் அங்கே ஒரு அமைதியான மூலையில் இருக்கும் புத்தக அலமாரியும், அதிலிருக்கும் புத்தகங்களும், கூடவே பக்கத்தில் நிம்மதியாக காபிக் கோப்பையுடன் ( சத்தியமாக காப்பிதாங்க) அமர்ந்து ஆற அமர புத்தகங்களை புரட்டும் வசதிக்காகவும் தான். ஒவ்வொரு முறை அங்கு செல்லும் போதும் அதில் தேர்ந்தெடுத்து வீடு வந்து வாங்கிய புத்தகங்கள் என்னை ஏமாற்றியதே இல்லை…

சமீப காலங்களில் நான் குடியிருக்கும் வீட்டுப்பகுதியின் அருகிலேயே ஒரு புத்தக அங்காடி இருப்பதால், அடிக்கடி அங்கே சென்று நோட்டமிடுவதும் வரும்போது ஓரிரண்டு புத்தகங்களை எப்படியாவது வீட்டிற்கு தெரிந்தும் தெரியாமலும் வாங்கி வருவதும் வாடிக்கையாயிற்று.

அப்படி ஒவ்வொரு முறை செல்லும் போதும், அடிக்கடி அதன் மேலடுக்குகளில் இடம்பெறும் ஒரு எழுத்தாளரும் அவர் புத்தகங்களும்  என் கண்ணை உறுத்திக்கொன்டே இருக்கும். சில மாதங்களுக்கு முன், அவற்றைக் கையில் எடுத்து புரட்டியவுடன், ஓரிரு பக்கத்திலேயே நான் அறிந்த ஒரு பன்னாட்டு கம்பெனியின் செயல்பாடுகளை பற்றி குறிப்பிட்டு அதன் சாதக அம்சங்களை, அவர்களின் குறிப்பிட்ட முன்னெடுப்பைப்  பற்றி  குறிப்பிட்டிருந்தது கவர்ந்திருந்ததால், உடனடியாக அந்த எழுத்தாளரின் முதல் இரண்டு புத்தகங்களை வாங்கி வந்துவிட்டேன்.

அதில்  ஒன்றை தேர்ந்தெடுத்து கையில் நோட்டும், பென்சிலும் எடுத்துக்கொண்டு ( சில புத்தகங்களை படிக்கும் போது கூடவே குறிப்பெடுப்பதும் வழக்கம்) படிக்க ஆரம்பித்தேன்.

ஆரம்பத்தில் இருந்தே ஒரு வித அமைதியின்மையுடனே அதை படிக்க ஆரம்பித்தேன். அதன் காரணம், அதில் இருந்த கருத்து எனது கொள்கைக்கோ, பக்க சார்புக்கோ ஒவ்வாதது என்பதல்ல… உண்மையில் அப்படி எந்த உறுதியான கருதுகோளும்  அதில் எங்குமே இல்லை. கிட்டத்தட்ட முன்னூறு பக்கங்கள்! எந்த உறுதியான, தெளிவான திட்டம் இல்லாமல் சொன்னதையே வேறு வேறு வகையில் சொல்லி அதிலிருந்து ஒரு கருத்தை உருவாக்கும் முயற்சி வெளிப்பட்டு தொக்கி  நின்று, அலுப்பை அளித்தது.

அப்படிப்படித்த அந்த புத்தகம், “ The Tipping Point”. அதை எழுதியவர், Malcolm Gladwell”. நமது கருதுகோள்களை திருப்பிப் போட வல்லது என்று அறிமுகப்படுத்தப்பட்டே அவருடைய ஒவ்வொரு புத்தகமும் விளம்பரப்படுத்தப் படுகிறது. ஆனால் அதில் அப்படி ஏதும் கருத்துக்கள் என்னைப் புரட்டிப் போட்டதாக தோன்றவில்லை. ஐயோ, தெரியாமல் இப்படி பணத்தை  செலவு செய்து விட்டோமே என்ற கவலைதான் வயிற்றைப் புரட்டுகிறது.

அதன் பின் அந்த எழுத்தாளரைப்பற்றி ஆய்ந்து பார்த்த விஷயங்கள் இன்னும் அதிர வைத்தன.

ஆங்கிலத்தில் “ஷில்” (Shill) என்று ஒரு வார்த்தை உண்டு. தமிழில் ஜகதலப்பிரதாபன், தில்லாலங்கடி, புரட்டுக்காரன், அல்லக்கை இப்படி பல பெயர்கள் உண்டு. பின்னே, ஒரு தலைப்புச் செய்தி மட்டும் கிடைத்தால், ஆதாயத்துக்காக அதை வைத்து ஒரு புத்தகமெழுதி என்னை போல பலரையும் மொட்டை அடித்தால்?...

பின்னூட்டத்தில் உள்ள இணைப்புகளை மேல் விவரங்களுக்கு வாசிக்கவும்.

என் சந்தேகமெல்லாம், நம்ம நாட்டில், இப்படி பல தில்லாலங்கிடிகள் அரசியலில், ஆன்மிகத்தில் என ஆமைக்கறி, தண்ணிக்கு அறிவு என்று அள்ளி  விட்டுக் கொண்டிருக்கும் போது, இது போன்ற புத்தகங்கள் இன்னும் எப்படி இவ்வளவு விற்கிறது என்பதுதான் புரிய மாட்டேங்குது…

இப்போதைக்கு என் கவலையெல்லாம், படிக்காமல் வைத்திருக்கும் அந்த இன்னொரு புத்தகத்தை யார் தலையில் பரிசாகக் கட்டுவது என்பது தான்… உறுதியாக இதைப் படிப்பவர்களுக்கு முடியாது எனத் தோன்றுகிறது ….

எதற்கும், நான் அடுத்த முறை உங்களில் யாரையாவது நேரில் சந்திக்கும் போது புத்தகம் ஒன்று கொடுத்தால், ஒரு தடவைக்கு இரு தடவை திருப்பிப் பார்த்துக்கொள்ளுங்கள். பிறகு குறை கூறினால், கம்பேனி பொறுப்பாகாது…











Comments

Popular posts from this blog

பாலை மனம்

தமிழின் புதிய வெளிகள்

Deccan in Dazzling light