காந்தியின் பாதை

காந்தியின் அடையாளங்கள், கொள்கைகள், குறியீடுகள் ஆகியவை முன்னெப்போதும் இல்லாத வகையில் இன்று, தவறாகவும், குறுகிய நோக்கங்களுடனும் சித்தரிக்கப்படுவது வழக்கமாகிவிட்டது. அதனால் இன்றைய காலகட்டத்தில் அவரைப் பற்றிய உருவகம் மீளக் காட்சிப்படுத்துதல் அவசியமாகிறது.




அவரைப் பற்றிய நிகழ்வுகளின் வழியே அவரைக் கண்டடைவதும், அதன் வழியாக அவரைப்பற்றிய புரிதலை அடைவதும் இன்றைய தேவை. அவ்வகையில் இந்தப்புத்தகம் ஒரு குறிப்பிட்ட அளவில் ஆவணமாகவே கருதலாம்.
அனுபவக் குறிப்பாக ஆரம்பிக்கும் இந்நூல், சில நேரங்களில், மூன்றாம் நபரின் பங்களிப்பை, செவிவழி சம்பவங்களாகக் கூறினாலும், பெரும்பாலும் அண்ணலின் கூடவே பயணித்த காகாவின் அனுபவங்களின் ஊடே செல்வதால், சம்பவங்களின் உண்மைத்தன்மைக்கு பெரிதும் சேதம் நேராமல் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
ஒரு புத்தகம் என்ற வகையில், நீதிக்கதைகள் (fables) போல் இருந்தாலும், அந்த சிறு சம்பவங்களின் வழியே அவரின் ஆளுமையும், அது உருவாகிய வழியையும் தெள்ளத்தெளிவாக படம் பிடிக்கிறது.
இந்திய சுதந்திரப் போராட்டத்தில், கிலாபத் கிளர்ச்சி ஒரு முக்கியமான திருப்பு முனையாகும். அதன் தொடர்ச்சியாக, வைசிராயுடன் நிகழ்ந்த பேச்சு வார்த்தையில், அண்ணல், ஆங்கிலேயரின் சமரசத்தை ஏற்றுக்கொள்ளவில்லை.

இதற்கு பாபூ, “இது முடியாது. இந்திய முஸ்லீம்கள் இந்தியாவின் முக்கியமான பகுதியினராவர். அவர்கள் உள்ளங்களில் இந்த அநியாயத்தினால் உண்டாக்கப்பட்டுள்ள புண்ணை நான் அலட்சியம் செய்வதற்கில்லை” என்றார். இதே விஷயத்தில் சமாதானப் பேச்சு முறிந்துபோயிற்று. நாட்டின் பெரிய தலைவர்களெல்லாம் தனியே பேசுகையில் பாபூவைக் குற்றங்
கூறினார்கள்: “இந்த கிலாபத்துக்கும் இந்தியாவுக்கும் என்ன சம்பந்தம்? அதை விடுவதனால் நமக்கென்ன நஷ்டம்? சுயராஜ்யமாவது கிடைத்திருக்குமே” என்றார்கள். (அந்தக் காலத்தில் இன்று போல் சுயராஜ்யமென்றால் என்ன என்பதை நாம் திட்டமாக உணரவில்லை. எது கிடைத்திருந்தாலும் அதையே சுயராஜ்யமென்று ஏற்று, பெரிய அரசியல் முன்னேற்றம் எய்திவிட்டதாக எண்ணிக்கொண்டிருப்போம்.) ஆனால் பாபுவின் அபிப்பிராயத்தில் அது சரியென்று படவில்லை. முஸ்லீம்களுக்கு உதவினோம். அவர்களுக்கு நேர்ந்த துக்கத்தைத் தமதாக்கிக்கொண்டோம். இப்பொழுது நமக்கு வேண்டியது கிடைத்ததும் அவர்களை விட்டுப் பிரிவது நம்பிக்கை துரோகமாகக் கருதப்படாதா? இவ்வாறு துரோகத்தினால் கிடைக்கக்கூடியதெதையும் பாபூ கறைபடிந்ததாகவே கருதினார். எனவே தமது தூய முடிவை வைசிராயிடம் தெரிவிக்கச் சிறிதும் தயங்கவில்லை.

இன்றைய பிரிவினை நிறைந்த, வெறுப்பு மலிந்த நாட்களில், சுயராஜ்யம் என்ற, அனைவராலும் புரிந்து கொள்ளக் கூடிய வார்தை எப்படி திரித்து பயன்படுத்தப்படுகிறது என்னும்போது, அந்தக்கலத்திலேயே காந்தியும், அவரை தொடர்ந்தவர்களும் தெளிவாக, தடம் பிறழாமல் நோக்கத்தையும், அதை அடையும் வழியையும் சமரசம் செய்யவில்லை என்பது நமக்கு ஒரு பாடம்.

பிறகு பாபு அமைதியாக, “நம் நாட்டில் காஷாய வஸ்திரத்தைக் கண்டதுமே மக்கள் பக்தியோடு சேவை செய்யத் தொடங்கிவிடுகிறார்கள், இப்பொழுது நம் வேலை சேவை பெறுவதாயின்றி, சேவை செய்வதாகவே இருக்க வேண்டும். நாம் மக்களுக்கு எந்த சேவையைச் செய்ய விரும்புகிறோமோ, அதை இந்தக் காவி வஸ்திரத்தைக் காணும்பொழுது அவர்கள் நம்மிடம் பெற மறுப்பார்கள். மாறாக நமக்குச் சேவை செய்யவும் முற்படுவார்கள். ஆகவே நமது சேவை நோக்கத்திற்குத் தடையாயிருக்கும் ஒன்றை நாம் எதற்காக வைத்திருப்பது? துறவென்பது மனத்தைப் பற்றிய விஷயம், மனத்தில் செய்துகொள்ள வேண்டிய ஒன்று. வெளியில் அணியும் ஆடைக்கும், அதற்கும் என்ன சம்பந்தம்? காவி ஆடையை விடுவதனால் மனத்திலுள்ள துறவு போய்விடுமா? நாளைக்கு நாம் கிராமத்திற்குப் போய் கக்கூஸ் சுத்தி செய்வதென்றால் காவி உடை அணிந்துள்ள உங்களை எவரும் அதைச் செய்ய விடமாட்டார்கள்” என்றார்.

காவிகளின் வழியே வெறுப்பு, தீவிர மதவாதம் மற்றும் அடக்குமுறை பரவலாக்கப்படும் இன்றைய நிலையில் அண்ணலின் இந்தப்பார்வை ஒரு முக்கிய நிலைப்பாடாகும்.

மகாதேவ் பாயும், நரஹரிபாயும் ஆருயிர் நண்பர்கள். ஆசிரமத்தின் ஆரம்ப
காலத்தில் மகாதேவ் பாய் எங்கோ ஓர் இடத்தில், “பாபூ இன்னென்ன காரியங்களில் என்னை நிலையாக ஈடுபடுத்த விரும்புகிறார்” என்று எழுதினார் போலும். நரஹரிபாய் வேடிக்கையாக, “கிழவன் மகா தந்திரசாலி. அவன் கையில் ஒரு தடவை சிக்கிவிட்டால் சிக்கினதுதான். பிறகு விடுபடுவதற்கில்லை!” என்று பதில் எழுதினார். சாதாரணமாக பாபூ பிறர் கடிதங்களைப் படிப்பதில்லை. ஆனால் அன்று வந்த தபால்களெல்லாம் பாபூவின் கைக்கு வந்துவிட்டன. ‘ஆசிரமத்திலிருந்து மகாதேவுக்கு கடிதம் வந்துள்ளது. எழுத்தோ நரஹரிபாயினுடையது. ஆசிரமத்தின் செய்திகள் இருக்கும்’ என்று எண்ணி பாபூ அந்தக் கடிதத்தை உடைத்தார். படித்ததும் மிகுந்த வருத்தமுண்டாகிவிட்டது.
நரஹரிபாய்க்குக் கடிதமெழுதினார். அதில், “தற்செயலாக உன் கடிதத்தைப் படித்தேன்; வாழ்க்கையில் இவ்வளவு ஆண்டுகள் கழித்தாகிவிட்டது. இந்த முதுமையில் எந்தச் சொந்த லாபத்திற்காக உங்களை நான் ஏமாற்றப்போகிறேன்?” என்று எழுதியிருந்தார்.
...
...
‘எங்கள் கடிதத்தை தாங்கள் எதற்காகப் படித்தீர்கள்? இதைவிட மோசமாக அதில் ஒன்றும் எழுதாதிருந்தது நல்லதாயிற்று சிறுவர்களாகிய எங்கள் உலகமே தனி. தங்களுக்குத் தெரியவேண்டுமென்பதற்காக உங்களைப் பற்றி இன்னும் என்னவெல்லாம் சொல்வதுண்டு என்பதையும் இங்கே எழுதுகிறேன். இம்மாதிரியான வினோதத்தைக் கொண்டே நாங்கள் உயிர் வாழ்கிறோம்! இதன் மூலமாகவே தங்களிடம் எங்களுக்குள்ள பக்தியையும் வளர்த்துக்கொள்ளுகிறோம்” என்று எழுது என்று சொன்னேன். இந்தக் கடிதம் கோரிய பயனைத் தந்தது. பாபூ எங்களை நன்றாகப் புரிந்துகொண்டுவிட்டார்.

' சதுர் பனியா ' என்றும் வேறு பல பேர்களாலும் இன்று அவரைக் குறிப்பிட்டு, மோசமாக சித்தரித்து, அதைக்கொண்டு அன்றிருந்த படேல் போன்ற தலைவர்கள் அவரை வெறுத்ததாக கயிறு திரிப்பவர்களும், அதைக் கேட்பவர்களும் புரிந்து கொள்ளாத உண்மை இது. இந்தப் புத்தகம் முழுவதும் இதைப் போன்ற பெயர்களை, அவரை தொடரும் பலரும் அன்புடன் குறிப்பிடுவது கண்கூடு.

பெஜவாடாவில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் கூட்டம் நடந்துகொண்டிருந்தது. வருடாந்தர மாநாட்டைவிட அது சிறப்பில் குறைந்திருக்கவில்லை. திலகர் சுயராஜ்ய நிதிக்காக ஒரு கோடி ரூபாய் சேர்த்தல் ஒரு கோடி காங்கிரஸ் அங்கத்தினரைப் பதிவு செய்தல், ஒரு லட்சம் ராட்டைகள் சுற்றச்செய்தல் என்ற வேலைத் திட்டம் இங்கேதான் ஏற்பாடாயிற்று. அதற்குப் பிறகு ஒரு பெரிய கூட்டம் நடந்தது. ஒரு பெரிய மண்மேடு அமைத்து அதன் மீது தலைவர்கள் அமர்த்தப்பட்டார்கள். நாற்புறமும் மக்கள் கூட்டம் கடலைப்போல் அலைமோதிக்கொண்டிருந்தது. அந்தக் காலத்தில் ஒலிபெருக்கி கிடையாது. பேசுவோரின் குரல் வெகு தொலைவு வரையில் எட்டுவதற்கில்லை. மக்களுக்குப் புதிய ஆசையினால் பித்தம் தலைக்கு ஏறியிருந்தது. அவர்கள் காந்தியடிகளைத் தரிசித்தாக வேண்டும். நடவடிக்கையின் ஆரம்பத்திலேயே ஒரு பசு கூட்டத்தின் உள்ளே புகுந்துவிட்டது. கூட்டத்தில் ஒரே குழப்பம். பாபூவால் ''நீங்கள் என்னைப் பார்க்க வரவில்லை. சுயராஜ்யத்தின் சங்கொலியைக் கேட்கவே வந்திருக்கிறீர்கள்” என்று மட்டுமே சொல்ல முடிந்தது. ஆனால் அந்தப் பெருங்கூச்சலில் எதுவுமே கேட்கவில்லை. பாபூ நாற்காலியில் எழுந்து நின்றார். பித்தம் பிடித்த மனிதர்கள் இதைக் கண்டதும் பெரும் பித்தர்களாகிவிட்டார்கள். அவர்கள் மண்மேட்டை நோக்கி அடித்து மோதிக்கொண்டு வந்தார்கள். அங்கே அவர்களைத் தடுத்து நிறுத்த ஏற்பாடு எதுவுமில்லை. எனக்கு பாபூவின் உயிரைப்பற்றியே கவலையாகிவிட்டது. பகைவரிடமிருத்து தப்புவிக்கலாம், ஆனால் குருட்டு பக்தர்களிடமிருந்து எப்படிக் காப்பாற்றுவது? இடித்துப் புடைத்துக்கொண்டு வந்தவர்கள் மேட்டின் மீதிருத்த பந்தல் காலைப் பற்றி மேலே ஏற முயற்சி செய்யலானார்கள். ஏதேனும் ஒரு கம்பம் சாயுமானால் பந்தல் முழுமையும் தலைவர்கள் தலையில் விழுந்துவிடுவது நிச்சயம்.
பாபூ நிலைமையை உணர்ந்துகொண்டார்; உடனே ஒரு நாற்காலியில் ஏறி நின்றார்; ஓர் இமைப் பொழுதில் நாற்புறமும் கண்ணைச் சுழற்றிப் பார்த்தார். 3, 4 நாற்காலிகளைத் தாண்டி கூட்டத்தின் பரப்பு குறைவாயிருந்த பக்கத்தில் குதித்து, மக்களைத்தள்ளி விலக்கி, அம்பைப் போல் கூட்டத்தைக் கிழித்துக்கொண்டு வெளியேறிவிட்டார். இது யாருக்குமே தெரியாது.

பேஸ் புக், வாட்ஸ்அப், போன்ற சமூக ஊடகங்களும், அரசுக்கும் பெரும் முதலாளிகளுக்கும் விலைபோன தீவிரமான ஊடகங்களும் இல்லாத கால கட்டத்தில், சாமானியர்களின் தலைவர்கள், அந்த சாமானியர்களுடன் ஏற்படுத்தும் வெகுஜன தொடர்பும், அது உருவாகும் வழிவகையும், அதற்குத் தேவையான அசாத்தியமான கடின உழைப்பையும் அறியாமல் இருப்பது ஆச்சர்யம் அல்ல. மாறாக அதே சமூக ஊடகங்களின் வழியாக உருவான பிம்பங்களை போற்றி, காந்தியின் புகழ் வெறும் உருவாக்கப்பட்ட பிம்பம் என்று உரைப்பது ஒரு பெரிய நகை முரண்.

Comments

Popular posts from this blog

பாலை மனம்

தமிழின் புதிய வெளிகள்

Deccan in Dazzling light