காதல் மலை…

 

சிறுவயதிலேயே மலைகள் என்னை நானறியாமலே தங்களோடு பிணைத்து வைத்துக் கொண்டன. வளரும் பருவத்தில் சிலகாலம் என்னைத் தன்னோடு வைத்துத் தாலாட்டிய நீலகிரி, நான் அதை விட்டு கீழிறங்கிய போதும், அது என்னை விட்டுக் கீழிறங்கவில்லை என்பது எனக்கு அப்போது தெரியவில்லை.

ஆனால், பிறகெப்போதும் என் கனவுகளிலும், நான் சோர்வடைந்து கொழுகொம்பு தேடிய பொழுதுகளிலும், அதன் நினைவுகளும், வடிவங்களும் என்னை முன்னோக்கி உந்தித் தள்ளியபடியே இருந்தன. என் பயணங்கள், என் வாசிப்புகள், நான் தேடித் தேடிக் காட்சிப்படுத்திய புகைப்படங்கள் என அனைத்திலும் அது தன் இருப்பை எப்போதும் உறுதி செய்து கொண்டே இருந்தது.
ரஸ்கின் பாண்டும், பொற்றேக்காடும், ஏன் சமீபத்தில் M.T. வாசுதேவன் நாயரும் என் வாசிப்பின் மூலம் என்னை ஈர்த்து வைத்துக்கொண்டதும் அப்படித் தான். அந்த புத்தகங்களில் எல்லாம் மலை ஒரு பாத்திரமாகவே உலவி வருவதைப் படித்திருக்கிறேன்.அந்த வாசிப்புதான் என் அலைக்களிப்புகளில் இருந்து என்னை மீட்டு, சமணப்படுத்தி, விசாலமாக்கியது.




அப்படி தேடி கையிலெடுத்த புத்தகம் தான் சார்ல்ஸ் பிரேசியர் (Charles Frazier) எழுதிய கோல்ட் மவுண்டன் ( Cold Mountain ) என்ற புத்தகம். இதை அவருடைய முன்னோரின் கதையிலிருந்தே எடுத்து புதினமாக பிண்ணி இருக்கிறார்.




இது ஒரு படமாக 2003 ல் அதே பெயரில், ஆந்தனி மிங்கெல்லா ( Anthony Minghella ) இயக்கத்தில், ஜூட் லா, நிக்கோல் கிட்மேன், ரெனே செல்வேகர் ஆகியோர் நடித்தது வெளிவந்து பல விருதுகளை வென்றது.




பொதுவாக இந்தப் புத்தகத்தை படித்தவர்கள் கூறும் குற்றச்சாட்டு, அது மிக மிக மெதுவாக நகருகிறது என்பதுதான். அவர்கள் கூற்றிலும் சற்று உண்மை இருக்கிறது. ஆனால், அதைத்தாண்டி எனக்கு இந்தப் புத்தகம் பிடித்துப்போக பல காரணங்கள் இருக்கின்றன.
இயல்பாகவே மலைகளில், காலத்தின் கால்கள் சற்று மெதுவாகவே செல்லும். வேகத்துக்கு அங்கு வேலை இல்லை. வெகு காலத்துக்கு பின்பு மலையேற்றத்தில் ஈடு பட ஆரம்பித்தபோது, என் அவசரத்தையும், அதனால் ஏற்பட்ட சோர்வையும் கண்ட என் நணபன் ஹேப்பி, “ Just focus on one step and keep doing that again and again” என்றான். அதன் அர்த்தம், ஏறவேண்டிய தூரம் மொத்தத்தையும் பார்த்து மலைத்து விடக்கூடாது. மாறாக நம் கவனம் ஒரு அடி எடுப்பதில் தான் இருக்கவேண்டும்; ஒன்றன் பின் ஒன்றாக தொடர்ந்து அதை விழச் செய்தால் போதும். இது எனக்குள் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது, மலையேற்றத்தில் மட்டுமல்ல, வாழ்க்கையிலும் கூடத்தான்.
இது தான் இந்தப் புத்தகத்தின் மைய இழையும் கூட…
இதன் காலகட்டத்தையும் அதன் களத்தையும் புரிந்து கொள்ள அமெரிக்க சரித்திரத்தின் சில முக்கிய நிகழ்வுகளை நாம் புரட்ட வேண்டி இருக்கிறது. முதலாவதாக, இன்றைய அமெரிக்காவும் அதன் அரசியலும் உருப்பெற்ற, பத்தொன்பதாம் நூற்றாண்டின் மத்தியில் சுமார் நான்கு வருடங்கள் நடந்த அமெரிக்க உள்நாட்டுப் போர். இந்தக் கதை நடக்கும் வட கரோலினாவின் உட்பகுதிகளில், போரின் விளைவாக வறுமையும், போரின் இணைப்பாக நடந்த கொள்ளை மற்றும் கொலைகளையும் பின்னணியாக கொண்டு பின்னப்பட்டவை இதன் நிகழ்வுகளும், அவற்றின் விளைவுகளும்.
அத்தோடு அது மென்மையாக தொட்டுச் செல்லும் இன்னொரு துயரம், அதற்கு முன்பு நடந்த, அமெரிக்காவின் கறுப்புப் பக்கங்களில் ஒன்றான “Trail of Tears” எனப்படும் ஒரு பெரிய கட்டாய இடப்பெயர்வு மற்றும் அதன் விளைவாக தொடர்ந்து நடந்த இன அழிப்பு. 19ம் நூறாண்டின் ஆரம்பத்தில் துவங்கி அதன் மத்தி வரை சுமார் 60,000 அமெரிக்க செவ்விந்தியர்களை அவர்கள் காலாகாலமாக இருந்த நிலத்தில் இருந்து இடம்பெயரச்செய்ய அமெரிக்க அரசு, தன் ராணுவம் மூலமாக நடத்திய நடவடிக்கை தான் அது. அதற்காக அது 1930ல் (செவ்) இந்தியர்களை அகற்றும் சட்டம் ( “Indian Removal Act “ ) என்று ஒன்றை நிறைவேற்றிக்கொண்டு அதன் பெயரில் அதைப்பற்றி ஏதும் அறியா, அதை எதிர்த்து குரல் தர முடியாத பூர்வீக மக்களை நகர்த்தவும், அழிக்கவும் நியாயம் கற்பித்துக் கொண்டது. அந்த நிகழ்வு ஒரு அடர் புகைபோல, ஆவிபோல கதைமுழுவதும், தொட்டுச் செல்கிறது.
ஒரு பக்கம், போரில் இருந்து வெளியேறி தன காதலியான ஏடாவை தேடி வரும் இன்மன், அந்தக் காதலை நம்பிக்கையாய் கொண்டு வாழும் ஏடா என்று ஒரு இழை. இன்னொரு பக்கம், திடீரென்று பணமேதும் இல்லாமல் தடுமாறி நிற்கும் ஏடாவுக்கு துணையாக அவள் நிலத்தை மீட்டுருவாக்கி இணைந்து வேலை செய்யும் அவள் தோழி ரூபி. இரண்டு இணைகோடுகளையும் இணைக்கும் மலை என பின்னப்பட்டது தான் இதன் கதை.
வழக்கமான கதைகளில் வருவது போல் திருப்புமுனை சம்பவங்களில் கொக்கி போட்டு வாசிப்பவர்களை இருக்கையின் நுனியில் இது நிறுத்துவதில்லை. மாறாக, ஒரு நீரோட்டம் போல சம்பவங்கள் மெதுவாக, ஆர்ப்பாட்டம் ஏதும் இல்லாமல் கடந்து போகின்றன. அந்த நடையை ஏற்றுக்கொள்ள சற்று நேரமானாலும், எழுதப்பட்ட மொழியும், அந்த மொழி ஏற்படுத்தும் உணர்வுகளும் அலாதியானது. உண்மையில் இதுதான் பலரும் குறிப்பிடும் மெதுவான நடை என்ற குற்றச்சாட்டு என நினைக்கிறேன். வழக்கமாக இது போன்ற கதைகளில் வரும் பரபரப்பான நடையை எதிர்பார்ப்பவர்களுக்கு அது ஏமாற்றமளிக்கலாம். ஆனால், அதைத் தாண்டி மொழி வழியே அது அளிக்கும் உணர்வை உள்வாங்க ஆரம்பித்தால் இதுவெல்லாம் ஒரு பொருட்டாகவே தெரியாது . ஆகவே, வேகமாக, பரபரப்பாக வாசிப்பவர்களுக்கான கதை அல்ல இது. மாறாக மொழி வழியே உணர்வை அனுபவிப்பவர்களுக்கானது இது.
மெதுவாக இதை வாசிப்பவர்களுக்கு புரியும் ஒன்று என்னவென்றால், மாறுபட்ட குணாதிசயங்களைக் கொண்ட இதன் முக்கிய மூன்று பாத்திரங்களையும் இணைக்கும் ஒரே புள்ளி, மலையின் மீது அவர்களுக்கு இருக்கும் காதல்தான். இன்மன்னுக்கும் ஏடாவுக்கும் இருக்கும் காதலையும், ஏடாவுக்கும் ரூபிக்கும் இருக்கும் நட்பையும் தாண்டி, ஒவ்வொருவரும் அந்த மலை மீது கொண்டிருக்கும் காதல்தான் இந்தக் கதையின் அடிப்படை நீரோட்டம்.
இதில் வரும் உணர்வுகளும், நிகழ்வுகளும், மலை வாழ்க்கையின் எதார்த்தத்தை முன்னிறுத்துகின்றன. உதாரணமாக இன்மன் வழியில் சந்திக்கும் தாய் கரடியும், அதன் குட்டியும். அந்த சம்பவம் தரும் துயரத்தை, அதன் யதார்த்தம் எளிதாக கடந்து செல்கிறது. அதேதான் இந்தக் கதையின் முடிவிலும். காதலும் வலியும், யதார்த்தத்தின் கரங்களால் துடைக்கப்பட்டு விடுகிறது.
இதைப் படமாக்கும் போது படத்தின் சுவாரஸ்யத்துக்காக சம்பவங்களை சற்று மாற்றி திரைக்கு ஏற்றவாறு அமைத்திருக்கின்றனர். என்ன, இங்கு இருப்பது போல் யாரும் அதற்காக கச்சை கட்டி சண்டைக்கு வரவில்லை. அது ஒன்றுதான் குறை.

Comments

Popular posts from this blog

பாலை மனம்

அன்பே மருந்து

Deccan in Dazzling light