சமூகத்தின் மனப்பிறழ்வு

 


சிறுவயதில் எனக்கு இரவில் படுக்கையை நனைத்துவிடும் பழக்கம் இருந்தது. குறிப்பாக பயம் தரும் படங்களைப் பார்த்த நாட்களில்.  அப்போது நான் பார்த்து பயந்த ஒரு கருப்பு வெள்ளை ஆங்கிலப்  படம் ஒன்று சமீபத்தில் ஞாபகத்தில் வந்ததது. அதில் மிக நார்மலாக இருக்கும் மனிதர்கள் திடீர் என்று உணர்வு தப்பி என்ன செய்கின்றோம் என்று தெரியாமல், கொலை செய்யத் தூண்டப்படுவார்கள். அந்த சம்பவம் நடந்த பின் அவர்களுக்கு அதைப்பற்றி எந்தவொரு  ஞாபகமும் இருக்காது. அவர்கள் அப்படி நடப்பதற்கு ஒரு ஹிப்னாட்டிசம் தெரிந்த வில்லன் தான் காரணம் என்று பிறகு தெரிய வரும். அவன் கொலைச்  செயலை நிகழ்த்த வேண்டிய ஆட்களை ஹிப்னாட்டிஸத்தில் ஆழ்த்தி, அவர்கள்  ஆழ்மனதில் கொலைக்கான உத்தரவை பதிய வைத்துவிடுவான்.  பிறகு, வேறு ஒரு தருணத்தில் அந்த உத்தரவை தூண்ட ஒரு சமிக்ஞையை கொடுத்து அவர்களை செயல்பட வைத்திருப்பான். ஒவ்வொருவருக்கும் வேறு வேறு சமிக்ஞைகள்.

இது ஒரு மர்மக் கதை என்றாலும், நம் நிகழ் வாழ்வில் நடக்கும் சில சம்பவங்கள் இதற்கு சற்றும் குறைந்தவை அல்ல. என்ன, அந்த ஆழ்மன உத்தரவுகள், ஏற்கனவே இனம், மதம், மதம், மொழி என்று ஆழ்மனத்தில் வெறுப்பெனும் வேர் கொண்டு ஆழப் பதிய வைக்கப்பட்டிருக்கின்றன. குறிப்பிட்ட தருணத்தில் அது சம்பந்தமான சமிக்ஞைகள் எழும்பும் போது, பெரும்பான்மை சமூகத்துக்கு வெறி பிடித்துவிடுகிறது. வெறி பிடித்திருப்பது பெரும்பான்மையான சமூகத்துக்கு / குழுவுக்கு என்னும் போது ஒருவரை ஒருவர் பார்த்து,  திருத்திக்கொள்ள வாய்ப்பில்லாமல் அந்த மனப்பிறழ்வு மேலும் மேலும் வலுப்பெறுகிறது .

அப்படி உலகம் முழுதும், சரிதத்தில் சம்பவங்கள் ஏராளமாக பதியப்பட்டிருக்கின்றது. அப்படிப்பட்ட சரித்திரத்தின் கறுப்புப் பக்கங்களின் மீது எவ்வளவு வெளிச்சம் பாய்ச்சினாலும் அது  போதுவதில்லை . அந்த சமூக மனப்பிறழ்வு மேலும் பரவாமலிருக்க, மேலும்  மேலும் அதைப்பற்றியும் அதன் தீமையைப் பற்றியும் சொல்லப்படுவது அவசியமாகிறது.

சில சமயம் குறிப்பிட்ட சம்பவங்கள் அதிகம் பேசப்படாமல் அதன் வலிகளும், அது தரும் படிப்பினைகளும் சரியாக பதியப்படாமலே போய்  விடுகின்றன. அப்படி அதிகம் பதியப்படாத சம்பவம் ஒன்று, இரண்டாம் உலக யுத்தத்தின் இறுதியில் அமெரிக்காவின் ஜப்பானிய குடிமக்களின் மீது நிகழ்த்தப்பட்ட சமூக வன்முறை. இரண்டாம் உலகயுத்தத்தின் காலகட்டத்தில் ஜெர்மனி யூதர்கள்  மீது நிகழ்த்திய இனஅழித்தொழிப்பு என்ற என்ற பெருங்கொடுமையின் நிழலில் இது மறைந்து போனது என்றபோதும், இந்த கொடுஞ்செயல் , யூத இன அழித்தொழிப்பின் பாதையிலேயே  வெகு தூரம் சென்ற ஒன்று என்பதும் , நாஜிப்படைகளை எதிர்த்துப் போரிட்ட “நல்ல” தரப்பினால் நிகழ்த்தப்பட்டது என்பதும் இதைப் பற்றிப் பேசுவதற்கு முக்கிய காரணமாகிறது.

இரண்டாம் உலக யுத்தத்தின் இறுதியில், ஜப்பானிய பேரரசு, அமெரிக்காவின் மீது திடீரென்று  முன்னெடுத்த தாக்குதல்களின் பின்னணியில், பெரும்பான்மை அமெரிக்கர்கள் மனதில், ஜப்பானிய இனத்தைச் சேர்ந்த அமெரிக்கக் குடிமக்களின் மீது வெறுப்பெனும் நஞ்சு விதைக்கப்பட்டது.  அந்த நஞ்சின் விளைவாக வெறிபிடித்த அமெரிக்க சமூகத்தின் செயல்பாடுகள், நாஜிக்களின் செயல்பாட்டுக்கு சற்றும் குறைவில்லாதது என்பது தலைகுனியச் செய்யும் ஒரு நிகழ்வாகும்.

திடீரென்று, நாடு முழுவதும் வெறுப்புப் பிரச்சாரம் எழும்பியது.  ஜப்பானிய, ஆசிய இனத்தவரின் மீது  அதன் கொடுங்கரங்கள் இறுகத் துவங்கியது. இறுதியில் நாஜி வதை முகாம்கள் போலவே ஜப்பானிய இனத்தைச் சேர்ந்த அமெரிக்கர்களும்,  அமெரிக்க வதை முகாம்களில் சென்று அடைக்கப்பட்ட கொடுமையில் அது வந்து நின்றது.

அப்படி 1,20,000 அமெரிக்கக் குடிமக்கள், 1942ல் இருந்து 1945 வரை அந்த வதைமுகாம்களில், தங்கள் வீடுகள், உடைமைகள், வாழ்வாதாரம் இழந்து திடீரென்று கூட்டி வரப்பட்டு அடைக்கப்பட்டனர். அது, அந்த பாதிக்கப்பட்ட சமூகத்தின் மீது தீராத வடுவாக மாறிப் போனது.





அப்படி அந்த சமூகத்தில் இருந்து வெளிய வந்த ஜார்ஜ் டாக்கேய் என்ற பிரபல அமெரிக்க நடிகரின் சொந்த அனுபவங்களின் தொகுப்பாக “ அவர்கள் நம்மை எதிரிகள் என்றனர்” ( They Called Us Enemy ) என்ற கிராஃபிக் நாவல் வடிவில் வந்த புத்தகத்தை சமீபத்தில் படிக்க நேர்ந்தது.



ஒரு சமூகம் வெறிபிடித்து தன்னிலை மறந்ததால், அதன் அரசுக்கும் பைத்தியம் பிடித்து,  குறிப்பிட்ட ஒரு சமூகம் எப்படி துன்பத்தில் ஆழ்த்தப்பட்டு, சிறுமைப்படுத்தப்பட்டது என்பது பற்றிய வரைச்சித்திரம் அது. முள்வேலி, தனிமைப் படுத்துதல், வெறுப்புப் பிரச்சாரம் என்று நாஜிகளின் நாட்டில் நிகழ்ந்த எல்லாமே இங்கும் நிகழ்ந்தது என்பதை மிக ஆழமாக மனதில் பதியும் வகையில் காட்சிப் படுத்தும் புத்தகம் இது. அந்த வதைமுகாமில் நேரடியாக பாதிக்கப் பட்ட ஒருவரின் குரலில் ஒலிப்பது என்பதைத் தாண்டி, ஆவணப் படுத்தப்பட்ட தரவுகளின் பின்னணியில் இருப்பதினால் இதன் தாக்கம் மிக அதிகமான எனக்குள் பதிந்தது.




அந்த முள் வேலிக்குள் இருந்து கொண்டே ஜனநாயக முறையில் போராடிய பெரும்பான்மையரின் வெறுப்புக்கு ஆளான, அந்த அமெரிக்கக் குடிமக்களின் போராட்டம் 1945ல் முடிவுக்கு வந்தது. ஆனாலும், அதன் வலி அவர்களின் மனதில் ஆறாத வடுவாக இருந்தத்தை, இறுதி வரை அமெரிக்க ஜனநாயகத்தில் நம்பிக்கையுடன் உறுதியாக இருந்த  டாக்கேயின் தந்தை, எப்படி  அம்மையார் எலியனார் ரூஸ்வேல்ட்டை சந்தித்து கைகுலுக்கும் வாய்ப்பை தவிர்த்தார்  என்பதன் மூலம் விளங்கிக்கொள்ள முடிகிறது.

இது பதிவு செய்த உண்மைகளில், எப்படி ஒரு சிறப்பான ஜனநாயக அமைப்பில், தனிப்பட்ட மனிதர்களின் சுயநலம், சமூகத்தை தடம் புரளச் செய்கிறது என்பது மிக அழுத்தமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது அனைத்து சமூகங்களுக்கும் மனதில் பதிய வேண்டிய பாடமாகும். மேலும், எந்தப் பிரச்சினையையும் தட்டையாக கருப்பு வெள்ளையாகப் பார்க்கமுடியாது என்பதையும் இதன் பதிவு செய்யப்பட நிகழ்வுகள் நமக்கு உணர்த்து கின்றன. உதாரணமாக, லிபரல் தரப்பாக அடையாள படுத்தப்படும் அமெரிக்க டெமாக்ரடிக் கட்சி  தரப்பில் இருந்து வந்த செனேட்டர் டாம் ஸ்டீவர்ட்டும், நடுநிலை வகிக்கும் அமெரிக்க படைகளின் ஜெனரல் ஜான்.L. டெவிட்டும் தான் ஜப்பானிய இனக் குடிமக்களின் மீது அதி தீவிர வெறுப்பை வெளிப்படுத்தியவர்கள்  என்பது குறிப்பிடத்தக்கது. மாறாக அவர்களின் விடுதலைக்குப் பின், அவர்களுக்கான இழப்பீட்டை வழங்கி, அவர்களுக்கான தார்மீக ஆதரவையும், வருத்தத்தையும் பதிவு செய்தது தீவிர வலது சாரியாக இன்று அடையாள படுத்தப்படும் அமெரிக்க ரிபப்லிக்கன் கட்சியின், ரொனால்டு ரீகன் தலைமையிலான அரசு.





உடனே அமெரிக்காவின் சரித்திரமே இப்படித்தான்,  அமெரிக்கா ஒரு ஏகாதிபத்தியம் என்று சொல்பவர்கள் சற்று எதிர்ப்பை பதிவு செய்ததற்காக, ஆன்டி இந்தியன், அந்தோலன் ஜீவி என்றெல்லாம் அழைக்கப்பட்டு, அரசு வன்முறைக்கு ஆளாகும் நிலை பற்றி நினைவு படுத்திக்கொள்வது அவசியமாகும். அதைவிட, அமெரிக்க சமூகம், தொடர்ந்து அதன் சரித்திரத்தின் கருப்பு பக்கங்களை வெளிப்படையாக ஆய்வுக்கும், பார்வைக்கும் உட்படுத்தி அதன் படிப்பினைகளை பதிவு செய்து வருவதும் பற்றி புரிந்து கொள்வதும் முக்கியமாகும்.





இதனைப்பற்றிப் பேசும் போது அமெரிக்கா உலக அரசியலில் நடத்திய அடக்குமுறைகளையும், முரண்களையும் நியாயப்படுத்தவில்லை. அதன் உள்நாட்டு சமூக அமைப்புக்கும், வெளிநாட்டில் அது தன்னலம் சார்ந்து எடுக்கும் நிலைப்பாட்டுக்கு பெரும் வேறுபாடு உள்ளது என்பதையும் புரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகும். அதன் வெளிவிவகாரம் சம்பத்தப்பட்ட முகமும், உள்நாட்டு முகமும் வேறு வேறு என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன். உண்மையில் இது எந்தவொரு நாட்டுக்கும் பொருந்தும்.

உதாரணமாக, சில வருடங்களுக்கு முன் இங்கே பெரும் இடது சாரி யூனியன் செயல்பாட்டாளராக அறியப்பட்ட ஒருவருடன் உரையாடும் வாய்ப்பு கிட்டியது. அப்போது நான் சீனாவுக்கு தொழில் சம்பந்தமாக அடிக்கடி பயணம் செய்யும் நிலையில் இருந்தேன். அதை பற்றி அறிந்த அவர், சீனாவின் அருமை பெருமைகளை எடுத்துரைத்து, அதன் அப்போதைய வளமான நிலையை என் பேச்சில் இருந்தே மேற்கோள்காட்டிப் பேசினார். அதை ஆமோதித்த நான், அதே சமயம், நான் கண்ட மக்கள் விரோத நடவடிக்கைகளையும், அது சர்வதேச அளவில் வளரும் நாடுகளில் நிகழ்த்தும் முறையற்ற நடவடிக்கைக்களையும் பற்றிக் கூறிய போது, “ அவர்கள் நாட்டுக்கு எது நல்லதோ அதை அவர்கள் செய்கிறார்கள்” என்று சாதாரணமாக சொல்லிச் சிரித்துக் கடந்து விட்டார்.

இறுதியில் அந்தப் புத்தகம் குறிப்பிடும் ஜனாதிபதி ஒபாமாவின் வார்த்தைகளை நாம் மனதில் பதிய வைத்துக் கொள்வது அவசியமாகும்.

“நாம் ஒருவரையொருவர் அங்கீகரிப்பதன் மூலம் நீதி நிலைபெற்று வளர்ச்சியுறுகிறது…. எனது சுதந்திரமும் உங்கள் சுதந்திரமும் ஒன்றை ஒன்று சார்ந்துள்ளன… வரலாறு என்பது அநீதியை நியாயப்படுத்தும் வாளாகவோ, முன்னேற்றத்திற்கு எதிரான கேடயமாகவோ இருக்க முடியாது, மாறாக, கடந்த கால தவறுகளை மீண்டும் செய்வதைத் தவிர்ப்பது எப்படி என்பதற்கான கையேடாக அது இருக்க வேண்டும்"

Comments

Popular posts from this blog

Vistas of Evolution

இலக்கியம் - சமர்

The art of silencing the Voices from the past