புளிப்பு மருந்தும் ஒரு அறிவியல் புனைவும்
“ சாமி… இதப்பாரு, சுக்கு மிட்டாய் மாதிரித்தா… அப்படியே கண்ண மூடிட்டு மொடக்குனு குடிச்சிரு”
“இல்ல பாட்டி.. பொய் சொல்றீங்க… அது மருந்து…”
“கண்ணு, இதப்பாரு, சீச்சிக்காய் மாதிரியே இருக்கும்… எடுத்து மட மடன்னு வாயிலே போட்டுரு…”
“போங்க பாட்டி… சீச்சிக்காயாமா சீச்சிக்காயி.... அது வேற எதோ வெறும் காயி… சும்மா ஆச காட்டி மோசம் பண்ணாதீங்க..”
இது வழக்கமாக சிறுவயத்தில் நான் எடுக்கத்தயங்கும் மருந்தை, உணவை, இன்ன பிற வஸ்த்துக்களை என் பாட்டி என் வாயில் ஊட்ட கைக்கொள்ளும் உத்திகளும், அதற்கான எனது தற்காப்பு செயல்பாடுகளும் தான்.
இத்தனைக்கும், அவர் என்னிடம் பிரயோகம் செய்யும், பல நேரடி மருத்துவ மூலிகை நடவடிக்கைகளை சளைக்காமல் செயற்படுத்தும், கடமை வீரன்தான் நான்.
ஒரு மண்டலத்துக்கு, ( 48 நாட்களுக்கு ) விடியற்காலை வெறும் வயிற்றில் பிங் பாங் பந்து சைசில் அரைத்து உருட்டப்பட்ட வேப்பிலை உருண்டையை மோர் ஊற்றி விழுங்குவதாகட்டும், இட்டிலி மாவில் சேர்த்ததுக் கசப்பு குறைத்து உண்ண வேண்டிய முடக்கத்தான் கீரையை வெறுமனே சட்டியில் வணக்கி நேரடியாய் வாயில் போட்டு மென்று முழுங்குவதாகட்டும் ( மருந்ததோட வீரியம், 'காட்' போயிருமாம்…) பாட்டி சொல்லை தட்டாத பேரன் தான் நான்.
ஆனால் அவ்வப்போது, சமரசமாக அவர் அள்ளி அடித்துவிடும் இது போன்ற “நேக்கான பேச்சு” என்னிடம் வேகாது போய்விடும். “அதென்ன, மருந்துனா தின்ற மாட்டனா? சும்மா அதுக்கு இதுன்னு புளுகா அடிச்சு வுட்டா நமக்கு ஆகாது ஆமா!…”
அதைபோல் தான் வாசிப்பிலும் எனக்கு… நேரடி அறிவியல் புத்தகங்களை என்னால் ஒப்புக்கொள்ள முடியும். ஆனால், அறிவியலை நயமாக கலக்கித் தந்தது என்று கூறிக்கொண்டு வரும் புதினங்களை மாத்திரம் என்னால் முடியவே முடியாது…
இதற்கும், புதினம் என்றால் எடுத்ததை முடிக்கும் வரை உணவு, தூக்கம் இன்ன பிற என்று அனைத்து இடங்களிலும், கூடவே எடுத்து சென்று படிக்கும் வெறிபிடித்த வாசகன் நான்.
சிறு வயதில் கழிப்பறையில் இருக்கும் நேரத்தில் கூட புத்தகத்தை நயமாய் எடுத்து சென்று வாசிக்கும் அளவுக்கு… சில நேரங்களில், “ பிரேமு…. அடுத்த இந்த வார குமுதம் வந்தாச்சு, கொஞ்சம் போன வாரத்து குமுதத்தை ரிலீஸ் பண்றியா சாமி…” என்று கழிப்பறை வாசலில் நின்று பெருசுகள் கதறும் அளவுக்கு அது சென்றதும் உண்டு …. அட… என் தங்கையை ( சித்தப்பா பெண்ணை) கட்டி கொடுத்த பின், முதன் முறையாக அவர்கள் வீட்டுக்கு சென்று, அவர்கள் வீட்டு கழிப்பறையில் புத்தக அலமாரியையே என் மைத்துனர் செட் செய்திருந்ததை பார்த்த போதும், குறிப்பாக அதில் நான் விரும்பிப் படித்த “த நெகோஷியேட்டர்”, “த டே ஆஃப் த ஜேக்கல்” போன்ற புதினங்கள் அடுக்கி வைத்திருந்ததைப் பார்த்தும் எனக்கு ஆனந்தக் கண்ணீரே வந்தது விட்டது…
ஆனால், இந்த அறிவியல் புதினங்கள் மாத்திரம் சுக்கு முட்டாய்க்கு பதிலான டைஜின் போல், சீச்சிக்காய்க்கு பதிலான காளான்போல, ஒத்துக்கொள்ளவே இல்லை…
அதிலும், சிறுவயதில் அப்போது தொடராக வந்து சக்கை போடு போட்ட சுஜாதாவின் “என் இனிய இயந்திரா” படித்துவிட்டு ஒரு வித குழப்பத்துடன், தூக்கத்தில், “ நான் சிபி, நீ நிலா ” என்று உளறியபோது, என் பக்கத்தில் படுத்து உறங்கிய என் சித்தி பையன், தம்பி சிபி, “ ஐயோ அண்ணனுக்கு என்னமோ ஆயிப்போச்சு” என்று பயந்தலறி, திப்பிடுத்திப்பிடு என்று ஓடிப்போய் அவன் அம்மாவின் கழுத்தைக் கட்டிக்கொண்டு உறங்கியபின், அந்தக்கதையை வாசிப்பது எனக்கு முற்றிலும் தடை செய்யப்பட்டது.
பிறகு பல வருடங்களுக்குப் பிறகு அதை படித்த பின் அதன் கணினி மற்றும் Virtual Reality சார்ந்த அறிவியலும், உள்ளார்ந்த அரசியல் நையாண்டி / அங்கதமும், அதன் தற்கால நிதர்சனமும் புரிந்த போது, பெரும் பிரமிப்பு அடைந்தேன்.
அதை விடுத்து குறிப்பிடத்தக்க அளவில் வேறு எந்த அறிவியல் புனைக்கதையும் அதன் பிறகு என் கவனத்தை ஈர்க்கவில்லை. எனினும், சில குறிப்பிட்ட புத்தகங்கள் மாத்திரம் என்னை கவர்ந்ததும் உண்மை. ஃபிராங் ஷெட்சிங் எழுதிய “ The Swarm” (German: Der Schwarm) என்னைக் கவர்ந்த அறிவியல் புனைக்கதை. அது ஈர்த்ததற்கு காரணம் கூட சற்று சுவாரசியமானது. காதலா காதலா படத்தில் கமல் கூறுவாரே “ ஓ… அப்படி சொன்னா நம்பமாட்டீங்களா!... சரி, நீங்க நம்பற மாதிரி சொல்றேன் கேளுங்க” என்பார்… அதுபோல், இந்தப் புதினம் ஒரு உண்மையான ஆராய்ச்சி அறிக்கையின் அடிப்படியில் அமைந்தது என்பதோடு, அந்த ஆராய்ச்சியின் மேற்கோள்களை பல இடங்களில் சுட்டி இருந்தது என்னை அதை படிக்கத் தூண்டியது என நினைக்கிறேன். எனினும், பிறகு வேறு எந்த அறிவியல் புதினமும் தொடர்ந்து என்னை ஈர்க்கவில்லை.
அப்படி இருக்கையில், இரா. முருகனின் புதிய புதினமான " தினை அல்லது சஞ்சீவனி" எனக்கான ஒரு தனிப்பட்ட சவாலாக எடுத்து வாசித்து ஆரம்பித்தேன். உண்மையில் அதன் களம் ( genre ), தமிழில் அதிகம் பழக்கமில்லாத ஒன்று... அந்தக் களத்தில் அதிகம் வாசிப்புப் பயிற்சி இல்லாத எனக்கு, அதை வாசிப்பது பெரும் சவாலாகத்தான் இருந்தது. மிக மெதுவாகத் தான் வாசிக்க முடிந்தது. சில நாவல்களைப் போல் வாசித்தவுடனே அத்தோடு ஒன்றுவதும் உடனே நிகழவில்லை.
இரா. முருகன் தனது இலக்கிய பயணத்தை கணையாழி இதழில் 1977ல் இருந்து துவங்கினார். 1986ல் அவருடைய பகடியும் நுண்சித்தரிப்பும் கொண்ட அவருடைய ‘ஒரு கிராமத்துப் பெண்ணின் தலைப்பிரசவம்’ என்னும் கவிதைப் படைப்பிற்காக தமிழின் குறிப்பிடத்தக்க படைப்பாளியாக சுஜாதாவினால் அடையாளம் கட்டுப்பட்டவர். தொடர்ந்து தமிழ் இலக்கியப்பரப்பில் இயங்கிவரும் அவர், தொழில் முறையில் கணினிப் பொறியாளர். மேலும் தனது இலக்கிய முன்னோடிகளில் ஒருவராக சுஜாதாவை குறிப்பிடும் இவரின் இந்தப் படைப்பு, சுஜாதாவின் வழியில் புதிய பாதையை தேர்ந்தெடுத்து நடைபோடுகிறது.
பொதுவாக, ஒவ்வொரு புதினமும், ஒரு குறிப்பிட்ட அளவு பக்கங்களை கடந்த பின்பே கதையோடு ஒன்றிப்போகும் நிகழ்வு நமக்குள் நடந்தேறும். வெகு சில புதினங்களில் மட்டுமே ஆரம்பத்தில் இருந்து, ஆங்கிலத்தில் "gripping" என்று சொல்வார்களே அதுபோல் நடக்கும்.
இந்தப் புத்தகம் அது போன்ற எந்த சட்டத்துக்குள்ளும் அடங்காது. சில இடங்களில் நாம் வசதியாக செட்டில் ஆகும்போது, திடுமென கதையின் போக்கு வேறு திசையில் பயணிக்கும் நிலை, நம்மை ஒருவித குழப்பத்துடனேயே பயணிக்க வைக்கிறது.
ஆனாலும், ஆரம்பத்தில் இருக்கும் ஒருவித தயக்கத்துடன் கூடிய வாசிப்பு, அதன் பாத்திரங்களின் தன்மையை உணரும் போது சற்று வசதியுடன் காலை நீட்டி உட்கார்ந்துகொண்டு வாசிக்க வைக்கிறது. பாத்திரங்களின் தன்மையை, அவை நமக்குள் ஏற்படுத்தும் உணர்வுகளின் வழியே உணர்ந்து கொள்ள முடிகிறது.
உதாரணமாக, அரசியல் தலைமையை கொடூரமான தேளாகவும், அடுத்த நிலையில் இருந்து அதற்கு முட்டு கொடுத்து, அதன் மூலம் அடைந்த மறைமுக அதிகாரத்தின் மூலம் அருவருக்கத்தக்க விஷயங்களை செய்யும் கரப்புகளாக நிலை நிறுத்தும்போது, இது வெறும் புதினம் ஆல்ல, மாறாக அதையும் தாண்டி, அரசியல் நிலையை மிகக் கூர்மையாக சுட்டும் அங்கதம் என்ற புரிதல் அந்த உருவகம் அளிக்கும் உணர்வின் மூலமாகவே ஏற்படுகிறது. அந்தப் புரிதல், தொடர்ந்து “சகல இன சஞ்சீவனியை” சுற்றி நிகழும் நிகழ்வுகளின் வழியே வலுப்பெறுகிறது.
மாறி மாறி வரும் காலவோட்டங்களும், நிகழ்வுகளும் சற்று குழப்பத்தை ஏற்படுத்தினாலும், இறுதியில் அதன் காரண காரியங்கள் விளக்கப்படும் போது அதன் பின்னணி தெளிவுறுகிறது.
மருத்துவர் நீலன், கற்பூரன், குயிலி, வானம்பாடி என்று ஒவ்வொரு பாத்திரமும் தங்களை, தங்கள் இயல்புகளை வலுவாக நிலைநிறுத்திக் கொள்கின்றனர். அதிலும், நீலன் குரல் சில இடங்களில் இரா. முருகனின் குரல் என்று தோன்றுவது எனக்கு மட்டும் தானா? கற்பூரனின் உருவகம் இன்றைய நிலையில் யாரைச் சுட்டுகிறது என்ற புரிதலை வாசிப்பவர்களின் அவதானிப்பிற்கே விடுகிறேன். தமிழின் முக்கிய மைல்கல் படைப்பாக அடையாளப்படுத்தப்படும் இந்தப் புத்தகம், அனைவருக்குமானது அல்ல என்பது என் புரிதல். நீளம் சற்று குறைவாக இருந்திருந்தால் அதன் சுவாரசியம் இன்னும் சற்று கூடுதலாக இருந்திருக்கும் என்று தோன்றுவதும் எனக்கு மட்டும் தானா? கிட்டத்தட்ட 500 பக்கங்களில் விரிந்திருப்பதால் அதை சற்று அதிகமாகவே உணர்ந்தேன். ஒருவேளை, சில காலம் கழிந்தபின் மீள் வாசிப்பில் இன்னும் பல பரிமாணங்கள் எனக்குப் புரியக்கூடும்.
Comments
Post a Comment