ஆற்றோடு ஒரு பயணம்

வருடம் தவறாமல் நடக்கும் காவிரிப் பிரச்சினை இங்கே மறுபடியும் துவங்கியிருக்கிறது. மாறியிருக்கும் அரசியல் அதிகாரங்களின் பின்னணியில், இது இந்த வருடம் சற்று உக்கிரமாகவவே இருக்கும் என்று எதிர்பார்க்கலாம். பிரிவினை வழி அரசியல் நடத்தும் ஒரு தரப்பு அரசியல் அதிகாரம் இன்றி நிற்கும் நேரத்தில் அவர்களின் நல்வாய்ப்பாக இது அமைந்திருப்பதால், அரசியல் சதுரங்க ஆட்டத்தில் இது இந்நேரத்தில் முக்கியம் பெறுவது தவிர்க்க இயலாது.

ஆனால் கருநாடகத்துக்கும் தமிழகத்துக்கும் இடையே இது தவிர பல ஆறுகள் கால காலமாக ஓடிக்கொண்டேதான் இருந்திருக்கிறது. இலக்கியம், திரைப்படம், கலாச்சாரம் என. அவற்றில் சில இருபக்கமும் வெளிப்படையாக வற்றி இருக்கலாம், ஆனால் அவற்றில் சுவடுகள் இன்றும் உண்டு. அப்படி ஒரு ஆறுதான் நாடகத் துறை.





காவிரியின் இரு கரைகளிலும் நாடகத்துறையும் அதன் குழுக்களும் கோலோச்சிய காலமும் ஒன்று இருந்தது. சினிமா வெகுஜனத்தின் கற்பனைகளைக் கவர்ந்துகொள்ளும் காலத்திற்கு முன்பு, ஊர் ஊருக்கு சென்று முகாம் அமைத்து நாடகம் நடத்தும் குழுக்களும் அதை தேடித் தேடி ரசித்த கூட்டமும் ஒரு காலத்தில் நிஜமாகவே இருந்தது. அதில் பெற்ற புகழின் மூலம் சினிமா மற்றும் மக்கள் செல்வாக்கு அடையும் வழியாக இது இருந்ததும் நம் காலத்துக்கு சற்று முன் தான்.

நான்கு சுவருக்குள் இருந்து கொண்டே இன்ஸ்டாக்ராமில் பாடி, ஆடி, இன்னும் என்னென்னவோ செய்து புகழ் பெற துடிக்கும் இன்றைய தலைமுறைக்கு அப்படியும் ஒரு உலகம் இருந்தது என்பது நினைத்துப்பார்க்கவே முடியாத ஒன்று. போரடித்தால் அமர்ந்த இடத்தில் இருந்தே ஒரு விரல் அழுத்தி, வேண்டிய நிகழ்ச்சியை தேர்ந்து பார்க்க முடியும் என்ற தலைமுறைக்கு, ஒரே குழுவினர் வாரக்கணக்கில் ஒரே ஊரில், ஒரு சில நாடகங்களை தொடர்ந்து நடத்தியதும் அதை சலிக்காமல் பார்க்க மக்கள் இருந்ததும், அதில் நடித்த நடிகர்களுக்கு இருந்த மவுசும் ஒரு பெரும் அதிசயமாகவே தெரியக்கூடும்.

தமிழில் நாடகங்கள் மூலமாகவே மக்களின் கருத்துருவாக்கத்துக்கு தூண்டியதும் அதன் வழியே பெரும் அரசியல் சமூக மாற்றங்களுக்கு வழி வகுத்ததும் பெரும் வரலாற்றுநிகழ்வு.

இருந்த போதும் திரைப்படத்தையும், திரைப்படக்கலைஞர்களையும் மாய்ந்து மாய்ந்து எழுதிய தமிழ் இலக்கியப்பரப்பு, பெரும் செல்வாக்குடன் இருந்து பின் மறைந்து போன நாடகக் குழுக்களைப் பற்றியும், நாடகக் கலைஞர்களையும் பற்றி எழுத மறந்தே போனது. அத்தோடு அவர்களின் வாழ்வும், அதனோடு அந்தக் காலகட்ட சமூகத்தின் வாழ்வும் அதிகம் பேசப்படவில்லை என்பது ஒரு பெரும் குறைதான்.

அப்படி ஒரு நிலையில் விட்டல் அவர்கள் எழுதிய வண்ண முகங்கள், தமிழின் மிகவும் குறிப்பிடத்தக்க ஒரு எழுத்து என்றே கூறலாம்.

அவர் தன் பால்ய காலத்தில், குடும்ப ரீதியாக இருந்த நாடக குழுக்களின் தொடர்பால், கர்நாடக குழுக்களை பற்றி எழுதியிருந்தாலும், நாடகம் என்ற ஆற்றின் ஒரு கரையில் உள்ள கன்னட நாடகக் குழுக்கள், தமிழ் நாடகக்குழுக்களின் அமைப்பில் இருந்து பெரிதும் வேறுபடவில்லை என்றே தோன்றுகிறது.

ஆசிரியர், இதில் உள்ள பாத்திரங்களை செதுக்க அதிக கவனம் எடுத்துள்ளது இதில் வரும் பாத்திரங்களின் பெயரில் இருந்து ஆரம்பமாகும். கிருஷ்ணப்பா – நீலம்மா, நாராயணப்பா – ஹரிகதம்மா, நாகராஜ் – பிரபா, ஜெயம்மா - சிவமூர்த்தி, என்று அவரவர் பாத்திர மனப்பாங்கிலேயே பெயர்களும் அமைந்திருப்பது சிறப்பு.

அதிலும் கிருஷ்ணப்பா என்ற வசதியான ஸ்ரீரங்கப்பட்டினத்தை சேர்ந்த நாடக குடும்பப் பின்னணி இல்லாத ஒருவர், அந்தக் கலையின் மீது இருந்த ஆர்வத்தால், அவர் குடும்பத்தின் எதிர்ப்பையும் மீறி, அதற்காகவே வாழ்ந்து, அப்படியே மறைந்து போகும் ஒரு கனமான பாத்திரம்.

சிறு வயதில் என் தாத்தாவின் சினிமா தியேட்டர் எனக்கு ஒரு பெரும் தாக்கமாக இருந்ததது. சினிமா பாரடீசோ என்ற படத்தில் வரும் டோட்டோ என்ற சிறுவனைப் பார்க்கும் போது என் சிறுவயது ஞாபகம் வரும். அதில் வரும் ஆல்பிரெடோ போல், கிருஷ்ணப்பாவும் என் தாத்தாவை ஞாபகப் படுத்துகின்றார்.

என் தாத்தாவும் கிருஷ்ணப்பாவைப் போல் எந்த குடும்பப் பின்னணியும் இன்றி சினிமா துறைக்கு வந்தவர். சினிமா தயாரித்தார். நெடுங்காலம், ஒரு சிறு நகரத்தில் திரையரங்கம் கட்டி நடத்தி வந்தார். அதனால், அவர் தந்தையும், அவர் மகனான எனது மாமாவும் அவர் மீது சினிமா சம்பந்தமாக பெரிதாக நல்ல அபிப்பிராயம் இருந்ததில்லை. தாத்தாவை விட பரந்த வாசிப்புப் பழக்கம் இருந்த என் மாமாவுக்கு, என் தாத்தா திரை அரங்கு நடத்துவது பிடித்ததே இல்லை.

ஆனால், சிறுவயது முதல் அவரோடு வளர்ந்த எனக்கு, அவர் ஊட்டி வளர்த்த கலை ஆர்வம் வளர, அவருடன் உரையாடிய சினிமா சம்பந்தமான நுணுக்கமான விஷயங்கள் தான் முன்னோடி. என் அம்மாவுக்கும் சினிமா பற்றிய ரசனை இருந்தது.

ஆனால், பாவம் கிருஷ்ணப்பாவுக்கு குடும்பத்தில் அப்படி யாரும் இருக்கவில்லை. அதனால் அவர் குடும்பத்தை விட்டு விலகி இருந்து வந்தார்.

இதில் ஆசிரியர் உலவவிடும் பாத்திரங்கள் ஒவ்வொன்றும் ரத்தமும் சதையுமாய் உயிரோடு உலாவுகின்றன. ஒவ்வொருவருக்கும் உள்ள நாடகத்தின் மீதான கவனம், துடிப்பு அனைத்தையும் விட்டலின் வரிகள் நம்முன் மிக நேர்த்தியாக நிறுந்துகின்றன..

“மேடையில் எலெக்ட்ரீஷியனுக்குப் பக்கத்தில் நின்று கொண்டு அவன் சுவிட்சுகளைப் போட்டுப் போட்டு மின்சார வித்தைக் காட்டுவதை கண்கள் விரிய கவனிப்பான். பரண் மீது உட்கார்ந்து காட்சித் திரைகளை கயிற்றால் இழுப்பதும், இறக்குவதுமாயிருக்கும் மனிதர்களைக் கவனிப்பான். ஒவ்வொரு நாளும் அவனுக்கு முழுமையான வாழ்க்கை, ஒவ்வொரு இரவும் ஆர்வத்தை ஊட்டுபவை. பாடல்களை முணுமுணுப்பான். வசனத்தைத் தனக்குத்தானே பேசிக் கொண்டிருப்பான்.”

அதே சமயம், சமூகத்தோடு எந்த சம்பந்தமும் இல்லாமல், இரண்டு மூன்று படங்கள் நடித்துவிட்டு, பத்திரிகைகள் கொடுக்கும் வெளிச்சத்தில் அரசியலுக்கு வரத் துடிக்கும் சினிமா நடிகர்கள் போல் இல்லாமல், தாங்கள் வாழும் சமூகத்தோடு இணைந்து கலந்து, நாடகக் கலைஞர்கள், மற்றும் அவர்களின் மீது ஒரு ஈர்ப்புடன் இருந்த அவர்களை சுற்றி இருந்த ஊர் மக்கள் என அனைத்தையும் அவர் வரிகள் பதிவு செய்கின்றன.

“பொதுவாகத் தங்களுடைய சொந்த புடவை ரவிக்கை, நகைகளை அணிந்தே சமூக நாடகங்களை நடித்துக் கொடுத்து விடுவார்கள். சமூக நாடகங்களில் ஒப்பனையும் அதிகமாயிருக்காது. எனவே உண்மையான தோற்றத்தை சிறிது காட்டுவார்கள். பொதுவிடங்களில், பகற் பொழுதில் இவர்கள் நடமாடும்போது பொது ஜனங்கள் இவர்களை சட்டென்று அடையாளங் கண்டு கொள்ள இப்படி குறைந்த ஒப்பனையில் நடிப்பது துணைபுரியும். நேற்றிரவு காசு கொடுத்து நாடகம் பார்த்த ஜனங்களுக்கு. ஹோட்டல், ஜவுளிக் கடை, மார்க்கெட் முதலான பொதுவிடங்களில் தங்களுக்குப் பிடித்தமான இந்த நட்சத்திரங்களை தங்களுக்கு சமமான அந்தஸ்தோடு நடமாடுவதைக் காண்பதில் புல்லரிப்பு ஏற்படும். சிலருக்கு நட்சத்திரங்களோடு பேசவேண்டுமென்று இருக்கும். ஆனால் சினிமா நட்சத்திரங்களை மனதில் நினைக்கும்போது ஏற்படும் நானாவித “நல்லது கெட்டதுகள்” இந்த ஏழை நாடக நடிக நடிகையரைப் பார்க்கையில் தோன்றுவதில்லை....”

இந்தப் புத்தகத்தில் ஆசிரியர் நாடக நடிகர்களின் வாழ்வு மட்டும் அல்லாமல் அவர்கள் சம்பந்தப்பட்ட அனைத்து விஷயங்களையும், - அவர்களின் மேடை அமைப்பு சம்பந்தப்பட்ட நுணுக்கங்கள் உட்பட , மிக ஆழமாக பதிவு செய்திருக்கிறார்.

மேலும், ஆற்றில் ஒரு கரையில் ஆர்ப்பாட்டமாய் அலையடித்தால், இன்னொரு கரையிலும் சற்று அலையடிப்பது போலவே சமூக நிகழ்வுகளும் பதிவு செய்யப்பட்டு இருப்பதை காணலாம். தென்னகமெங்கும் இந்தி ஆதிக்க எதிர்ப்புப் போராட்டம் எழுந்ததை, கர்நாடகக் கரையில் தொட்டுக் கடந்து போகிறார்.

“சாகரில் மூன்று சினிமா கொட்டகைகளுண்டு, ஒன்றில் நிரந்தரமாக இந்திப் படங்களைத்தான் திரையிடுவார்கள். தெற்கெங்கும் மொழிப் போராட்டம் பரவியபோது இந்த கொட்டகையும் கல்லெறிதலுக்கு ஆளானது. அழகிய கண்ணாடி ஜன்னல்கள் பொடியாக்கப்பட்டதைத் தொடர்ந்து ஒரு வருடத்திற்கு தியேட்டர்காரன் இந்தி மூச்சே விடவில்லை.”

எந்தக்கலையையும் போலவே நாடகக் கலையிலும், அதன் வாழ்வு சாமானிய மக்களின் ஆதரவால் மட்டுமே. மாறாக மேட்டுக்குடியின் கலை ஆர்வம் நாடக உலகத்துக்கும் அதன் கலைஞர்களின் வாழ்வுக்கும் எந்த உதவியும் செய்யாது என்ற யதார்த்தத்தையும் உரக்க சொல்லத்தவறவில்லை.

‘“தியேட்டரிலே எத்தனை ரெண்டாம் வகுப்பும் முதல் வகுப்புமிருக்கு? இலவச பாஸ் அதிகம் வர்ரதே முதலிரண்டு வகுப்புங்களுக்குத்தானே. எத்தனை பேர் அம்பது பைசா, ஒரு ரூபா டிக்கட்லே உட்காரறாங்க? நம்ப மாதிரி சாதாரணமான ஏழை டிராமா கம்பெனிக்கு இந்த தரை மகா ஜனங்களே லாபகரமான ரசிகர்கள். பலமான கலாபிமானிகள். இவங்களை வச்சுத்தான் வசூலே கணக்காறது...”’

இந்த உண்மையை புரிந்தவர்கள் தான் இந்த நாடாளும் பதவிக்கு வரமுடிந்தது. எம்ஜியார் அப்படித்தான். கலைஞரும் அப்படித்தான். அதுதான் ஜனநாயக யதார்த்தம் கூட. அதை மிகச்சிறப்பாக சொன்ன எழுத்து ஒரு முக்கியமான புதினம் தான்.

ஞானி தனது முன்னுரையில் இறுதியாக குறிப்பிட்ட இந்த வரிகள் பொருத்தமாகவே தொனிக்கிறது...

‘வண்ண முகங்கள்' நாவலைப் படித்து முடிக்கும் போது இன்னும் செறிவாக இது இருந்திருக்கலாமே என்ற ஏக்கத்தை எழுப்புகிறது. நல்ல படைப்பு என்பது படித்து முடித்ததும் முழுக்க நிறைவான உணர்வை ஏற்படுத்துவது மட்டுமே அல்ல; இன்னும் இன்னும் என்று தோன்றவைப்பதும்தான். முயற்சியான ஒரு முன்னோடி 'வண்ண முகங்கள்' நாவலின் நிறை குறைகள், தமிழ் நாடக உலகம் பற்றியும் செழுமையான படைப்புக்கள் வருவதற்கு உதவக் கூடியவை என்பதில் எனக்கு சந்தேகமில்லை.'


Comments

Popular posts from this blog

பாலை மனம்

தமிழின் புதிய வெளிகள்

Deccan in Dazzling light