வாழ்வின் உறைந்துபோன நொடிகள்...

சிறு வயதில் தூங்கிக்கொண்டிருக்கும் போது உயரத்திலிருந்து திடுமென விழுவதுபோல் போல் கனவு அடிக்கடி வந்து திடுக்கென எழுந்துகொள்வதுண்டு. ஏதோவொரு நிகழ்வின் பாதிப்பு உள்மனதில் தங்கிப்போயிருப்பதின் வெளிப்பாடு தான் அது எனப் பிறகு உணர்ந்து கொண்டேன். பிறகு அதன் மீட்சியாக உயரத்தில் இருந்து கீழே பார்ப்பது என்பது எனக்கு ஏனோ மிகுந்த பயத்தை அளித்தது. வளர்ந்த பின்பும், உயரமான கட்டடங்களுக்கு செல்ல வேண்டிய நிலையில், அவற்றின் உயரமான தளங்களில் இருந்து கீழே பார்ப்பதென்பது எனக்கு மிகுந்த பதட்டத்தை அளித்தது. திருமணமான பின்னும், பெங்களூரில் உள்ள பார்ட்டன் சென்டர் கட்டடத்தின் உயர் தளத்தில் லிப்டில் வந்து சேர்ந்த பின், கீழே பார்க்காமல் சுவற்றோடு ஒட்டியபடியே நகர்ந்த என்னை ஆச்சர்யத்துடன் என் மனைவி பார்த்து சிரித்தார்.
அதிலிருந்து மீண்டு வர, பிறகு மலையேற்றத்தில் ஈடுபட்டு இன்று ஓரளவு தேறியிருந்தாலும், அந்த நடுக்கம் முழுவதும் விலகி விட்டது என்று கூற முடியாது. இப்படி சிறு சிறு நிகழ்வுகளின் பாதிப்பு நம்மில் பலருக்கு இருக்கக்கூடும். அதிலிருந்து நாம் பிறகு மீண்டும் வரலாம்.
ஆனால் வாழ்வில் பேரதிர்வு தரும் துயரமான சம்பவங்களை சந்தித்தவர்களுக்கு அது தந்த அதிர்ச்சி இதைவிடப் பல மடங்கு பாதிப்பை ( Trauma ) மனதில் உறைய வைத்துவிடும். அப்படி ஏற்பட்ட பாதிப்பு அவர்களின் வாழ்வின் எஞ்சிய பகுதிகளில் கரும்புகை போல் படர்ந்து, அவர்களின் செயல்களிலும், உணர்விலும் பெரும் பாதிப்பை அளிப்பதுடன், அவர்களைச் சார்ந்தவர்களின் வாழ்விலும் எதிரொலிக்கும். அந்த எதிரொலி, உறவுகளுக்குள் கசப்பான தொடர் விளைவாக மாறுவதுமுண்டு.
அப்படி, ஒரு பெரும் பாதிப்பு இரண்டாம் உலக யுத்தத்தின் மத்தியில் வாழ்ந்த பலரின் வாழ்விலும் பல விதத்தில் ஏற்பட்டதை நாம் பலவகையில் வாசித்தும் கேட்டும் இருக்கக்கூடும்.




அந்த வகையில் 1940களில் ஸ்டாலினின் ருஷ்யாவில் நிகழ்ந்த நிகழ்வுகளின் பின்னணியில், அதன் அடக்குமுறையின் உச்சத்தில் நிகழ்ந்த துயரத்தை சந்தித்த ஒரு இளம்பெண், அங்கே இருந்து தப்பி அமெரிக்காவிற்கு வந்து சேர்ந்து அதை மறந்து வேறொரு குடும்பம் அமைந்தாலும், தான் அனுபவித்த துயரத்தையும், அதன் பாதிப்பையும், தான் சொல்லும் கதைகளில் ஒழித்து வைத்துக்கொண்டு வாழ்ந்த கதை இது. அந்தக் கதைகளுக்குள் ஒளிந்திருந்த நிகழ்வுகளையும், துயரங்களையும் கொண்ட அவள் வாழ்க்கையை மெதுவாக அவிழ்த்து, நம்மை ஒரு காலப்பயணத்தில் அழைத்துச் செல்கிறது இந்தப்புதினம்.
வாழ்க்கை முழுவதும், தன் குழந்தைகளோடு ஒரு விலகலோடு இருந்த தாயும், ஏன் இப்படி பாசமும் இல்லாமல், வெறுப்பும் இல்லாமல், விலகியே இருக்கிறாள் என்று தெரியாமல் அதை ஜீரணிக்க முடியாமல், அதன் விளைவாக வாழ்க்கைமுழுவதும் அந்தக் கேள்வியை சுமந்து தடுமாறும் மகள்களும், ஒரு துயரின் முனையில் எதிரெதிரே சந்திக்கும் போது, எப்படி தங்கள் உணர்வுகளை எதிர்கொள்கின்றனர் என்பதே இந்தக் கதையாகும்.
மெதுவாக ஆரம்பித்து, கேள்விகளின் முடிச்சு மெதுவாக அவிழும் போது, ஆச்சர்யமான விளைவுகளும், இறுதியில் ஒரு பெரும் புரிதலுமாக முடிகிறது.

க்ரிஸ்டின் ஹன்னா எழுதிய இந்த நாவல், இரண்டாம் உலக யுத்தத்தின் பின்னணியில் வந்த இன்னுமொரு கதை என்றபோதும், அதை சொல்லிய விதத்திலும், அதன் உணர்வின் ஆழத்திலும், மிக அருமையான வாசிப்பனுபவத்தை தருகிறது.

 

Comments

Popular posts from this blog

பாலை மனம்

தமிழின் புதிய வெளிகள்

Deccan in Dazzling light