அன்பே மருந்து

மனித மனதில் வெறுப்பு என்ற உணர்ச்சி மிக எளிதாக நுழைந்து விடுகிறது. ஒவ்வொரு மனிதனுக்கும் விருப்புவெறுப்புகள் தனித்தனியாக இயல்பாகவே இருக்கும். அது தவிர்க்க முடியாதது. சிறுவயதில் எனக்கு ரொட்டி மீது இனம் புரியாத கடுமையான வெறுப்பு இருந்தது. ஆனால் இன்று உலகம் முழுவதும் சென்று விதவிதமான ரொட்டிகளை சுவைத்த பின், ரொட்டிகளின் மீது எனக்கென்று தனித் தேர்வாக அது பரிணமித்துவிட்டது. அன்று எனக்கு இருந்த வெறுப்பின் வேர்களைப்பற்றி எண்ணிப்பார்த்தால், அப்போது காய்ச்சலின் போது கட்டாயப்படுத்தி உண்ண வைத்த ரொட்டியில் வந்து நிற்கும்.

இப்படி இயல்பாக எழும் வெறுப்புகள், வாழ்வின் அனுபவச் செறிவாலும், மன முதிர்ச்சியினாலும் மாறிப்போவது கூட இயல்புதான்.
ஆனால் சிலநேரங்களில் நம் வாழ்வில் எதிர்பாராத விரும்பத்தகாத, பேரதிர்ச்சி தரும் நிகழ்வுகளை எதிர்கொள்ள நேர்கிறது. அதன் காரணமாக இரண்டு விதமான விளைவுகள் நேரலாம். ஒன்று, அந்த நிகழ்வுகளின் வழியே ஏற்பட்ட புரிதலால், அப்படி ஒரு நிலை நமக்கோ, நம்மைச் சார்ந்தவர்களுக்கோ நேராமல் இருக்க என்ன செய்வது என்று அக்கறையும் அன்பும் மேலோட வழியமைக்கலாம். அது நமக்கும், நம்மை சார்ந்தவர்களுக்கும், ஒரு சீரிய பாதையை வகுத்து, சமூக முன்னேற்றத்துக்கு வழிகாட்டலாம்.

அப்படி இல்லாமல், மாறாக, அலைக்கழிக்கப்படும் நம் மனம், அந்த நிலைக்குக் காரணமாக நாம் கருதும் ஏதோ ஒன்றின் மீது வெறுப்பை குவித்து வைத்துக்கொள்ளலாம். அது ஆழமான வடுவாக மனதில் என்றும் தங்கி எஞ்சிய வாழ்நாள் முழுதும் நம் எண்ணங்களின் அடிப்படையாக அமைந்துபோகலாம். அப்படி நடந்தால், அது சோகமான நிகழ்வு மட்டுமல்ல. நம்மையைம், நம்மை சார்ந்த சமூகத்துக்கும் கேடாகவே முடியும்.





இறுகிப்போன இந்நிலை நிகழ முக்கிய காரணம், ஆங்கிலத்தில் confirmation bias என்று கூறுவார்களே, அப்படிப்பட்ட சார்புப்பிழை நிலைப்பாட்டை நாம் கைகொள்வது தான். அந்தப் பிழையான நிலைப்பாட்டின் முடிச்சு,ஏதோவொரு இறுகிப்போன மத, இன அல்லது சிந்தாந்தந்தின் நுழைவாயிலில் நிறுத்துவது எதேச்சையான நிகழ்வு அல்ல. படுகொலைகளை நிகழ்த்திய டார்கமெடாவும் கைவிடப்பட்ட நோயாளிகளுக்கு ஆதரவு தந்த அன்னை தெரேசாவும் தங்கள் நிலைப்பாட்டை ஒரே மதத்தில் இருந்தே தேடிக்கண்டைந்தனர். ஒன்று வெறுப்பை பயிர்செய்தது; இன்னொன்று அன்பை விதைத்தது. மதத்தின் பெயரால் இந்த பூமியில் நடந்த நன்மைகள் அளவுக்கு அதன் பெயரால் கொடுமைகளும் உள்ளதை வரலாறு பதிவு செய்கிறது.
எனக்குத் தெரிந்த நண்பர் ஒருவர் தன் இளவயதில் மாற்று மதத்தைச் சேர்ந்த பெண்ணை விரும்பினார். ஆனால் அது கைகூடவில்லை. அந்த கசப்பான நிகழ்வுகளின் விளைவாக இன்றுவரை அந்த மதத்தின்மீது அவருக்கு இருக்கும் வெறுப்பு இப்போது அளவுகடந்ததாக மாறி இருக்கிறது. இன்னொரு நண்பர், வாழ்வின் இறுதிக்கட்டம் வரை சென்று மருத்துவ உதவியுடன் மீண்டு வந்திருக்கிறார். அவர் வாழ்வின் நம்பிக்கையை இழந்த காலத்தில் அவருக்கு இறை நம்பிக்கை ஒரு ஊன்றுகோலாக வந்துசேர்ந்தது. அது மத நம்பிக்கையாக மாறி, வெறியாய் இறுகி, இன்று யார் வீட்டுக்கு சென்றாலும் அவர்கள் பூஜையறை அளவை வைத்து அவர்களைப் பற்றி முடிவு செய்துகொள்ளும் முட்டாள்தனத்தில் அவரைக் கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறது. இருவரும் தங்கள் பதவியினால் கிடைக்கும் சலுகைகளை மும்முரமாக தங்கள் மதம் சார்ந்த அரசியல்குழுக்களுக்கு மடை மாற்றிக் கொண்டிருக்கின்றனர்.

உண்மையில் மதங்களை ஒழித்துவிட்டால், மனிதர்கள் ஒன்றும் உடனே புனிதர்கள் ஆகிவிடப்போவதில்லை. ஆனால் நிறுவனமயமான எந்த மதமும், அதன் கோட்பாடுகளையும் அதன் சட்டதிட்டங்களையும் மனிதர்கள் மீது திணிக்கும் போது, மனிதர்களின் அனுபவ ரீதியான முதிர்ச்சியை நிகழவிடாமல் செய்கின்றன. அவர்கள் வெறுக்கும் விஷயங்கள் மதங்களின் பார்வையோடும் ஏதோ ஒரு புள்ளியில் இணையும்போது, அவர்களின் வெறுப்பு இறுகி, அதற்கான நியாயம் அவர்கள் பின்பற்றும் மதங்களின் வேதங்களில் இருந்தே அவர்களுக்கு கிடைத்துவிடுகிறது.

அப்படி நிகழ்ந்த ஒரு மாபெரும் வெறுப்பின் வெளிப்பாடு, போன நூற்றாண்டில் மானுட இனத்தையே புரட்டிப்போட்ட யூத இனவழிப்பு. அந்த பேரழிவை, அதன் சோகத்தை, கொடுமைகளை பற்பல இலக்கியங்கள் நம் கண்முன்னே நிறுத்தியுள்ளன. அதன் மூலம் அதை வாசித்தவர்கள் கரைந்து கண்ணீர் விட்டது உண்மை. அப்படிக் கரையவைத்த இலக்கியங்கள் அந்த, சோகத்தை சிறப்பாக வடித்தபோதும், அரிதாக வெகுசில எழுத்துக்களே அதிலிருந்து மீண்டுவரும் வழியை காட்டுகின்றன. அந்த வகையில் கன்னடத்தில் நேமிசந்த்ரா அவர்கள் எழுதிய சாகித்ய அகாதெமி பரிசு பெற்ற புதினமான யாத் வஷேம், ஒரு தனித்தன்மையான எழுத்து. இது ஒரு உலகளாவிய பார்வையுடன், மிகுந்த ஆய்வுகளுக்குப்பின், உருவாக்கப்பட்ட சிறப்பான படைப்பு. முக்கியமாக, இது பேரழிவை மட்டும் பேசாமல் அதிலிருந்து மீண்டுவரும் வழியையும் விரிவாகக் காட்டுகிறது.

நேமி சந்த்ரா அடிப்படையில் ஒரு வானுர்திப் பொறியாளர். HAL என்னும் அரசு நிறுவனத்தில் பொறியாளராக ஆரம்பித்து, பொது மேலாளராக உயர்ந்த ஒரு பெண் சாதனையாளர். இதற்காக அரசு விருதுகள் பெற்றவர். அதையெல்லாம் தாண்டி, கன்னட இலக்கிய உலகில் குறிப்பிடத்தக்க படைப்பாளி. இதற்கு முன்பே இவருடைய பல படைப்புகள் விருதுகளை வென்றபோதும், அவர் படைப்பு தமிழ் வாசகர்களுக்கு கிட்டியது, அதுவும் இவ்வளவு சிறப்பான வகையில் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்திருப்பது மகிழ்ச்சிகரமான விஷயம். இந்த புத்தகத்தின் இறுதியில் நேமி சந்த்ரா இந்த புத்தகத்துக்கான தரவுகளை தேடி நிகழ்த்திய முயற்சிகளையும், பயணங்களையும் பற்றி மிக விரிவாக எழுதியுள்ளார். என்னைப்பொறுத்தவரை, அது முக்கியமாக வாசிக்கப்படவேண்டிய பகுதியாகும். ஒரு அரசு நிறுவன ஊழியராக இருந்து கொண்டு இவை அனைத்தையும் செய்ய எவ்வளவு பாடுபட்டிருக்கவேண்டும் என்று நினைத்துப்பார்த்தால் பிரமிக்க வைக்கிறது!

நல்லதம்பியும் அடிப்படையில் ஒரு பன்னாட்டு நிறுவனத்தின் இந்திய கிளையில் தலைமைப் பதவி வகித்தவர் என்ற போதும், மிக விரிவான வாசகர், படைப்பாளி. இவரின் தனிப் படைப்புகள் தமிழில் வெளிவந்திருந்தாலும், இவர் மொழிபெயர்ப்புகளையே இதுவரை வாசித்திருக்கிறேன். அனைத்திலும் குறிப்பிடத்தக்க பொதுவான அம்சமாக நான் கருதுவது, இவர் கன்னடத்தில் இருந்து மொழிபெயர்த்த அத்தனை புதினங்களும், தமிழிலேயே நேரடியாக எழுதப்பட்டது போல் இருப்பது. அது போன்ற ஒரு மிக இலகுவான மொழி நடை இவருக்கு கைகூடியிருக்கிறது. அந்தவகையில், தற்கால தமிழ் இலக்கியபரப்பில் மின்னும், மோ. செந்தில்குமார், அருணா வெங்கடாச்சலம், கயல், போன்ற குறிப்பிடத்தக்க புதிய தலைமுறை மொழிபெயர்ப்பாளர்களில் முன்னோடியாக இருப்பவர். மைசூரில் பிறந்து வளர்ந்தவர் என்றாலும், ஒரு புகைப்படக்கலைஞர் என்பதாலோ என்னவோ, இவர் சொற்களில் ஒரு நேர்த்தியும், எளிமையும், கச்சிதமான கட்டமைப்பும் இயல்பாகவே அமைந்திருக்கிறது. இது வாசிப்பை மிக இலகுவாக்கி, முதல் வரியில் இருந்தே வாசகரை உள்ளிழுத்ததுக்கொள்கின்றது.

இந்தப்புதினத்தைப் பொறுத்தவரை, போன வருடம் இதை வாசித்தபோதே இதன் தாக்கத்தை பலமாக உணர்ந்தேன். இந்த பதிவை எழுதுவதற்காக, குறிப்பெடுக்க மறுவாசிப்பை செய்யும் போது, மறுபடியும் புதிதாக வாசிப்பது போல் ஆர்வம் மேலிட்டது. அத்தோடு, போன முறை துளங்காத பல அடுக்குகள் இதில் தெளிவாக துலங்கின. தொடர்ந்து, பக்கங்களில் விரிந்த குறிப்புகளை பார்த்த போது, எதைச் சொல்லுவது, எதை விடுப்பது என்பது எனக்கு ஒரு சிக்கலாகவே, பெரும் மலைப்பாக இருந்தது.

பிறகு, ஒருவாறு தெளிந்து, இதன் அழகிய, அடுக்குகள் பலவற்றையும், அவை என்மேல் ஏற்படுத்திய தாக்கத்தையும் குறிப்பிடுவது ஒரு தனி புத்தகமாகிவிடும் அபாயம் இருந்ததால், இதன் முக்கிய கருப்பொருளை குறிப்பிடுவதோடு நிறுத்திக்கொள்ளலாம் என்று முடிவு செய்தேன். அதற்கு காரணம், இந்த புத்தகம் என் சொந்த மனநிலையில் ஏற்படுத்திய மாற்றமும், அதனால் என் மனதில் 20 வருடங்களுக்கு மேலாக இருந்த காயங்களை ஆற்றிய விதமும் தான்.

இந்தப் புத்தகம் முதலில், இரண்டாம் உலகப்போரின் மத்தியில், சிதறிய குடும்பத்தின் பகுதியாக இந்தியா வந்த ஓரு யூத சிறுமியின் வாழ்க்கையும் தேடலும் என்றே துவங்கினாலும், இது தொட்டு செல்லும் அடுக்குகள் மிக நுணுக்கமானவை. அவளை இணைத்துக்கொண்ட பழைய மைசூர் மாநில, தென் கருநாடகத்தின் ஒக்கலிகர் சமூகத்தைச் சேர்ந்த குடும்பத்தின் வாழ்வின் வழியாக, அப்போது இருந்த பெங்களூர், அதன் பகுதிகள், அதன் சமூக சாதி அமைப்புகள், அதற்குள்ளே அந்த குடும்பத்தின் தலைவருக்கு இருந்த அபிலாஷைகள், அதற்காக சாதி அமைப்போடு அவர்கள் செய்துகொள்ளும் சமரசங்கள், என சுவாரசியமாக ஆரம்பிக்கிறது.

“அக்கம்பக்கத்தில் பிராமணக் குடும்பங்கள் இருந்தனவென்று, சாதிச் சொந்தக்காரர்கள் வீட்டில் செய்வதைப்போல வாராவாரம் எங்கள் வீட்டில் 'புலால் சமையல்' சமைப்பதில்லை. கிராமத்திலிருந்து சொந்தக்காரர்கள் வந்தால் மட்டும் ‘ஏதாவது ஸ்பெஷல்' என்று மாமிச உணவு கிடைக்கும். மாமிச உணவு எங்களுக்குத் தீட்டு. குளியலறையில் ஒரு மண்ணெண்ணெய் அடுப்பு வைத்து அதன் மீது கறிக் குழம்பு செய்வோம்.
'என்ன கறிச் சமையலா?' மோப்பம் பிடித்து பிராமணர்கள் கேட்டுவிட்டால் அம்மாவிற்கு ஒரே சங்கடம். கடைசியாக மாமிசம் உண்பதாலேயே நாங்கள் தீண்டப்படாதவர்கள் என்பதைப்போல ' வேணும்னா மிலிட்டரி ஹோட்டலுக்கு போய்ச் சாப்பிடுங்கள்' என்று அப்பாவிற்கு சொல்லி, ஏறக்குறைய மாமிசச் சமையலை வீட்டில் சமைப்பது நின்றேவிட்டது.”
….
தங்கள் பெயர்களைப் பற்றி அப்பாவிற்கு அறுவருப்பு. அம்மாவிற்கும் கூட. கரியண்ணா, குண்டம்மா - தங்களின் பிராமணர்களல்லாத பின்புலத்தை நெற்றியில் எழுதி ஒட்டியதைப்போலப் பறைசாற்றிக்கொண்டிருக்கின்றன என்று நினைத்தார்கள்.
குழந்தைகள் பிறந்தபோது அப்பா ஒவ்வொருவருக்கும் மிகவும் அக்கறையுடன் பெயர்களைத் தேடிச் சூட்டினார். பெரியக்கா சாவித்திரியம்மா, இரண்டாமவள் தாராம்மா, இடையில் பிறந்த எனக்கு பக்கத்தில் இருந்த ராமகிருஷ்ண ஆசிரமத்தின் ஆதிக்கமோ என்னவோ 'விவேகானந்தா' என்று வாய்நிறைய அழைத்தார். எனக்குப் பிறகு பிறந்த தங்கை ஹ்யானாவிற்கு ஒத்த வயதுக்காரி, சுமித்திராம்மா, சுமியாகியிருந்தாள். அவளுக்கு அடுத்துப் பிறந்தவள் ஸ்ரீதேவம்மா. அம்மாவின் வாய்க்குள் நுழையமுடியாமல் 'சிரி'யானாள். கடைசித் தங்கை நிர்மலா தேவி.
சாதிய முரண்பாடுகளையும் அதன் வலிகளையும் மிக அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார். இது நிகழ்ந்ததாக கூறப்படும் காலத்தில் இருந்து 50 - 60 வருடங்கள் கழிந்த பின்னும், ஒரு சிறுவனாக அந்த சூத்திரன் என்ற பதத்தை முதன் முதலாக எதிர்கொண்ட போது ஏற்பட்ட குழப்பத்தையும் வலியையும் இதில் வரும் வரிகள் நினைவுபடுத்துகின்றன.

ஹ்யானாவிற்கு எங்கள் சாதிகள் ஒன்றும் புரியவில்லை. எங்கள் வீட்டுக்குள் ஓடி வருவது போலவே, லல்லியின் வீட்டுக்குள் நுழைந்துவிடுவாள். சுமிக்கும் விளையாடும் உற்சாகத்தில் மறந்துவிடும். வராந்தாவைத் தாண்டி வீட்டின் உள் வாசலைத் தாண்டும் முன்பு, லல்லியின் அம்மா 'ஏய், அங்கேயே நில்லுங்கடி...' என்று கத்துவார். பாவாடையில் மூக்கை துடைத்துக்கொண்டே லல்லி விளையாட ஓடிவருவாள். வெளியே ஓடும்போது லல்லியின் அம்மாவின் முனங்கல் முதுகிற்குப் பின்னால் கேட்கும்- "சூத்திர முண்டைங்க, நுழஞ்சுருதுங்க..."
“என்ன சுமி, லல்லி உங்க வீட்டுக்குள்ளே எல்லாம் வரா, நீ ஏன் அவங்க வீட்டுக்குள்ளே போகக்கூடாது.." ஹ்யானா கேட்பாள்.
"அவங்க பிராமணங்க, நாங்க சூத்திரங்க" என்று விவரிப்பாள்.
அப்புறம் எதையோ நினைத்துக்கொண்டு ஹ்யானா - “சுமி முண்டை அப்படி என்றால் என்ன..?” என்று கேட்டாள்.
“கணவனை இழந்தவள் என்று..."
"உனக்கு கல்யாணமே ஆகலயே, அப்புறம் எப்படி முண்டை..." லல்லியின் அம்மாவின் வாயிலிருந்து வந்த சொற்களுக்கு அர்த்தம் தேடிக்கொண்டு ஹ்யானா கேட்டபோது, அவமானத்தால் முகம் சிவந்துபோனாலும், சுமி சொன்னாள்-
"அது ஒரு மாதிரி வசை அவ்வளவுதான்..."
ஆரம்பத்தில் ஹிட்லர் என்ற சொல் வன்முறை, பயங்கரம், என்று அர்த்தம் கொள்ளப்பட்டு, அது இல்லாத உலகம் வருமா என்ற கேள்வியுடன் தான் புத்தகம் துவங்குகிறது.

"ஹிட்லர் இல்லாத வாழ்க்கைக்காக, ஹிட்லர் இல்லாத இந்த உலகத்தை என்றாவது நான் பார்க்க முடியுமா? "
தொடர்ந்து பெங்களூரின், விமான தொழிற்சாலை அமைக்கப்பட்ட சரித்திரத்தை சுவாரசியமாக சொல்லியிருக்கிறார்.இன்றைய பெங்களூரின் பழகிய இடங்களை அன்றைய சம்பவங்களில் சந்திக்கும் போது வரும் உணர்வுகள் அலாதியானவை.

“இதே வழியில் 'ஹிக்கின் பாதம்ஸ்'க்கு சிறிது தொலைவில் 'ப்ளாசா' சினிமா கொட்டகையைக் காட்டிக்கொண்டே “இங்கே எவ்வளவு நல்ல இங்க்லீஷ் படம் வரும் தெரியுமா?' டிக்கெட் கொஞ்சம் அதிகம்தான் - 'எட்டணா' என்றார். “ஆனால் எழவு, கடைசியில் யூனியன் ஜாக் பறக்கவிட்டு, காட் சேவ் த கிங் பாடும்போது எல்லோரும் எழுந்து நிற்கவேண்டும்.”
'எழுந்து நிற்காவிட்டால்?” சுமி கேட்டாள்.
பின்னாடி யாராவது பறங்கியர்கள் இருப்பார்கள், அவர்கள் கழுத்துப்பட்டையை பிடித்து எழுப்பி நிறுத்துவார்கள்” என்று சித்தப்பா வெறுப்புடன் சொன்னார்..”
வாசித்தவுடன் எதையோ நினைத்து நான் சிரித்துக்கொண்டேன்.

ஏக்கத்தோடு, தன் குடும்பத்தின் நிலையை அறிந்துகொள்ளவும் அதில் ஏதாவது உறவு மிச்சமாகி, தப்பிப்பிழைத்திருக்குமா என்ற ஏக்கத்தை தீர்க்கவும் விவேக்கும், அனிதாவும் ( ஹயானா ) தொடரும் உலகப்பயணம், ஐரோப்பிய சரித்திரத்தின் இருண்ட பக்கங்களை புரட்டவும், அதன் தற்கால நிலையையும் கண்ணில் நிறுத்துகிறது.

'அறுபதுலட்சம் யூதர்களையும், கணக்கில்லாத கம்யூனிஸ்ட்களையும், உடல் ஊனமுற்றோரையும் கொடூரமாக கொன்று குவித்த போதிலும், நாஜி ஜெர்மனியில் ஹிட்லருக்கு எதிரான குரல் கேட்கவில்லை விவேக். மக்கள் வீதியில் இறங்கி மற்றொரு கூட்டத்து மக்களின் மீது நடக்கும் மனிதத் தன்மையற்ற சுரண்டலை எதிர்க்கவில்லை. வரலாற்றின் இரத்தம் தோய்ந்த பக்கங்கள் அன்றே முடிந்துவிட்டன என்று எனக்குத் தோன்றவில்லை விவேக். இது ஒரு ஹிட்லரின் மதி இழந்த நீதியால் நடந்த வரலாற்றுச் சோகச் சம்பவம் அல்ல. நன்கு யோசித்துத் திட்டமிட்டு நடத்தப்பட்ட கொலைகள் அவை...' அனிதா ஒரு முறை கூறினாள்.
ஒரு மானுடப் பேரிடரில் சிதறுண்ட ஒரு குடும்பத்தின் இரு கிளைகளில், ஒன்று அன்பில் அமிழ்ந்தும், இன்னொன்று வெறுப்பில் வெம்பியும் வளர்ந்தால், இரண்டு கிளைகளும் மறுபடியும் சந்திக்கும் போது அன்பின் மொழிதான் எதிர்காலத்தின் நம்பிக்கைக்கும் கடந்தகால வலிகளுக்கும் மருந்தாக இருக்கும் என்ற செய்தியை உறுதியாக பதிவு செய்யும் படைப்பு இது.

"வெளியே இருந்து வந்த வெள்ளையனை ' இந்தியாவை விட்டு வெளியேறு' என்று துரத்தலாம். நமக்குக்குள் இருந்து, நம் நடுவிலேயே பிறக்கும் ஹிட்லர்களை எப்படி துரத்துவது?..."
இது நாம் ஒவ்வொருவரும் நம்மை நோக்கி வைக்கவேண்டிய கேள்வி. அதற்கு பதிலாக, வெறுப்பென்ற ஹிட்லரை விரட்டிட அன்பு, அன்பு, அன்பு ஒன்றுதான் நாளைக்கான ஒளி என்று நம்பிக்கை நிறைந்த கண்ணீரோடு புத்தகத்தை மூடி வைத்தேன்.

Comments

Popular posts from this blog

பாலை மனம்

Deccan in Dazzling light