வாயிலைத் தேடி...
வரலாற்று ஆராய்ச்சி என்ற ஒன்றைப் போல் தமிழகத்தில் அதிகம் பேசப்பட்ட விஷயம் வேறொன்று இருந்ததே இல்லை. தெருமுனை அரசியல் பேச்சாளரில் இருந்து பல்கலைக் கழகங்களின் உள்ளரங்கங்களின் முற்றங்கள் வரை தமிழ் வரலாறு எப்போதும் பேசுபொருளாகவே இருந்திருக்கிறது.
அப்படி பேசும் வரலாறு ஒரு பெரும் ஆய்வின் அடிப்படையினாலா அல்லது உணர்வுக் கிளர்ச்சிக்காக பேசப்படுகிறதா என்று பெரும்பான்மை சமூகம் கவலைப் பட்டதில்லை. “ கல் தோன்றி மண்தோன்றா” என்றே பெரும்பாலான உரையாடல்கள் துவங்கும். முறையான பேரகழ்வுகளோ அது தொடர்பான ஆய்வுகளோ முறையாக நடத்தி பதிப்பிக்கப்படாமலேயே பல தரப்பும் தமிழ் வரலாற்றை பந்தாடிவந்தன. பிறகு, இந்திய தொல்லியல் ஆய்வின் பிரிவாக ஐராவதம் மகாதேவன், குடவாயில் பாலசுப்ரமணியம் போன்ற ஆய்வாளர்களின் ஆய்வின் வழியே சற்று ஒளிக்கீற்றுகள் வரத்துவங்கின. அதன் பின்பற்றி பாலகிருஷ்ணன் ஐயா போன்றோர் எடுத்த தொடர் முயற்சி தமிழக தொல்லியல் துறை மூலம் கீழடி வரை வந்து நின்றபோது, ஒரு பெரும் நம்பிக்கையை விதைத்திருப்பது கண்கூடானது.
இதைத்தவிர ஒரு குறிப்பிட்ட தலைப்பில் ஆய்வை நடத்தி அதன் முடிவுகளை சுவாரசியமான தளத்தில் எழுதிய ஆய்வாளர் பலருண்டு. அதில் பண்டைய தமிழக வணிக வர்த்தக செயல்பாடுகளைப்பற்றி கனகாலதா முகுந்த் எழுதிய “பழந்தமிழ் வணிகர்கள் - சர்வதேச வர்த்தகத்தின் முன்னோடிகள்” என்ற நூலைப் பற்றி ஏற்கனவே பதிவிட்டிருக்கிறேன்.
அதில் இருக்கும் ஒரு முடிச்சைப்பற்றி சமீபத்தில் படித்த தனிப்பட்ட ஆய்வின் நூல் வடிவத்தை படிக்க நேர்ந்ததது. ஆங்கிலத்தில் “ The Discovery of Muziris” என்ற பெயரில் மருத்துவர் அன்டோ ஜார்ஜ் எழுதிய தனிப்பட்ட பதிப்புத்தான் அது. மருத்துவர் அன்டோ கேரளத்தில் வசிப்பவர். தொழில் முறையில் மருத்துவம் பயின்று, அந்தத் தொழிலில், குறிப்பாக சிறுநீரகவியலில் முழுநேரமாக ஈடுபட்டிருந்தாலும், தீராத தன் வரலாற்று ஆர்வத்தின் காரணமாக மிக சிறப்பாக உழைத்து வெளிகொண்டுவந்திருக்கும் நூல் இது. அவர் இதில் எடுத்திருக்கும் நிலைப்பாடும், கொடுத்திருக்கும் உழைப்பும் அவர் வாழும் கேரளத்தில் உரிய கவனம் பெறாவிடினும், அது கூறவரும் கருத்திற்காக தமிழகத்திலாவது உரிய கவனம் பெறுவது அவசியம் என்று கருதுகிறேன்.
இதில் அவர் நிறுவும் கருதுகோள் பற்றி பேசவேண்டும் என்றாலும், முதலில் அவர் இதற்காக முன்னெடுத்த உழைப்பும், முறையான ஆய்வும் எந்த வகையிலும் வரலாறு படித்த ஆய்வாளர்களுக்கு சற்றும் குறைவில்லாதது என்றே குறிப்பிடவேண்டும். குறிப்பாக, சங்க இலக்கியத்திலும், கிரேக்க தெரிவுகளிலும், நல்ல தெளிவோடும், மொழி அறிவோடும் அவர் தொகுத்த தரவுகளும், அதற்கான விரிவான மேற்கோள்களும் ( ஒவ்வொரு அத்தியாயத்துக்கும் தனித்தனியாக கொடுத்திருக்கிறார்) அவர் அதற்காக செலுத்திய உழைப்பை பறைசாற்றுகின்றன.
அதைவிட முக்கியமாக குறிப்பிடவேண்டியது, இந்த நூலில் உள்ள கதையாடல் எந்த அரசியல், மத சார்புமின்றி மிகத் தெளிவாக அமைந்திருக்கிறது. அவர் சிரத்தையுடன் அத்தியாங்களின் அமைப்பை வடித்திருப்பது ஆங்கிலத்தில் Clinical என்று குறிப்பிடும் வார்த்தையைத் தான் நினைவுறுத்துகிறது. தனிப்பட்ட சொந்தப் பதிப்பாக அவர் இதை வெளியிட்டிருக்கிறார். ஒவ்வொரு பக்கமும், அதன் தரம், விவரங்கள், வண்ணப்படங்கள் என மிக நேர்த்தியாகவே வடிவமைக்கப்பட்டுள்ளது. புத்தகம் எழுதப்பட்டது ஆங்கிலத்தில் தான் என்றாலும், மிக எளிமையான மொழியில் அனைவரும் வாசிக்கும் வகையில் அமைந்திருப்பது சிறப்பு.
அவர் இதில் முக்கியமாக குறிப்பிடும் கருதுகோள்கள்:
1) இன்றைய நிலையில் பெரும்பாலான ஆய்வாளர்கள் குறிப்பிடும், பண்டைய கிரேக்க வணிகர்கள் குறிப்பிட்ட முசிரிஸ் என்ற துறைமுக பகுதி, கேரளத்தின் கொடுங்காளூர் கரை பகுதி என்பதே.
2) அவர்கள் அன்று உள்நாட்டு வணிகத்துக்கு பயன்படுத்திய ஆறு கேரளத்து பெரியாறு.
3)தொண்டி என்ற முசிரிஸுக்கு அடுத்த பகுதி கேரளத்தின் கடலுண்டி அல்லது பொன்னானி.
4) நவ்ரா (Naura) என்று குறிக்கப்பட்ட இடம் கேரளத்தத்தின் கண்ணூர் கரை.
இவை அனைத்தையும், அத்தோடு சேர்த்து அத்தோடு இணைந்த பகுதிகளின் காரணப்பெயர், பெயர்க்காரணம், மொழிகளின் ஒலிபெயர்ப்பு ஆகியவற்றையும், சங்க இலக்கியங்களின் வழியாகவும், ஆய்வுக்கு உள்ளாக்கி, பின் இவை எப்படி உண்மையாக இருக்க முடியாது என்று நிறுவியுள்ளார். மேலும், அனைத்துக்கும் அடிப்படை மிளகு வர்த்தகம் என்பதால் - இந்த இடத்தில்தான் கனகலதா முகுந்தின் புத்தகத்தோடு இணைகிறது - இடங்களின் இருப்பை, மிளகின் வழியே எடையிட வேண்டும் என்று வலியுறுத்துகிறார். மேலும், பண்டைய நகரங்கள் இடம்பெற்ற பகுதிகளை, கிரேக்க நாள்குறிப்புகளின் வழியே, அவற்றில் குறிப்பிட்டிருக்கும் துல்லியமான அளவீடுகள் வழியே நிறுவ முயன்றிருக்கிறார். அப்படி அவர் நிறுவும் மாற்று கருத்துக்கள்:
1)அன்று உள்நாட்டு வணிகத்துக்கு கிரேக்க கலங்கள் பயன்படுத்திய ஆறு, பொதிகையில் தோன்றி, குமரியில் கடலில் கலந்த மேற்கு தாமிரபரணி ஆறு. அது இன்று நாம் தாமிரபரணி என்று குறிப்பிடும் ஆறு அல்ல. அன்று கிழக்கு தாமிரபரணி, மேற்கு தாமிரபரணி என்று இரு வேறு ஆறுகள் பொதிகையில் இருந்து தோன்றி கடலில் கலந்தன. இன்று அதில் மிச்சம் இருப்பது கிழக்கு தாமிரபரணி மட்டுமே.
2)அதன்படி இன்றைய கொடுங்கலூர் முசிரிஸாக இருக்க வாய்ப்பு இல்லை. அன்றைய உள்நாட்டு வணிகப் பெயர்வுக்கு பெரிதும் பயன்பட்ட ஒற்றை பனை மரத்தை குடைந்து உருவாக்கிய கட்டுமரங்கள் இந்த இடத்தில் பயன்படுத்திய சான்றுகள் இல்லை. மேலும், அங்கே கண்டெடுக்கப்பட்ட பண்டைய காசுகளும், பொருட்களும், மிக சொற்பமே. அப்படி முசிரிஸ் என்ற பெரும் வணிக நகரம் அங்கே இருந்திருந்தால், கண்டெடுத்த பொருட்களின் அளவுக்கும், கால இடைவெளிகளுக்கும் சம்பத்தம் இல்லை.
3)தொண்டி என்று குறிக்கப்பட்ட இடம் இன்றைய திருவனந்தபுரம் அல்லது அதை சுற்றிய பகுதியாக இருக்க வேண்டும்.
4)முசிரிஸ் என்று குறிக்கப்பட்டிருப்பது இன்றைய குமரியின், முஞ்சிறை பகுதியாகவே இருக்க வாய்ப்புள்ளது.அங்கே தான் மேற்கு தாமிரபரணி கடலில் வந்து கலந்தது.
5)நெல்சிந்தா (Nelcynda ) என்று குறிக்கப்பட்ட இடம், நாஞ்சில் நாடு.
6)பாலிதா ( Balita ) என்று கிரேக்கத்தில் குறிப்பிட்ட இடம் மணக்குடி.
ஆகவே கிரேக்க குறிப்புகளில் உள்ள இடங்கள் அனைத்தும், குமரிப் பகுதியில் தான் அமைந்திருக்க வேண்டும். இன்று அங்கே பெரும் அகழ்வுகளோ, வேறு எந்த ஆராய்ச்சிகளோ பெரிதும் முன்னெடுக்கப்படவில்லை. இந்த மாற்றுப் பார்வை அதற்கு வழிகோலினால் அதன் மூலம் இந்த இடங்களின் வரலாற்றில் மட்டுமல்ல, பண்டைய தமிழ் வணிக வரலாற்றிலும் ஒரு பெரும் தெளிவு ஏற்படலாம் என்றே தோன்றுகிறது.
Comments
Post a Comment