இடபம்
சிலவாரங்களுக்கு முன் ஒரு நெடிய பயணத்தில் வாசித்து முடித்த புத்தகம் இது.
இதை எழுதிய பா.கண்மணி, ஒரு அரசு வங்கியில் பலகாலம் பணிபுரிந்து வங்கி செயல்பாடு மற்றும் பங்கு வர்த்தக நடைமுறைகளை நன்கு அறிந்தவர் எனப் புரிந்து கொள்ள முடிகிறது. பெங்களூரில் வசிக்கும் அவர் பெங்களூரின் பின்னணியில், அதன் பாந்தமான மத்திய நகர்ப்புற இடங்களில் கதையை உலவ விட்டிருப்பதில் ஒரு நேர்த்தி தெரிகிறது. கான்கிரீட் கானகமாக வெகு வேகமாக உருமாறிக் கொண்டிருக்கும் நகரில், வீட்டு மாடியில் நின்று நிமிர்ந்து பார்த்தால் நமக்கென்ற நீல ஆகாயமும், வாசலில் மெல்லிய தென்றலோடு பசுமையை தெளிக்கும் மரங்களும் எங்கே போயிற்று என்று பெருமூச்சுடன் வியக்கும் என்னைப்போன்ற 90களின் மனிதர்களின் குரலை ஒலிக்க விட்டிருக்கிறார்.
இடபம் என்பதற்கு காளை என்று பொருள் வருகிறது. பங்கு வர்த்தகத்தைப் பொறுத்தவரை, சந்தையின் போக்கு மிகவும் நம்பிக்கை தரக்கூடிய வகையில், பங்குகளின் விலை ஏறுமுகமாக இருக்கும் நிலையை குறிப்பதாகும். தனிப்பட்ட பங்கு முதலீட்டாளரைப் பொறுத்தவரை இது ஆர்வத்துடன் பங்குச்சந்தையில் முதலீடு செய்பவரைக் குறிக்கும்.
அந்த வகையில் பங்குச் சந்தை என்பதுதான் இந்தக் கதையின் நிகழ்களம். பங்குச்சந்தையின் அரிச்சுவடி தெரியாத என்னைப் போன்ற பால்வாடி வாசகர்களுக்கும் சுவாரசியமாக இருக்கும் வகையில் அமைந்துள்ளது. அதிகபட்சம் ஓரிரு முறை சில துறைசார்ந்த வார்த்தைகளைப் புரிந்துகொள்ள கூகுள்ளாண்டவரைத் தாட்டிப்பார்க்க வேண்டியிருந்தது. அந்தவகையில், தமிழில் இதுவரை வந்திராத ஒரு கதைக்களம் இது. இதைத் துணிந்து, முயன்று பார்த்து, சுவாரசியமாகப் படைத்த கண்மணி அவர்களைப் பாராட்டவேண்டும்.
அதைத்தவிர கதையின் போக்கு என்பது ஒரு சுதந்திரமான, சுய தேர்வுகள் கொண்ட, தன் தனிப்பட்ட தேவைகளுக்கு (மட்டும்) முன்னுரிமை கொடுக்கும் ஒரு தற்காலப் பெண்ணை மையமாக வைத்து, அவள் குரலில் பேசுகிறது. அந்தப் பெண்ணை விட, சராசரி தமிழ் வாசகர்களுக்கு இது coming of the age novel என்றுதான் சொல்லவேண்டும். அதனால் வாசித்த பின் சிலருக்கு, சற்று நெஞ்செரிச்சல் ஏற்படக்கூடும். அப்படி ஏற்பட்டால், அவர்கள், கதையில் வரும் அந்த முக்கிய பெண் பாத்திரத்தை ஆணாக உருவகப்படுத்திப் பார்க்கலாம். அப்படி செய்த பிறகு அந்தக் கதாபாத்திரத்தின் செயல்பாடுகள் எந்த நிலையதிர்ச்சியும் தராது போய், அது சரியென்று தோன்றலாம்.
அப்படி ஏதும் செய்யாமலே அதை ஏற்றுக்கொள்ள முடிந்தால் நீங்கள் நிகழ்காலத்தில் இருக்கிறீர்கள், அதன் தற்போதைய நிஜங்களை எதிர்கொண்டு இயல்பாக கடந்து போகப் பழகியிருக்கிறீர்கள் என அறியலாம்.
Comments
Post a Comment